ஜீரோ பட்ஜெட் தம்பதியின் ஜில்ஜில் அனுபவம்
பாய்ச்சல், தெளித்தல் முறையில் ஜீவாமிர்தம் கொடுத்தாலே போதும்.
நோய் நொடியில்லை, செலவில்லை.
35% என்பது மாறி 60% என்று அதிகரிக்கிறது மகசூல்.
9 ஏக்கரில் 30 டன். |
"ஒன்பது ஏக்கர்ல மா சாகுபடி செய்றேன். நட்டு ஒன்பது வருஷமாச்சி. இப்ப ரெண்டு வருஷமா, ஜீவாமிர்தக் கரைசல் கொடுத்துட்டு வர்றேன். ஒருநாளும் இல்லாதத் திருநாளா, இந்த வருஷம் மாமரமெல்லாம் நிறைய பூவெடுத்திருக்கு. இந்தக் கண்கொள்ளாக் காட்சியை நீங்களும் ஒரு நடை வந்து பாருங்களேன்" என்று தொலைபேசி வழியாக அழைப்பு விடுத்தார் தாராபுரம், சுப்பிரமணியம். அடுத்த நாளே அங்கே போய் சேர்ந்தோம்.
ஒன்பது ஏக்கர் நிலத்தை கிளுவை வேலி சூழ்ந்திருக்க, நடுவே பச்சைக் குடை பிடித்து நின்ற மாமரங்களில் கொத்துக் கொத்தாகப் பூக்கள்; அருகிலேயே கோடை உழவு, புழுதி பறக்கும் ஆறு ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் காடு; அரை ஏக்கரில் தென்னை; அதனருகில் வாழை, பப்பாளி, முருங்கை மற்றும் பூச்செடிகள்; கின்னிக்கோழி, வாத்து, வான்கோழி என அலைந்து கொண்டிருக்கும் ஜீவராசிகள்; வைக்கோல் போர் அருகே நின்றபடி அசைபோட்டுக் கொண்டிருக்கும் நாட்டுமாடு; இதுதான் சுப்பிரமணியத்தின் தோட்டம்.
மண் தாழிகளில் இருந்த ஜீவாமிர்தக் கரைசலை, மனைவி வஞ்சிக்கொடியோடு சேர்ந்து கலக்கிக் கொண்டிருந்த சுப்பிரமணியம், "இன்னிக்கு ஜீவாமிர்தம் தெளிக்கவேண்டிய நாள். இப்ப ஆரம்பிச்சாத்தான் பொழுதுக்குள்ள பாதியாவது முடிக்க முடியும்" என்றபடியே வரவேற்றவர், வேலையில் மும்முரமானார். பத்து லிட்டர் நீரில் ஒரு லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து கை விசைத் தெளிப்பான் மூலம், மாஞ்செடிகளுக்கு புகை நீராகத் தெளிக்கத் தொடங்கினார்கள்.
பல ரகம்தான் பலன் கொடுக்கும்!
அப்படியே நம்மிடம் பேச்சை ஆரம்பித்த சுப்பிரமணியம், "ஆயிரம் அடி தொலைவுல ஆர்ப்பாட்டம் இல்லாம ஓடுற அமராவதி ஆத்தோட புண்ணியத்தால தண்ணிக்கு குறையில்ல. ஏழரை ஹெச்.பி. பம்ப்செட். 40 அடி ஆழ கிணத்துப் பாசனத்துலதான் வெள்ளாமை நடக்குது. ஒன்பது ஏக்கர்ல 25 அடி இடைவெளியில மொத்தம் 630 மாஞ்செடிகளை நட்டேன். நீலம், செந்தூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா, அல்போன்ஸா, கல்நீலம், இமாம்பசந்த், பெங்களூரானு பல ரகங்களை கலந்துதான் நட்டுருக்கேன். நீலம் 250, பெங்களூரா 250, மற்ற ரகங்கள் எல்லாம் சேர்த்து 60, ஆகமொத்தம் 560 மரங்கள் நல்லா இருக்கு.
'ஒரே ரகமா வைக்காம, பல ரகங்களை கலந்து வெச்சா மகரந்தச் சேர்க்கை சீக்கிரமா நடந்து மகசூல் கூடும்'னு எனக்குத் தெரிஞ்ச அனுபவ விவசாயிங்க சிலர் சொன்னாங்க. அதைத்தான் செய்திருக்கேன். எல்லாமே கிருஷ்ணகிரி பக்கம் போயி வாங்கி வந்து வெச்ச நாத்து. அன்னிய தேதியில, நாத்து, குழி எடுக்க, நடவுனு செடிக்கு 90 ரூபாய் செலவு. இப்ப கூடுதலாகும்.
மனமாற்றம் தந்த ஜீரோ பட்ஜெட்!
இந்தப் பகுதியில செம்மறி ஆடு வளர்ப்பு அதிகமாயிருக்குறதால, அடிக்கடி கிடைபோட்டு நிலத்தை வளப்படுத்திதான் வெச்சிருக்கேன். நிலக்கடலை, சோளம், மிளகாய்னு வெள்ளாமை செஞ்சிகிட்டிருந்த இந்த நிலத்துல 97&ம் வருஷம் மா நட்டேன். 2001& ல பலனுக்கு வந்திருச்சி. ஆரம்பத்தில் இருந்தே ரசாயன உரம் எதையும் போடல. ஆனா, பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதலுக்காக ரசாயன பூச்சிக்கொல்லிகளை வாங்கித் தெளிச்சேன். ஆனா, அதையும் கைவிட வெச்சிட்டுது பசுமை விகடன்" என்று சுப்பிரமணியம் சொல்ல...
"முதல் இதழ்ல இருந்து எல்லா புத்தகத்தையும் பத்திரமாக சேர்த்து வெச்சிக்கிட்டே இருக்கோம்ல" என்றபடி புன்னகையோடு வந்த அவர் மனைவி வஞ்சிக்கொடி,
"முக்கியமா ஜீரோ பட்ஜெட் கட்டுரைதான் பெரிய மன மாற்றத்தை ஏற்படுத்திடுச்சி. திண்டுக்கல், ஈரோடுனு ரெண்டு ஊருல நீங்க ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பு நடத்தினீங்க. ஆனா, எங்களால கலந்துக்க முடியல. இருந்தாலும் புத்தகத்துல வந்ததையே ஆழமா படிச்சி தெளிவு படுத்திக்கிட்டு, துணிச்சலா அந்த தொழில்நுட்பத் தையெல்லாம் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டோம்.
ஜீவாமிர்த சீர்வரிசை... மகுடம் சூடிய மாந்தோப்பு!
முதல் வேலையா... நாட்டுமாடு ஒண்ணை வாங்கிட்டு வந்தோம். இப்ப ரெண்டு வருசமா பாய்ச்சல், தெளித்தல்னு ரெண்டு விதத்துலயும் மாறி, மாறி கொடுத்த ஜீவாமிர்தம்... மாந்தோப்பு முச்சூடும் மகுடம் சூடி நிக்குது" என்றவர், பக்கத்திலிருந்த மாமரத்துக்கடியில் அமர்ந்து, மண்ணைக் கிளறி, கையில் அள்ளினார். கொசகொசவென மண்புழுக்கள் நெளிந்தன.
 "எங்க தோட்டம் முச்சூடும் எங்க கை வெச்சிக் கிளறினாலும், மண்புழுதான் வரும். எல்லாம் ஜீவாமிர்தக் கரைசல் கொடுத்த சீர்வரிசை. ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறுறதுக்கு முன்ன, மாசம் ஒரு தண்ணி கொடுப்போம். இந்த ரெண்டு வருசமா, வருசத்துக்கு அஞ்சி தண்ணி மட்டுந்தான் கொடுக்கிறோம். வாய்க்கால்ல தண்ணி கொடுக்கிறப்பவே ஜீவாமிர்தத்தைக் கலந்து விட்டுடுவோம். அதில்லாம மாசத்துக்கொரு முறை தெளிக்கவும் செய்றோம். பூவெடுக்குறப்ப... பூவெல்லாம் பட்டாணி அளவுல காயா மாறுறப்ப... இப்படி முக்கியமான நேரத்துல எல்லாம் ஜீவாமிர்தத்தைத் தெளிக்குறோம்" என்று வஞ்சிக்கொடி நிறுத்த, மீண்டும் ஆரம்பித்தார் சுப்பிரமணியம்.
35 சதவிகித மகசூல் 60 சதவிகிதமானது!
"ஜீவாமிர்தக் கரைசல் தயாரிப்புக்கு பிளாஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்தலாம்தான். ஆனா, சூழலுக்குக் கேடான பிளாஸ்டிக் கூடவே கூடாதுங்றதுல உறுதியா இருக்கோம். தேடிப்பிடிச்சி 25 லிட்டர் கொள்ளளவு உள்ள மண் தாழிகளை வாங்கிட்டு வந்து, அதுலதான் தயாராகுது ஜீவாமிர்தம். ரெண்டு வருஷமா இதைத்தான் கொடுக்கிறோம். மாமரங்களைத் தாக்குகிற எந்த நோயும் எங்க தோப்புல எட்டிகூட பாக்கல. முன்னல்லாம் பிடிக்கிற பூவுல 35 சதவிகிதம்தான் மகசூலா கிடைக்கும். மத்ததெல்லாம் கொட்டிடும். இப்ப 60 சதவிகித பூவும் மகசூலா மாறிடுது. மரங்களைச் சுத்தியும் ரெண்டடியில வட்டப்பாத்தி அமைச்சிருக்கோம். மரத்திலிருந்து விழுற இலை களை வெச்சி ஒவ்வொரு மரத்தைச் சுத்தியும் ஒன்றரை அடி உயரத்துல இலை மூடாக்கு போட்டிருக்கோம். இது மூலமா மரங்களுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறதோட, இலைகள் மக்கி தழைச் சத்தும் கிடைச்சிடுது. நவம்பர், டிசம்பர் மாசத்தில கட்டாயம் ஒரு முறை கவாத்து செய்யணும்.
கொடை தரும் கொள்ளு!
வருஷம் ஒரு தடவை கிடைக்கிற பருவமழை யைப் பயன்படுத்தி, தோப்பு முச்சூடும் ஊடுபயிரா கொள்ளு விதைச்சி உழவு அடிச்சிடுவோம். கிடைக்கிற மழையில.. தளதளனு வளர்ந்துடும். நிலத்துக்குக்கு நைட்ரஜன் கிடைக்கிறதோட, 100 கிலோ கொள்ளும் மகசூலா கிடைக்குது. இந்தக் கொள்ளுப் பயறு, ஜீவாமிர்தம் தயாரிக்கறதுக் கும் பயன்படுது. கொள்ளுச் செடிகளை தோப்புலயே மூடாக்கா போட்டுடுவோம். அது மக்கி மண்ணோடு கலந்து நுண்ணுயிரிகளைப் பெருக்கும்.
அஞ்சி கின்னிக்கோழி, ரெண்டுவாத்து, 25 நாட்டுக்கோழி, அஞ்சி வான்கோழினு 37 உருப்படிகள் மாந்தோப்புல மேயுது. கரையானுக் காக மண்ணை ஏகத்துக்கும் இதுங்கள்லாம் கிளறுறதால... மண்ணுக்குள்ள நல்ல காத்தோட்டம் ஏற்படுது. அதுங்களோட எச்சம் வேற மண்ணோடு சேர்ந்து எருவாகுது" என்ற சுப்பிரமணியம்,
"இந்த ரெண்டு வருசமா விவசாயத்துல எங்களுக்கு வரவு மட்டும்தான். செலவுனு பார்த்தா... 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து நாட்டு மாடு வாங்கினது மட்டும்தான்" என்று நிறுத்தினார்.
பெருசா பலன் தரும் பெரும்போகம்!
 உடனே, "எல்லா மாமரமும் 60 வருஷம் பலன் தரும்னு சொல்றாங்க. அதுல, பெரும்போகம், இடைபோகம்னு ரெண்டு பட்டம் இருக்கு. தை, மாசி மாசத்துல பூ எடுத்து வைகாசியில பழம் பறிக்கறது பெரும்போகம். இதுலதான் மகசூல் கூடுதலா கிடைக்கும். அடுத்து இடைபோகம். ஆடியில பூத்து, ஐப்பசியில பலனுக்கு வரும். இதுல பெரிசா பலன் இருக்காது. ஊறுகாய், சாம்பார் பயன்பாட்டுக்குத்தான் தேறும். வழக்கமா பெரும்போகத்தில 20 டன் மகசூல் எடுத்தா, இடைப்பட்டத்தில 3 டன் வரைக்கும் காய் கிடைக்கும். ஆனா, இந்த ரெண்டு வருஷமா ஜீவாமிர்தம் பயன்படுத்துறதால இந்தத் தடவை பெரும்போகத்துல 30 டன்னும் இடைபோகத்துல 10 டன்னும் மகசூல் வரலாம்னு நினைக்கிறோம். ஏன்னா, மரங்களைப் பார்த்தாலே அந்தக்கூறு நல்லாவே தெரியுது" என்று சில தகவல்களைச் சொன்னார்.
ஜீவாமிர்தத்தில் விளைந்த தேவாமிர்தம்!
மா பூத்திருந்தபோது அங்கே சென்றிருந்த நாம், மறுபடி அறுவடை நேரத்திலும் அங்கே சென்றோம். கொத்துக் கொத்தாக காய்களும் பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தன. ஆர்வத்தோடு வரவேற்ற சுப்பிரமணியம், "எதிர்பார்த்ததைவிட இப்ப நல்ல பலன் கிடைக்கும்னு தோணுது. எப்படியும் 40 முதல் 50 டன் வரைக்கும் கிடைக்கும். எதிர்காலத்துல இது இன்னும் அதிகமாகும்கிற நம்பிக்கை இருக்கு. ஏன்னா... ஜீவாமிர்தத்தோட மகிமையே அதுதானே!
அத்தோட, ஊடுபயிரா போட்டிருக்கற கொள்ளு, உயிர்மூடாக்காக மாறி, நிலத்துல ஈரப்பதத்தைக் காக்குது. இதனால் மண்புழு, நுண்ணுயிரியெல்லாம் உற்சாகமாக செயல்பட்டு... மாமரத்துக்குத் தேவையான நைட்ரஜன், அமோனியா, ஜிங்க் மாதிரியான ஊட்டச் சத்துக்களைத் தயாரிச்சிக் கொடுக்குது. இதனால மாம்பழமெல்லாம் பங்கமில்லாம ஒரே தரத்துல விளையுது. நிறமும் நல்லா இருக்கிறதோட... சுவையும் அருமையா இருக்கு.
எங்கள பொருத்தவரை காய்களைப் பறிச்சி, ‘கல்’ வெச்சு பழுக்க வைக்கிற வேலை எல்லாம் கிடையாது. மரத்திலேயே பழுக்கவிட்டு பறிக்கிறதால எங்க மாம்பழத்துக்கு எப்பவுமே கிராக்கிதான். தேடிவந்து வாங்கிட்டுப் போறாங்க. சீசன் நேரத்துல தாராபுரம் உழவர் சந்தைக்குக் கொண்டுபோனா உடனே வித்துத் தீர்ந்துடும். ஜீரோ பட்ஜெட் கொடுத்த பவுசு காரணமா, எங்க பழதுக்கு கிடைக்குது தனி மவுசு" என்றபடியே மாம்பழம் ஒன்றைக் கொடுத்து சுவைக்கச் சொன்னார்.
"ஆகா..." என்று நாம் சப்புக் கொட்ட...
"சும்மாவா, ஜீவாமிருதத்துல விளைஞ்ச தேவாமிர்தமாச்சே...!" கவித்துவமாகச் சொல்லிச் சிரித்தார் சுப்பிரமணியம்.
படங்கள் தி. விஜய்
ஜீவாமிர்தக் கரைசல் தயாரிக்கும் முறையை பற்றி கூறுகிறார் சுப்பிரமணியம்.
- "200 லிட்டர் தண்ணீரில் நாட்டுமாட்டின் சாணம் 20 கிலோ, நாட்டுமாட்டின் சிறுநீர் 15 லிட்டர், நாட்டு வெல்லம் 3 கிலோ, (பப்பாளி கிடைக்கும் சீசனில் 5 கிலோ கனிந்த பப்பாளி) முளைகட்டி அரைக்கப்பட்ட கொள்ளு மூன்று கிலோ இவற்றுடன் நமது நிலத்தின் ஜீவனுள்ள மண் 250 கிராம். இவைகளை மண் தாழியில் விட்டு நன்றாக கலக்க வேண்டும். மூன்று நாட்கள், காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை வலது சுற்றின்படி பத்து நிமிடம் நன்றாக கலக்கி வந்தால் ஜீவாமிர்தம் தயார்."
அறுவடை நேரம் என்பதால் ஜீவாமிர்தக் கரைசல் பயன்படுத்தும் மண்தாழி காலியாக இருக்கிறது. ஆனால், அதிலிருந்து வெளிவரும் வாசத்துக்கு மயங்கி, தாழிக்குள் தேனீக்கள் கூடு கட்டியிருக்கின்றன. இந்தத் தேனீக்கள், மகரந்தச் சேர்க்கைக்கு உதவியாக இருக்கின்றன என்பதால் 'தேன் எடுக்கிறேன் பேர்வழி' என்று அவற்றுக்குத் தொல்லை கொடுப்பதில்லை சுப்பிரமணியம்.
|
உணவுதான் வியாதி... உணவுதான் மருந்து!
பல வருடங்களாக இயற்கை வழி விளைபொருட்களை தேடிப்பிடித்து வாங்கி பயன்படுத்தி வருபவர் தாராபுரத்தைச் சேர்ந்த பிரபல குழந்தைகள் நல மருத்துவர் அறிவானந்தம். சுப்பிரமணியம் தோட்டத்து மாம்பழத்துக்கு இவர் வாடிக்கையாளர்.
"இயற்கை உணவு சாப்பிடும் குழந்தைகள் சாத்வீக குணம் கொண்டவையாக இருக்கின்றன. அதுவும் குழந்தைகளுக்கு ஏற்படும் 30% வியாதிகள் உணவின் மூலமே வருகிறது. வயிறு சம்பந்தமான நோய்கள்தான் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ரசாயனம் கலந்த உணவுகள்தான் என்பதை நீண்ட கால ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டேன். அதனாலே என்னிடம் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களைக் கொடுக்கப் பரிந்துரைத்து வருகிறேன். குறிப்பாக, நார்ச்சத்து கொண்ட பொருட்களை அதிகளவு கொடுக்க வேண்டும். நானும் பல வருடங்களாக இதைத்தான் சாப்பிட்டு வருகிறேன். உணவுதான் வியாதி, உணவுதான் மருந்து. இதை அறிந்து கொண்டால்... நோய்கள் நம்மை அண்டாது" என்று அடித்துச் சொல்லும் அறிவானந்தம்,
"நஞ்சில்லாத உணவை இயற்கை விவசாயத்தால் மட்டுமே கொடுக்க முடியும். அதன் மூலம் வியாதியில்லா உலகத்தை நிச்சயமாகப் படைக்கலாம். எதிர்காலத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யும் திட்டம் வைத்திருக்கிறேன்-பசுமை விகடன் தைரியத்தில்" என்று சொன்னார்.
|
ஒடிய வாடல்... தேறிய தென்னை!
அரை ஏக்கர் தென்னந்தோப்பைச் சுற்றிக் காட்டிய சுப்பிரமணியம், "ரெண்டு வருஷத்துக்கு முன்ன தென்னையில வாடல் நோய் தாக்கி, காய்ப்பு குறைஞ்சிப் போச்சு. 'அவ்வளவுதான் 40 மரங்களும், காலி'னு கவலையோடு இருந்தேன். அந்த சமயத்துலதான் நீங்க ஜீவாமிர்தத்தை அறிமுகப்படுத்தினீங்க. அதை விட்டுப் பார்ப்போமேனு முடிவு பண்ணி, வாரம் ரெண்டு தடவை, மரத்துக்கு 10 லிட்டர் வீதம் ஊத்துனோம். வாடல் நோய் காரணமா பிசின் வடியற இடத்துலயெல்லாம் கைத்தெளிப்பான் மூலம் தெளிச்சோம். தொடர்ந்து இதையே செய்துகிட்டிருந்ததுல... நல்ல பலன். ஒரு வருஷத்துக்குப் பிறகு, மரம் தெளிவாயிடுச்சி. இப்ப தென்னை மரமெல்லாம் பூரணமா குணமாயிடுச்சி.
மாண்டியா போயி, 800 கன்னுங்க புதுசா வாங்கி வந்திருக்கேன். இதை நட்டு, ஊடுபயிரா முருங்கையை நடப்போறேன். தென்னையில ஊடுபயிராக முருங்கையை நட்டா, மண்ணுக்கு நல்ல வளம் கிடைக்கும்னு சொல்றாங்க. அதுக்கும் ஜீவாமிர்தம்தான் கொடுக்கப்போறேன்'' என்றார்.
|

|
No comments:
Post a Comment