''முன்னயெல்லாம் நெல்லை விளைவிச்சி வெச்சா... அதைக் கொண்டு போய் வித்துட்டு வர்றதுக்குள்ள என்னைப்பிடி உன்னைப்பிடினு ஆகிப்போயிடும். கொஞ்சம் அதிகமா விளையுதுன்னு தெரிஞ்சாலே விலை யைக் குறைச்சிடுவாங்க மண்டிக்கடைக்கார ஆளுங்க. ஆனா, இப்ப விதைக்க ஆரம்பிச்சதுமே... 'இந்தத் தடவை எனக்கு ரெண்டு மூட்டை வேணும்... எனக்கு நாலு மூட்டை வேணும்'னு ஆளாளுக்கு என்கிட்ட ஒப்பந்தமே போட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க கேக்கற அளவுக்கு என்னால கொடுத்து மாளல. எல்லாம் அந்த ஜீரோ பட்ஜெட் மகிமைதான்...''

- இப்படிச் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் நேதாஜி (99402-67627).
சென்னை, செங்குன்றம் (ரெட்ஹில்ஸ்) அருகில் இருக்கும் ஆங்காடு கிராமத்தைச் சேர்ந்த இவர் பாரம்பரிய விவசாயி. எட்டு ஏக்கரில் நெல் சாகுபடியை மேற்கொண்டு வரும் இந்த நேதாஜி, கடந்த ஆண்டின் இறுதியில் 'பசுமை விகடன்' சார்பில் ஈரோடு நகரில் நடத்தப்பட்ட 'ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் பங்கேற்றார். அங்கே 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர் கற்றுக் கொடுத்த அத்தனையையும் மிகச் சரியாக மனதில் ஏற்றுக் கொண்டு ஊர் திரும்பியிருக்கிறார். வந்த வேகத்தில், ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை தன்னுடைய நிலத்தில் புகுத்தியவர், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிப் பாதையில் நடைபோட ஆரம்பித்திருக்கிறார்.
''கத்துக்கிட்ட பாடமும், கண்டுகிட்ட வித்தையும் என்னை கை தூக்கிவிட ஆரம்பிச்சிருக்கு. இதோ நிக்குதே எங்க வீட்டு கோமாதா... இது ஒண்ண வெச்சிதான் இன்னிக்கு எங்களோட எட்டு ஏக்கர் நிலமும் வளம் கொழிக்குது. ஈரோட்டுல இருந்து திரும்பினதுமே 6 ஆயிரம் ரூபாய்க்கு இந்த நாட்டுமாட்டை வாங்கினேன். 'முப்பது ஏக்கர் நிலத்துக்கு உரம் கொடுக்கறதுக்கு ஒரு மாடு போதும்'னு பாலேக்கர் சொன்னார். அதனால, நம்மளோட எட்டு ஏக்கரை இந்த மாட்டை வெச்சி சமாளிக்கிறது பெரிய விஷயமில்லனு தைரியமா களத்துல இறங்கினேன்.
ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை கேக் கறதுக்கும், படிக்கறதுக்கும் எளிமையா இருந்தாலும்... அதைச் செயல்படுத்தும்போது நிறைய சந்தேகங்கள் வரத்தான் செய்யுது. கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டுதான் செய்யவேண்டியிருக்கு. ரசாயன விவசாயம் மாதிரி, ரெடிமேடா கிடைக்கற உரம், பூச்சிக்கொல்லியை எடுத்து அடிச்சோம்... விளைஞ்சதை வித்தோம்னு இதுல இருக்க முடியாது. இயற்கை வேளாண்மைன்னா... ஆரம்பத்துல கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். அதை நான் நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன். இதை கஷ்டம்னு கூட சொல்லக்கூடாது... பயிற்சிக் காலம்னு சொல் லலாம். அதை முடிச்சிட்டா... அப்புறம் சுலபம் தான். அதேபோல, பாலேக்கர் சொல்லியிருக்கற விஷயங்களைத் தெள்ளத்தெளிவா கடைபிடிக் கணும். அதை விட்டுட்டு, நமக்கு ஏற்கெனவே தெரிஞ்ச விஷயங்களை வெச்சிக்கிட்டு அரைகுறையா களத்துல இறங்கினா மொத்தமும் வீணாப்போ யிடும்.
ஆரம்பத்துல வேலை கடுமையா இருந்தாலும்... இந்த ஜீரோ பட்ஜெட் மூலமா பல செலவுகள் மிச்சமாகிறது முக்கியமான விஷயம். அதோட... நஞ்சில்லாத உணவை விளைவிக் கிறோம்கிற மன திருப்தியும் கிடைக்குது'' என்று சொன்னவர், வாய்க்கால் ஓரத்தில் பெரிய பாத் திரம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 'ஜீவாமிர்த' கரைசலைக் கலக்கி விட்டபடி தொடர்ந்தார்.

''ஜீரோ பட்ஜெட் விவசாயத் தோட ஆதாரமே ஜீவாமிர்தக் கரைசல்தான். அது ஒண்ணு இருந்தாலே போதும், இயற்கை விவசாயத்துல கரை ஏறிடலாம். என்னோட வயல்ல 20 நாளைக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தைக் கொடுக்கிறேன். நடவு நட்ட 21-ம் நாள் ஆரம்பிச்சி, ஒரு போகத்துக்கு மொத்தம் நாலு தடவை வரை கொடுக்க வேண்டியிருக்கும். இதுல ஒரு தடவை நீம்அஸ்திராவைக் கலந்து கொடுக்கிறேன். கடைசி தடவை கொடுக்கும்போது மோரைக் கலந்துக்கிறேன். அவ்வளவுதான். இதுக்கு வேற எந்த உரமும் தேவை யில்ல.
ஜீவாமிர்தக் கரைசல் தொட்டியை வாய்க்கால் ஓரத்துல நிறுத்தி, அதுல இருக்கற குழாய்கிட்ட ஒரு புனலை வெச்சிடணும். புனலோட கீழ்ப்பகுதி நிலத்துக்கு தண்ணி போற வாய்க்காலுக்கு மேல இருக்கற மாதிரி பார்த்துக்கணும். நிலத்துக்குப் பாயுற பாசன தண்ணியோடு, ஜீவாமிர்தக் கரைசலும் கலந்து எல்லா இடத்துக்கும் பரவிடும். இதன் காரணமா... நம்ம நிலம் முழுக்க மண்புழு நிறைஞ்சிடும்'' சொல்லிக்கொண்டே வரப்பு ஓரத்தில் இருந்த மண்ணை லேசாக கையில் அள்ளினார்... 'கொசகொச'வென நெளிய ஆரம்பித்தார்கள் 'உழவனின் நண்பர்'களான மண்புழுக்கள்!
நெல் சாகுபடியில் தான் மேற்கொண்டிருக்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை நேதாஜி விவரித்தார். அதை பாடமாக தொகுத்திருக்கிறோம்.
ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கமான பாணியிலான நடவு மற்றும் ஒற்றை நாற்று நடவு என்று இரண்டு விதமான முறைகளில் நெல் சாகுபடி செய்து வருகிறார் நேதாஜி.
ஒற்றை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதைநெல் தேவைப்படும். விதைகளை முதலில் பீஜாமிர்தக் கரைசலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு நிழலில் உலர்த்தி, மேட்டுப்பாத்தியான நாற்றங்காலில் விதைக்க வேண்டும். நான்காம் நாள் ஜீவாமிர்தக் கரைசல் கொடுக்கவேண்டும். 15-ம் நாள், அந்த நாற்றுகளைப் பறித்து, வேர்ப் பகுதியை ஜீவாமிர்தக் கரைசலில் நனைத்து, நடவு செய்யவேண்டும்.
இதுவே வழக்கமான பாணி நடவு முறை என்றால் 30 கிலோ விதை தேவைப்படும்.

வழக்கப்படி நாற்றங்காலில் விதைத்து, உரிய நாள் வந்த பிறகு, நாற்றுகளைப் பறித்து பிறகு நடவு செய்யவேண்டும். இந்த முறையில் சாகுபடி செய்யும் போதும் விதைகளை பீஜாமிர்தத்தில் ஊற வைத்து உலர்த்தித்தான் விதைக்கவேண்டும். அதேபோல நாற்றுகளை ஜீவாமிர்தக் கரைசலில் நனைத்து நடவேண்டும். விதை மற்றும் நாற்றங்கால் முறையில்தான் வித்தியாசம். மற்றபடி நடவில் ஆரம்பித்து அறுவடை வரை ஒரே தொழில்நுட்பம்தான்.
நிலத்தை நன்கு உழவு செய்து நஞ்சையாக்க வேண்டும். மாடுகளை வைத்து உழவு செய்வது நல்லது. இல்லாவிட்டால், பவர் டில்லரை பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் டிராக் டரைப் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால், ஆழமாக உழவு நடந்து, மண்ணுக்குள்ளே இருக்கும் நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். இதன் காரணமாக நிலத்தின் வளமும் குறைந்துவிடும் (நேதாஜியிடம் உழவு மாடுகள் இல்லாததால், தற்சமயத்துக்கு பவர் டில்லர் கொண்டுதான் உழவு செய்கிறார்). உழவுக்குப் பிறகு, உரிய முறைப்படி நாற்றுகளை நடவு செய்யவேண்டும். அதாவது, ஒற்றை நாற்று முறையாக இருந்தால், அதன்படியே கவனமாகச் செய்ய வேண்டும்.
பிறகு, 21-ம் நாள் ஜீவாமிர்தக் கரைசல் கொடுக்க வேண்டும். இப்படி 20 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தக் கரைசலைக் கொடுக்கவேண்டும். ஒரு தடவை நீம்அஸ்திராவை கலந்து தெளிக்கவேண்டும். இதன் மூலம் புழு, பூச்சித் தாக்குதல் ஏதுமின்றி பயிர் பச்சைக் கட்டி வளரும். கடைசி தடவை ஜீவாமிர்தம் கொடுக்கும்போது மோர் கலந்து கொடுக்க வேண்டும்.

தொழில்நுட்பங்களை விவரித்து முடித்த நேதாஜி, அடுத்து மகசூல் கணக்கு பற்றி ஆரம்பித்தார். ''ஜீரோ பட்ஜெட் முறையில ஒற்றை நாற்று விதைச்சப்ப முதல் தடவை ஏக்கருக்கு 15 மூட்டை நெல்லு கிடைச்சிது. பாலேக்கர் சொன்ன முறையில மூடாக்கெல்லாம் போடாததால களை நிறைய மண்டிப்போச்சி. அதனாலதான் மகசூல் குறைவு. இப்ப ரெண்டாவது தடவையா அறுவடை முடிஞ்சிருக்கு. இப்பவும் மூடாக்கு போடல. ஆனா, கிட்டத்தட்ட 19 மூட்டை வரைக்கும் கிடைச்சிருக்கு. வழக்கமான நடவு முறையில முதல் தடவை 22 மூட்டை கிடைச்சிது. இப்ப கூடுதலா மூணு மூட்டை கிடைச்சிருக்கு.
இங்க முப்போகமும் நெல் சாகுபடிதான். ஓயாம ரசாயன உரங்களைக் கொட்டிக் கொட்டி விவசாயம் செய்யறதால, மகசூல் குறைஞ்சிக்கிட்டேதான் இருக்கு. தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் முறையைக் கையாண்டா அடுத்தடுத்த தடவையில மகசூல் கூடுதலா கிடைக்கும்கிறதுல சந்தேகம் இல்ல. அதுக்கு நானேதான் உதாரணம். ஒற்றை நாற்றுல கூடுதல் லாபம் வரணும். ஆனா இப்போ எனக்கு குறைவாத்தான் கிடைக்குது. அடுத்தடுத்த தடவையில அது அதிகரிக்கும்

இயற்கை முறையில விளைவிக்கறப்ப... நல்ல விலையும் கிடைக்குது. நான் நெல்லா கொடுக்கறதில்ல. அரிசியாவே அரைச்சிக் கொடுக்கச் சொல்லி பலரும் கேக்கறாங்க. அதனால, அரிசியாத்தான் கொடுக்கிறேன். இதன் மூலமா கூடுதல் லாபம் கிடைக்குது.
'மத்த அரிசியில சமைச்சா, மதியம் ஒரு மணிக்கெல்லாம் சோறு நீர்த்திடுது. உங்ககிட்ட வாங்கின அரிசியில சமைச்ச ராத்திரி 9 மணிக்கு மேலயும் சோறு அப்படியே இருக்கு'னு சொல்லி கிட்டு பலரும் என்கிட்ட அரிசி வாங்கறாங்க. இங்கிருந்து மெட்ராசுக்கு போய் பெரிய பெரிய ஆபீசுல வேலை பார்க்கறவங்கள்லாம் என் வீட்டுக்கே வந்து, இயற்கை முறையில விளைஞ்ச அரிசியை கேட்டு வாங்கிட்டுப் போறாங்க. நான் விளைவிக்கற அரிசியில எந்த நச்சும் கிடையாது... சாப்பிடறதுக்கு ருசியாவும், மணமாவும் இருக்கு. அதனாலதான் பலரும் இதை விரும்பி வந்து கேக்கறாங்க. என்னோட தேவைக்குப் போக மீதியைத்தான் நான் விலைக்குக் கொடுக்கறேன். இதுவரைக்கும் கிலோ 25 ரூபாய்னு கொடுத்தேன். இப்ப விலைவாசி ஏறிப்போனதால, கிலோ 35 ரூபாய் வரைக்கும் போறதுக்கு வாய்ப்பிருக்கு. என்ன விலையா இருந்தாலும் வாங்கிக்க தயாரா இருக்கறாங்க மக்கள். ஏன்னா... இது இயற்கை அரிசி'' என்றவர்,
''பாலேக்கர்ங்கறவர் யாரு... எவருனு எனக்கு தெரியாது... இயற்கை விவசாயம்னா சிவப்பா கறுப்பானு தெரியாது. இது எல்லாத்தையும் எனக்கு தெரிய வெச்சி, இன்னிக்கு நம்மளாலயும் நல்லபடியா சம்பாதிக்க முடியும்னு இந்த விவசாயி வாழ்க்கையில ஒளி ஏத்தி வெச்சது பசுமை விகடன்தான்'' என்று வாயார நன்றி பாராட்டினார்.

|
|
| பசுஞ்சாணம் 10 கிலோ, நாட்டுமாடு சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை போன்ற ஏதாவது ஒன்று)- 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இவற்றுடன், உங்கள் நிலத்தின் மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, பிளாஸ்டிக் கேன் அல்லது தொட்டியில் போட்டு 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். இந்தக் கலவையை மர நிழலில் வைத்திருப்பது முக்கியம். காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் கடிகார முள் சுற்றும் திசையில் குச்சியைக் கொண்டு கலக்கி வந்தால், ஜீவாமிர்தம் தயாராகிவிடும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இதை பாசன நீரில் கலந்துவிட்டோ... தெளிப்பான் மூலமாகவோ கொடுக்கலாம்.
நீம் அஸ்திரா தயாரிக்கும் முறை
நாட்டு மாட்டின் சாணம் 2 கிலோ, சிறுநீர் 10 லிட்டர், வேம்பு இலை மற்றும் அதன் குச்சிகள் 10 கிலோ. இவற்றை பெரிய பாத்திரத்தில்போட்டு 200 லிட்டர் நீரையும் ஊற்றி, 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி வைக்கக்கூடாது. கடிகாரச் சுற்றுக்கு எதிர் திசையில் மூன்று தடவை, கலக்கிவிடவேண்டும். பிறகு, கரைசலை வடிகட்டி, உரிய அளவில் நீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கவேண்டும்.
|
No comments:
Post a Comment