மாடி வீட்டு மனிதருக்கு காற்றை வடி கட்டி சுவாசிக்க தரும் மகாகோனி மரம்
2செவ்வாய்,ஆகஸ்ட்,![]() |
மகாகோனி மரம் |
எங்கு நோக்கினும் இப்போது மரம் வளர்ப்பு விழிப்புணர்வு பெருகி வருகிறது. பொதுவாக மரங்களினால் பல்வேறு பயன்கள் என்றாலும், சில மரங்கள் பொருளாதார ரீதியாக அதிக பயனை தருகிறது. உதாரணமாக மா மரத்தை எடுத்து கொள்வோம்.சீசனில் ஏராளமான மாம்பழங்களை தரும்.நமக்கு மாம்பழங்களை கடையில் வாங்கும் செலவு மிச்சம்.
இது போல் ,மனிதனுக்கு ஆதிகாலத்திலிருந்து மரங்கள் குடியிருப்புகளாக, கடலில் செல்ல கப்பல் தயாரிக்க உதவும் மூலப்பொருளாக, காய்கள், பழங்கள் தரும் உணவு பயிராக என்று எத்தனையோ வழிகளில் பயனுள்ளதாக இருந்து வந்திருக்கின்றன. மரங்கள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை நிலை.
விலை உயர்ந்த மரங்கள்
எத்தனையோ பயன்பாடுகள் இருந்தாலும், கட்டிடங்கள் கட்டும் போது நிலைக்கதவுகள், ஜன்னல்கள் வடிவமைக்க நீடித்து உழைக்கக்கூடிய, பார்ப்பதற்கு அழகாக காட்சி தரும் தேக்கு, ரோஸ்வுட் மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் படாக் மரங்கள் போன்ற விலை உயர்ந்த மரங்கள் தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கிலான எக்டரில் தரிசுநிலங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் எல்லாம் குறிப்பிடத்தக்க பயன்தரும் மரங்களை நட்டு வளர்த்தால் இறக்குமதி மரங்களுக்கு அவசியம் இருக்காது. கூடவே மரங்கள் அதிகமாக வளர்க்கும் போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும். விவசாயம் செழிக்கும்.
மரங்கள் வளர்ப்பு லாபம் நிறைந்த விவசாயமாக தற்போது வளரத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நிலங்களில் நல்ல லாபம் தரும் மரங்களை நட்டு வளர்த்தால் குறிப்பிட்ட காலகட்டத்தில் நல்ல லாபத்தை தரும். இந்த மரங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதும் முக்கியம்.
மகாகொனி மிலியேசி
இப்படி விவசாயிகளுக்கு வளம் தரும் மரங்களில் ஒன்றாக இருப்பது தான் மகாகொனி மிலியேசி. மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்டது இந்த மரம். டொமினிக் ரேபுப்ளிக் என்ற சிறிய நாட்டின் தேசிய மரம் வேறு. இது தற்போது அழியும் நிலையில் உள்ள மரங்களின் பட்டியலில் இருப்பது தான் வேதனை.
இந்த மரம் முதன்முதலாக இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனியர்களால் ஜமைக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு கல்கத்தாவில் உள்ள தாவரவியல் தோட்டத்தில் வளர்க்கப்பட்டன. பின்னர் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு சென்னை தோட்டக்கலை துறை சொசைட்டியில் நாற்று விடப்பட்டது.
அடையாறு தியாசபிகல் சொசைட்டி மற்றும் ஒரு சில இடங்களிலும், உளுந்தூர் பேட்டை வனத்துறை அலுவலகம், சித்தேரி வனத்துறை ஓய்வூதிய இல்லம் என்றும் சில இடங்களில் நடப்பட்டன. ஆனால் இந்த மரங்கள் பரவலாக வளர்க்கப்படவில்லை. மகாகொனி மரம் 4.5 மீட்டர் சுற்றளவுடைய அடிமரத்துடன், 25 மீட்டர் உயரத்திற்கு வளரும் இயல்புடையது. இலையுதிர் மரவகையை சேர்ந்த இந்த மரம். மரத்தின் உச்சியில் கிளைகளை பரப்பிக் கொண்டு 910 மீட்டர் சுற்றளவுக்கு தழையமைப்புடன் கம்பீரமாக காட்சியளிக்கும். இதன் மரப்பட்டைகள் சிவப்பு கலந்த கருமைப்பட்டையுடன் இருக்கும்.
பயிரிட
வேப்ப மரத்தின் இலையை போன்று கூட்டிலை உடையது. ஏப்ரல் மாதத்தில் மகாகொனி மரம் பூக்கும். 3.5 மீ நீளக் காம்புடைய பூங்கதிர்கள் 8 செ.மீ நீளத்தில் இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மரம் ஆண்டிற்கு 1000 மில்லி மீட்டர் மழை அளவு பெறும் இடங்களில் நன்றாக வளரும். வடிகால் திறனும், ஆழமான மண்கண்டமும் உள்ள இடங்கள் மககொனி வளர்க்க சிறந்த இடங்கள். மற்ற மரங்களை விட மககொனி மரத்திற்கு சத்து அதிகம் கொண்ட மண்வாகு தேவைப்படும்.
தமிழ்நாட்டில் ஒரளவு நீர்செழிப்புள்ள இடங்களில் பயிரிடலாம். மதுரை மாவட்டத்தின் வைகை ஒடிவரும் நீர்பிடிப்பு பகுதிகள் (ஆற்றுப்படுகைகள்) உள்பட நீர்செழிப்புள்ள மேட்டுப்பாங்கான இடங்கள் ஏற்றவை. செவ்வல் கண்மாய் கரைகளும் ஏற்றவை. தனியார் தோட்டங்களில் காற்றுத்தடுப்பு வரிசைகளில் நடலாம். நகரங்களில் அதிக மழையுடைய பகுதிகளில் கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகாகொனி மரங்களை நடலாம். மாடிகளில் உள்ளவர்களுக்கு காற்றை வடிகட்டி கொடுக்கும்.
நல்ல மகாகொனி மரம் உருவாக 20 ஆண்டுகள் பிடிக்கும். நடும் பொழுது 6 6 மீட்டர் இடைவெளியில் நடலாம். பின்னர் களைகளை நீக்கி கொத்திக் கொடுக்க வேண்டும். நிழல் உள்ள இடங்களில் நட்டால் வளர்ச்சி குன்றிவிடும். பாசனமளித்தால் கன்றுகளில் 90 சதவீதம் துளிர்த்து விடும். இரண்டு ஆண்டுகளில் 96 செ.மீட்டர் அளவிற்கு உயர்ந்து வளரும். எனவே பாசனமுள்ள இடங்களில் தொடக்க காலத்தில் நீர் ஊற்றி வளர்ப்பது நல்லது.
பதனப்படுத்த
20 முதல் 40 ஆண்டுகளில் செழிப்பாக வளர்ந்து விடும் மரத்தை, இலகுவாக பதனப்படுத்தலாம். காற்றில் உலரவிட்டாலே பதனப்படும். காளவாய் முறையிலும் பதனப்படுத்தலாம். சாதாரணமாக, வெடிப்போ சுருக்கமோ ஏற்படுவதில்லை. நீடித்து உழைக்கக்கூடியதுகரையான்களும் அரிப்பதில்லை. கைக்கருவிகளால் நன்றாக இழைக்கலாம். பாலிஷ் ஏற்ற வலுவான மரம். சிவப்புக்கருமை நிறத்தையுடைய இந்த மரம் தங்கத்தின் பளபளப்புடன் காணப்படும். ஒரு கனமீட்டர் மரத்தின் எடை சுமார் 750 கிலோ இருக்கும்.
இந்த மரத்தை அழகிய வேலைப்பாடுகள் உள்ள மேஜை, நாற்காலிகள், சட்டமிட்ட கதவுகள், பீரோக்கள் மற்றும் பல கடைசல்களுக்கும் ஏற்றது. இசைக்கருவிகள் செய்ய ஏற்றது. கப்பல் கட்டுவதற்கும், பல வகையான கட்டுமான பொருட்கள் செய்வதற்கும், பென்சில் செய்வதற்கும் கூட ஏற்ற மரம் இது.
என்றைக்கும் நல்ல வளர்ச்சியுள்ள கட்டுமானத்துறைக்கு மரத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் மர விவசாயம் எதிர்காலத்தில் நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இந்த மரம் பற்றி விவரங்கள் அறிய அந்தந்த மாவட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலங்களை அணுகலாம்.
கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் விதைத் தொழிற் நுட்பவியல் துறை, விஞ்ஞானி முனைவர்.ம.வே.துரை பதில் சொல்கிறார்.
‘‘மகோகனி விதைகள் மருத்துவக் குணம் கொண்டவை என்று கேள்விப்பட்டோம். இது உண்மையா?’’
க.சுந்தரம், பல்லடம்.
‘‘சமீபகாலத்தில் அறிவியல் அறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தாவரங்களுக்கு நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். அந்தத் தாவரங்களின் வரிசையில் மகோகனியும் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பு (WHO), பாரம்பர்ய மருத்துவத்தின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மகோகனியைப் பரிந்துரை செய்திருக்கிறது. இதிலிருந்தே அம்மரத்தின் பயனை நாம் அறிந்துகொள்ளலாம்.
தென்அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்தத் தாவரம் உயரமாக வளரக்கூடிய மரமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, நம்மை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனியரால் கொல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காவில் 1795 -ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மகோகனி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மரத்துக்காகவும், அலங்கார மரமாகவும் பயிரிடப்பட்டது. தற்போது மிகவும் பழமையான மகோகனி மரங்கள் அதிக அளவில் தென்இந்தியாவில் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காணப்படுகின்றன.
சிறந்த மரவேலைகளுக்கு மட்டுமல்ல, மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. நீரிழிவு நோய், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலேரியா, இருமல் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களைக் குணப்படுத்த, மலேசிய மக்கள் பல தலைமுறைகளாக இம்மரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் பலன்களை உணர்ந்ததால், ‘சர்வ ரோக நிவாரணி’ (All Cure Medicine) என்று மலேசிய மக்களும், ‘தாவரங்களின் ராணி’ என்று தென் பசிபிக் கடலில் இருக்கும் சாலமன் தீவு மக்களும் அழைக்கின்றனர். மலேசியாவில் மகோகனி விதையிலிருந்து எடுத்த கஷாயத்தைத் தோல் வியாதிகளுக்கும், வெட்டுப் புண்ணைக் குணப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றனர். சாலமன் தீவு மக்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம், ஒவ்வாமை, நாளமில்லாச் சுரப்பிகளின் சீர்கேடு... போன்றவற்றைக் குணப்படுத்த இதன் விதைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
வெள்ளை நிறத்தில் உள்ள காய்ந்த மகோகனி விதைகள் மிகவும் கசப்புத்தன்மை உடையவை. தினமும் ஒன்று அல்லது இரண்டு முழு மகோகனி விதைகளைச் சாப்பிடலாம். இதை உணவு உட்கொள்வதற்கு அரை மணி நேரம் முன்பாக உண்டு வந்தால், நீரிழிவு கட்டுக்குள் வந்துவிடும். மேலும் மகோகனி விதையில், புற்றுநோய், நெஞ்சுவலி, குடல்புண் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் தன்மை உள்ளது. மகோகனி பழம், வைட்டமின்கள்- A, B1, B6, D மற்றும் E நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், புரதம் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச் சத்துக்களையும் உடலுக்கு அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள நாட்டுமருந்து கடைகளில் தேன் கொட்டை என்ற பெயரில் இந்த விதைகள் விற்பனை ஆகின்றன. 100 கிராம் ரூ.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.’’
தொடர்புக்கு, செல்போன்: 94459-44288.
No comments:
Post a Comment