Monday, 15 September 2014

வீட்டு தோட்டம் பின்பற்ற வேண்டியவை

வீட்டுக்கழிவு நீர் சுத்திகரிப்பு:

ஒரு பிளாஸ்டிக் கேன் அல்லது ஏதேனும் டிரம் போன்ற ஒன்று எடுத்துக்கொண்டு, அதன் அடியில் நீர் வெளியேற ஒட்டை இட்டுக்கொள்ளவும் ,பின் அதில் முறையே சம அளவில் மணல், கருங்கல் ஜல்லி, செங்கல் ஜல்லி என நிரப்பி நிரப்பிக்கொள்ளவும் பின் அதனனுடன் விறகு எரித்த மரக்கரி துண்டுகளையும் சுமார் ஒரு கிலோ அளவுக்கு சேர்த்துக்கொள்ளவும்.

இந்த கலவை அனைத்தும் முக்கால் அல்லது பாதியளவே நிரப்ப வேண்டும்,அப்போது தான் நீரீனை பிடித்து வடிக்கட்ட டிரம்முக்கு நேரம் கிடைக்கும் :-))

இதில் ஏன் மரக்கரி சேர்க்கப்படுகிறது என்றால் அது ஆக்டிவேட்டட் கார்பன் (activated carbon)போன்று இயல்பாகவே செயல்படும். நாம் குடிக்க பயன்ப்படுத்தும் நீர் சுத்திகரிப்பு எந்திரங்களிலும் ஒரு ஆக்டிவேட்டட் கார்பன் பில்டர் இருக்கும்.

இது நீரில் உள்ள வேதிப்பொருள்களை கிரகித்துக்கொள்ளும் தன்மை உடையது.நாம் ஆக்டிவேட்டட் கார்பன் என்றெல்லாம் செலவழிக்காமல் நேரடியாக இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருளான மரக்கரியைப்பயன்ப்படுத்திக்கொள்கிறோம் அவ்வளவு தான்.

வீட்டு உபயோக கழிவு நீரில் வழக்கமாக இருக்கும் சோப், ஷாம்பு, பாத்திரம் துலக்கும் சோப்பு, எண்ணை ,உணவு துணுக்கு என அனைத்தும் இந்த சுத்திகரிப்பு முறையில் 90% நீக்கப்பட்டு ஓரளவு இயல்பான நீர்க்கிடைக்கும்.

வீட்டில் தொழு உரம் தயாரிக்கும் முறை:

வீட்டை சுற்றி கொஞ்சம் இடம் இருந்தால் அதில் குறைந்தது ஒன்றுக்கு ஒன்று என்ற அளவிலாவது குழி வெட்டி ,தாவர, உணவு கழிவுகளை சேமித்து உரமாக்கலாம்.

மண் தரை தான் தொழு உரம் தயாரிக்க ஏற்றது ஏன் எனில் மண்ணில் உள்ள நுண்ணியிரிகள் மட்க வைக்க உதவும், மேலும் துர்நாற்றம் , உணவுகள் ,தாவரக்கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினையும் உரிஞ்சிவிடும்.

அப்படி இல்லாத நிலையில் ஏதேனும் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து தொழு உரமாக்கலாம். முன் சொன்னது போல கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினால் துர்நாற்றம் வரும் இதனைக்குறைக்க அவ்வப்போது கொஞ்சம் மணல் அல்லது மண் கொண்டு மேலே மூடிக்கொண்டே வரவேண்டும், நீரினையும் கிரகித்துவிடும், துர்நாற்றமும் குறையும்.மேலும் எளிதில் மட்கவும் செய்யும்.முழுதும் மட்கி மண் போல ஆக குறைந்தது ஆறு மாதம் ஆகலாம். பின்னர் எடுத்து தோட்டத்துக்கு உரமாக இடலாம்.

ஏன் இப்படி மட்க செய்யவேண்டும் நேரடியாக தோட்டத்தில் தாவரத்திற்கு போட்டு விடலாமே என நினைக்கலாம். அதனால் பயனேதும் இல்லை.

தாவரங்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பொட்டாசியம் ,பாஸ்பரஸ் ஆகியவற்றை நீரில் கரைந்துள்ள(water solluble nutrients) நிலையிலேயே கிரகிக்க முடியும்.மட்காத கழிவில் ஊட்டச்சத்துகள் இருந்தாலும் நீரில் கரையாத தன்மை கொண்டவை எனவே தாவரங்களால் பயன்ப்படுத்திக்கொள்ள முடியாது.

மட்கிய நிலையில் நீரில் கரையும் தன்மை வந்துவிடும். மாட்டு சாணத்துக்கும் இது பொருந்தும் ,ஈரமாகாவோ, காய்ந்தோ அப்படியே இட்டால் பலன் இருக்காது.மட்க வைத்தே இட வேண்டும்.மட்கிய நிலையில் கரிமப்பொருட்களில் இருப்பவை அனைத்தும் எளிய மூலகங்களாக உடைப்பட்டு எளிதில் கறையும் தன்மை அடையும்.

தொழு உரம் என்பது மெதுவாக ஊட்டச்சத்தினை வெளியிடும் (slow releasing fertilizr)தன்மை கொண்டது , இந்த பருவத்தில் இட்ட உரத்தின் பலன் அடுத்த பருவத்திலேயே தெரியும்.எனவே தொழு உரம் எல்லாம் இட்டும் வீட்டு தோட்டம் பச்சை பசேல் என செழிப்பாக வளரவில்லை என முதன் முதலில் தோட்டம் போட்டதும் எதிர்ப்பார்க்காதீர்கள். சுமாரான வளர்ச்சி தான் முதல் பருவத்தில் இருக்கும். அடுத்த பருவத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

உரம் போட்டதும் பயிரில் பசுமையை காட்டுவது இரசாயன உரங்களே அதனால் விவசாயிகள் அதனைப்பார்த்து நல்ல பலன் என செயற்கை உரங்களுக்கு போய்விட்டார்கள். நீண்ட கால நோக்கில் பின் விளைவுகள் எதிர்மறையாகப்போகும். எனவே வீட்டு தோட்டத்தில் உடனடி பலன் எதிர்ப்பார்த்து இரசாயன உரம் போட வேண்டாம்.இரசாயன உரங்கள் ,பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் நமக்கு குறைந்த செலவிலும், உழைப்பிலும் வீட்டுத்தோட்டங்கள் மூலம் கிடைக்கும்.

வீட்டுத்தோட்டத்தில் கவனிக்க வேண்டியவை:

# மொட்டை மாடியில் அமைக்கும் போது நீர் போகும் வழிகளை அடைக்காமல் அமைக்கவும்.

#கைப்பிடி சுவரோடு ஒட்டி அமைத்து விடாமல் நான்கு புறமும் சென்று வர வழியோடு அமைக்கவும்.

#குறைந்த இடத்தில் அமைக்கிறோம் ,நிறைய பயிரிட வேண்டும் என அதிகம் செடிகளை நடாமல் போதுமான இடைவெளி விடவும்.அடர்த்தி அதிகம் ஆனால் செடிகளிடையே ஊட்டச்சத்துக்கு போட்டி ஏற்பட்டு எதுவுமே சரியாக வளராது.

#நீர் தேங்காமலும், பானைகள் நீருடன் திறந்து கிடக்காமலும் பார்த்துக்கொள்ளவும் ,இல்லை எனில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி டெங்கு முதல் அனைத்தும் வரும்.

#மேலும் சில பூச்சிகள்,வண்டுகள் உங்கள் வீட்டுக்கு அழையா விருந்தாளியாகவும் வரலாம் :-))

கட்டுப்படுத்த வேப்பம் எண்ணையை நீரில் கலந்து(10%) கை தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

#வீட்டு தோட்டத்தில் எறும்புகள் அதிகம் படை எடுக்கும் அதுவும் விதைப்பின் போது ,அதைப்பார்த்துவிட்டு துகளாக கிடைக்கும் எறும்பு மருந்தினை வாங்கி தூவக்கூடாது .ஏன் எனில்lindane 2-4-D என்ற ரசாயனமே எறும்பு மருந்து என விற்கப்படுகிறது. இது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

எறும்பினை கட்டுப்படுத்த கொஞ்சம் மேசை உப்பினை சுற்றிலும் கோடுபோல தூவிட்டாலே போதும்.லச்சுமணன் ரேகை போல எறும்பு கோடு தாண்டாது :-))

# தோட்டத்தில் பல்லி, சிலந்தி இருந்தால் அப்புற படுத்த வேண்டாம் அவை பயிர்களின் நண்பனே இயற்கையாக பூச்சிகளை கட்டுப்படுத்துபவை.

No comments:

Post a Comment