Wednesday, 1 October 2014

சேனை !

நட்டா மட்டும் போதும், நட்டப்படுத்தாத சேனை !

மகசூல்என்.சுவாமிநாதன்
"நட்டா மட்டும் போதும், நட்டப்படுத்தாத சேனை!"
தென்னை, வாழைக்கு உன்னத ஊடுபயிர்
பத்து மாதப் பயிர்....
தென்னை, வாழைக்கு ஏற்ற ஊடுபயிர்....
செலவு ரூ. 1,000, வரவு ரூ. 5,000....
விலை கிடைக்கும் போது விற்கலாம்...
'ஊடுபயிர் என்றாலே நொம்பலம் இல்லாத வரும்படி' என்பார்கள். ஆள், படை, அம்பாரி என்று பெரிதாக பலமெல்லாம் திரட்டாமல்... குறைந்த முதலீடு, குறைந்த ஆள் பலம் என்பதை வைத்துக் கொண்டே நிறைவான லாபத்தை ஊடுபயிர் மூலம் பார்த்துவிடமுடியும். அந்த வகையில், தென்னை, வாழைக்கு நடுவே ஊடுபயிராக சேனைக் கிழங்கு விதைத்துக் கொண்டிருக்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள்.

இம்மாவட்டத்தில் தென்னை, வாழை விவசாயம் பரவலாக நடைபெறுகிறது. இதைப் பயன்படுத்தி பல்வேறு ஊடுபயிர்கள் பயிரிடப்படுகின்றன. இவற்றில் சேனைக் கிழங்குதான் முக்கிய ஊடுபயிராக இருக்கிறது.
மார்த்தாண்டம் நகரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வெட்டுமணி கிராமம். ஏற்றம், இறக்கம் நிறைந்த மலைப்பாங்கான பூமி. இங்கே... ஒரு ஏக்கரில் தென்னை, வாழைக்கு இடையில் ஊடுபயிராக, சேனை, சேம்பு ஆகியவற்றை விவசாயம் செய்து வருகிறார் சௌந்திரபாண்டியன். இவர், 'குமரி மாவட்ட நஞ்சில்லா வேளாண்மை சங்கம்' என்ற அமைப்பின் செயலாளராகவும் இருக்கிறார். தன்னுடைய நிலத்தில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில்தான் அவரை சந்தித்தோம். உற்சாகமாக வரவேற்றவர், ''மூணு வருஷமா தென்னை, வாழைக்கு இடையில் சேனைக் கிழங்கை ஊடுபயிரா பயிர் செய்துகிட்டி ருக்கேன். ஏக்கருக்கு அதிகபட்சமா 300 முதல் 400 செடிக வரைக்கும் நடலாம். ரெண்டு தென்னைக்கு இடையில பத்தடி இடைவெளியும், நல்ல வெயிலும் இருந்தா... சேனையை ஊடுபயிராக நடலாம்.
தென்னையா இருந்தா... நாலடிக்கு ஒரு சேனைக் கிழங்கு வீதம் நடவு செய்யலாம். வாழைத் தோட்டமா இருந்தா... ஒரு வாழையிலி ருந்து மூணு அடி தள்ளி நடலாம். சில ரக வாழைக்கு ஆறடி இடைவெளி, சில ரகத்துக்கு எட்டடி இடைவெளினு விடுறாங்க. அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் கூட குறைச்ச இடைவெளி விட்டு சேனையை நடலாம். இப்படிச் செய்யுறப்ப... வாழைக்கு கொடுக்குற தண்ணீர், உரம் இதுலயே சேனை நல்ல வளத்தோடு வளர்ந்துடும். சேனையோடு, சேம்பு வையும் சேர்த்துதான் ஊடுபயிர் பண்றேன். சேனை மட்டும் 200 கிழங்கு நட்டிருக்கேன்'' என்றவர் சாகுபடி முறைகளை ஒப்புவித்தார். அதைப் பாடமாக தொகுத்திருக்கிறோம்.
விதைநேர்த்தி செஞ்சா வில்லங்கம் வராது!
சேனையின் ஆயுள் காலம் பத்து மாதம். ஏப்ரல், மே மாதங்கள் நடவுக்கு மிகவும் ஏற்றது. வண்டல் மண், கரிசல் மண் மற்றும் செம்மண் போன்றவற்றில் பயிரிடலாம். வண்டல் மண் மிகவும் ஏற்றது. நடவு செய்வதற்கு முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு விதைக் கிழங்கை சாணக் கரைசலில் மூழ்கச் செய்து, கிழங்கு உலர்ந்து முளை வரும் வரை நிழலில் காய வைத்து, நடவு செய்ய வேண்டும். ஒன்றரை அடி ஆழத்துக்கு சிறிய குழிகளைத் தோண்ட வேண்டும். சாம்பல், காயந்த சருகுகள், உலர்ந்த சாணம் இவற்றுடன் புழுக்களின் தாக்கத்தில் இருந்து காக்க வேப்பம்பிண்ணாக்கு கலவையைக் கலந்து, குழிகளில் இட்டு விதைக் கிழங்கை நடவு செய்யவேண்டும். கிழங்கு முழுமையாக மண்ணில் புதைந்திருப்பது மிகவும் அவசியம்.
அதிகமாக தண்ணி கட்டினால் அழுகிவிடும்!
அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் முளை வரும். அதிலிருந்து செடி கிளைத்து வரும் வரை நீர் பாய்ச்ச வேண்டும். மழை இருந்தால் நீர் பாய்ச்சத் தேவையில்லை. அதைத் தொடர்ந்து இயற்கையான மழைநீரே போதுமானது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இருபோகம் மழை பெய்வதால் தண்ணீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றபடி தென்னை, வாழைக்கு பாய்ச்சப்படும் தண்ணீரிலேயே சேனை வளர்ந்து விடும். சேனைக்கு எப்போதும் ஈரப்பதம் தேவை. அதேசமயம, அளவுக்கு அதிகமாக தண்ணீர் கட்டினால் கிழங்கு அழுகிவிடும்.
சேனையைத் தாக்காது நோய்!
மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் சருகு, சாம்பல், சாணம் மூன்றும் கலந்து, செடிக்கு ஒரு கிலோ போடவேண்டும். இடையி டையே தேவைக்கேற்ப களை எடுக்கவேண்டும். களைகளை அப்படியே மூடாக்காகப் போட்டு விடலாம். ஊடுபயிராக சேனையை நட்டதில் இதுவரை எந்த நோயும் தாக்கியதில்லை. அதற்கு முக்கியக் காரணமே... இயற்கை முறை விவசாயத் தைக் கடைபிடிப்பதுதான். இல்லையென்றால், கிழங்கில் கட்டாயமாக நோய்த் தாக்குதல் இருக்கும். இது மகசூலைக் குறைக்கும்.
பத்தாவது மாதத்தில் செடியினுடைய இலைகள், காய்ந்து விடும். இலையும், தண்டும் பழுத்து சாய்ந்து விடும். அந்நேரத்தில் கிழங்கின் உத்தேசமான பருமனுக்கு தக்கபடி இடைவெளி விட்டு, சுற்றிலும் மண்வெட்டியால் வெட்டி, கடப்பாரையை வைத்து அசைத்து மெதுவாக கிழங்கை எடுக்க வேண்டும்.
விலை கிடைக்கும்போது விற்கலாம்!
சந்தையில் விலையிருப்பதை பொருத்து பத்து மாதத்துக்கு முன்பேகூட அறுவடை செய்து விடலாம். அறுவடைக்குப் பிறகு விற்பனை வாய்ப்பு இல்லாவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் ஓர் ஆண்டு வரை கெட்டுப்போகாதத் தன்மை கொண்டது சேனை. அதனால், விலை கூடும் சமயத்தில் வெட்டி விற்கலாம். விதைக்காக கிழங்கு எடுக்க நினைப் பவர்கள், கண்டிப்பாக பத்து மாதங்களுக்குப் பிறகுதான் அறுவடை செய்யவேண்டும்.
செலவு 1,000... வரவு 5,000!
''அறுவடை செய்த சேனையை உள்ளூர் சந்தைகளிலேயே விலைக்கு கொடுக்கறதுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. மார்த்தாண்டம், வெட்டு மணி காய்கறி சந்தையில நல்ல விலைக்கு வாங்கிக்கிறாங்க. கல்யாண காலம், விழாக் காலம்னா... கிலோவுக்கு 10 ரூபாய்க்கும் மேல கிடைக்கும். சாதாரண சமயம்னா குறைந்தபட்சம் 5 ரூபாய் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமா 1,000 ரூபாய் செலவு செய்தா... 5,000 ரூபாய்க்கும் மேல வருமானம் கிடைச்சிடும். ஊடுபயிர்ங்கிறதால பெருசா வேலையிருக்காது. ஆனா, நிச்சயமா இந்த வருமானமிருக்கும்'' என்று சொன்ன சௌந்திரபாண்டியன்,
''ஏதோ தென்னையைப் போட்டோம்... வாழையைப் போட்டோம்னு சும்மா இருக்கறதவிட, நம்மாள முடிஞ்ச அளவுக்கு இப்படியெல்லாம் பாடுபட்டா... கையில நாலு காசு பாக்கலாம். மாதா ஊட்டாத சோத்தை மாங்கா ஊட்டும்னு சொல்ற மாதிரி.... முக்கியமா நாம போட்டிருக்கற பயிர் எப்பவாவது கைவிட்டாலும்... ஊடுபயிர் தாங்கிப்பிடிச்சிடும்'' என்று நம்பிக்கை பொங்கச் சொன்னார்.
படங்கள் ரா. ராம்குமார்
ஏழாவது இலையை எடுத்து விடணும்!
சேனைக் கிழங்கு சாகுபடி போன்றதுதான் சேம்பு சாகுபடியும். ஆனால், சேனையைவிட கூடுதலாக தொழுவுரம் இட வேண்டும். செடியின் தூரிலிருந்து ஏழு இலைகள் வந்த பின், தூர் பகுதியை கிளறி, செடிக்கு இரண்டு கிலோ தொழுவுரத்தை இட்டு, மண்ணால் மூடிவிட வேண்டும். நன்றாக செழித்து வளரும் போது, ஆறாவது மாதத்தில் மூன்று, நான்கு இலைகளை கழித்து செடிக்கு பக்கத்திலேயே போட்டு விடலாம். இப்படிச் செய்வதால் நல்ல மகசூல் கிடைக்கும்.

No comments:

Post a Comment