Thursday, 30 October 2014

மண்புழு உரம் தயாரித்தல்

மண்புழு உரம் தயாரித்தல்

பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது.ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன.
ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில்இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்க வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் மண் புழு உரத்தின் பயன்பாடுகள் மற்றும் மண் புழு உற்பத்தி குறித்து கூறியது:
மண்புழு உரத்தின் பயன்கள்:
  • நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணின் நீர்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதியை அதிகரிக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.
  • பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனயீன், ஆக்ஸின், பலவகை நொதிகள் உள்ளன.
  • மற்ற மட்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துகள் அதிகம். இது வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
  • செழிப்பான பயிர் வளர்ச்சி, அதிக மகசூல் எடுக்க வழி வகை செய்யும். கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
  • மண் புழு உரம் தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொள்வதால் வருமானம், வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
தொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தி:

மண்பானையில் மண்புழு உற்பத்தி செய்யும் முறை Courtesy: Dinamani
மண்பானையில் மண்புழு உற்பத்தி செய்யும் முறை Courtesy: Dinamani
  • உற்பத்தி செய்யும் இடமானது நிழலுடன், அதிகளவு ஈரப்பதம், குளிர்ச்சியானப் பகுதியாக இருக்க வேண்டும்.
  • அதாவது உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணை, தென்னைக் கீற்று கூரை உள்ள இடத்தைப் பயன்படுத்தலாம்.
  • தொட்டி கட்டமைப்பானது 6 அடி நீளமும், 3 அடி அகலமும், 3 அடி உயரமும் இருக்குமாறு தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • தொட்டியின் அடிபாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு தென்னை நார்க் கழிவு (அல்லது) கரும்பு சோகை (அல்லது) நெல் உமி போட வேண்டும்.
  • இந்தப் படுக்கையின் மேல் 2 செ.மீ. உயரத்துக்கு வயல் மண்ணைப் பரப்ப வேண்டும். பாதி மட்கிய பண்ணைக் கழிவுகளை (பயிர்க் கழிவு, தழைகள், காய்கறி கழிவு, வைக்கோல்) 50 சதவீதம் கால்நடைக் கழிவுடன் (மாட்டு எரு, ஆட்டு எரு, சாண எரிவாயுக் கழிவு) கலக்க வேண்டும்.
  • இக்கலவையை, தொட்டியில் 2 அடி உயரத்துக்குப் நிரப்ப வேண்டும். தொட்டியில் கழிவுகளின் மேற்பரப்பில் 2 கிலோ ஆப்ரிக்கன் மண்புழுவை விட வேண்டும்.
  • தினமும் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். தொட்டியை தென்னை கீற்றுகள் மூலம் முடி வைக்கவும்.
  • 60 நாள்களுக்குள் மண்புழு உரம் தயாராகிவிடும். மண்புழு உர அறுவடையானது மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழுக் கழிவுகளை மட்டும் அறுவடை செய்ய வேண்டும்.
  • ஒரு கிலோ மண் புழு உர உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ 1.50.
மண் புழு குளியல் நீர் உற்பத்தி செய்தல்:
மண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்யும் முறை Courtesy: Dinamani
மண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்யும் முறை Courtesy: Dinamani











  • பெரிய மண்பானை (அ) பிளாஸ்டிக் பேரல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • பேரல்களின் அடிபாகத்தில் 10 செ.மீ. உயரத்தில் கூழாங்கற்கள், மணல் நிரப்ப வேண்டும். இதில் நன்றாக மட்கிய பண்ணைக் கழிவுகள், மாட்டு எருவை பேரல்களில் மேல் பகுதிவரை நிரப்ப வேண்டும்.
  • இதன் மேல் பகுதியில் 500 மண்புழுக்களை விட வேண்டும். பிறகு பேரல் மேல் பகுதியில் ஒரு வாளியை வைத்து தொடர்ந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • தினமும் 4-5 லிட்டர் நீர் வாளியில் ஊற்றப்பட வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு தினமும் 3 -4 லிட்டர் வரை உற்பத்தி செய்யலாம்.
  • 1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 10 லிட்டர் நீரில் கலந்து அனைத்து வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக தெளிக்கலாம், 1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 1 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்து பூச்சி விரட்டியாக பயிர்களுக்கு தெளிக்கலாம்.
  • மண் புழுவை உற்பத்தி செய்தல்: மண் பானையில் சிறிய துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • இதில் ஒரு பங்கு காய்ந்த இலைகள், ஒரு பங்கு மட்கிய மாட்டுச் சாணம் (1:1) போட வேண்டும்.
  • 10 கிலோ மட்கிய எருவுக்கு 50 புழுக்கள் வீதம் மண் பானையில் விட வேண்டும். இந்த மண் பானையை ஈரக்கோணிப்பைப் போட்டு மூடி வைக்க வேண்டும். நிழலான இடத்தில் மண்பானையை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
  • 50 – 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். 50 – 60 நாட்களில் 50 லிருந்து 250 மண்புழுக்களை பெருக்கலாம்.
மண்புழு உரத்திலுள்ள சத்துப் பொருள்களின் அளவு:
  • மண்புழு உரத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருள்களை பொருத்தே அமைகிறது.
  • பொதுவாக மண் புழு உரத்தில் 15-21 சதவீதம் அங்கக கார்பன், 0.5-2 சதவீதம் தழைச்சத்து, 0.1-0.5 சதவீதம் மணிச்சத்து, 0.5-1.5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.
  • மேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.
மண்புழு உரம் – பரிந்துரைகள்
  • நெல், கரும்பு, வாழை – 2000 கிலோ ஏக்கர்
  • மிளகாய், கத்தரி, தக்காளி – 1000 கிலோ ஏக்கர்
  • நிலக்கடலை, பயறுவகைகள் – 600 கிலோ ஏக்கர்
  • மக்காச்சோளம், சூரியகாந்தி – 1000 கிலோ ஏக்கர்
  • தென்னைமரம், பழமரங்கள் – ஒரு மரத்துக்கு 10 கிலோ
  • மரங்கள் – 5 கிலோ மரம் ஒன்றுக்கு
  • மாடித் தோட்டம் – 2 கிலோ செடிக்கு
  • மல்லிகை, முல்லை, ரோஜா – 500 கிராம் செடிக்கு மற்றும் அலங்கார செடிகள்  (3 மாதங்களுக்கு ஒரு முறை)

Sunday, 19 October 2014

சூடான மரத்தில் சுலபமான லாபம்!

''பொன்னு விளையற பூமியில விதைச்சாலும் விஷம் குடிக்கற அளவுலதான் நிலைமை இருக்கு. அப்படியிருக்கும் போது, தரிசு நிலத்துல விவசாயம் பண்ணித் தப்பிக்க முடியுமா?'
-இப்படி ஒரு நினைப்போடு தரிசுநிலங்களைப் பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்திருக்கும் விவசாயிகள்தான் இங்கே அதிகம். ஆனால், தரிசு நிலத்தையும் பொன்விளையும் பூமியாக மாற்ற முடியும் என்று நிருபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் 'பீயன் மரம்' எனப்படும் 'தீக்குச்சி' மரத்தை பயிரிடும் விவசாயிகள் சிலர்! தீக்குச்சி செய்வதற்கு பயன்படும் மரம்தான் இந்த பீயன் மரம். ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், பொதுவாக 'தீக்குச்சி மரம்' என்பதே இப்போது நிலைக்க ஆரம்பித்துள்ளது.
சேலத்திலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் பத்தாவது கிலோ மீட்டரில் உள்ளது வீரபாண்டி. இதன் அருகில் உள்ள இன்னொரு குட்டி கிராமம் அக்கரம்பாளையம். இந்த ஊரில் கரடுமுரடான காய்ந்த மேட்டுக்காட்டில் தன்னம்பிக்கையுடன் செழித்து வளர்ந்து நிற்கின்றன ஏராளமான தீக்குச்சி மரங்கள்.
நம் கண்களையே நம்ப முடியாமல் அந்த மரங்களைச் சாகுபடி செய்திருக்கும் கணேசனைச் (9443518863) சந்தித்தோம். ‘‘இந்த மேட்டுக்காடு 2 ஏக்கருங்க. இதுல எந்த பண்ணயமும் செய்ய முடியாது. இதுல போர் போட்டா கொஞ்சங்கூட தண்ணி வராது. அதனால இந்த நெலத்தைச் சும்மாவே போட்டுட்டேன். அந்தக் கரட்டுக் காட்டுல ஒரு ஓரமா ஆறு பீயன் மரங்க வளர்ந்திருந்துச்சு. அதை விலைக்கு வாங்க ஒரு புரோக்கரு வந்தார். 20 ஆயிரம் ரூபாய் தாரேன் கொடுக்கறியானு கேட்டார். எனக்கு ஆச்சர்யமா போச்சு. ஆறு மரத்துக்கே இந்த ரேட்டுனா... காடு முழுக்கா வெச்சா எவ்வளவு போகும்னு கணக்குப் போட்டுப் பார்த்தேன். உடனே ரெண்டு ஏக்கர்ல வெச்சிட்டேன்’’ என்று உற்சாகத் துள்ளலோடு சொன்னவர்,
‘‘தண்ணி காட்டணும், உரம் போடணும், களை எடுக்கணும் அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. காய் நல்லா காய்க்குமா, பழம் நல்லா பழுக்குமானு பாத்துக்கிட்டிருக்கத் தேவையில்ல. மழையே இல்லனாலும் நல்லா வளரும். இந்தச் செடிய ஆடு மாடுங்களும் கடிக்காது. அதனால பாதுகாப்பு செய்யணும்னு அவசியமே இல்ல. சின்னச் சின்னக் கிளை வரும். அதையெல்லாம் ஒடிச்சு போட்டுடணும். ஆறுவருஷத்துல பனை மரம் மாதிரி நெடுநெடுனு வளரும். மரத்தோட எடையும் கூடுதலாகி, நமக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.
இப்ப ஏக்கருக்கு 400 செடி வரைக்கும் நடுறாங்க. முன்னேயெல்லாம் 140 செடிதான் நட்டாங்க. நானும் இந்த அளவுக்குதான் நட்டிருக்கேன் ஒரு டன் 2,000 ரூபாய் வரை போகுது. செடியை வெச்சி ஆறரை அல்லது ஏழு வருஷம் ஆயிட்டா, ஒரு மரம் 2 அல்லது இரண்டரை டன் எடை வரும். ஒரு ஏக்கருக்கு 140 மரம்னு கணக்குப் போட்டா ஏக்கருக்கு 280 டன் எடைக்கு மரங்கள் கிடைக்கும். ஒரு டன் 2,000 ரூபாய்னு வெச்சுகிட்டாலும் ஏக்கருக்கு 5,60,000 ரூபாய் தாராளமா கிடைக்கும்’’ என்று பக்காவாகக் கணக்குப் போட்டுச் சொன்னார் கணேசன்.
ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியரான சுப்பிரமணியம்... தீக்குச்சி மரங்கள் இன்று எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதற்கு சாட்சியாக ஒரு விஷயத்தை முதலில் சொன்னார். ‘‘கொஞ்ச காலமா என்னோட ஐந்து ஏக்கர் நிலத்தையும் பயிரிடாம சும்மாவே போட்டு வெச்சிருந்தேன். காரணம், எங்க வீடு சேலம் டவுனுக்குள்ள இருக்கு. நிலமோ ஐம்பது கிலோ மீட்டர் தள்ளி வெள்ளார் கிராமத்துல இருக்கு. அங்க போய் யாரு பயிர் பச்சை பண்றது...? ஒரு கட்டத்துல அதையெல்லாம் வித்துடலாம்னு கூட நினைச்சேன். ஆனா, அடிமாட்டு விலைக்குதான் கேட்டாங்க. ஆனா, இன்னிக்கு அதே நிலத்தை ஐந்து லட்ச ரூபாய்க்குக் கேட்கறாங்க. தீக்குச்சி மர மகிமைதான் காரணம்!’’ என்று உற்சாகத்தோடு சொல்லிவிட்டு,
‘‘இந்தத் தலைமுறையில பலர் விவசாயமே செய்றதில்ல. எங்கப்பா கஷ்டபட்டு விவசாயம் செய்துதான் என்னைய படிக்க வெச்சாரு. ஆனா, நான் விவசாயமா செய்றேன்? இதேபோல் பலரும் நிலங்களை குத்தகைக்கோ அல்லது கரம்பாவோ விட்டுட்டு வெளியூர்ல வேலைப் பார்க்கக் கிளம்பிடறாங்க. இப்ப ஓய்வா வீட்ல இருக்கறதால நிலத்தைக் கவனிப்போம்னு யோசிச்சப்பதான் தீக்குச்சி மரம் ஐடியா பத்திக்கிச்சி'' என்று சொன்னவர், அடுத்து... பயிரிடும் விதம் பற்றி விவரித்தார்.
''இதை ஊடுபயிரா போட்டா... ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 3 X 2.5 மீட்டர் இடைவெளி இருக்கணும். 250 செடி வரைக்கும் நடலாம். காடு முழுக்க போட்டா... இரண்டரை மீட்டர் இடைவெளி இருந்தா போதும். 400 செடி வரைக்கும் நடலாம். நான் ஊடு பயிராத்தான் போட்டிருக்கேன். இரண்டடி ஆழத்துக்கு குழி எடுத்து செடியை நடணும். வருஷத்துக்கு ரெண்டு முறை 50 கிராம் கெமிக்கல் உரமும், அரை கிலோ கோழிக் கழிவு உரமும் போடணும். மழை சீஸன் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே இதையெல்லாம் செய்துடறது நல்லது. செடியோட தழைகளை நாசம் செய்ற வண்டுகள் வரும். பூச்சி மருந்து அடிச்சி அதையெல்லாம் ஒழிக்கணும். இதுக்கெல்லாம் ஆகுற செலவை ஒட்டு மொத்தமா கணக்குப் போட்டா... வருஷத்துக்கு ஒரு மரத்துக்கு ஒரு ரூபாய்தான் செலவாகும்!’’ என்று வியக்க வைத்த சுப்பிரமணியம்,
‘‘மரம் நல்லா வளர்ந்த பிறகு தீக்குச்சி ஃபேக்டரிங்களைத் தொடர்பு கொண்டு தகவலைச் சொல்லிட்டா போதும்... அவங்களே வந்து மரத்தை வெட்டி எடைபோட்டு காசைக் கொடுத்துட்டு போயிடுவாங்க.
பெரும்பாலான விவசாயிங்க இதுல ஆர்வம் காட்டாததால இந்த மரங்களுக்கான தேவை இருந்துகிட்டே இருக்கு. இன்னிக்கு உள்ள விவசாய சூழல்ல... பெரும்பாலான விவசாயிங்க, ஒரு ஏக்கர் 500 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை வாங்கிகிட்டு குத்தகைக்கு விட்டுட்டு அப்பாடானு வேற வேலைகளை பார்க்க ஆரம்பிச்சிடறாங்க. அது மாதிரியானவங்க தீக்குச்சி மரங்களைப் போட்டா நிச்சயமா நல்ல லாபம் பார்க்கலாம். ஒரு முறை செடியை நட்டுட்டா... வெளியூரோ, வெளிநாடோ கூட தாராளமா போகலாம். வருஷத்துக்கு ரெண்டுமுறை வந்து பராமரிச்சா போதும்’’ என்று சொன்னார்.
சேலம் மாவட்ட வனத்துறை அலுவலர் பாரதி பேசும்போது... ‘‘;வனத்துறையில இந்த தீக்குச்சி மரத்தை அயிலை மரம்னு சொல்வோம். குடியாத்தத்தில் இருக்கற தீக்குச்சி பேக்டரிகளே விவசாயிகளுக்கு செடிகளைக் கொடுத்து பயிரிடச் சொல்லுது. லோன், இன்ஷூரன்ஸ் எல்லாத்தையும் பேக்டரிகளே செய்து கொடுக்குது. வன விரிவாக்க மையங்கள், தனியார் நர்சரிகளில் கூட இந்த மரத்தோட செடிங்க கிடைக்குது. இந்த மரம் வளர்ப்புக்காக எல்லா பேங்குலயும் லோன் கூட கிடைக்குது. மானியம் ஏதும் கிடையாது. கேரள மாநில விவசாயிங்கதான் பெருமளவு இதைப் பயிர் செய்றாங்க. தமிழகத்துல சேலம் மாவட்டத்துலதான் பெருமளவு செய்றாங்க'' என்று சொன்னவர்,
''உண்மையிலயே லாபம் தரக்கூடிய விவசாயம்தான் இது’’ என்று சான்றிதழும் கொடுத்தார்.
சூடான மரத்தில் சுலபமான லாபம்!

ஜீவாமிர்தம்

சுஞ்சாணம் 10 கிலோ, நாட்டுமாடு சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை போன்ற ஏதாவது ஒன்று)- 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இவற்றுடன், உங்கள் நிலத்தின் மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, பிளாஸ்டிக் கேன் அல்லது தொட்டியில் போட்டு 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். இந்தக் கலவையை மர நிழலில் வைத்திருப்பது முக்கியம். காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் கடிகார முள் சுற்றும் திசையில் குச்சியைக் கொண்டு கலக்கி வந்தால், ஜீவாமிர்தம் தயாராகிவிடும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இதை பாசன நீரில் கலந்துவிட்டோ... தெளிப்பான் மூலமாகவோ கொடுக்கலாம்.
நீம் அஸ்திரா தயாரிக்கும் முறை
நாட்டு மாட்டின் சாணம் 2 கிலோ, சிறுநீர் 10 லிட்டர், வேம்பு இலை மற்றும் அதன் குச்சிகள் 10 கிலோ. இவற்றை பெரிய பாத்திரத்தில்போட்டு 200 லிட்டர் நீரையும் ஊற்றி, 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி வைக்கக்கூடாது. கடிகாரச் சுற்றுக்கு எதிர் திசையில் மூன்று தடவை, கலக்கிவிடவேண்டும். பிறகு, கரைசலை வடிகட்டி, உரிய அளவில் நீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கவேண்டும்.

சிலிர்க்குது ஜீரோ பட்ஜெட் நெல்

''முன்னயெல்லாம் நெல்லை விளைவிச்சி வெச்சா... அதைக் கொண்டு போய் வித்துட்டு வர்றதுக்குள்ள என்னைப்பிடி உன்னைப்பிடினு ஆகிப்போயிடும். கொஞ்சம் அதிகமா விளையுதுன்னு தெரிஞ்சாலே விலை யைக் குறைச்சிடுவாங்க மண்டிக்கடைக்கார ஆளுங்க. ஆனா, இப்ப விதைக்க ஆரம்பிச்சதுமே... 'இந்தத் தடவை எனக்கு ரெண்டு மூட்டை வேணும்... எனக்கு நாலு மூட்டை வேணும்'னு ஆளாளுக்கு என்கிட்ட ஒப்பந்தமே போட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க கேக்கற அளவுக்கு என்னால கொடுத்து மாளல. எல்லாம் அந்த ஜீரோ பட்ஜெட் மகிமைதான்...''
- இப்படிச் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் நேதாஜி (99402-67627).
சென்னை, செங்குன்றம் (ரெட்ஹில்ஸ்) அருகில் இருக்கும் ஆங்காடு கிராமத்தைச் சேர்ந்த இவர் பாரம்பரிய விவசாயி. எட்டு ஏக்கரில் நெல் சாகுபடியை மேற்கொண்டு வரும் இந்த நேதாஜி, கடந்த ஆண்டின் இறுதியில் 'பசுமை விகடன்' சார்பில் ஈரோடு நகரில் நடத்தப்பட்ட 'ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் பங்கேற்றார். அங்கே 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர் கற்றுக் கொடுத்த அத்தனையையும் மிகச் சரியாக மனதில் ஏற்றுக் கொண்டு ஊர் திரும்பியிருக்கிறார். வந்த வேகத்தில், ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை தன்னுடைய நிலத்தில் புகுத்தியவர், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிப் பாதையில் நடைபோட ஆரம்பித்திருக்கிறார்.
''கத்துக்கிட்ட பாடமும், கண்டுகிட்ட வித்தையும் என்னை கை தூக்கிவிட ஆரம்பிச்சிருக்கு. இதோ நிக்குதே எங்க வீட்டு கோமாதா... இது ஒண்ண வெச்சிதான் இன்னிக்கு எங்களோட எட்டு ஏக்கர் நிலமும் வளம் கொழிக்குது. ஈரோட்டுல இருந்து திரும்பினதுமே 6 ஆயிரம் ரூபாய்க்கு இந்த நாட்டுமாட்டை வாங்கினேன். 'முப்பது ஏக்கர் நிலத்துக்கு உரம் கொடுக்கறதுக்கு ஒரு மாடு போதும்'னு பாலேக்கர் சொன்னார். அதனால, நம்மளோட எட்டு ஏக்கரை இந்த மாட்டை வெச்சி சமாளிக்கிறது பெரிய விஷயமில்லனு தைரியமா களத்துல இறங்கினேன்.
ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை கேக் கறதுக்கும், படிக்கறதுக்கும் எளிமையா இருந்தாலும்... அதைச் செயல்படுத்தும்போது நிறைய சந்தேகங்கள் வரத்தான் செய்யுது. கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டுதான் செய்யவேண்டியிருக்கு. ரசாயன விவசாயம் மாதிரி, ரெடிமேடா கிடைக்கற உரம், பூச்சிக்கொல்லியை எடுத்து அடிச்சோம்... விளைஞ்சதை வித்தோம்னு இதுல இருக்க முடியாது. இயற்கை வேளாண்மைன்னா... ஆரம்பத்துல கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். அதை நான் நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன். இதை கஷ்டம்னு கூட சொல்லக்கூடாது... பயிற்சிக் காலம்னு சொல் லலாம். அதை முடிச்சிட்டா... அப்புறம் சுலபம் தான். அதேபோல, பாலேக்கர் சொல்லியிருக்கற விஷயங்களைத் தெள்ளத்தெளிவா கடைபிடிக் கணும். அதை விட்டுட்டு, நமக்கு ஏற்கெனவே தெரிஞ்ச விஷயங்களை வெச்சிக்கிட்டு அரைகுறையா களத்துல இறங்கினா மொத்தமும் வீணாப்போ யிடும்.
ஆரம்பத்துல வேலை கடுமையா இருந்தாலும்... இந்த ஜீரோ பட்ஜெட் மூலமா பல செலவுகள் மிச்சமாகிறது முக்கியமான விஷயம். அதோட... நஞ்சில்லாத உணவை விளைவிக் கிறோம்கிற மன திருப்தியும் கிடைக்குது'' என்று சொன்னவர், வாய்க்கால் ஓரத்தில் பெரிய பாத் திரம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 'ஜீவாமிர்த' கரைசலைக் கலக்கி விட்டபடி தொடர்ந்தார்.
''ஜீரோ பட்ஜெட் விவசாயத் தோட ஆதாரமே ஜீவாமிர்தக் கரைசல்தான். அது ஒண்ணு இருந்தாலே போதும், இயற்கை விவசாயத்துல கரை ஏறிடலாம். என்னோட வயல்ல 20 நாளைக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தைக் கொடுக்கிறேன். நடவு நட்ட 21-ம் நாள் ஆரம்பிச்சி, ஒரு போகத்துக்கு மொத்தம் நாலு தடவை வரை கொடுக்க வேண்டியிருக்கும். இதுல ஒரு தடவை நீம்அஸ்திராவைக் கலந்து கொடுக்கிறேன். கடைசி தடவை கொடுக்கும்போது மோரைக் கலந்துக்கிறேன். அவ்வளவுதான். இதுக்கு வேற எந்த உரமும் தேவை யில்ல.
ஜீவாமிர்தக் கரைசல் தொட்டியை வாய்க்கால் ஓரத்துல நிறுத்தி, அதுல இருக்கற குழாய்கிட்ட ஒரு புனலை வெச்சிடணும். புனலோட கீழ்ப்பகுதி நிலத்துக்கு தண்ணி போற வாய்க்காலுக்கு மேல இருக்கற மாதிரி பார்த்துக்கணும். நிலத்துக்குப் பாயுற பாசன தண்ணியோடு, ஜீவாமிர்தக் கரைசலும் கலந்து எல்லா இடத்துக்கும் பரவிடும். இதன் காரணமா... நம்ம நிலம் முழுக்க மண்புழு நிறைஞ்சிடும்'' சொல்லிக்கொண்டே வரப்பு ஓரத்தில் இருந்த மண்ணை லேசாக கையில் அள்ளினார்... 'கொசகொச'வென நெளிய ஆரம்பித்தார்கள் 'உழவனின் நண்பர்'களான மண்புழுக்கள்!
நெல் சாகுபடியில் தான் மேற்கொண்டிருக்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை நேதாஜி விவரித்தார். அதை பாடமாக தொகுத்திருக்கிறோம்.
ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கமான பாணியிலான நடவு மற்றும் ஒற்றை நாற்று நடவு என்று இரண்டு விதமான முறைகளில் நெல் சாகுபடி செய்து வருகிறார் நேதாஜி.
ஒற்றை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதைநெல் தேவைப்படும். விதைகளை முதலில் பீஜாமிர்தக் கரைசலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு நிழலில் உலர்த்தி, மேட்டுப்பாத்தியான நாற்றங்காலில் விதைக்க வேண்டும். நான்காம் நாள் ஜீவாமிர்தக் கரைசல் கொடுக்கவேண்டும். 15-ம் நாள், அந்த நாற்றுகளைப் பறித்து, வேர்ப் பகுதியை ஜீவாமிர்தக் கரைசலில் நனைத்து, நடவு செய்யவேண்டும்.
இதுவே வழக்கமான பாணி நடவு முறை என்றால் 30 கிலோ விதை தேவைப்படும்.வழக்கப்படி நாற்றங்காலில் விதைத்து, உரிய நாள் வந்த பிறகு, நாற்றுகளைப் பறித்து பிறகு நடவு செய்யவேண்டும். இந்த முறையில் சாகுபடி செய்யும் போதும் விதைகளை பீஜாமிர்தத்தில் ஊற வைத்து உலர்த்தித்தான் விதைக்கவேண்டும். அதேபோல நாற்றுகளை ஜீவாமிர்தக் கரைசலில் நனைத்து நடவேண்டும். விதை மற்றும் நாற்றங்கால் முறையில்தான் வித்தியாசம். மற்றபடி நடவில் ஆரம்பித்து அறுவடை வரை ஒரே தொழில்நுட்பம்தான்.
நிலத்தை நன்கு உழவு செய்து நஞ்சையாக்க வேண்டும். மாடுகளை வைத்து உழவு செய்வது நல்லது. இல்லாவிட்டால், பவர் டில்லரை பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் டிராக் டரைப் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால், ஆழமாக உழவு நடந்து, மண்ணுக்குள்ளே இருக்கும் நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். இதன் காரணமாக நிலத்தின் வளமும் குறைந்துவிடும் (நேதாஜியிடம் உழவு மாடுகள் இல்லாததால், தற்சமயத்துக்கு பவர் டில்லர் கொண்டுதான் உழவு செய்கிறார்). உழவுக்குப் பிறகு, உரிய முறைப்படி நாற்றுகளை நடவு செய்யவேண்டும். அதாவது, ஒற்றை நாற்று முறையாக இருந்தால், அதன்படியே கவனமாகச் செய்ய வேண்டும்.
பிறகு, 21-ம் நாள் ஜீவாமிர்தக் கரைசல் கொடுக்க வேண்டும். இப்படி 20 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தக் கரைசலைக் கொடுக்கவேண்டும். ஒரு தடவை நீம்அஸ்திராவை கலந்து தெளிக்கவேண்டும். இதன் மூலம் புழு, பூச்சித் தாக்குதல் ஏதுமின்றி பயிர் பச்சைக் கட்டி வளரும். கடைசி தடவை ஜீவாமிர்தம் கொடுக்கும்போது மோர் கலந்து கொடுக்க வேண்டும்.
தொழில்நுட்பங்களை விவரித்து முடித்த நேதாஜி, அடுத்து மகசூல் கணக்கு பற்றி ஆரம்பித்தார். ''ஜீரோ பட்ஜெட் முறையில ஒற்றை நாற்று விதைச்சப்ப முதல் தடவை ஏக்கருக்கு 15 மூட்டை நெல்லு கிடைச்சிது. பாலேக்கர் சொன்ன முறையில மூடாக்கெல்லாம் போடாததால களை நிறைய மண்டிப்போச்சி. அதனாலதான் மகசூல் குறைவு. இப்ப ரெண்டாவது தடவையா அறுவடை முடிஞ்சிருக்கு. இப்பவும் மூடாக்கு போடல. ஆனா, கிட்டத்தட்ட 19 மூட்டை வரைக்கும் கிடைச்சிருக்கு. வழக்கமான நடவு முறையில முதல் தடவை 22 மூட்டை கிடைச்சிது. இப்ப கூடுதலா மூணு மூட்டை கிடைச்சிருக்கு.
இங்க முப்போகமும் நெல் சாகுபடிதான். ஓயாம ரசாயன உரங்களைக் கொட்டிக் கொட்டி விவசாயம் செய்யறதால, மகசூல் குறைஞ்சிக்கிட்டேதான் இருக்கு. தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் முறையைக் கையாண்டா அடுத்தடுத்த தடவையில மகசூல் கூடுதலா கிடைக்கும்கிறதுல சந்தேகம் இல்ல. அதுக்கு நானேதான் உதாரணம். ஒற்றை நாற்றுல கூடுதல் லாபம் வரணும். ஆனா இப்போ எனக்கு குறைவாத்தான் கிடைக்குது. அடுத்தடுத்த தடவையில அது அதிகரிக்கும்
இயற்கை முறையில விளைவிக்கறப்ப... நல்ல விலையும் கிடைக்குது. நான் நெல்லா கொடுக்கறதில்ல. அரிசியாவே அரைச்சிக் கொடுக்கச் சொல்லி பலரும் கேக்கறாங்க. அதனால, அரிசியாத்தான் கொடுக்கிறேன். இதன் மூலமா கூடுதல் லாபம் கிடைக்குது.
'மத்த அரிசியில சமைச்சா, மதியம் ஒரு மணிக்கெல்லாம் சோறு நீர்த்திடுது. உங்ககிட்ட வாங்கின அரிசியில சமைச்ச ராத்திரி 9 மணிக்கு மேலயும் சோறு அப்படியே இருக்கு'னு சொல்லி கிட்டு பலரும் என்கிட்ட அரிசி வாங்கறாங்க. இங்கிருந்து மெட்ராசுக்கு போய் பெரிய பெரிய ஆபீசுல வேலை பார்க்கறவங்கள்லாம் என் வீட்டுக்கே வந்து, இயற்கை முறையில விளைஞ்ச அரிசியை கேட்டு வாங்கிட்டுப் போறாங்க. நான் விளைவிக்கற அரிசியில எந்த நச்சும் கிடையாது... சாப்பிடறதுக்கு ருசியாவும், மணமாவும் இருக்கு. அதனாலதான் பலரும் இதை விரும்பி வந்து கேக்கறாங்க. என்னோட தேவைக்குப் போக மீதியைத்தான் நான் விலைக்குக் கொடுக்கறேன். இதுவரைக்கும் கிலோ 25 ரூபாய்னு கொடுத்தேன். இப்ப விலைவாசி ஏறிப்போனதால, கிலோ 35 ரூபாய் வரைக்கும் போறதுக்கு வாய்ப்பிருக்கு. என்ன விலையா இருந்தாலும் வாங்கிக்க தயாரா இருக்கறாங்க மக்கள். ஏன்னா... இது இயற்கை அரிசி'' என்றவர்,
''பாலேக்கர்ங்கறவர் யாரு... எவருனு எனக்கு தெரியாது... இயற்கை விவசாயம்னா சிவப்பா கறுப்பானு தெரியாது. இது எல்லாத்தையும் எனக்கு தெரிய வெச்சி, இன்னிக்கு நம்மளாலயும் நல்லபடியா சம்பாதிக்க முடியும்னு இந்த விவசாயி வாழ்க்கையில ஒளி ஏத்தி வெச்சது பசுமை விகடன்தான்'' என்று வாயார நன்றி பாராட்டினார்.
சுஞ்சாணம் 10 கிலோ, நாட்டுமாடு சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை போன்ற ஏதாவது ஒன்று)- 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இவற்றுடன், உங்கள் நிலத்தின் மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, பிளாஸ்டிக் கேன் அல்லது தொட்டியில் போட்டு 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். இந்தக் கலவையை மர நிழலில் வைத்திருப்பது முக்கியம். காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் கடிகார முள் சுற்றும் திசையில் குச்சியைக் கொண்டு கலக்கி வந்தால், ஜீவாமிர்தம் தயாராகிவிடும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இதை பாசன நீரில் கலந்துவிட்டோ... தெளிப்பான் மூலமாகவோ கொடுக்கலாம்.
நீம் அஸ்திரா தயாரிக்கும் முறை
நாட்டு மாட்டின் சாணம் 2 கிலோ, சிறுநீர் 10 லிட்டர், வேம்பு இலை மற்றும் அதன் குச்சிகள் 10 கிலோ. இவற்றை பெரிய பாத்திரத்தில்போட்டு 200 லிட்டர் நீரையும் ஊற்றி, 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி வைக்கக்கூடாது. கடிகாரச் சுற்றுக்கு எதிர் திசையில் மூன்று தடவை, கலக்கிவிடவேண்டும். பிறகு, கரைசலை வடிகட்டி, உரிய அளவில் நீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கவேண்டும்.

Friday, 17 October 2014

தலைக்கு மேல தோட்டம்!









உங்க வீட்டுல மொட்டை மாடி இருந்தா, துணி, வடாம் காயப்போடுறதுக்கு... பழைய தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைக்கறதுக்கு... அதிகபட்சமா, செல்போன் டவர் கட்ட... இப்படித்தான் பயன்படுத்துவீங்க. ஆனா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான செல்லப்பாவோ... ''நோய், நொடிகளை விரட்டியடிக்கற இடமாத்தான் மொட்டை மாடியை பார்க்கறேன்'' என்று சொல்லி நம்மை நிமிர வைக்கிறார்.



''என்னது மொட்டை மாடியில நோயை விரட்டுறாரா... அடடா ராசிக்கல் பார்ட்டிங்க மாதிரி புதுசா ஒரு ஆள் கிளம்பிட்டாருடோய்''னு ஊரைக் கூட்டிடாதீங்க.

''இருக்கற இடத்துல கத்திரிக்காயோ... முளைக்கீரையோ நம்ம கையால பயிர் பண்ணி சாப்பிட்டா, தேவையில்லா விருந்தாளியான நோயெல்லாம் ஏங்க நம்மகிட்ட வரப்போகுது'' என்று செல்லப்பா சொல்வது முழுவதும் பசுமை வைத்தியம்.

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்கும் அண்ணா நகரில்தான் செல்லப்பாவின் வீடு. அதன் மொட்டைமாடியை எட்டிப் பார்த்தால்... மலர்கள், காய்கள், கீரை வகைகள், மூலிகைப் பயிர்கள் என்று பெருந்தோட்டமாகவே மாறிக் கிடக்கிறது.

‘‘இந்த வீட்டை 1976-ம் வருஷத்துல கட்டினோம். மொட்டை மாடி உபயோகமில்லாம கிடக்கே என்ன மாதிரி அதைப் பயன்படுத்தலாம்னு ரொம்பவே யோசிச்சோம். அப்பதான் மொட்டை மாடித் தோட்டம்ங்கிறது மனசுக்குள்ள உருவாச்சி. உடனடியா செயல்படுத்திட்டோம்'' என்று சொல்லும் செல்லப்பா, 31 ஆண்டுகளாக இந்த மாடி தோட்டத்தை வெற்றிகரமாக பராமரித்து வருகிறார்!

கோவை, பாகல், கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், முள்ளங்கி, தக்காளி என்று காய் வகைகள்.. அரைக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங் கன்னி, பாலக், சிலோன் பசலை என்று கீரை வகைகள்... மருதாணி, துளசி, சோத்துக் கற்றாழை என்று மூலிகைச் செடிகள்... ரோஜா, குடைமல்லி என மலர் வகைகள் என்று தோட்டம் முழுக்கவே செழித்துக் கிடக்கின்றன செடி,கொடிகள்.

''செடிகளுக்கு மண்தான் தேவை. அதுக்காக மண் தரையில மட்டும்தான் வளர்க்க முடியும்னு நினைக்கக்கூடாது. எந்த ஒரு காய்கறிச் செடியும் மரமா வளராது. அதிக வேரும் விடாது. அதனால தொட் டியிலயே வளக்கலாம். ஒரு மண் தொட்டி... இல்லனா பழைய கோணிப்பையில 2 மடங்கு மணலையும், ஒரு மடங்கு செம்மண் ணையும், கொஞ்சம் எருவையும் கலந்து செடியையோ அல்லது விதையையோ நட்டு வைக்கணும். தண்ணி வெளியே கசிஞ்சி போறதுக்கு தொட்டியோட அடிப்பாகத்துல சின்னதா ஒரு துளையும் போட்டு வைக்கணும். தண்ணியும் மணல்ல உள்ள காத்தும் கொஞ்சம் கொஞ்சமா வெளியேறி மண்ணுக்கும், செடிக்கும் புத்துயிர் கிடைக்கும். இல்லனா செடி பட்டுப் போயிடும்'' என்று அக்கறையாகச் சொன்ன செல்லப்பா, எப்படியெல்லாம் பார்த்து பார்த்து தோட்டத்தை பராமரிக்க வேண்டும் என்று பட்டியல் போட்டார்.

''கத்திரி, மிளகாய், தக்காளி இதையெல்லாம் விதைச்சி, நாத்து பறிச்சித்தான் நடணும். பாகல், புடலை, அவரை, முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, கறிவேப்பிலை, மருதாணி இதை யெல்லாம் அப்படியே விதைச்சிட்டா போதும். அப்பப்ப தண்ணி ஊத்திக்கிட்டே இருக்கணும். கொடிகள்ல வளர்ற செடிகளைத் தவிர, மற்ற செடிகளுக்குப் பந்தல் எதையும் போடக்கூடாது. நிழல்ல செடிங்க வளராது. கீரை வகைகளையும் தொட்டியிலயே விதைப் போட்டு வளக்கலாம். கீரைகளைப் பொறுத்தவரைக்கும் எப்பவுமே பச்சபசேல்னு இருக்கற மாதிரி பார்த்துக்கறது நல்லது. அப்பப்ப கீரைகளை பறிச்சிக்கிட்டே இருக்கணும்கிறதும் முக்கியம். முத்தி போயிட்டா பயன்படுத்த முடியாது.

ஒரு தொட்டியில ஒரே ஒரு கத்திரி செடியைத்தான் நடமுடியும். வெண்டையா இருந்தா ரெண்டு செடியைப் பயிரிட முடியும். வெண்டைச் செடி, ஒன்றரை மாசம் வரைக்கும் காய்க்கும். கத்திரி, மூணு மாசம் வரைக்கும் காய்க்கும். அதுக்குப் பிறகு பட்டுப் போயிடும். தொட்டியில உள்ள மண்ணை எடுத்து வெயிலில் காயப்போட்டுடணும். வேற மண்ணை எடுத்து அந்த தொட்டியில போட்டு மறுபடியும் செடிங்களை நடலாம். காயப்போட்ட மண்ணை எடுத்து வேற ஒரு தொட்டியில போட்டு, அதுலயும் செடியை நடலாம். இப்படி சுழற்சி முறையில் பயன்படுத்தறதால... இங்க எதுவுமே வீணாகறதில்லை.

சிலர், மொட்டை மாடியில ம ணலை பரப்பிச் செடிங்களை வளக்கறாங்க. ஆனா, அதிலிருந்து தண்ணி கசிஞ்சி வீட்டுச் சுவர் பழுதாக வாய்ப்பிருக்கு. அப்படி ஏதும் நடக்காம இருக்கணும்னா... முன்கூட்டியே திட்டம் போட்டு, வீட்டுத் தளத்தை கூடுதல் தரத்தோட அமைக்கணும். அப்படி இல்லாத பட்சத்துல தொட்டியில வெச்சி வளக்கறதுதான் நல்லது. எங்களைப் பொறுத்தவரை 100 % இயற்கையான உரங்களைத்தான் போடுறோம். மாட்டுச்சாணம், காளான் வளர்ப்பில் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கியெறியற வைக்கோல் இதெல்லாம் போடலாம். செடிங்கள்ல பூச்சி அரிச்சிருந்தா... பூச்சி மருந்து எதையும் தெளிக்கறது இல்லை வேப்பெண்ணையைத்தான் உபயோகிக்கிறோம். அதுதானே சக்தி வாய்ந்த இயற்கை மருந்து'' என்று சொல்லி நிறுத்தினார் செல்லப்பா.

வீட்டுக்கருகில் ஒரு வெற்றிடம் குப்பை கூடாரமாக மாறிக் கொண்டிருக்க... அதைப் பார்த்த செல்லப்பா, அந்த இடத்தை சீரமைத்து கீரை, கத்திரி, முள்ளங்கி, வெள்ளரி என்று பயிரிட்டு வருகிறார்.

அதைப்பற்றி, ''சுகாதா ரத்துக்கு சுகாதாரம்... வீட்டுக்கும் காய்கறிகள் கிடைச்ச மாதிரி ஆச்சு'' என்று குஷியோடு சொல்லும் செல்லப்பா,



''இந்த மாடித் தோட்டத்துல கிடைக்கற காய்கறிகள், தேவைக்கு அதிகமாகவே இருக்குது. அக்கம் பக்கத்துல உள்ளவங்க... தெரிஞ்ச நண்பர்கள்னு கொடுக்கறோம். வீட்டுலயே பயிர் செய்றதால... சுத்தமாவும் சுகாதாரமாவும் காய்கள் கிடைக்குது.... அதுவும் இயற்கை முறையில விளைஞ்ச காய்களா கிடைக்குது. அதனால, நோய் நொடி வர்ற வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைஞ்சிருக்கு. இதுதான் முக்கியமான விஷயம். தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கினா போதும். இதனால மனசுக்கும் உடம்புக்கும் புத்துணர்ச்சி கிடைக்குது. அதை விட வேறென்னங்க வேணும் இந்த உலகத்துல!'' என்று கேட்டுவிட்டு,

''விருப்பமுள்ளவங்களுக்கு மாடி தோட்டம் பற்றி சொல்லித் தர நான் தயாராவே இருக்கேன். சென்னையில இருக்கற தோட்டக் கலைத்துறை அலுவலகத்துலயும் போய் கேட்டுக்கலாம்'' என்று வழியையும் காட்டி முடித்தார்.

செல்லப்பாவை தொடர்பு கொள்ள... தொலைபேசி: 044-26280770 அலைபேசி: 94442-44362.



Thursday, 16 October 2014

மென்பொருளி‘ல் இருந்து ‘உண்பொருள்‘ நோக்கி!

மென்பொருளி‘ல் இருந்து ‘உண்பொருள்‘ நோக்கி!
ப த்தாம் வகுப்பு படித்து விட்டாலே மடிப்பு கலையாத சட்டை, பேன்ட் போட்டு... காலரை தூக்கி விட்டுக் கொண்டு ‘கலெக்டர் வேலை பார்க்கறதுக்காகத்தான் நான் பொறந்திருக் கேன்’ என்று ‘வெள்ளைச் சட்டை' வேலைக்காக அலைகிற காலமிது. ஆனால், கம்ப்யூட்டர் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவர், திடீரென எல்லாவற்றையும் உதறிவிட்டு, குடும்பத்தோடு நாடு திரும்பி, பேருந்து போக்குவரத்து கூட இல்லாத குக்கிராமத்தில் நாலுமுழ வேட்டியோடு விவசாயம் பார்த்துக் கொண்டிருக் கிறார் என்றால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியுமா?
பெயரில் ஆத்தூர் இடம்பெற்றிருந்தாலும் அந்த ஊரிலேயே கிடைக்காத 'ஆத்தூர் கிச்சடி சம்பாவை' பொத்தி பாதுகாக்கிறார் பாலாஜி சங்கர் என்று கடந்த இதழில் படித்திருப்பீர்கள். 'அட' போட வைக்கும் அவரின் கதையை அடுத்த இதழில் பார்க்கலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த பாலாஜி சங்கர்தான் ஆச்சர்யத்துக்குரிய மனிதர்.
கோயம்புத்தூர் அருகில் இருக்கும் துடியலூரைச் சேர்ந்த பாலாஜி சங்கரின் குடும்பமே படிப்பாளி குடும்பம்தான். பாலாஜியும் அவரின் அண்ணனும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள். தங்கை எம்.எஸ்.சி. கணிதம். இப்படிப்பட்ட சூழலில் இருந்துதான் விவசாயம் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார் பாலாஜி.

''எல்லோருமே பாதுகாப்பான வேலை... பக்கவான சம்பளம் என்றுதான் காலத்தை நகர்த்துவார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று சொல்லப்படும் விவசாயத்தை எப்படி விரும்பினீர்கள்?'' என்ற கேள்வியோடுதான் அவரைச் சந்தித்தோம். ‘‘விவசாயம்தான் உலகத்திலேயே மிகமிக பாதுகாப்பானது என்று நான் நம்புகிறேன். பல்லாயிரம் வருடங்களாக தன்னை நம்பிய எல்லோருக்கும் சாப்பாடு போட்டு வாழவைத்த இந்த பூமித்தாய், எதிர்கால சந்ததியை மட்டும் காப்பாற்றாமல் விட்டுவிடுவாளா என்ன? எதிர்காலத்துக்கும், போட்ட முதலுக்கும் பயமில்லாத ஒரு பாதுகாப்பு விவசாயத்தில்தான் இருக்கிறது.
பாதுகாப்பான முதலீடுகள் என்று சொல்லப்படுகிற எதில் முதலீடு செய்தாலும் அதிகபட்சம் 12% வட்டி கிடைக்கும். ஆனால், விவசாயத்தில் நிச்சயமாக எந்த தப்பும் இல்லாமல் குறைந்தது 24% கிடைக்கும். 2002-ம் வருடம் நான் விவசாயத்தில் இறங்கியது முதல், இன்று வரைக்கும் இந்த அளவு ஆதாயம் அடைந்து கொண்டு வருகிறேன். அதனால்தான் விவசாயம்தான் பாதுகாப்பானது என்று அழுத்தமாகச் சொல்கிறேன்’’ என்று சொன்ன பாலாஜியை விழிகளால் நாம் வியந்து பார்த்தபடி இருக்க... கம்ப்யூட்டர் மவுஸிலிருந்து விலகி, கழனியில் கை வைத்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.
‘‘ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஓய்வு நேரங்களில் நிறைய புத்தகங்கள் படிப்பேன். ராச்சேல் கார்சன் எழுதிய 'சைலன்ட் ஸ்பிரிங்' ( Silent spring ) என்ற ஆங்கில புத்தகத்தில், பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீமைகளைப் பற்றி படித்துவிட்டு, அதிர்ச்சியில் உறைந்து போனேன். அதேபோல, ஷூ மேக்கர் எழுதிய 'ஸ்மால் ஈஸ் பியூட்டிஃபுல்' ( Small is beautiful ) என்ற புத்தகமும் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு, சென்னையில் நடந்த இயற்கை விவசாய கருத்தரங்கு ஓன்றும் என்னை ரொம்பவே யோசிக்க வைத்து விட்டது.
அதன் பிறகு ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 200 விவசாயிகளை சந்தித்துப் பேசினேன். அவர்கள் யாருமே விவசாயம் செய்து லாபமடையவில்லை என்பது என்னை வேதனை கொள்ள வைத்தது. ஏன் இந்த அவலம் என்று, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரை சந்தித்துப் பேசியபோது தான், இயற்கை விவசாயம் செய்தால் எல்லோராலும் லாபம் அடைய முடியும் என்பது புரிந்தது. அத்தோடு மண்ணின் வளத்தையும் காப்பாற்றி எதிர்கால சந்ததிக்கும் அதை ஒப்படைக்க முடியும் என்பதும் தெரிந்தது.
இதைப் பற்றி இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ள 'கிடாத்தலைமேடு' சேதுராமன் என்பவரை சந்தித்தேன். வயல், வீடு, கொல்லை என்றே வாழ்பவர் அவர். அவரிடம் நேரடி அனுபவம் பெற்றேன். இயற்கை விவசாயம் செய்து லாபம் பெற முடியும் என்பதை வார்த்தைகளால் உலகுக்குச் சொல்வதை விட, வாழ்ந்தே சொல்லி விடலாம் என்று முடிவெடுத்து நானே விவசாயத்தில் இறங்கினேன்’’ என்று சொல்லி, தன்னுடைய வயலில் நடக்க ஆரம்பித்தார்.
தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து... நிலத்தின் விலை, நீர்வளம், தொழிலாளர் வளம் என எல்லாம் ஒட்டுமொத்தமாக அமையும் இடமாக தேடியிருக்கிறார். மயிலாடுதுறை அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில் நகரிலிருந்து மேற்கே பத்தாவது கிலோ மீட்டரில் உள்ள மேலாநல்லூர் கிராமத்தைத் தேர்வு செய்திருக்கிறார். (நந்தனாரின் சொந்த ஊர் இதுதான் பார்க்க பெட்டிச் செய்தி) இரண்டு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி விவசாயத்தை ஆரம்பித்தவர், இப்போது பத்து ஏக்கராக வளர்த்திருக்கிறார். முழுக்க இயற்கை விவசாயம்தான். வயலில் விளையும் பொருட்களைக் கொண்டே 'கம்போஸ்ட்' உரம் தயாரித்து வயலுக்கு போடுகிறார். ஏக்கருக்கு 1,500 கிலோ வரை நெல்லில் மகசூல் செய்கிறாராம். பெரும்பாலும் பாரம்பரிய விதைகளையே தேடிபிடித்து பயிர் செய்கிறார். தானே அரிசியாக அரைத்து விற்பனை செய்கிறார். சென்னையில் இருக்கும் இவரின் நண்பர்கள் வீட்டு உலையில் கொதிப்பது... இவருடைய வயலில் விளைந்த அரிசிதான்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகம் முழுக்க விவசாயிகளைத் தேடிப்பிடித்து சந்தேகங்களுக்கு தெளிவு பெற்ற பாலாஜியை நோக்கி, இப்போது விவசாயிகள் தேடி வந்த வண்ணம் இருக்கிறார்கள் தங்களின் சந்தேகங்களை போக்கிக்கொள்ள.
‘‘நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் பாதுகாப்பான உணவைத் தருகிறோம் என்கிறபோது ஏற்படுகிற திருப்தி, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் போது கூட கிடைக்கவில்லை. இப்பவும் நான் விவசாயிகளுக்கு என்ன சொல்கிறேன் என்றால், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அதைவைத்து ஒரு குடும்பம் நிம்மதியாக நன்றாக வாழ முடியும். இயற்கை விவசாய முறையில் செலவில்லாம விவசாயம் செய்யவேண்டும்... அவ்வளவுதான். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி தொழில் நுட்பம் தேவைப்படாது. எல்லா மண்ணிலும் எல்லா பயிரும் பண்ண முடியும். எல்லாவற்றையும் மண்ணே பார்த்துக் கொள்ளும்’’ என்று சொல்லும் பாலாஜி, தன் மனைவி காயத்ரியை நினைத்துதான் நெகிழ்ந்து போகிறார்.
''சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் பெரிய நகரத்தில வாழ்ந்தவர். மாதம் மாதம் ஒன்றரை லட்ச ரூபாயை செலவழித்து குடும்பம் நடத்தியவர். இப்போது என்னுடன் இந்தச் சின்ன கிராமத்தில் சின்ன வீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவில் குடும்பத்தை நடத்துகிறார். அவங்க மட்டும் ஒத்துழைப்பு கொடுக்காமல் போயிருந்தால், ஏதோ ஒரு நாட்டில் எந்திரத்தனமாக வேலை பார்த்துக் கொண்டு, செயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்திருப்பேன்.
பொய்யில்லாத ஒரு வாழ்க்கை, கட்டுப்பாடில்லாத ஒரு சுதந்திரம், ஆரோக்யமான உடல்நலம், எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல அடித்தளம் என என்னால் வாழ முடிவதற்கு முக்கிய காரணமே காயத்ரிதான்'' என்று சொன்ன பாலாஜி,
''திட்டமிட்டு காரியங்களை செய்ய ஆரம்பித்து விட்டால், கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வேலைவாய்ப்புக்கு செல்லும் தற்போதைய நிலை மாறும். கிராமத்தில் அவ்வளவு வேலை வாய்ப்பு ஏற்படும். என்னை போல் வெளிநாட்டுக்கு சென்ற பலரும் தாய் நாட்டுக்கு திரும்புவார்கள். இன்னும் சொல்லப் போனால், மற்ற நாட்டவர்க்கு நாம் வேலைக்காக விசா கொடுக்கலாம். அதற்கு அரசும் விவசாயிகளும்தான் மனது வைக்க வேண்டும்’’ என்று சொல்லி விடை கொடுத்தார்.
எதையுமே நம்ப முடியாத நிலையில், நம்மை நாமே கிள்ளிப்பார்த்துக் கொண்டுதான் அங்கிருந்து கிளம்பினோம்.


பாலாஜி, தற்போது வைத்திருக்கும் நிலத்தில் சில பகுதிகள் அந்தக் காலத்தில் நந்தனாரின் முதலாளிக்குச் சொந்தமானவையாம். பாலாஜியின் நிலத்துக்குப் பக்கத்தில் 'பத்துக் கட்டு' என்ற பெயருடன் கூடிய நிலப் பகுதி பரமநாதன் பிள்ளை என்பவரிடம் உள்ளது. இதுவும் நந்தனாரின் முதலாளிக்குச் சொந்தமாக இருந்ததாம்.
சிதம்பரம் கோயிலுக்குப் போகவேண்டும் என்று நந்தனார் சொன்னபோது, 'பத்துக் கட்டு நாத்தையும் நட்டுட்டு போ' என்று முதலாளி உத்தரவிட, நொந்து போய்விடுவார் நந்தனார். பத்துக் கட்டு நாற்றுகளை கிட்டத்தட்ட ஒரு ஏக்கரில் நடவு செய்ய முடியும். நந்தனாரின் வாட்டத்தைப் போக்க, பூத கணங்களை விட்டு இரவோடு இரவாக இறைவனே நடவு செய்தார் என்பது புராணம். அதனாலேயே 'பத்துக் கட்டு' என்ற பெயரில் இன்றும் அந்தப் பகுதி அழைக்கப்படுகிறதாம்.

Tuesday, 7 October 2014

வாழ்க மரம்... வளர்க பணம் ! மலைவேம்பு

வாழ்க மரம்... வளர்க பணம் !
மண்ணைப் பொன்னாக்கும் மலைவேம்பு !
 இரா.ராஜசேகரன்
நட்டு வைத்த மரம், பொட்டியில் கட்டி வைத்த பணத்துக்கு ஒப்பானது. இந்த உலகில் பலகோடி மரங்கள் இருந்தாலும், நமது மண்ணுக்கேற்ற, விலை மதிப்புள்ள, விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் பயனளிக்கக் கூடிய முக்கியமான சில மரங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். அதில் முதலாவது... முக்கியமானது... மிக வேகமாக வளரக்கூடிய மலைவேம்பு!
ஒரு வருடத்தில் தோப்பாகும்!
மலைவேம்பு குறுகிய காலத்தில் மற்ற மரங்களைவிட அதிக வருமானம் தரக்கூடியது. குறைந்த அளவு நீர்வளம் உள்ள பகுதிகளிலும் நன்றாக வளரும். பராமரிப்பதும் சுலபம். நடவு செய்த 3-ம் ஆண்டில் காகித ஆலைக்கு அனுப்பிவிட முடியும்; 4-ம் ஆண்டு என்றால், தீக்குச்சி தயாரிப்பதற்காகக் கொடுத்துவிட முடியும்; 5, 6-ம் ஆண்டுகள் என்றால்... பிளைவுட் தயாரிக்கும் நிறுவனங்கள் தேடி வரும். 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அனைத்து மரச் சாமன்களைச் செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஆக, தேவையைப் பொறுத்து எந்த நிலையில் வேண்டுமானாலும், இந்த மரத்தை விற்று பணமாக்க முடியும்! நடவு செய்த ஓராண்டுக்குள்ளாகவே தோப்பாக மாறிவிடும் அளவுக்கு இதன் வளர்ச்சி அபரிமிதமானது.
ஏக்கருக்கு 200 மரங்கள்!
சரி, வணிகரீதியாக இதனை சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். 
வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களிலும் வளரும். என்றாலும், மணல் கலந்த வண்டல் மண் பூமியில் சிறப்பாக வளரும். 23 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 5 முதல் 7 வரையிலான கார அமில நிலை உள்ள மண்ணும் இதற்கு ஏற்றது. நிலத்தை நன்கு உழவு செய்து 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீளம், அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்- ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கிய தொழுவுரம்- ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா-தலா 15 கிராம் ஆகியவற்றைப் போட்டு, பையில் உள்ள கன்றுகளை மண் கட்டி உடையாமல் பிரித்து நடவேண்டும். செடிகளின் வேர்ப்பகுதி பூமியின் மேல்பகுதியில் தெரியாதவாறு, மேல்மண்ணைக் கொண்டு குழிகளை மூடவேண்டும். நிலம் முழுக்க இதை நடவு செய்ய முடியாதவர்கள், வரப்பு ஓரங்களில் 10 அடி இடைவெளியில் நடவு செய்யலாம்.

 
மேற்சொன்ன அடிப்படையில்தான் வனவிரிவாக்கத்துறை பரிந்துரை செய்கிறது. ஒரே மாதிரியான அளவில் மரங்கள் கிடைக்க இதைக் கடைபிடிக்கலாம். ஆனால், விவசாயிகள் 10 அடிக்கு 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகள் வரையிலும்கூட நடவு செய்கிறார்கள். பெருத்திருக்கும் மரங்களை சீக்கிரமே வெட்டிவிட்டு, மற்ற மரங்களை மேலும் வளரவிட்டு பிற்பாடு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.
3 வருடம் வரை ஊடுபயிர் செய்யலாம்!
வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் நல்லது. 10 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் கொடுப்பது அவசியம். முதல் 2 ஆண்டுகளில் மழைக் காலத்துக்கு முன்னதாக கன்றுகளைச் சுற்றி களை எடுத்து, மண்ணைக் கொத்தி விட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகளின் அடர்த்தி குறைவாகவே இருக்கும். எனவே, நடவு செய்த முதல் 3 ஆண்டுகள் வரை தண்ணீர் வசதியைப் பொறுத்து மஞ்சள், உளுந்து, வாழை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகச் செய்யலாம். நேராக, உயரமாக வளரக்கூடிய மரம் என்பதால், ஓரளவுக்கு வளர்ந்த மரத்தின் தூர் பகுதியில் இரண்டு மிளகுக் கொடிகளை நடலாம். மிளகு மூலமும் தனி வருமானம் கிடைக்கும்!
60 அடி உயரத்துக்கு மேல் வளரக்கூடிய மரம் இது. மாதம் சராசரியாக ஒரு செ.மீ. முதல் 2 செ.மீ. சுற்றளவுக்கு வளரும். சுமார் 20 அடி உயரம் வரை பக்கக் கிளைகள் வராது என்பதால், இலை, கிளைகளை வெட்டிவிட தேவையில்லை. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் (self pruning) தன்மை வாய்ந்ததும்கூட!
ஆண்டுக்கு ஒரு லட்சம்!
ஓராண்டு காலம் வளர்ந்த மலைவேம்புத் தோட்டம், இயற்கையாக அமைந்த பசுமைக்குடிலை போன்று ரம்மியமாகக் காட்சியளிக்கும். 7-ம் ஆண்டு முடிவில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து சுமார் 15 கன அடி தடிமரம் கிடைக்கும். தற்பொழுது கன அடி 250 ரூபாய்க்கு விலை போகிறது. ஒரு மரம் 3,750 ரூபாய்க்கு விலை போகும். சராசரியாக 3,500 ரூபாய் எனக் கணக்கிட்டாலே, 200 மரங்களுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் வருமானம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். இது தற்போதைய நிலவரம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த மரம் பிளைவுட் செய்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. பூச்சி அரிக்காது என்பதால் கட்டடங்களின் உள் அலங்கார வேலைகளுக்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. மரத்தின் சுற்றளவு அதிகரிக்க அதிகரிக்க பலகை, ஜன்னல் கட்டைகள், நிலைக்கட்டைகள் செய்வதற்கும், மேசை, நாற்காலி, கட்டில்கள் செய்யவும் பயன்படும்.
வணிகரீதியில் மிகப்பெரிய பயனைத் தரக்கூடிய மலைவேம்பை நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். தரமான மலைவேம்பு நாற்றுகள் குறைந்த விலையில் அனைத்து வனவியல் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கின்றன.
75 லட்ச எதிர்பார்ப்பு!
 மலைவேம்பை தனிப்பயிராக 5 ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் கோனூர், வெங்கடேசன். அவரிடம் பேசியபோது, ''நான் எம்.சி.ஏ. படிச்சிருக்கேன். படிச்சவங்கள்லாம் விவசாயத்துல பெருசா லாபம் இல்லனு, அதை விட்டுட்டு வேற வேலைக்குப் போறாங்க. ஆனா, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறையா செஞ்சா, விவசாயத்துலயும் நல்ல வருமானம் பாக்க முடியும். ஏக்கருக்கு 400 செடிகள் (10 அடிக்கு ஜ் 10 அடி) வீதம் 2009-ம் வருஷம் நவம்பர் மாசம் 5 ஏக்கர்ல 2,000 செடிகளை நடவு செஞ்சேன். ஒண்ணேகால் வருஷத்துல ஒவ்வொரு மரமும் 35 செ.மீ. சுற்றளவுல, 20 அடி உயரத்துல வளர்ந்து தோப்பா நிக்குது. இப்போதைக்கு கன அடி 250 ரூபாய்னு சொல்றாங்க. நான் இன்னும் 5 வருஷம் கழிச்சுதான் வெட்டணும். இன்னிக்கு விலைக்கு கணக்குப் போட்டாலே... குறைஞ்சபட்சம் ஒரு மரம் 3,750 ரூபாய் வீதம், 2,000 மரத்துல இருந்து 75 லட்ச ரூபா கிடைச்சுடும்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னவர்,
''ஊடுபயிரா சோதனை அடிப்படையில வாழையை நட்டுப் பார்த்தேன். நல்லாவே வளர்ந்து வந்துச்சி. அதனால 5 ஏக்கர்லயும் ஊடுபயிரா இலைவாழையை நடவு செய்ய முடிவு செஞ்சிருக்கேன்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு, வெங்கடேசன், அலைபேசி: 92458-47805  

இந்தியாவே தாயகம்!
மலைவேம்பு, மீலியேசி எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். காட்டு வேம்பு, மலபார் வேம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது.

Thursday, 2 October 2014

வேதனையைக் குறைக்கும் வேலிமசால் !

வேதனையைக் குறைக்கும் வேலிமசால் !

மகசூல்
வே.கிருஷ்ணவேணி
ஒரு ஏக்கரிலிருந்து 50 டன் தீவனம்....500 கிலோ விதை...
வேதனையைக் குறைக்கும் வேலிமசால் !
பளிச்... பளிச்...
அனைத்து
மண்ணிலும் வளரும்.
ஒரே முறை விதைப்பு.
ஆண்டு கணக்கில் மகசூல்.
முன்பு போல் மேய்ச்சல் நிலங்கள் இல்லை; காசு கொடுத்து தீனி வாங்கிப் போட்டு, ஆடுமாடு வளர்க்கும் அளவுக்கு அதில் வருமானமும் இல்லை; காய்ந்து போன வைக்கோலின் விலை, கட்டுப்படியாகவே இல்லை.
ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இப்படிப்பட்ட 'இல்லை'கள்தான்... தீராதத் தொல்லை.
''அதுக்காக இதைச் சொல்லி புலம்பிக்கிட்டே இருக்குறதால தீர்வு வந்துடுமா... என்ன?'' என்று கேட்கும் நாமக்கல் மாவட்டம், ஊஞ்சப்பாளையம் முத்துசாமி,
''நம்ம வயல்ல கொஞ்ச இடத்துல பசுந்தீவனத்தைப் பயிர் செஞ்சிட்டா... பிரச்னை தீர்ந்துச்சி. அதுலயும் ஒரு தடவை விதைச்சி ஆண்டு கணக்கா அறுவடை செய்ற வேலிமசாலைப் பயிர் செஞ்சிட்டா ஆயுசுக்கும் கவலைப்பட வேண்டியதிருக்காதே...'' என்று ஆக்கப்பூர்வமாக பேசுகிறார், அதை சாதித்துக் கொண்டிருக்கும் தெம்பில்!
பசுந்தீவனத்துக்குப் பஞ்சமே இல்ல!
''நாலு வருஷத்துக்கு முன்ன, தீவனச் செலவை சமாளிக்க முடியாம, மாடு வளர்க்கறதை விட்டுடலாமானு யோசிச்சவன்தான் நான். அப்பத்தான் நாமக்கல் கே.வி.கே. (வேளாண்மை அறிவியல் நிலையம்) அதிகாரிங்க, வேலிமசால் பத்தி எடுத்து சொன்னதோட, விதையையும் கொடுத்தாங்க. அதை வாங்கிட்டு வந்து விதைச்ச மொத அறுவடையிலயே, நல்ல மகசூல் கிடைச்சிது. இப்ப நான் ஏகப்பட்ட விவசாயிகளுக்கு இந்த விதையைக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.
என்னோட பண்ணையில மூணு கறவை மாடும், நூறு ஆடும் இருக்குது. அதுக்கு ஒரு ஏக்கர்ல வேலிமசாலும், இன்னும் ஒரு ஏக்கர்ல கோ4 மாதிரியான மத்த பசுந்தீவனங்களையும் சாகுபடி செஞ்சிருக்கேன். மாடுகளுக்கு ஒரே தீவனமா கொடுக்காம, எல்லா தீவனங்களையும் கலந்து கொடுக்கறதால என் வயல்ல எப்பவுமே பசுந்தீவனத்துக்குப் பஞ்சம் வர்றதில்ல’’ என்றவர், வேலிமசால் சாகுபடி செய்யும் முறையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
ஏக்கருக்கு 8 கிலோ விதை!
வேலிமசால், அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய பல்லாண்டு பயிர். ஏக்கருக்கு
10 டன் தொழுவுரம் போட்டு, நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். ஒன்றரை அடிக்கு நீள, நீளமான பார் பிடித்துக் கொள்ள வேண்டும். சாகுபடி நிலத்தின் அமைப்புக்கு பாத்தியின் நீள, அகலத்தை முடிவு செய்து கொள்ள வேண்டும். ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். விதைகளை, நமது கை தாங்கக் கூடிய அளவில் மிதமான சுடுதண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பிறகு, குளிர்ந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து, பின்புதான் விதைக்க வேண்டும். இதன் மூலம் விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.
விதையை ஒன்றரை அடி இடைவெளியில் ஊன்றலாம். சிலர் வயலில் அப்படியே விதைத்தும் விடுகிறார்கள். இப்படி இரண்டு முறையிலும் இதைப் பயிர் செய்யலாம். நேப்பியர் புல்லுக்கு இடையில் ஊடுபயிராகவும் விதைக்கலாம். இப்படி விதைப்பவர்கள், மூன்று வரிசை நேப்பியர் புல், நாலாவது வரிசை வேலிமசால் என்ற ரீதியில் விதைக்க வேண்டும்.
ஏக்கருக்கு 50 டன் மகசூல்!
வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர, வேறெந்த பராமரிப்பும் இல்லை. விதைத்ததிலிருந்து 80-ம் நாள் முதல் அறுவடையைத் தொடங்கலாம். பயிரின் அடிப்பகுதியிலிருந்து அரையடி விட்டு அறுவடை செய்ய வேண்டும். பிறகு, 45 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த அறுவடையை செய்யலாம். இதேபோல செய்தால், ஆண்டுக்கு 7 அல்லது 8 அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 40 முதல் 50 டன் மகசூல் கிடைக்கும். ஏக்கர் முழுவதும் ஒரே நாளில் அறுவடை செய்யாமல், ஒரு ஓரத்திலிருந்து தினசரி தேவைக்காக கொஞ்சம்கொஞ்சமாக அறுவடை செய்யும்போது... சுழற்சி முறையில் வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 45 நாட்களுக்கு ஒரு அறுவடை செய்வதைக் கணக்கிட்டு, அறுவடை செய்யும் பகுதிகளில் மட்டும் ஒவ்வொரு அறுவடை முடிந்தவுடன் ஆட்டுஎரு, மட்கிய தொழுவுரம் இதையெல்லாம் தேவைக்குத் தகுந்தபடி இடவேண்டும்.
500 கிலோ விதை!
வேலிமசாலின் இலைகள் மிகவும் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருப்பதால், கால்நடைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகிறது. கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 கிலோவும், ஆடுகளுக்கு ஒன்று முதல் இரண்டு கிலோ வரையிலும் தீவனம் அளிக்கலாம். தீவனத் தேவையைவிட கூடுதலாக மகசூல் கிடைக்கும் போது, தேவைக்கு மட்டும் அறுவடை செய்யலாம். மீதியை விதைகளுக்காக விட்டுவிடலாம். விதைத்ததிலிருந்து 100 நாட்களுக்குப் பிறகுதான் விதைகள் கிடைக்கும். விதைக்காக மட்டும் வளர்த்தால், ஒரு ஏக்கரிலிருந்து ஓராண்டில் தோராயமாக 500 கிலோ விதைகள் கிடைக்கும். கிலோ 300 முதல் 400 ரூபாய் வரை விலை போகும்.
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!
தொழில்நுட்பப் பாடத்தைச் சொல்லி முடித்த முத்துசாமி, ''பசுந்தீவனங்களுக்கு ரசாயன உரமெல்லாம் பெருசா போடத் தேவையிருக்காது. அது வேண்டாம்னுதான் அதிகாரிகளும் சொல்றாங்க. இருந்தாலும், மனசு கேட்காம அப்பப்ப குறைஞ்ச அளவு ரசாயன உரத்தை, தொழுவுரத்தோட சேர்த்து பயன்படுத்தறேன்.
ஒரு ஏக்கர்ல வேலி மசால் பயிரிட, ஆரம்பக்கட்ட செலவு அதிகபட்சமா 15 ஆயிரமும், ஒவ்வொரு வருஷ பராமரிப்புக்கும் ரூ.5 ஆயிரமும் செலவாகும். ஆனா, தீவனச் செலவு பெரும்பாலும் குறையறதோட, விதை விற்பனை மூலமா ஒரு வருமானமும் கிடைச்சுடும். இந்த நாலு வருஷத்துல கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் வரை விதைகளை விற்பனை செய்திருக்கேன். அதாவது, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...'’ என்று சொல்லி சந்தோஷ சிரிப்பை உதிர்த்தார்!
படங்கள் க. தனசேகரன்.
"அளவோடு கொடுக்க வேண்டும்!"
கால்நடைகளுக்கு வேலிமசால் கொடுப்பதைப் பற்றி தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர், டாக்டர் பீர்முகமதுவிடம் கேட்டபோது, "கடைகளில் விற்கும் அடர் தீவனங்களை வாங்கி மாடுகளுக்குக் கொடுக்கும்போது, பால் உற்பத்திக்காக நாம் செய்யும் செலவு கூடும். ஆனால், புரதச் சத்து நிறைந்த பசுந்தீவனங்களை மிகக்குறைந்த செலவில் நாமே விளைவித்து கொடுக்கும்போது, பால் உற்பத்திக்காக நாம் செலவிடும் தொகை குறையும். அதேசமயம், பால் உற்பத்தி அதிகரித்து, நம்முடைய லாபம் அதிகரிக்கும்.
வேலிமசால், லெகூமீனியஸ் (leguminous crops) பயிர் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில், எளிதாக செரிமானம் ஆகக்கூடிய சபோனின் (saponin என்ற புரதச்சத்து அதிகம் உள்ளது. வழக்கமாக கறவை மாடுகளுக்கு 20 கிலோ முதல் 30 கிலோ வரை தினமும் பசுந்தீவனம் கொடுக்கலாம். அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே வேலிமசால் கொடுக்க வேண்டும். இதைத் தனியாக கால்நடைகளுக்குக் கொடுக்காமல், உலர்தீவனம் அல்லது பசுந்தீவனம் என ஏதாவது ஒன்றுடன் சேர்த்து நான்கில் ஒரு பங்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுத்தால், குளோரோபில் என்ற பச்சையம் சுரந்து, கால்நடைகளின் வயிற்றில் நுரையுடன் கூடிய ஒருவகை வாயுவை உண்டாக்கும். இதனால் கால்நடைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படும். கறவை மாட்டுக்கு தினமும் 3 முதல் 5 கிலோவும், ஆடுகளுக்கு ஒன்றரை கிலோவும் கொடுப்பது நல்லது" என்று சொன்னார்.