Friday, 25 July 2014

சப்போட்டாவுக்கு நெல்லி... மாவுக்கு கொய்யா...

சப்போட்டாவுக்கு நெல்லி... மாவுக்கு கொய்யா...
'30 அடிக்கு 30 அடி இடைவெளியில் சப்போட்டா செடிகளை நடவு செய்ய வேண்டும். இரண்டு சப்போட்டா செடிகளுக்கிடையில் ஒரு நெல்லிச் செடியை நடவு செய்ய வேண்டும். 25 அடிக்கு 25 அடி இடைவெளியில் மா செடிகளை நடவு செய்துவிட்டு, இரண்டு செடிகளுக்கிடையில் ஒரு கொய்யா செடியை நடவு செய்ய வேண்டும். நடவு செய்வதற்கு, ஐப்பசி மாதம் சிறந்தது. 3 கன அடிக்கு குழி எடுத்து, ஒரு மாதம் குழிகளை ஆறப்போட வேண்டும். பின்னர், 10 கிலோ எருவோடு மேல்மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்குக் குழியை நிரப்ப வேண்டும். ஒட்டுச் செடிகளாக இருந்தால், ஒட்டுப்பகுதியானது, தரைப்பகுதியில் இருந்து அரையடி மேலே இருப்பது போன்று நடவு செய்து, உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
சப்போட்டாவில் கிரிக்கெட், பி.கே.எம்-1, பி.கே.எம்-2 ஆகிய ரகங்களும்; நெல்லியில் என்.ஏ-7, காஞ்சன், பி.எஸ்.ஆர் ஆகிய ரகங்களும்; மாவில் அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், மல்லிகா, செந்தூரா போன்ற ரகங்களும்; கொய்யாவில் அலகாபாத், ஹைதராபாத், லக்னோ-49 ஆகிய ரகங்களும் சாகுபடி செய்வதற்கு சிறந்தது.
வளர்ச்சியைக் கூட்டும் பஞ்சகவ்யா!
பழச்செடிகளை நடவு செய்த 3 முதல் 4 ஆண்டுகள் வரையில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து, தர்பூசணி மாதிரியான குறுகிய காலப்பயிர்களை சாகுபடி செய்யலாம். நான்கு ஆண்டுகள் வரையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை 4 கிலோ எரு, 1 கிலோ மண்புழு உரம், தலா 250 கிராம் வீதம் கடலைப் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, இலுப்பைப் பிண்ணாக்கு, வேப்பன் பிண்ணாக்கு ஆகியவற்றை  ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு செடியைச் சுற்றிலும் வைத்துப் பாசனம் செய்ய வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒருமுறை மரங்களின் வளர்ச்சிக்காக டேங்க் (12 லிட்டர்) ஒன்றுக்கு 1 லிட்டர் பஞ்சகவ்யாவை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 10 டேங்க் தெளிக்க வேண்டியிருக்கும்.
காய்ப்புக்கு வந்த மரங்களுக்கு, 6 மாதங்களுக்கு ஒருமுறை செடிகளுக்கிடையில் டிராக்டர் மூலம் களையெடுத்து, 10 கிலோ எரு, 2 கிலோ மண்புழு உரம், தலா 1 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, புங்கன் பிண்ணாக்கு, இலுப்பைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை  ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு செடியைச் சுற்றிலும் மண் வைத்து அணைத்து, பாசனம் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை டேங்குக்கு (12 லிட்டர்) 1 லிட்டர் பஞ்சகவ்யா, 500 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தெளித்துவிட வேண்டும். மேலும், 200 லிட்டர் பஞ்சகவ்யா, 2 லிட்டர் குணபசலம், 1 லிட்டர் ஆவூட்டம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு மரத்துக்கும், ஒரு லிட்டர் வீதம் ஊற்றிவிட வேண்டும். பூச்சித்தாக்குதல் இருந்தால் மட்டும், பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
பிப்ரவரியில் சப்போட்டா... ஜூனில் நெல்லி...
நடவு செய்த மூன்றரை முதல் நான்கு ஆண்டுகளில் மரங்கள் காய்க்கத் துவங்கிவிடும். ஒவ்வொரு ஆண்டும்... சப்போட்டா மரங்கள்... நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூவைத்து, பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும். நெல்லி மரங்களைப் பொருத்தவரைப் பிப்ரவரி முதல் மார்ச் மாதங்களில் பூவைத்து, ஜூன் முதல் ஜூலை மாதங்களில் அறு வடைக்கு வரும். மாமரங்கள் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதங்களில் பூவைத்தால்... ஏப்ரல் முதல் மே மாதங்களில் அறுவடை செய்யலாம். கொய்யா மரங்கள்... ஏப்ரல் முதல் மே மாதங்களில் பூவைத்தால்... ஜூன் முதல் ஜூலை மாதங்களில் காய்களை அறுவடை செய்யலாம்.’ வறட்சிப் பகுதி என்பதால், கொய்யா ஒரு சீஸனில் மட்டுமே காய்க்கிறது.

No comments:

Post a Comment