Tuesday, 26 August 2014

இயற்கை விவசாயம்... அழைக்கிறது அரசு!

இயற்கை விவசாயம்... அழைக்கிறது அரசு!
முத்திரை
ஆத்தூர் செந்தில்குமார்
 
‘இயற்கை விவசாயம்... அழைக்கிறது அரசு!
மகிழ்ச்சி தரும் மரிக்கொழுந்து விவசாயம்

பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஆண்டுதோறும் 7 லட்சத்தி 72 ஆயிரம் நபர்கள் புதிதுபுதிதான நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். 2 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள்'

-இது ஏதோ ஒரு மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு 'வாய்ப் புளித்ததோ... மாங்காய் புளித்ததோ..' என்று யாரும் சொன்ன புள்ளிவிவரமல்ல... உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் 'உலக சுகாதார நிறுவனம்' (கீபிளி) கொடுத்திருக்கும் எச்சரிக்கைப் புள்ளிவிவரம்!
இதோ, இந்தியாவில் கூட, '25 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை' என்று ஜூன் 4-ம் தேதி ஊடகங்கள் பலவும் டமாரமடித்துள்ளன. பூச்சிக் கொல்லிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு இன்னுமொரு 'அக்மார்க்' சாட்சிதான் இந்த தடை உத்தரவு.
உலகம் முழுக்கவே பல நாடுகளில் இயற்கை வேளாண்மை என்பது முன்னெடுத்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், ஒரு சில நாடுகளில் குறிப்பாக இந்தியாவில், இயற்கை வேளாண்மை மீதான ஆர்வம் அவ்வளவாக விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்படாமலே இருக்கிறது. அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல் லிகளும் ரசாயன உரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
'இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கடனில் தள்ளப்படுவ தற்குரிய காரணங்களில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன' என்பது ஆய்வாளர்களின் கருத்து.
இந்நிலையில், இயற்கை வேளாண்மை பக்கம் நம் அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை திருப்ப ஆரம்பித்திருக்கின்றன. தமிழகத்தில் தற்போது ஆரம்பிக்கப் பட்டிருக்கும் 'அங்கக சான்றளிப்புத் துறை' ( Organic Certification ) என்பதுதான் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!
இயற்கை விவசாயம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல... 1960-க்கு முன்பாக முழுக்க முழுக்க இங்கே நடந்து வந்தது பாரம்பரியமான இயற்கை விவசாயம்தான். அதை வைத்து இந்தியாவைப் பார்க்கும் உலக அளவிலான இயற்கை விவசாய அமைப்புகள்... 'இயற்கை விவசாயத்தில் தலைமை இடமாக எதிர்காலத்தில் இந்தியா உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை' என்று சான்றிதழ் கொடுக்கின்றன.
இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அங்கக சான்றளிப்புத்துறையும் கூட சான்றிதழ்தான் கொடுக்கப்போகிறது இயற்கை வேளாண்மைக்கு! அதாவது, உலக அளவில் இயற்கை வேளாண்மை மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால், உண்மையிலேயே இயற்கையாக விளைவிக்கப்பட்டதுதானா என்பதை யார் கண்காணிப்பது? அதைச்செய்ய உலகம் முழுக்கவே பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. தனியார்... அரசுத்துறை என்று பலவும் இதில் இறங்கியுள்ளன. 
ஆஸ்திரேலியாவில் வீரபாண்டி ஆறுமுகம்
உலக அளவில் இண்டோ சார்ட், எகோ சார்ட், ஸ்கால் போன்ற நிறுவனங்கள் இயற்கை விவசாயத்தை கண்காணித்து சான்றிதழ்கள் வழங்கி வருகின்றன. இவற்றுக்கு உலக நாடுகள் பலவற்றிலும் நல்ல மரியாதை உண்டு. இந்தியாவில் அரசுத்துறையான 'அபீடா' (APEDA-Agricultural and Processed Food Products Export Development Authority) வழங்கும் 'இண்டியா ஆர்கானிக்' சான்றிதழுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். அபீடா, 2000-ம் ஆண்டு முதல் இந்தப் பணிகளைச் செய்துவருகிறது. இதனிடம் அங்கீகாரம் பெற்று 11 நிறுவனங்கள் இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களை வழங்கிவருகின்றன. இதில், 10 நிறுவனங்கள் தனியார் துறையைச் சேர்ந்தவை. 11-வதாக உத்தராகண்ட் மாநில அரசு நிறுவனம் சேர்ந்துள்ளது. அந்த வரிசையில் 12-வது நிறுவனமாக தமிழக அரசின் 'அங்கக சான்றளிப்புத் துறை' சீக்கிரமே இடம் பிடிக்கப்போகிறது. 'அபீடா'வுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்திருக்கும் தமிழக அதிகாரிகள், ''கூடியவிரைவில் நாங்களும் இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்துவிடுவோம்'' என்கிறார்கள்.
கோவையை தலைமையிடமாக கொண்டுதான் இயங்கிவருகிறது அங்கக சான்றளிப்புத்துறை. இதைப் பற்றி உதவி இயக்குநர் பழனிச்சாமியிடம் பேசிய போது, மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டினார்.
''இயற்கை வேளாண்மை மூலம் விளைவித்த பொருட்கள், நஞ்சில்லாதது, சத்தானது, சுவை மிகுந்தது, நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது. இந்தக் காரணங்களால் இயற்கை வேளாண்மை விளைபொருட்களை உபயோகப்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாட்டுச் சந்தையில் கூடுதல் விலை கிடைக்கிறது. உள்நாட்டு சந்தையிலும் தேவை அதிகரித்து வருகின்றது.
நாம் உண்ணும் உணவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையாக அமைகிறது. தற்போது நடைமுறையில் உள்ள விவசாய முறைப்படி விளைவிக்கப்படும் உணவு பொருட்களில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளால் எஞ்சிய நஞ்சும் (Residual Toxicity ) ரசாயன உரங்களால் கடின உலோகங்களும் நாம் உண்ணும் உணவில் சேர்ந்துள்ளன என்பதை உலக அளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதைப் போல நமது தினசரி உணவில் உள்ள எஞ்சிய நஞ்சு, உடலில் தங்கி புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் தற்போது அதிகம் காணப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்பதை அந்த ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக் கின்றன. கடின உலோகங்களான ஈயம், காட்மியம், ஆர்சனிக், பாதரசம் ஆகியன மனித ஆரோக் கியத்துக்கு கேடுவிளைவிக்கும் தன்மை கொண்டவை. உதாரணமாக காட்மியம் நஞ்சு சேர்ந்துள்ள அரிசியை தொடர்ந்து உட்கொள்வதால் சிறுநீரகம், கல்லீரல், ரத்த உற்பத்தி செய்யும் பாகங்கள் மற்றும் நுரையீரலில் பாதிப்புகள் ஏற்படும். மேலும், எலும்பைப் பாதிக்கக்கூடிய இட்டாய்-இட்டாய் ( Itai -Itai ) என்ற நோய் இதனால் வருகிறது என்று ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளது. 
சான்றிதழ் பெறுவது எப்படி?
இயற்கை சான்றிதழ் பெறுவது என்பது சர்வ சாதாரணமல்ல... ஏற்கெனவே இயற்கை வேளாண்மை செய்து வருபவர்கள் அதுகுறித்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் ஓராண்டுக்குள் 'அங்கக சான்று' கிடைத்துவிடும். புதிதாக இயற்கை விவசாயத்தில் நுழைபவர்கள், மூன்றாண்டுகாலம் அதை கடைப்பிடித்துக் காட்டவேண்டும். தொடர்ந்து அங்கக சான்றளிப்புத்துறையினர் கண்காணிப்பார்கள். அதன்பிறகே 'அங்கக சான்று' கிடைக்கும்.
இயற்கை வேளாண்மை செய்பவர்களின் அனைத்து செயல்பாடுகளும் பதிவேடுகளில் தவறாமல் பதிவாகியிருப்பது அவசியம். உழவு செய்த நாள்.. மாடுகளுக்கு போடப்பட்ட தீவனம்.. விதை வாங்கிய ரசீது என்று எல்லாவற்றையும் பத்திரப்படுத்த வேண்டும்.
பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களால் ஏற்படும் கடின உலோக நஞ்சு காரணமாக சுற்றுச் சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கப்பட்டு வருகிறது. மண்ணில் வாழும் லட்சோப லட்சம் உயிரினங்கள்தான் மண் வளத்துக்கு அடிப்படை. ஆனால், அவையும் கொல்லப்பட்டு, மண்ணும் மலடாக்கப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து விளைச்சல் திறன் குறைந்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மண் வளத்தை பேணவும் இயற்கை விவசாய முறையை பின்பற்றுவது அவசியமான ஒன்றாகி வருகிறது.
இந்தச் சூழலில் தரமான இயற்கை வேளாண்மைப் பொருட்கள் நுகர்வோருக்கு கிடைத்திடவேண்டும் என்ற நோக்கோடு 'அங்கக சான்றளிப்பு முறை’யை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது'' என்று சொன்னார் பழனிச்சாமி.

பெருகிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையினை நமது தமிழக விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 2007- 08-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ‘அங்ககச் சான்றளிப்புத் துறை’ பற்றி அறிவிக்கப்பட்டது. தற்போது செயல்பட்டு வரும் விதைச்சான்றளிப்புத் துறையை ‘அங்ககச் சான்றளிப்புத் துறை மற்றும் விதைச்சான்றளிப்புத் துறை’ என்று மாற்றியிருக்கிறார்கள்.
இப்படியரு துறை உருவாவதற்கு முக்கிய காரணமே வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்தான். சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று, அங்கு இயற்கை விவசாய முறைகளைப் பார்வையிட்டு வந்த பிறகே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு, நிதி-நிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் ஆஸ்திரேலிய பயணம் பற்றி 'அடடே ஆர்கானிக்' என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 10-ம்தேதியிட்ட பசுமை விகடனில் கட்டுரை வெளியாகியிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவும்.
அங்கக சான்றளிப்பில் பங்கு பெற விரும்புவோர் தனிநபராகவோ, குழுவாகவோ அல்லது பெருவணிக நிறுவனமாகவோ(Corporate sector) பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக, 2 ஏக்கர் 3 ஏக்கர் உள்ள விவசாயிகள் பத்து பேரோ அதற்கு மேற்பட்டவர்களோ சேர்ந்து ஒரு குழுவாக அணுகலாம். விண்ணப்பப் படிவத்தினை துறையின் கோவை அலுவலகத்திலிருந்து கடிதம் மூலமாகவோ அல்லது நேரிலோ பெற்றுக்கொள்ளலாம். மூன்று நகல்களைப் பூர்த்தி செய்து, உரிய தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
அங்கக சான்றளிப்பு என்பது விவசாயிகளைத் தவிர, அங்கக விளைபொருள் பதனிடுவோருக்கும் (Organic Prosser) மற்றும் அங்கக சான்று பெற்ற விளைபொருட்கள் விற்பனை செய்வோருக்கும் (Organic Trader) சான்றளிப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு... இயக்குநர், அங்கக சான்றளிப்புத் துறை, 142-ஏ, தடாகம் சாலை, ஜி.சி.டி.போஸ்ட், கோவை 641013. தொலைபேசி எண்: 0422-2432984.
விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்!
பட்டிக்
காட்டார்
‘மக்கள் தொலைக்காட்சி'யில் இடம்பெறும் 'மலரும் பூமி' என்ற விவசாய நிகழ்ச்சியை வழங்குபவர் களில் ஒருவரான பட்டிக்காட்டார் சொல்லும்போது, ''அபீடா என்பது இந்திய அரசின் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வாயிலாக சான்றிதழ் பெறுவது விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்புதான். ஆனால், நம்முடைய அங்கக சான்றளிப்புத் துறை அபீடாவிடம் முறையாக அனுமதி பெற்றுசெயல்படுகிறதா என்பதுதான் முக்கியம். ஏனெனில், உலகம் முழுக்க இயற்கை விவசாயப் பொருட்களுக்கு சான்று கொடுப்பதில் ஏககட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனவே, நம்முடைய அங்கக துறை விவசாயிகளை ஏமாற்றிவிடக்கூடாது. சர்வதேச தரத்துக்கு செயல்பட வேண்டிய கட்டாயம் இருப்பதால் கவனமுடன் செயல்பட்டு, தன்னையும் சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பழையபடி விவசாயிகள் சோகத்தில் மூழ்க நேரிடும்'' என்று எச்சரிக்கையாகச் சொன்னார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி நகரைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆலோசகர் 'பாமர தீபம்' பார்த்திபன் இதைப்பற்றி பேசும்போது, ''இவ்வளவு நாட்களாக தனியார் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர் களும்தான் இயற்கை விவசாயம் பற்றி பேசி வந்தனர். தற்போது, அரசே இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. சான்றிதழோடு நிறுத்திக் கொள்ளாமல், முழுக்க இயற்கை விவசாயத் தையே கையில் எடுத்து விவசாயிகளிடம் ஆர்வத்தை உண்டு பண்ண அரசு முன் வரவேண்டும். அப்போது தான், விவசாயிகள் கடனிலிருந்து தப்பிப்பார்கள்... சூழலும் கெடாமல் தப்பிக்கும்.
தற்போது சான்றிதழ் வழங்கிவரும் சர்வதேச நிறுவனங்கள் அதிக அளவில் பணம் வசூலிக்கின்றன. ஆனால், நம் அங்கக துறை குறைந்த அளவு தொகையையே அறிவித்துள்ளது. அது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான விஷயமாகும்'' என்றார்.

No comments:

Post a Comment