''பொன்னு விளையற பூமியில விதைச்சாலும் விஷம் குடிக்கற அளவுலதான் நிலைமை இருக்கு. அப்படியிருக்கும் போது, தரிசு நிலத்துல விவசாயம் பண்ணித் தப்பிக்க முடியுமா?'
-இப்படி ஒரு நினைப்போடு தரிசுநிலங்களைப் பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்திருக்கும் விவசாயிகள்தான் இங்கே அதிகம். ஆனால், தரிசு நிலத்தையும் பொன்விளையும் பூமியாக மாற்ற முடியும் என்று நிருபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் 'பீயன் மரம்' எனப்படும் 'தீக்குச்சி' மரத்தை பயிரிடும் விவசாயிகள் சிலர்! தீக்குச்சி செய்வதற்கு பயன்படும் மரம்தான் இந்த பீயன் மரம். ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், பொதுவாக 'தீக்குச்சி மரம்' என்பதே இப்போது நிலைக்க ஆரம்பித்துள்ளது.
சேலத்திலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் பத்தாவது கிலோ மீட்டரில் உள்ளது வீரபாண்டி. இதன் அருகில் உள்ள இன்னொரு குட்டி கிராமம் அக்கரம்பாளையம். இந்த ஊரில் கரடுமுரடான காய்ந்த மேட்டுக்காட்டில் தன்னம்பிக்கையுடன் செழித்து வளர்ந்து நிற்கின்றன ஏராளமான தீக்குச்சி மரங்கள்.
நம் கண்களையே நம்ப முடியாமல் அந்த மரங்களைச் சாகுபடி செய்திருக்கும் கணேசனைச் (9443518863) சந்தித்தோம். ‘‘இந்த மேட்டுக்காடு 2 ஏக்கருங்க. இதுல எந்த பண்ணயமும் செய்ய முடியாது. இதுல போர் போட்டா கொஞ்சங்கூட தண்ணி வராது. அதனால இந்த நெலத்தைச் சும்மாவே போட்டுட்டேன். அந்தக் கரட்டுக் காட்டுல ஒரு ஓரமா ஆறு பீயன் மரங்க வளர்ந்திருந்துச்சு. அதை விலைக்கு வாங்க ஒரு புரோக்கரு வந்தார். 20 ஆயிரம் ரூபாய் தாரேன் கொடுக்கறியானு கேட்டார். எனக்கு ஆச்சர்யமா போச்சு. ஆறு மரத்துக்கே இந்த ரேட்டுனா... காடு முழுக்கா வெச்சா எவ்வளவு போகும்னு கணக்குப் போட்டுப் பார்த்தேன். உடனே ரெண்டு ஏக்கர்ல வெச்சிட்டேன்’’ என்று உற்சாகத் துள்ளலோடு சொன்னவர்,
 ‘‘தண்ணி காட்டணும், உரம் போடணும், களை எடுக்கணும் அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. காய் நல்லா காய்க்குமா, பழம் நல்லா பழுக்குமானு பாத்துக்கிட்டிருக்கத் தேவையில்ல. மழையே இல்லனாலும் நல்லா வளரும். இந்தச் செடிய ஆடு மாடுங்களும் கடிக்காது. அதனால பாதுகாப்பு செய்யணும்னு அவசியமே இல்ல. சின்னச் சின்னக் கிளை வரும். அதையெல்லாம் ஒடிச்சு போட்டுடணும். ஆறுவருஷத்துல பனை மரம் மாதிரி நெடுநெடுனு வளரும். மரத்தோட எடையும் கூடுதலாகி, நமக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.
இப்ப ஏக்கருக்கு 400 செடி வரைக்கும் நடுறாங்க. முன்னேயெல்லாம் 140 செடிதான் நட்டாங்க. நானும் இந்த அளவுக்குதான் நட்டிருக்கேன் ஒரு டன் 2,000 ரூபாய் வரை போகுது. செடியை வெச்சி ஆறரை அல்லது ஏழு வருஷம் ஆயிட்டா, ஒரு மரம் 2 அல்லது இரண்டரை டன் எடை வரும். ஒரு ஏக்கருக்கு 140 மரம்னு கணக்குப் போட்டா ஏக்கருக்கு 280 டன் எடைக்கு மரங்கள் கிடைக்கும். ஒரு டன் 2,000 ரூபாய்னு வெச்சுகிட்டாலும் ஏக்கருக்கு 5,60,000 ரூபாய் தாராளமா கிடைக்கும்’’ என்று பக்காவாகக் கணக்குப் போட்டுச் சொன்னார் கணேசன்.
ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியரான சுப்பிரமணியம்... தீக்குச்சி மரங்கள் இன்று எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதற்கு சாட்சியாக ஒரு விஷயத்தை முதலில் சொன்னார். ‘‘கொஞ்ச காலமா என்னோட ஐந்து ஏக்கர் நிலத்தையும் பயிரிடாம சும்மாவே போட்டு வெச்சிருந்தேன். காரணம், எங்க வீடு சேலம் டவுனுக்குள்ள இருக்கு. நிலமோ ஐம்பது கிலோ மீட்டர் தள்ளி வெள்ளார் கிராமத்துல இருக்கு. அங்க போய் யாரு பயிர் பச்சை பண்றது...? ஒரு கட்டத்துல அதையெல்லாம் வித்துடலாம்னு கூட நினைச்சேன். ஆனா, அடிமாட்டு விலைக்குதான் கேட்டாங்க. ஆனா, இன்னிக்கு அதே நிலத்தை ஐந்து லட்ச ரூபாய்க்குக் கேட்கறாங்க. தீக்குச்சி மர மகிமைதான் காரணம்!’’ என்று உற்சாகத்தோடு சொல்லிவிட்டு,
 ‘‘இந்தத் தலைமுறையில பலர் விவசாயமே செய்றதில்ல. எங்கப்பா கஷ்டபட்டு விவசாயம் செய்துதான் என்னைய படிக்க வெச்சாரு. ஆனா, நான் விவசாயமா செய்றேன்? இதேபோல் பலரும் நிலங்களை குத்தகைக்கோ அல்லது கரம்பாவோ விட்டுட்டு வெளியூர்ல வேலைப் பார்க்கக் கிளம்பிடறாங்க. இப்ப ஓய்வா வீட்ல இருக்கறதால நிலத்தைக் கவனிப்போம்னு யோசிச்சப்பதான் தீக்குச்சி மரம் ஐடியா பத்திக்கிச்சி'' என்று சொன்னவர், அடுத்து... பயிரிடும் விதம் பற்றி விவரித்தார்.
''இதை ஊடுபயிரா போட்டா... ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 3 X 2.5 மீட்டர் இடைவெளி இருக்கணும். 250 செடி வரைக்கும் நடலாம். காடு முழுக்க போட்டா... இரண்டரை மீட்டர் இடைவெளி இருந்தா போதும். 400 செடி வரைக்கும் நடலாம். நான் ஊடு பயிராத்தான் போட்டிருக்கேன். இரண்டடி ஆழத்துக்கு குழி எடுத்து செடியை நடணும். வருஷத்துக்கு ரெண்டு முறை 50 கிராம் கெமிக்கல் உரமும், அரை கிலோ கோழிக் கழிவு உரமும் போடணும். மழை சீஸன் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே இதையெல்லாம் செய்துடறது நல்லது. செடியோட தழைகளை நாசம் செய்ற வண்டுகள் வரும். பூச்சி மருந்து அடிச்சி அதையெல்லாம் ஒழிக்கணும். இதுக்கெல்லாம் ஆகுற செலவை ஒட்டு மொத்தமா கணக்குப் போட்டா... வருஷத்துக்கு ஒரு மரத்துக்கு ஒரு ரூபாய்தான் செலவாகும்!’’ என்று வியக்க வைத்த சுப்பிரமணியம்,
‘‘மரம் நல்லா வளர்ந்த பிறகு தீக்குச்சி ஃபேக்டரிங்களைத் தொடர்பு கொண்டு தகவலைச் சொல்லிட்டா போதும்... அவங்களே வந்து மரத்தை வெட்டி எடைபோட்டு காசைக் கொடுத்துட்டு போயிடுவாங்க.
பெரும்பாலான விவசாயிங்க இதுல ஆர்வம் காட்டாததால இந்த மரங்களுக்கான தேவை இருந்துகிட்டே இருக்கு. இன்னிக்கு உள்ள விவசாய சூழல்ல... பெரும்பாலான விவசாயிங்க, ஒரு ஏக்கர் 500 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை வாங்கிகிட்டு குத்தகைக்கு விட்டுட்டு அப்பாடானு வேற வேலைகளை பார்க்க ஆரம்பிச்சிடறாங்க. அது மாதிரியானவங்க தீக்குச்சி மரங்களைப் போட்டா நிச்சயமா நல்ல லாபம் பார்க்கலாம். ஒரு முறை செடியை நட்டுட்டா... வெளியூரோ, வெளிநாடோ கூட தாராளமா போகலாம். வருஷத்துக்கு ரெண்டுமுறை வந்து பராமரிச்சா போதும்’’ என்று சொன்னார்.
சேலம் மாவட்ட வனத்துறை அலுவலர் பாரதி பேசும்போது... ‘‘;வனத்துறையில இந்த தீக்குச்சி மரத்தை அயிலை மரம்னு சொல்வோம். குடியாத்தத்தில் இருக்கற தீக்குச்சி பேக்டரிகளே விவசாயிகளுக்கு செடிகளைக் கொடுத்து பயிரிடச் சொல்லுது. லோன், இன்ஷூரன்ஸ் எல்லாத்தையும் பேக்டரிகளே செய்து கொடுக்குது. வன விரிவாக்க மையங்கள், தனியார் நர்சரிகளில் கூட இந்த மரத்தோட செடிங்க கிடைக்குது. இந்த மரம் வளர்ப்புக்காக எல்லா பேங்குலயும் லோன் கூட கிடைக்குது. மானியம் ஏதும் கிடையாது. கேரள மாநில விவசாயிங்கதான் பெருமளவு இதைப் பயிர் செய்றாங்க. தமிழகத்துல சேலம் மாவட்டத்துலதான் பெருமளவு செய்றாங்க'' என்று சொன்னவர்,
''உண்மையிலயே லாபம் தரக்கூடிய விவசாயம்தான் இது’’ என்று சான்றிதழும் கொடுத்தார்.
சூடான மரத்தில் சுலபமான லாபம்!
|
மிகவும் நல்ல யோசனையை கூறினீர்கள் மிக்க நன்றி
ReplyDeletewww.sonadakings.blogspot.in