Wednesday, 23 October 2013

மரங்களில் படிந்திருக்கும் தங்கம்

மரங்களில் படிந்திருக்கும் தங்கம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் யூகலிப்டஸ் மர இலைகளில் தங்கம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

யூகலிப்டஸ் மரத்தின் இலையின் நரம்புகளில் தங்கம் காணப்படுகிறது. இம்மரத்தின் வேர்கள் பூமியில் பல மீட்டர் ஆழம் வரை சென்று நீரை உறிஞ்சிக்கொள்ளும் சக்திபடைத்ததாகும். 

சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரும் யூகலிப்டஸ் மரத்தின் வேர்கள் 40 மீட்டர் வரை பூமிக்கு அடியில் சென்று நீரை தேடும். இம்மரத்தின் வேர்கள் தங்கம் போன்ற உலோகங்கள் புதைந்து கிடக்கும் இடத்தையும் தாண்டி தண்ணீர் தேடிச் செல்லும் தன்மை கொண்டவையாகும். அவ்வாறு தேடும் வேர்கள் பூமிக்கு அடியில் இருக்கும் நீரை உறிஞ்சும்போது அதனுடன் சேர்ந்து அந்த இடங்களில் இருக்கும் தங்கத்தையும் சேர்த்து உறிஞ்சிக்கொள்ளுமாம். 

மேலும் எந்த இடங்களில் பெருமளவில் தங்கம் புதைந்திருக்கும் என்ற தகவலையும் இந்த கண்டுபிடிப்பு தெரிவித்துள்ளது. 

தங்கம் தாவரங்களின் செல்களுக்குள் இருக்கும் தன்மையில்லாததால் நீருடன் உறிஞ்சப்படும் தங்கமானது மரத்தின் உச்சியான இலைகளுக்கு அனுப்பப்படுகிறது என்றும் யூகலிப்டஸ் மர இலையில் மிக மிக சிறிய அளவில்தான் தங்கம் காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, 20 October 2013

வாருங்கள், விவசாயம் செய்வோம்!"-

வாருங்கள், விவசாயம் செய்வோம்!"-



"வேறு எதையும்விட, இன்றைக்கும் விவசாயம்தான் லாபகரமான தொழில். ஒரு நெல் விதைத்தால், ஆயிரம் நெல் விளையும். ஒரு எள் விதைத்தால், ஆயிரம் எள் விளையும். ஆனால், ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து, முக்கால் கிலோ பிளாஸ்டிக்தான் எடுக்க முடியும். ஒரு கிலோ இரும்பை உருக்கினால், அரை கிலோ தான் கிடைக்கும். ஒன்றை ஆயிரம் ஆக்குவது லாபமா? ஒன்றைப் பாதி ஆக்குவது லாபமா?'' - அவர் கேட்பதில் இருக்கும் உண்மை சுரீர் என்று உறைக்கிறது. அவரை ஒரு மணி நேரம் பேச விட்டுக் கேட்டால், 'மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பிரலாமா?’ என்று நகரத்தில் வேலை பார்க்கும் எந்த விவசாயி வீட்டுப் பிள்ளையும் நினைப்பான். அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தின் மீது நம்பிக்கை விதை விதைக்கிறார் பாமயன். சுமார் 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்குறித்து மாநிலம் முழுவதும் பயிற்சி அளித்துவருவதில் முக்கியமானவர். வேளாண் விளைபொருட்களை லாபகரமாக விற்பது எப்படி என்பதை நடைமுறையில் செய்துகாட்டும் வேளாண் பொருளியல் நிபுணர்.
 மதுரை திருமங்கலத்தில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில், சோலைப்பட்டி கரிசல் மண் தோட்டத்தில் பாமயனைச் சந்தித்து உரையாடியது ஓர் அற்புதமான அனுபவம்.
''நான் விவசாயி வீட்டுப் பிள்ளை. திருநெல்வேலி, தென்காசி அருகில் சுந்தரேசபுரம் என் சொந்த ஊர். அப்பாவின் மரணத்துக்குப் பின்பு, திருமங்கலத்துக்கு வந்துவிட்டோம். மனோதத்துவம், சமூகவியல், இதழியல் எல்லாம் படித்துவிட்டு, 'ஒப்புரவு’, 'நேயம்’ என்கிற சிறு பத்திரிகைகள் நடத்தி, கடைசியில் திண்டுக்கல்லில் இருந்து வெளிவந்த 'புதிய கல்வி’ சுற்றுச்சூழல் பத்திரிகையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அந்தக் காலகட்டத்தில் அறிமுகமான 'பூவுலகின் நண்பர்கள்’ நெடுஞ்செழியன்தான் என்னை சுற்றுச்சூழல் பக்கம் திருப்பிவிட்டார். கடலூர், தூத்துக்குடி, கூடங்குளம் எனச் சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போவோம்; பேசுவோம்; எழுதுவோம்.
ஒருகட்டத்தில் 'இப்படி எல்லாவற்றையும் விமர்சனம் செய்துகொண்டே இருந்தால் போதுமா? நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?’ என்று தோன்றியது. அப்படி நினைத்த 10 நண்பர்கள் ஒன்றுகூடினோம். அதில் பத்திரிகையாளர்கள், பொறியாளர்கள், இடதுசாரிகள் எல்லோரும் உண்டு. அப்போது, 'இன்றைய சுற்றுச்சூழல் பிரச்னையால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். ஆகவே, அவர்களிடம் வேலை செய்வோம்’ என்ற முடிவில் 'தமிழக விவசாயிகள் தொழில்நுட்பக் கழகம்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்தோம். இது 2000-ல் நடந்தது. நம்மாழ்வார் போன்ற அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாய நிபுணர்களை அழைத்து, கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி கொடுக்கத் துவங்கினோம்.
ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் முற்றாக ஒதுக்கி, பண்ணையில் கிடைப்பதை வைத்து தற்சார்புடன் வெற்றிகரமாக விவசாயம் செய்வதைப் பற்றிய எங்களின் பயிற்சி, விவசாயிகளிடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. எங்கள் குழுவில் இருந்த எல்லோருமே விவசாயம் செய்ததால், புத்தகத்தில் படித்ததை ஒப்பிக் காமல் அனுபவங்களைச் சொன்னோம். இப்படிக் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்துள்ளோம்.
நம் விவசாயிகள் களை, பூச்சிகள் இரண்டையும்தான் பெரிய பிரச்னைகளாகச் சொல்வார்கள். ஆனால், உண்மை அது அல்ல. பூச்சிகளைப் பொறுத்தவரை முட்டை, புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சி என்று நான்கு பருவம் உண்டு. பூச்சிமருந்து தெளிக்கும்போது முட்டைக்குள் இருப்பதும், கூட்டுக்குள் இருக்கும் கூட்டுப்புழுவும் பாதிக்கப்படுவது இல்லை. அப்புறம், பூச்சிமருந்து தெளித்து என்ன பலன்? இதையும் தாண்டி, எல்லா உயிரினங்களும் தலை முறைகள் தோறும் தன்னைத்தானே தகவமைத்துக்கொள்கின்றன. பூச்சிகளின் வாழ்நாள் இரண்டு வாரம், மூன்று வாரம்தான். ஒரு வருடத்தில் பூச்சி, பத்து தலைமுறைகளையே கடந்திருக்கும். பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஒவ்வொரு தலைமுறையிலும் அந்த மருந்தின் வீரியத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி பூச்சிக்கு அதிகரித்துக்கொண்டேபோகிறது. கடைசியில் பூச்சிக்கொல்லியின் வீரியத்தில் விவசாயி செத்துவிழுவார்... பூச்சி பறந்துபோகும். இதுதான் இங்கு நடக்கிறது. நாங்கள், சில இலை தழைகளைப் போட்டு பூச்சிகளை எளிமையாகக் கட்டுப்படுத்த வழி சொல்கிறோம்.
இதேபோலத்தான் வயல்களில் வளரும் களையும். நமக்கு உடம்பு முடியாமல் போனால் காய்ச்சல் வருவதுபோல, மண்ணில் சத்துக் குறைபாடு ஏற்படும்போது களை விளைகிறது. சுண்ணாம்புச் சத்து குறைந்தால், துத்திச் செடிகள் முளைக்கும். இதற்குத் தீர்வு, அந்தத் துத்திச் செடிகளை வெட்டி, திருப்பி அந்த மண்ணுக்கே கொடுக்க வேண்டும். எந்த களைச் செடி வயலில் முளைத்தாலும், அதை வெட்டி மறுபடியும் மண்ணுக்கே கொடுத்துவிட்டால் சத்துக் குறைபாடு சரிசெய்யப்படும். களையும் இல்லாமல் போகும். இதைச் சொன்னபோது, முதலில் விவசாயிகள் நம்பவில்லை. செயல்முறை விளக்கம் செய்துகாட்டிய பிறகே நம்பினார்கள்''- இப்படி பாமயன் விவரிக்கும் அனுபவத்தின் உண்மைகள் நம்பிக்கை ஊட்டுபவை.
இவர் பங்காற்றும் அமைப்பு, இயற்கை விவசாயம் குறித்த எளிமையான விளக்கங் கள் அடங்கிய சிறு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. 'தாளாண்மை’ என்ற சிறு இதழையும் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து நடத்திவருகிறது.
''நகர வாழ்க்கை பிடிக்காத பலர், 'எல்லாத்தையும் விட்டுட்டு ஊருக்கே போயிடணும்’ என்று பல சந்தர்ப்பங்களில் நினைக்கிறார்கள். 'விவசாயத்தில் அவ்வளவு வருமானம் வராதே’ என்ற எண்ணம் அதைத் தடுக்கிறது. ஆனால், நிச்சயம் விவசாயத்தில் வருமானம் பார்க்க முடியும். ஒரு பொறியியல் பட்டதாரி நகரத்தில் 35 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நான்கு ஏக்கர் நிலத்தில் அதைவிடச் சற்றே கூடுதலான பணத்தை விவசாயத்தில் எடுக்க முடியும். ஆனால், நிச்சயம் குறையாது. யாரோ ஒருவருக்காக இரவும் பகலும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து உடம்பைக் கெடுத்து உழைப்பதற்குப் பதிலாக, உங்களுக்காக, உங்கள் நிலத்தில், விருப்பப்பட்ட நேரத்தில் உழைப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும்? மன உளைச்சல் இல்லை; மருந்துச் செலவு இல்லை; நினைத்த நேரத்தில் இளநீர் வெட்டிக் குடிக்கலாம்; நாட்டுக்கோழி சாப்பிடலாம்... இந்த மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் ஒரு விலை வைத்தால் உங்கள் வருமானம் லட்சம் ரூபாயைத் தாண்டும். ஆனால், முதலீடு இல்லாமல் இது வராது. பொறியியல் படிக்க எத்தனை லட்சம் செலவு செய்கிறோம்? அதேபோல்தான் விவசாயத்துக்கும் முதலீடு வேண்டும். சொந்தமாக நிலம் இல்லை எனில், குத்தகைக்கு எடுத்துச் செய்யலாம். இதற்கான மாதிரிப் பண்ணைகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம்.
பொதுவாக, 'அரிசி விலை ஏறிப்போச்சு, காய்கறி விலை ஏறிப்போச்சு’ என்று எல்லோரும் சொல்கிறோம். ஆனால், உண்மை என்ன? சர்வோதயா இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜே.சி.குமரப்பா, 'இன்றுள்ள சூழலில் விவசாய விலை பொருட்களுக்கு உண்மையான விலை கொடுத்தால், நகரத்தில் இருக்கும் யாருக்கும் அதை வாங்கிக் கட்டுப்படி ஆகாது; அப்புறம் அவன் மானியம் இல்லாமல் வாழ முடியாது’ என்று சொன்னார். அதுதான் உண்மை. உதாரணத்துக்கு, நெல்லை எடுத்துக்கொள்வோம். 120 நாட்கள் ராப்பகலாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு, அதற்கான முதலீடு, கடனுக்கான வட்டி, பராமரிப்பு எல்லாவற்றையும் ஒரு தொழிற்சாலை முதலீடுபோலக் கணக்கிட்டால், ஒரு குவிண்டால் நெல்லின் மதிப்பு குறைந்தது 4,000 ரூபாய் வந்துவிடும். ஒரு கிலோ அரிசி 100 ரூபாயைத் தாண்டும். இந்தச் சுமையை ஒவ்வொரு விவசாயியும் தன் தோளில் சுமக்கிறான்.
ஒரு பொருள் எங்கு விளைகிறதோ, அங்கு நுகரப்படக் கூடாது. தஞ்சாவூர் நெல், அமெரிக்காவில் சாப்பிடப்பட வேண்டும். ஆஸ்திரேலிய ஆப்பிளை சேலத்துக்குக் கொண்டு வர வேண்டும் அதாவது, தற்சார்பு என்று ஒன்று இருக்கவே கூடாது. இதுதான் இன்றைய உலகமயத்தின் அடிப்படை. ஆனால், நாங்கள் இதற்கு எதிராக விவசாய உற்பத்தி, விளை பொருட்களைப்பயன் படுத்துவது எல்லாமே அந்தந்தப் பகுதிகளில் தற்சார்புடன் இருக்க வேண்டும் என்கிறோம். வள்ளுவன் சொன்னதுதான்...
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்!....

Thanks to Vikatan-Group...

தரிசு நிலம் அரசுக்கு!

'எந்த ஒரு விவசாய விளைபொருளையும் மதிப்புக்கூட்டி விற்க வேண்டும்’ என்பது பாமயன் வலியுறுத்தும் முக்கியமான கருத்து. இதன் ஒரு மாதிரியாக, மதுரை அருகே பாப்பநாயக்கன்பட்டி என்னும் கிராமத்தில் 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து 40 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். அதில் இருந்து நூல் எடுத்து, கைத்தறியில் நெய்து, இயற்கை முறை சாயம் பயன் படுத்தி, சட்டைகள் தைத்து விற்கி றார்கள். தேங்காய் சிரட்டையில் சட்டையின் பட்டன். 'துகில்’ என்று பெயரிடப்பட்ட இந்தச் சட்டைகள், சந்தையில் விற்பனையாகும் காட்டன் சட்டைகளின் விலையைவிடக் குறைந்த விலையே. வரகு, குதிரை வாலி இவற்றை அரைத்து அரிசியாக விற்பது, இயற்கை விவசாய அரிசி, கடலை எண்ணெய், வெல்லம் எனப் பல பொருட்களை மதிப்புக் கூட்டி விற்கின்றனர். யார் கேட்டாலும் இதற்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்தையும் தருகின்றனர்.

 தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான நிலம் தரிசாகக்கிடக்கிறது. ''இதைச் சரிசெய்ய எளிமையான வழி, 'இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தரிசாகக்கிடக்கும் நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும்’ என்று ஒரு சட்டம் போட்டால் போதும். விறுவிறுவென மரம் நடுவார்கள், விவசாயம் செய்வார்கள். பெரும் முதலீடு விவசாயத்தில் குவியும். செயற்கையான ரியல் எஸ்டேட் மாயையில் பணத்தைக் கொட்டுவதும் நிற்கும்'' என்கிறார் பாமயன்

மரம்

இவரது இனிஷியலே 'மரம்’ என்றாகிவிட்டது.


Thanks to Vikatan
காடுகளின் காதலன்!

'தாய் நிலம் தந்த வரம் தாவரம் - அது
தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்!''

- நினைவிருக்கிறதா இந்த 'வயலும் வாழ்வும்’ பாடல் வரிகளை? இப்போது வாழ்வு இருக்கிறது... வயல்? தாய் நிலம் இருக்கிறது... தாவரம்? ரியல் எஸ்டேட்டின் பெயரால், புதிய தொழிற்சாலைகளின் பெயரால், புதிய சாலைகளின் பெயரால்... நாள்தோறும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதைக் கண்டு நம்மில் பலர் ஆற்றாமையுடன் கடந்துசெல்ல... 'மரம்’ கருணாநிதியோ, அதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கிறார். இதுவரை இவரால் உருவாக்கப்பட்டு இருக்கும் மரங்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகம்.
''இன்னும் நிறைய மரங்களை உருவாக்கணும். இந்திய மக்கள்தொகை எத்தனையோ, அதுக்கு ஈடா மரங்களை நடணும். கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாய் சுமார் ஒரு கோடி மரங்களை உருவாக்கி இருக்காங்க. அதைத் தாண்டி மரங்களை உருவாக்கணும். இது என் பேராசை. என் வாழ்நாள்ல இது முடியுமோ, முடியாதோ தெரியலை. எனக்குப் பிறகு என் சந்ததியில் யாராச்சும் நிச்சயம் இதைச் செஞ்சு முடிப்பாங்க'' - ஒரு கிராமத்து மனிதனின் வார்த்தைகளில் உலகத்தை அளக்கிறார் கருணாநிதி. இவரது இனிஷியலே 'மரம்’ என்றாகிவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி, கடலூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். மாதம் 22 ஆயிரம் சம்பளம். பிடித்தம்போக 17 ஆயிரம் ரூபாய் கைக்கு வரும். அதில் 10 ஆயிரம் ரூபாயை மரங்களுக்காகவே செலவு செய்கிறார் கருணாநிதி. ஓய்வு நேரத்தில் கூடுதல் பணம் ஈட்டும் வாய்ப்புகளைத் தேடி அலைபவர்களிடையே, கருணாநிதியின் முனைப்பு நிச்சயம் ஆச்சர்யம். இத்தனைக்கும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்பட மூன்று பிள்ளைகள். இடிந்துபோன வாடகை ஓட்டுவீட்டில் வசிக்கும் கருணாநிதியின் ஒவ்வொரு சொல்லும் செயலும் மரத்தைச் சுற்றியே சுழல்கிறது.
''எங்க கொள்ளுத் தாத்தா வெள்ளக்காரன் காலத்துல 150 ஏக்கரில் மரக்கன்னு நட்டு ஒரு காட்டையே உருவாக்கிஇருக்கார். எங்க தாத்தாவும் மரம் வளர்க்குறதுல ஆர்வம் உள்ளவர். அப்பாவுக்கு அதில் ஆர்வம் இல்லை. ஆனா, எனக்குச் சின்ன வயசுல இருந்தே மரம் மேல அவ்வளவு ஈடுபாடு. பத்தாங்கிளாஸ் வரைக்கும்தான் படிச்சேன். வீட்டுல படிக்கச் சொன்னாலும் எனக்கு அதுல ஆர்வம் இல்லை. காடு மேடு எல்லாம் சுத்தித் திரிவேன். எங்கேயாவது கரட்டுமேட்டுல ஏதாவது செடி முளைச்சுக்கிடந்தா, அதை நல்ல மண்ணுல பிடுங்கி நடுவேன். எங்கே விதை கிடைச்சாலும் அதை எடுத்து முளைக்கவெச்சு யார்கிட்டே யாவது கொடுப்பேன். நர்சரி போட்டு அதுல மரக் கன்னுங்களை உற்பத்தி செஞ்சு கொடுக்குற அளவுக்கு நிலமோ, வசதியோ என்கிட்ட இல்லை. அதனால, என் டிரைவர் வேலை சம்பளப் பணத்துல இருந்து மரக்கன்னுங்களை வாங்கி மக்களுக்குக் கொடுப்பேன். அதுக்காக யார் கேட்டாலும் உடனே கொடுக்குறது இல்லை. அவங்களுக்கு உண்மையிலயே மரம் வளர்க்குறதுல அக்கறை இருக்கானு தெரிஞ்சுக் கிட்டுதான் கொடுப்பேன்.
ஆரம்பத்துல எங்க கிராமத்துக்கு மட்டும்தான் இதைச் செஞ்சேன். அப்புறம் நாள் போகப் போக... சுத்தியுள்ள ஊர்கள், விழுப்புரம் மாவட்டம்னு பரவி... இப்போ தமிழ்நாட்டுல எங்கே கூப்பிட்டாலும் போய் மரக்கன்னுங்க தந்துக்கிட்டு இருக்கேன். பொது இடங்களில் மட்டும் இல்ல, மக்களோட சொந்தத் தோட்டத்துலயும் நான் கொடுத்த கன்னுகள் மரமா வளர்ந்து நிக்குது. சிலர் ஆயிரம் கன்னுங்ககூடக் கேப்பாங்க. அதையும் நர்சரியில இருந்து குறைந்த காசில் வாங்கியாந்து கொடுப்பேன். ஆனால், என் மூணு ஏக்கர் நிலத்துல நான் தோட்டம் அமைக் கலை. அப்படிச் செஞ்சா, 'என் நிலம்... என் மரம்’னு சுயநலம் வந்துடும். அப்புறம், மரம் வளர்க்குற நோக்கம் சிதைஞ்சுபோயிடும்!'' என்று அவர் பேசுவதைக் கேட்டால், 'இந்த மனிதரின் அன்பைப் பெறுவதற்காக நாம் ஓர் மரமாகவே மாறிவிடக் கூடாதா’ என்று தோன்றும்.
எங்கு சென்றாலும் விதைகளைப் பொறுக்கிக்கொண்டு வந்துவிடுகிறார். உள்ளூரில் வயதான பாட்டிகள் சிலருக்கு 50, 100 என்று பணம் கொடுத்து விதைகளைப் பொறுக்கி வாங்கிக்கொள்கிறார். அவற்றைப் பையிலேயே வைத்துக்கொண்டு, அவ்வப்போது சந்திப்பவர்களிடம் கொடுத்து நடச் சொல்கிறார். ''இந்த ஏரியா முழுக்க ஆயிரக்கணக்கான நாட்டு பாதாம் மரங்களை உருவாக்கியிருக்கேன். இது சாக்கடைத் தண்ணீர்லகூட வளரும். ஒரே வருஷத்துல பெருசா வளர்ந்து, காய்க்க ஆரம்பிச்சுடும். விக்குற விலைவாசியில ஏழை மக்கள் பாதாம் பருப்பு வாங்கிச் சாப்பிட முடியுமா? இந்த மரத்தை வெச்சா நம்ம வீட்டு வாசல்லயே பாதாம் கிடைக் கும். இப்படி எந்த இடத்துல என்ன மரத்தை நடணும்னு கவனமாப் பார்த்துதான் நடுறேன்.
யாருக்காவது பிறந்த நாள்னு தெரிஞ்சா, அவங்க விரும்புற ஒரு மரக்கன்னைக் கொடுத்திருவேன். கல்யாணத்துக்கு தாம்பூலப்பை கொடுக்குறதுக்குப் பதிலா, மரக்கன்னு கொடுக்குற பழக்கத்தைப் பல வருஷத்துக்கு முன்னாடியே நான் ஆரம்பிச்சு வெச்சேன். இன்னைக்குப் பல இடங்களில் அப்படிச் செய்யுறாங்க. விழுப்புரம் மாவட்டத் துல எனக்குத் தெரிஞ்சு யாருக்குப் பெண் குழந்தை பிறந்தாலும் உடனே, ஒரு சந்தன மரக் கன்னு கொடுத்திருவேன். ஏன்னா, ஒரு சந்தன மரம் ஊக்கமா வளர்ந்து வர 25 வருஷம் ஆகும். சரியா, அந்தப் பெண் குழந்தைக்குத் திருமணம் ஆகும்போது அந்த மரம் கல்யாணச் செலவுக்கு உதவியா இருக்கும். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. அவங்களுக்காக நான் எதையும் சேர்த்துவைக்கலை. ஆளுக்கு ரெண்டு சந்தன மரம் நட்டுருக்கேன்... அது போதும்!'' என்கிற கருணாநிதி, மரம் நடுவதற்காகக் கடன் வாங்கி அதையும் திருப்பிச் செலுத்திக்கொண்டு இருக்கிறார்.
''பணம் ஒரு பெரிய பிரச்னை இல்லைங்க. நாம நட்ட மரம் செழிப்பா வளர்ந்து காய்ச்சு நிக்கும்போது மனசுக்கு ஒரு நிம்மதி வருது பார்த்தீங்களா... அதுக்கு ஈடு எதுவுமே இல்லை. கணக்கன்குப்பம் கிராமத்துல ஒருத்தருக்கு 1,000 சப்போட்டா மரம் பல வருஷத்துக்கு முன்னாடி கொடுத்திருந்தேன். அதை நானே மறந்துட்டேன். போன வாரம் அந்தப் பக்கமாப் போகும்போது திடீர்னு ஒரு இளைஞர் என்னைக் கூப்பிட்டார். போனா, 10 கிலோ சப்போட்டாவை என் கையில திணிச்சு, 'எல்லாம் நீங்க கொடுத்த மரம்’னு சொன்னதும் நெகிழ்ச்சியா இருந்துச்சு. ஆனா, நான் கொடுத்த செடில இருந்து விளைஞ்சதுங்கிறதுக்காக யார்கிட்டயும்  இலவ சமா எதையும் வாங்க மாட்டேன். 100 ரூபாய் கொடுத்துட்டுதான் அந்த சப்போட்டாவை வாங்கிட்டு வந்தேன்.
அந்தக் காலத்துல சாலையில் வரிசையா இச்சி மரம், புளிய மரம், வேப்ப மரம், மருத மரம், ஆல மரம், அரச மரம், வில்வ மரம், அத்தி மரம், விளா மரம், மா மரம்னு எல்லா மரத்தையும் நட்டாங்க. அந்த மரங்கள் வழிப்போக்கனுக்கு உணவாகவும், கிராமத்துக் கால்நடைகளுக்குத் தீவனமாகவும், பறவைகளுக்குக் கூடாகவும் பயன்பட்டுச்சு. இதனால பல்லுயிர்ப் பெருக்கம் சரியா இருக்கும். உணவுச் சங்கிலி அறுபடாது. ஆனா, இப்போ என்ன நடக்குது? நான்கு வழிச் சாலைங்கிற பேர்ல 50 வருஷ மரத்தை ஒரே நிமிஷத்துல வெட்டிப் போட்டுர்றாங்க. கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் வரை 12 ஆயிரம் புளிய மரங்களை வெட்டியிருக்காங்க. கன்னியாகுமரி வரை வெட்டுன மரத்துக்குக் கணக்குவழக்கே இல்லை. எல்லாத்தையும் வெட்டிட்டு ரோட்டுக்கு நடுவுல பூச்செடிகளை நடுறதால யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவை வெள்ளைக்காரன் ஆளும்போது நாட்டுல 33 சதவிகிதம் காடு இருந்துச்சு. எப்போ வனத் துறை உருவானதோ,அப்போ காடுகள் அழிய ஆரம்பிச்சிடுச்சு. இப்போ இந்தியாவில் 22.5 சதவிகிதம் காடுதான் இருக்கு. அதை மாத்த என்னால முடிஞ்ச அளவில் நான் போராடிக்கிட்டு இருக்கேன்.
என்னை ஊருக்குள்ள கோமாளி மாதிரிதான் பார்க்குறாங்க. என் காதுபடவே கிண்டல்கூடப் பண்ணுவாங்க. ஆனா, எதைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. இந்த மரம் எனக்கு மகிழ்ச்சியை மட்டும் தரலை. என் அடையாளத்தையே மாத்தி இருக்கு. என் கொள்ளுத் தாத்தாவை வெள்ளையக் கவுண்டர்னு சொன்னாங்க. என் தாத்தாவை துரைசாமிக் கவுண்டர்னு சொன்னாங்க. என்னை 'மரம்’ கருணா நிதினு சொல்றாங்க. பேருக்குப் பின்னால இருந்த சாதியை, பேருக்கு முன்னால் வந்த மரம் அழிச்சிருச்சு. இதைவிட வேற என்னங்க பெருமை வேணும்?''

பசுமை வாழ்க்கை!
வாழை, எலுமிச்சை, பப்பாளி, மாதுளை, கொய்யா, முருங்கை... இந்த ஆறு மரங்களும் இருந்தால், ஒரு குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இவற்றில் இருந்தே கிடைத்துவிடும் என்கிறார் கருணாநிதி. கூடுதல் இடம் இருந்தால் ஐந்து வகைக் கீரைகளையும் இன்னும் இடம் இருந்தால் ஐந்து வகைக் காய்கறிகளையும் நட்டுவிட்டால், எதற்குமே அங்காடிக்குச் செல்லத் தேவை இல்லை என்கிறார்.
பேருந்து ஓட்டுநரான கருணாநிதி வேலைக்குச் செல்லும்போது எப்போதும் சில மரக்கன்றுகளையும் விதைகளையும் கையிலேயே வைத்திருக்கிறார். யாரேனும் கேட்டால் கொடுக்கிறார்.
வனத் துறை, தோட்டக் கலைத் துறை, விவசாயத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மரம் வளர்ப்புபற்றிப் பயிற்சி கொடுக்க இவரை அழைத்துச் செல்கின்றனர். அப்படிச் சென்றதில் சென்னையைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர் மாதம் 5,000 ரூபாய் இவருக்குத் தர ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பணத்தையும் மரம் நடவே செலவிடும் கருணாநிதி, 'இன்னும் எத்தனை லட்சங்கள் பணம் வந்தாலும் மரம் நட மட்டுமே பயன்படுத்துவேன்’ என்கிறார்.

வாரிக் கொடுக்குது தேக்கு

வாரிக் கொடுக்குது தேக்கு

வருங்கால வளர்ப்பு நிதி ...வாரிக் கொடுக்குது தேக்கு!

Thanks to Vikatan- Old Post

அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியாவில் குதிரை களின் காலடி சப்தம் கேட்கிறது. எங்கு சென்றாலும் தேக்கு விதை மூட்டைகளோடு பயணம் செய்வதையே வழக்கமாக வைத்தி ருக்கும் வெள்ளையர்கள், குதிரை மீதமர்ந்தபடி விதைகளை வீசிக்கொண்டே செல்கின் றார்கள். 'இனி, இந்தியா நம் கையில்தான். இந்த தேக்கு விதைகள்தான் நம்முடைய எதிர்கால பொக்கிஷம்' என்றபடியே முடிந்த இடங்களிலெல்லாம் விதைக் கிறார்கள்.
-இது 1947-ம் ஆண்டுக்கு முந்தைய காட்சி!
நம்நாட்டில் காலகாலமாக விளைந்திருந்த, தேக்கு மரங்களைக் கண்டு பிரமித்துப்போன வெள்ளையர்கள், தங்கள் நாட்டு அரண்மனைகளையும், பங்களாக்களையும் தேக்கு மரங்களால் அலங்கரித்தனர். இங்கிருந்து கணக்கு வழக்கில்லாமல் வெட்டியும் சென்றனர். அதே சமயம், 'எதிர்காலத்துக்கு தேவைப்படும்' என்று சுயநலத் தோடு விதைகளைத் தூவிக் கொண்டிருந்தனர்.
காவிரிப்படுகையில் கைகொடுத்த தேக்கு!
மாபெரும் பொக்கிஷம், ஆட்சிக்கு ஆதாரம் என்றெல் லாம் நினைத்து அன்றைக்கு வெள்ளையர்களால் விதைக்கப்பட்ட தேக்கு, இன்றைக்கும் கூட அரசுக்கு பெரும் வருவாயைக் கொடுத்தபடியேதான் இருக்கிறது. அரசு கஜானாவை நிரப்புவதில், தேக்கு மரங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு (2006-07), கல்லணையில் இருந்து பூம்புகார் வரையிலான காவிரிப்படுகையில் மட்டுமே தேக்கு அறுவடை மூலமாக 11 கோடியே 26 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. முதிர்ந்த மரங்களை வெட்டி ஏலம் விட்டதில் கிடைத்த வருமானம் இது.
''காவிரிப்படுகையில அரசு மட்டுமல்ல... ஒவ்வொரு தனி மனிதனும் கூட தேக்கு வளர்ப்பில் இறங்கினால், நல்ல லாபம் ஈட்டமுடியும். அதற்கு உதாரணம் நானே தான்'' என்று சொல்கிறார் காவிரிப்படுகையிலிருக்கும் வலங்கைமான், தில்லையம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (தொலைபேசி: 0435-2444215). இவருடைய குடும்பத்துக்கும், தேக்கு மரங்களுக்குமான உறவு, தலைமுறைகளாகத் தொடர்கிறது.
நூற்றாண்டு பந்தம்!
தேக்கு பற்றி கேட்டறிய வீடு தேடி போனபோது, தன் வீட்டுக்கு எதிரில் பாழடைந்த நிலையில் பூட்டிக் கிடந்த வீட்டைக்காட்டி, '‘வாங்க, அந்த வீட்ல உட்கார்ந்து பேசுவோம்'’ என அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி,
‘‘120 வருஷத்துக்கு முன்னாடி எங்க தாத்தா கட்டின வீடு இது. முழுக்க தேக்கு மரத்தால கட்டின வீடு. சிதிலமடைஞ்சி போனாலும், தேக்கு மரத்தலான சட்டங்களெல்லாம் இன்னிக்கும் பளபளப்பா இருக்கு. இதுக்கெல்லாம் பெயின்ட் அடிச்சதே இல்லை. இத்தனை வருஷம் ஆகியும் கரையான் அரிக்கல; தேக்கு மரத்தை மட்டும் கரையானால ஒண்ணுமே செய்ய முடியாது. தேக்கோட அடர்த்தி அதிகம். மரம் அறுக்கற இடத் துக்கு கொண்டு போனா, மற்ற மரத்துக்கெல்லாம் ஒரு கன அடிக்கு 8 ரூபாய்தான் அறுவை கூலி. ஆனா, தேக்குக்கு 30 ரூபாய். அந்தளவுக்கு வலிமை. 20 நிமிஷத்துக்கு ஒரு தடவை ரம்பத்தை சாணை பிடிச் சாதான் இதை அறுக்க முடியும். தொடர்ச்சியா அறுத்தா ரம்பத்தோட பல்லு போயிடும்’’ என பேசிக் கொண்டே அருகிலிருந்த மாட்டு வண்டியின் சக்கரத்தைத் தட்டினார். 'நங்'கென்று கருங்கல் போல சத்தம் வந்தது.
''சும்மாவா, தேக்குல செஞ்சதாச்சே!'' என்றபடியே தொடர்ந்தவர்,
''எங்க தாத்தா கோபால அய்யங் கார் விதைச்ச தேக்கு மரங்கள், எங்க அப்பாவுக்கு உதவியா இருந் துச்சு. அவருக்கு பல தடவை பண நெருக்கடி வந்த போதெல்லாம் தேக்குதான் கைகொடுத்துச்சு. அப்பா வளர்த்த தேக்கு, இப்ப எனக்கும் துணையா இருக்கு.
இந்தப் பகுதியில ஒரு தேக்கு மரம் அதிகபட்சம் 8 அடி சுற்றளவுக்கும் 32 அடி உயரத்துக்கும் வளரும்; 50 வயதை கடந்த பிறகுதான் இந்தளவுக்கு வளர்ச்சியை அடையும். ஆனா, அதுவரைக்கும் பொறுமையா இருக்க வேண்டியதில்ல. போன வருஷம், ஒரே மரத்தை 20 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தேன். அது 30 வருஷத்து மரம்; 20 கன அடி இருந்துச்சு. கட்டுமரத்து மேல உட்கார்ந்து, மீன்பிடிக்க, தேக்குமர பலகையத்தான் பயன்படுத் துறாங்க. இதுக்காகவே அதிராம்பட்டினத்துல இருந்து என்கிட்ட அஞ்சி தேக்கு மரங்களை வாங்கிக்கிட்டுப் போனாங்க. 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செஞ்சேன்'’ என்று சொன்ன கிருஷ்ணசாமி, தேக்குகள் நிறைந்த தன்னுடைய தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.
இடைவெளியில் கவனம்!
அருகில் ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருக்க... பசுமைப்போர்த்தி தலையாட்டியபடி நின்றிருந்தன தேக்கு மரங்கள். ''நீர்நிலைகளுக்குப் பக்கத்துல நிலம் இருந்தா தேக்கு செழிப்பா வளரும். அப்படி இல்லையானாலும் தேக்கு வளர்க்கலாம். என்ன... வளர்ச்சி குறைவா இருக்கும். மழைநீரை மட்டும் நம்பி, வறட்சியான பகுதிகள்ல கூட தேக்கு போட்டு வெச்சிருக்காங்க. அதுல அதிக லாபமி ருக்காது. பொதுவா, தேக்குக்கு தண்ணி தேங்கி நிக்கக்கூடாது. மேட்டுநிலமா இருந்தா நல்லது. என்னோட நிலம், களிமண்ணும் மணலும் கலந்த இருமண்பாடு. செம்மண், வண்டல் மண்லயும் தேக்கு வளரும். வெயில் காலத்தைத் தவிர மத்த மாசங்கள்ல கன்னு நடலாம். தென்னந்தோப்புல ஊடுபயிரா தேக்கு போடுறது ரொம்ப சிறப்பான விஷயம்.
குறைபாடு இல்லாத, வளைவுகள் இல்லாத ஒரே நேர்க்கோட்டுல வளர்ந்திருக்கற மரங்களுக்குத்தான் மவுசு அதிகம். அப்படி வளர்க்கறதுக்கு அடிப் படையான சில விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சிக் கணும். தென்னந்தோப்புல தேக்கு போட்டா... தென்னைக்கும் தேக்குக்கும் நடுவுல 10 அடி இடைவெளி இருக்கணும். ரெண்டு தேக்குக்கு நடுவுல 12 அடி இடைவெளி அவசியம்'' என்றவர், தேக்கு கன்றுகள் தயாரிப்பில் ஆரம்பித்து மரம் வளர்த்தெடுப்பது வரை பாடமாகப் படித்தார்.
கன்றுகள் தயாரிப்பு
'ஐம்பது வயதுக்கு மேற்பட்ட தேக்கு மரங்கள், தானாக உதிர்க்கும் விதைகளை எடுத்து வந்து வெயிலில் ஒரு மாதம் காய வைக்கவேண்டும். பிறகு மண்ணை நன்கு புழுதியாக்கி, ஒரு அடி ஆழத்துக்கு குழி தோண்டி... எரு, மணல் கலந்து குழியை முழுவதுமாக மூடிவிடவேண்டும். பின்பு 4 விரல்கிடை ஆழம் வரை மண்ணை லேசாகக் கிளறி, விதையைப் போட்டு மூடவேண்டும். விதையானது நான்கு விரல்கிடை ஆழத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். உடனே பூவாளியால் தண்ணீர் பாய்ச்சவேண்டும். தொடர்ந்து 3 மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை பூவாளி கொண்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சிறிதாக துளிர் விடும்வரை இது தொடரவேண்டும். துளிர் வந்ததும் கன்றை அகற்றி வேறு இடத்தில் நடலாம். இல்லையென்றால் 1:1:1 என்ற விகிதத்தில் மண்; மணல்; எரு கலந்து, சிறிய பாலித்தீன் பைகளில் போட்டு, அவற்றில் கன்றை நட்டு மூன்று மாதம் வரை தினமும் ஒரு வேளை தண்ணீர் விட்டு பாதுகாக்கலாம். ஒரு கன்று 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை விலை போகிறது.

கிளைகளில் கண் வையுங்கள்!

ஒரு அடி சுற்றளவு, இரண்டு அடி ஆழத்துக்கு குழிதோண்டி, எருவும் மணலும் கலந்து குழியை மூடவேண்டும். குழியில் உள்ள மணல் இறுக்கமாக இல்லாமல் தளர்வாகவும் லேசான ஈரப்பதத்துடனும் இருக்கவேண்டும். இரண்டு அங்குலத்துக்கு நுனி வெளியில் தெரிவது போல் கன்று நடவேண்டும். மறுநாள் தண்ணீர் ஊற்றவேண்டும். பிறகு வாரம் ஒரு தண்ணீர் ஊற்றினால் போதும். வெயில் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவது அவசியம்.
ஒரு மாதத்தில் துளிர் வளர்ச்சி அடையும். 8 மாதத்தில் ஒன்றரை அடி உயரத்துக்கு கன்று வளர்ந்தி ருக்கும். ஒரு வருடத்துக்குப் பிறகு, வெயில் காலத்தில் மட்டும் பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடவேண்டும். முதல் வருடம் இரண்டு முறை களையெடுப்பு; இரண்டாவது வருடமும் இருமுறை களையெடுத்தால் சிறப்பாக இருக்கும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தேக்கு மரங்களுக் காக மட்டும் தனியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டி யதில்லை. வாய்ப்பிருந்தால் ஒவ்வொரு மாதமும் மூன்று முறை தண்ணீர் பாய்ச்சினால், மரம் அடர்த்தியாக வளரும்.
கிளைகள் வெடிக்கும் பொழுது அதிக கவனம் தேவை. சிறிய குச்சிகளாக உருவெடுக்கும்போதே உடைத்து விடுவது நல்லது. பெரிதாக வளரவிட்டால், மரங்கள் ஒரே நேர்கோட்டில் வளராமல் வளைந்து நெளிந்து வளரும். கிளைகள் வளர்ந்து விட்டாலும் கூட, மரத்தில் பள்ளம் விழாதவாறு கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தில் பள்ளம் விழுந்தால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, மரத்தின் உட்புறம் ஊடுருவும். இதனால் உட்புறத்தில் அதிக வெற்றிடம் உருவாகும். வெள்ளைத் தன்மையும் அதிகமாகி, மரத்தில் வைரம் பாய்வது குறையும். சில சமயங்களில் வைரமே பாயாமலும் போய்விடும் வாய்ப்புள்ளது. இவை அனைத்துமே மரத்துக்குக் கிடைக்கும் விலையைக் குறைத்து விடும்.

இலைகளே உணவாக!

தேக்கு மரங்களுக்கு உரம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை; அதனுடைய இலைகளே கீழே உதிர்ந்து, மண்ணோடு மக்கி, உணவாக மாறிவிடும்; மண்ணின் ஈரப்பதத்தையும், தேக்கு இலைகளே பல நாட்களுக்குப் பாதுகாக்கும்; பூச்சித் தாக்குதலை தடுக்க, 50 கிராம் குருணை மருந்தை மணலில் கலந்து, தேக்கு மரத்தைச் சுற்றிலும் உள்ள மண்ணை நன்கு கொத்திவிட்டு, அதில் கலந்துவிட வேண்டும்; உடனே தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். இவ்வாறு செய்தால் நீண்ட காலத்துக்கு தேக்கு மரங்கள் வலுவாக இருக்கும். தானாகக் கீழே சாயாது. மரத்திலும் துளைகள் விழாது. மண்ணின் தன்மையைப் பொறுத்து தான் மரத்தின் வளர்ச்சி இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்'
பாடத்தை முடித்த கிருஷ்ணசாமி, ''தேக்கைப் பொறுத்தவரை பெரிசா செலவே கிடையாது. இரண்டு வருஷம் வரைக்கும் கொஞ்சம் போல கவனமெடுத்துக்கிட்டா... அதுக்குப்பிறகு தன்னால வளர்ந்துக்கும். செலவும் பெரிசா கிடையாது. இப்பவே ஒரு கன அடி தேக்கு 1,000 ரூபாய் விலை போகுது. ஒவ்வொரு வருஷமும் 10% விலை ஏறிக்கிட்டேதான் இருக்கு. இந்தக் கணக்குப்படி பார்த்தா இன்னும் 20 வருஷம் கழிச்சி, ஒரு கன அடி தேக்கு, மூவாயிரம் ரூபாய்க்கு மேல போகும். இதைவிட அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கு. இப்பவே நூறு தேக்கு கன்னுகளை நட்டு வெச்சா 20 வருஷம் கழிச்சி ஒவ்வொரு தேக்கு மரமும் 30 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோகும். 100 மரங்களுக்கு 30 லட்ச ரூபாய் கட்டாயம் கிடைக்கும்.
அந்த இன்ஷ¨ரன்ஸ்... இந்த இன்ஷ¨ரன்ஸுனு சொல்றாங்களே... அதையெல்லாம் மிஞ்சிடும் தேக்கு மரம் தரப்போற சிக்கலில்லாத இன்ஷ¨ரன்ஸ்’’ என விவசாயிகளின் எதிர்கால காப்பீட்டுக்கு வழி காட்டினார்.
தேக்கு மரங்களின் தரம் மற்றும் விலை நிலவரம் குறித்து மரம் அறுவை ஆலை உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, ''பணம் இருந்தா தங்கத்தைக் கூட வாங்கிடலாம்; யாருடைய அனுமதியும் வேண்டியதில்ல. ஆனா, தேக்கு மரங்களை வெட்டி விற்கவும், வாங்கவும் வனத்துறையோட அனுமதி தேவை. தேக்கு மரத்தோட குறைந்தபட்ச கொள்முதல் விலையே, ஒரு கன அடி 950 ரூபாய்; அதிகபட்சம் 1,500 ரூபாய். வயசு ஆக ஆக மரத்துல வைரம் ஏறிக்கிட்டே இருக்கும். விலையும் கூடிக்கிட்டே இருக்கும். கருஞ்சிகப்பு நிறத்துல ரேகைகள் இருக்கறதைத்தான் வைரம்னு சொல்றோம். வெள்ளையா இருந்தா, தரம் குறைச்சல்னு அர்த்தம்.
இப்போதைக்கு 15 முதல் 20 வயசுள்ள மரம்னா... ஒரு கன அடி தேக்கு 950 ரூபாய். 20 முதல் 30 வயசிருந்தா 1,000 ரூபாயில இருந்து 1,200 ரூபாய். 30 முதல் 40 வயசுக்கு மேற்பட்டதா இருந்தா 1,500 ரூபாய் வரை விலை போகும். தரத்துக்குத் தக்கபடி விலை'' என்று கண்சிமிட்டினார்கள்.
எல்லாமே இலவசம்!
தேக்கு மர வளர்ப்புக்காக அரசு மிகுந்த முயற்சி எடுத்து வருகிறது. அதைப்பற்றி பேசிய தஞ்சை மாவட்ட வன அலுவலர் துரைசாமி, ''மரச்சாமான்கள் செய்றதுக்கான டிம்பர் மரங்களுக்கு 1980-களில் கடுமையான தட்டுப்பாடு வந்தது; தரமான மரங்கள் கிடைக்காமல், மக்கள் ரொம்பவே திண்டாடினாங்க. அப்பதான் காவிரிப்படுகையில் இருந்த மரங்களை வெட்டி, அரசு விற்பனை செய்தது; தேக்கு மரங்களுக்கு, மக்கள்கிட்ட அமோக வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து அரசு விற்பனையில் இறங்கியிருக்கு.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், அரசின் எதிர்கால வருவாய்க்காகவும், 2003-ம் வருஷம், 'படுகை தேக்கு வளர்ப்பு திட்டம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருது. 5 வருடத்துக்குள்ள 5 லட்சத்து 25 ஆயிரம் தேக்கு கன்றுகளை நடுவதுதான் இலக்கு.
விவசாயிகள் விரும்பினால், அவர்களது நிலத்தில் ஊடுபயிரா தேக்கு நட்டுக் கொடுத்து, ரெண்டு முறை களையெடுத்து தரவும் வனத்துறை தயாரா இருக்கு. எல்லாமே இலவசம். ஆனா, தனிப்பயிராக தேக்கு நடவு செய்றதுக்கு இந்த சலுகை கிடையாது. தனிப்பயிரா நடவு செய்தா, நாட்டோட உணவு உற்பத்தி பாதிக்கப்படும்ங்கறதால அதை ஊக்குவிக்கறதில்ல.

ஒரு ஏக்கருக்கு 160 தேக்கு கன்னுகளை ஊடுபயிராக நட்டு, களையெடுத்து தருவோம். தனி ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ஒரு ஹெக்டேர் கணக்குபடி 400 தேக்கு நட்டு, களையெடுத்து தருவோம். தரிசு நிலமா இருந்தா, தனிப்பயிராகவே ஒரு ஹெக்டேருக்கு 400 கன்னுகளை நட்டு, களையெடுத்து தருவோம். ஆர்வமுள்ள விவசாயிங்க எங்களைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று அழைத்தார்.

எச்சரிக்கை!
தேக்கு வளர்க்க நினைப்பவர்கள், சொந்த முயற்சியோடு, சொந்த பராமரிப்பில் செய்தால்தான் இந்தக் கணக்கைப் போட்டு லாபத்தை எதிர்பார்க்க முடியும். அதோடு, உங்கள் நிலம் இருக்கும் பகுதியையும் பொறுத்தே மகசூல் அமையும். அதைவிடுத்து, 'உங்கள் பெயரில் நாங்கள் தேக்கு வளர்க்கிறோம்... பாக்கு வளர்க்கிறோம்' என்று வண்டி வண்டியாக கதையளந்து கடைசியில் உங்கள் பணத்தை 'அனுபவி'த்துவிட்டு ஓட்டம் எடுக்கும் சில தனியார் நிறுவனங்களை நம்பினால் ஆபத்துதான். அவர்களிடம் போய் ஏமாந்த 'அனுபவம்' தமிழகத்தில் நிறைய பேருக்கு உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம்... ஜாக்கிரதை!

அடேங்கப்பா...90 லடசம்!
ஒரு ஏக்கரில் 300 தேக்கு மரங்களை வளர்த்தெடுத் தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கன அடி 3,000 ரூபாய் விற்கும்பட்சத்தில் கிடைக்கப்போவது ரூ.90 லட்சம். இன்றைய விலையான 1,000 ரூபாய்க்குப் போனால் கூட, 30 லட்சம் நிச்சயம். மொத்த சாகுபடி செலவு ரூ.37,300. இதை வங்கியில் போட்டு வைத்தால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, '1,64,115 ரூபாய் கிடைக்கும்' என்பது வங்கிக் கணக்கு. மற்றதை நீங்களே கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
முதல் விதை!
தேக்கு மரத்தின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாயாக வந்திருக்கும் விஷ யத்தை பெருமையோடு சொல்லும் தஞ்சை மாவட்ட வன அலுவலர் துரைசாமி, பழைய சம்பவம் ஒன்றை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார்
‘‘காவிரிப் படுகையில தேக்கு மரங்கள் செழிப்பா வளரும்ங்கற விஷயம் ஆரம்ப காலங்கள்ல யாருக்கும் தெரியாது. 1956-ம் வருஷம், தலைமை வனப்பாதுகாவலரா இருந்த வி.எஸ்.கிருஷ்ணசாமிங்கறவரு நீடாமங்கலம் வந்தி ருக்காரு. அப்ப யதேச்சையா சில தேக்கு மரங்கள பார்த்திருக்காரு. ரொம்ப செழிப்பா இருந்திருக்கு. ஆய்வு செஞ்சி பார்த்தப்ப, அதுல ஒரு மரம், நூறு வயசுள்ள மரமா இருந்திருக்கு. ரொம்ப ஆச்சர்யப்பட்டு போனவர், காவிரிப்படுகையில ஏராளமான தேக்கு மரங்கள வளர்க்கணும்னு தீர்மானிச்சி, அதை செயல் படுத்த ஆரம்பிச்சார். அதுதான் முதல் விதை.''
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அன்றைய தலைமை வனப்பாதுகாவலர் கிருஷ்ணசாமியால் அடையாளம் காணப்பட்ட அந்தத் தேக்கு மரம், இப்பொழுதும் நீடாமங்கலத்தில் நின்று கொண்டிருக்கிறது. அன்றைக்கே அது நூறு வயது மரம். தற்போது சுமார் 150 வயதாக விட்ட அந்த மரத்தை கண்ணும் கருத்துமாக வனத்துறை பாதுகாத்து வருகிறது.

வனத்துறை தொல்லை தருகிறதா?
'தேக்கு வளர்க்கலாம். ஆனா, அதை வெட்டி விக்கறதுக்குள்ள வனத்துறைகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கவேண்டியிருக்கும்' என்று விவசாயிகளின் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறது. இதைப்பற்றி தஞ்சை மாவட்ட வன அலுவல் துரைசாமி கூறும்போது, ''இது மிக மிக சாதாரண விஷயம். கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உங்கள் தேக்கு மற்றும் நிலம் பற்றி ஒரு சான்றிதழ் பெற்று வனத்துறையிடம் கொடுத்தால், அதிகபட்சம் 10 நாட்களுக்குள்ளாக மரம் வெட்டுவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுவிடும். நீங்கள் மரம் வெட்டும்போது வனத்துறையினர் மேற்பார்வையிடுவார்கள். மற்றபடி வேறு எதிலும் வனத்துறை தலையிடுவதில்லை'' என்றார்.

இலுப்பை வனத்துக்குள்

இலுப்பை வனத்துக்குள்



இனிப்பான இலுப்பை 

காசி.வேம்பையன்
படங்கள்: எஸ். தேவராஜன்
பாரம்பரியம்
ஒரு காலத்தில் கோயிலும், இலுப்பைத் தோப்புகளும் இல்லாத ஊர்களையே பார்க்க முடியாது. ஆனால், இன்றைக்குத் தேடினாலும் கிடைக்காது எனும் அளவுக்கு... அற்றுப் போய்விட்டன, இலுப்பை மரங்கள். இதற்கு நடுவே பாரம்பரியத்தைக் கைவிடாமல், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சில கிராமங்களில் மட்டும் இன்றைக்கும் இலுப்பை வனங்களைப் பராமரித்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம், ராமநத்தம் கிராமமும் அதில் ஒன்று. இங்கே கோயிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில், இலுப்பை மரங்களை ஊர் பொதுவில் பராமரித்து வருகின்றனர் மக்கள்!
உச்சிவெயில் உச்சந்தலையில் இறங்கும் மதியவேளையில், அந்த இலுப்பை வனத்துக்குள் நுழைந்தோம். அங்கே நமக்காகக் காத்திருந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், ''இங்க 100 வருஷத்துக்கு மேல இந்த இலுப்பைத் தோப்பைக் காப்பாத்திட்டு வர்றோம். வெள்ளக்காரங்க ஆட்சியில 1918-ம் வருஷம், வெள்ளாத்தாங்கரைக்கு பக்கத்துல இருக்கற வெலிங்டன் (எமன் ஏரி) ஏரிக்கு தண்ணீர் கொண்டுபோக, வாய்க்கால் வெட்டினாங்க. அப்ப இந்த இலுப்பைத் தோப்பு அழிஞ்சுடக் கூடாதுனு எங்க பகுதியைச் சேர்ந்த பலரும் தங்களோட சொந்த நிலத்தைக் கொடுத்து, வாய்க்கால் வெட்டிக்கச் சொல்லியிருக்காங்க. அதுக்குப் பிறகு, 1950-ம் வருஷம் வாக்குல கண்ணன்ங்கிறவர் கூடுதலா இலுப்பைக் கன்னுங்களை நட்டு... ஆடு, மாடுக கடிக்காம காப்பாத்தி இந்த தோப்பை இன்னும் பெரிசாக்கியிருக்கார். அவரோட, நினைவா தோப்போட ஒரு பகுதியை 'கண்ணுத் தோப்பு'னுதான் எல்லாரும் கூப்பிடறோம். இதெல்லாம்தான் இன்னிவரைக்கும் எங்க ஊர் மக்களுக்கு இலுப்பைத் தோப்பு மேல தனிப்பாசத்தை உருவாக்கி வெச்சுருக்கு'' என்று உருகி உருகிச் சொன்னார்.
உணவாகும் இலுப்பைப் பூ !
கூடவே நின்றிருந்த ரெங்கராஜ், ''இந்த நிலம் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானது. இங்கிருக்கும் மரங்களை கோயில் தர்மகர்த்தாதான் நிர்வகித்து வருகிறார். மரத்தில் ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் இலைகள் கொட்ட ஆரம்பித்து, பங்குனி மாதக் கடைசியில் பூ விட்டு, சித்திரையில் பிஞ்சு இறங்க ஆரம்பித்து, ஆவணி-புரட்டாசியில் இலுப்பைக் கொட்டைகள் கிடைக்கும். ஊரில் உள்ளவர்கள், கொட்டைகளைப் பொறுக்கி கோயிலில் கொடுப்பார்கள். அதற்கு உரிய சம்பளம், கொட்டைகளாவே கொடுக்கப்படும். வருஷத்துக்கு ஒருமுறை மரத்துக்கு 100 கிலோ அளவுக்கு கொட்டை கிடைக்கும். பொறுக்குக் கூலியாகக் கொடுத்தது போக, மீதியிருக்கும் கொட்டைகளை எண்ணெய் ஆட்டி, ஊர்ல இருக்கும் ஐந்து கோயிலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். பூக்கொட்டும்போது, இலைகளைக் கூட்டி ஓரமா தள்ளி வைத்துவிட்டு, தரமான பூக்களைச் சேகரித்து உணவு மற்றும் மருந்துக்கு மக்கள் பயன்படுத்துகிறார்கள்'' என்று சொன்னார்.
களைப்பைப் போக்கும் களிசட்டிக்காய் !
அடுத்தாக, ''இலுப்பைத் தொட்டி கட்டினா... தாய்மார்களுக்கு பால் நல்லா சுரக்கும்னு சொல்வாங்க'' என்று இலுப்பையின் பெருமை பேசிய செல்லம்மா, ''சீசன்ல... காலையிலயும், சாய்ந்தரமும் கொட்டை பொறுக்க போவோம். கூலியா கிடைக்கற கொட்டைகளை எண்ணெய் வியாபாரிகக்கிட்ட கொடுத்துட்டு, அவர்கிட்ட இருந்து எண்ணெய் வாங்கிக்குவோம். நாலுபடி கொட்டைகளைக் கொடுத்தா...  ஒரு படி எண்ணெய் கொடுப்பார். அந்த எண்ணெயில பலகாரம் செய்றது, விளக்கு எரிக்கறது, குழம்பு தாளிக்கறதுனு எல்லாத்துக்கும் பயன்படுத்துவோம். இலுப்பை எண்ணெயில சமைச்சா மணமாவும், சுவையாவும் இருக்கும்.
பூ சீசன்ல, கொட்டுற பூவையெல்லாம் பொறுக்கிட்டு வந்து, அதுகூட உப்பு, புளி, மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வறுத்து அரைச்சு, சின்னச் சின்ன உருண்டையா பிடிச்சு வெச்சுடுவோம். இந்த உருண்டைகளை களிசட்டிகாய்னு சொல்லுவோம். வயக்காட்டுல வேலை பார்க்குறப்ப, இதுல ரெண்டு உருண்டைய தின்னுட்டு தண்ணியைக் குடிச்சுட்டு வேலையைப் பார்த்தா... களைப்பு இல்லாம இருக்கும். இந்த உருண்டை, பிள்ளைங்களுக்கு நல்ல தின்பண்டமாவும் இருக்கும். குளிக்கறப்ப இலுப்பைப் பிண்ணாக்கைப் பொடியாக்கி தலையில தேய்ச்சு குளிப்போம். பேன், பொடுகுத் தொல்லையே இல்லாம ஓடிப்போயிடும்'' என்று சொன்னார்.
தலைமுறைகளைத் தாண்டிய பலன் !
இலுப்பைத் தோப்புகள் பற்றி ஆய்வுகள் செய்து வரும் அதே ஊரைச் சேர்ந்த ரமேசு கருப்பையா, ''முன்னோர்கள், இலுப்பைத் தோப்பை உருவாக்கியதற்கு சமூகப் பொருளாதாரக் காரணங்கள் நிறையவே இருக்கின்றன. பொது இடங்களில் மரங்களை உருவாக்க நினைத்தவர்கள் மா, பலா, தென்னை, தேக்கு, ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களை உருவாக்கி இருக்கலாம். ஆனால், தலைமுறை கடந்தும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இலுப்பைத் தோப்புகளை, தாங்கள் குடியேறிய பகுதிகளில் உருவாக்கி இருக்கின்றனர்.
மண்ணெண்ணெய், மின்சாரம் ஆகியவை பயன்பாட்டுக்கு வராத காலத்திலேயே இலுப்பைத் தோப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் எண்ணெயை விளக்கெரிக்க முக்கியமாகப் பயன்படுத்தியுள்ளனர். பூவை சர்க்கரை எடுப்பதற்கும், சாராயம் காய்ச்சுவதற்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிண்ணாக்கை நிலத்துக்கு உரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்ட எல்லையில் வெள்ளாறு நுழையும் இடத்தில இருந்து விருத்தாசலம் வரை, சுமார் ஐம்பது கிலோமீட்டருக்கு ஆற்றின் இரண்டு பக்கமும் இலுப்பை மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இந்த மரங்களை சில ஊர்களில் முற்றாக அழித்து விட்டனர்.
இந்தப் பழங்களை நம்பி, அரிய உயிரினமான பழந்திண்ணி வெளவால் இருக்கிறது. இம்மரங்கள் மழைக்காலத்தில் பழங்களைத் தருவதால், பழந்திண்ணி வெளவால் இனம், இலுப்பைத் தோப்புகளில் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன. இலுப்பை மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டால், பழந்திண்ணி வெளவால் இனமும் அழிக்கப்பட்டு விடும். இந்த மரம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக, இதன் கன்றுகளை பலருக்கும் நான் இலவசமாகக் கொடுத்து வருகிறேன்'' என்றார் உற்சாகமாக!
இலுப்பையைக் காக்கும் இந்த கிராமத்துக்கு பசுமை வணக்கம் !

முழுக்க முழுக்க மருந்து!

இலுப்பையின் மருத்துவ குணங்கள் பற்றி பேசிய இதேபகுதியில் இருக்கும் பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் வரதராஜன், ''முழுக்க முழுக்க மருத்துவ குணம் நிறைஞ்ச மரங்கள்ல இலுப்பைக்கு முக்கிய இடமிருக்கு. இலுப்பைப் பூவுல குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதனால நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சர்க்கரை வியாதி உள்ளவங்க, இலுப்பை எண்ணெயில சமைச்ச உணவை சாப்பிடும்போது, பக்கவிளைவு இருக்காது. சித்த மருந்து தயாரிப்புல, கூட்டுப்பொருளா இந்த எண்ணெயைப் பயன்படுத்தறாங்க. இலுப்பை வேர், நாள்பட்ட ஆறாதப் புண், பசி இல்லாமை, காய்ச்சல், தேகச் சோர்வு இதுக்கெல்லாம் நல்ல மருந்து. இலுப்பைப் பிண்ணாக்குல புகைபோட்டா, கொசு பிரச்னை இருக்காது. மேலும், இலுப்பைப் பிண்ணாக்கைப் பொடியாக்கி குளியலுக்குப் பயன்படுத்தலாம். சேற்றுப்புண், விரை வீக்கம் இதுக்கெல்லாம் மருந்தாவும் பயன்படுத்தலாம்'' என்று சொன்னா

மறந்து போன மருத்துவ உணவுகள்

மறந்து போன மருத்துவ உணவுகள்

ன்றைக்கு சில அடி தூரம் நடந்தாலே, பலருக்கும் முட்டி வலிக்கிறது; மூச்சு வாங்குகிறது. ஆனால், எந்த வாகன வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் பல மைல் தூரத்தை நடந்தே கடந்து சென்றவர்கள் நம்முடைய முன்னோர். ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்ததுதான் அதற்கான காரணம். மறந்துபோன மருத்துவ உணவுகளில் சில இங்கே...


ஆவாரம்பூ கஷாயம்
தேவையானவை: ஆவாரம்பூ - 100 கிராம், சுக்கு - ஒரு துண்டு, ஏலக்காய் - 20, உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம், சோம்பு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.
மருத்துவப் பயன்: சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

சாமை, தினை அரிசி அடை
தேவையானவை: சாமை, தினை அரிசி - தலா 100 கிராம், சின்ன வெங்காயம் - 50 கிராம், தக்காளி - 1, மிளகு - 20, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 6 பல், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை: சாமை, தினை, மிளகு, உளுந்து, மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் இளவறுப்பாக வறுத்து, தூள் செய்துகொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சியை நன்றாக வதக்கவும். வதங்கியதும் அரைத்துவைத்துள்ள மாவுடன் கலந்து, உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை தோசைக்கல்லில் அடையாகச் சுட்டு எடுக்க வேண்டும்.
மருத்துவப் பயன்: உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பு தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, டூவீலரில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இதைச் சாப்பிட, வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.

கற்றாழை அல்வா
தேவையானவை: சோற்றுக் கற்றாழை - கால் கிலோ, முந்திரி, பாதாம் பருப்பு - தலா 100 கிராம், சுக்கு - 20 கிராம், ஏலக்காய் - 25 கிராம், நாட்டு வெல்லம் - அரை கிலோ, நெய், தேன் - தலா 2 டீஸ்பூன்.
செய்முறை: தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழையை அரிசி கழுவியத் தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கற்றாழையைப் போட்டு வேகவைக்கவும். முந்திரி, பாதாம் பருப்பு, சுக்கு, ஏலக்காயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துத் தூள் செய்து, கற்றாழையுடன் சேர்க்கவும். கற்றாழை நன்றாக வெந்ததும் வெல்லத்தை நன்றாகப் பொடித்து, அதில் சேர்க்கவும். அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அல்வா பதம் வந்ததும் நெய், தேனை ஊற்றி நன்றாகக் கிளறி கீழே இறக்கவும்.
மருத்துவப் பயன்: வெள்ளைப்படுதல், கருப்பைப் புண், பால்வினை நோய்களைக் குணப்படுத்தும். எலும்புருக்கி நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும். பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்யும். குடல் கிருமிகளை அகற்றும். மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு வலிமை தரும்.

முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு
தேவையானவை: பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, கறுப்பு உளுந்து - தலா கால் கிலோ, பச்சரிசி - ஒரு கிலோ, ஏலக்காய், சீரகம், மிளகு - தலா 25 கிராம், முருங்கைக் கீரை - ஒரு கட்டு.
செய்முறை: முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் அரைத்த கீரை விழுதை சேர்த்துப் பிசையவும். இதை இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாகக் காயவைக்கவும். காய்ந்ததும் மாவாக அரைத்துக்கொள்ளலாம். தேவையானபோது மாவை எடுத்து உப்பு சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கலாம். மாவாக அரைக்காமல், அரிசியை ஒன்றிரண்டாக உடைத்தோ அல்லது அப்படியே கஞ்சியாகக் காய்ச்சியும் குடிக்கலாம்.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, கழுத்து வலி குணமாகும். இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை சரியாகும். மாதவிடாய்ப் பிரச்னையைத் தீர்க்கும். இளைத்த உடலைத் தேற்றும்.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்கிறது வெறும் சாப்பாட்டோட முடியுறது இல்லை. அது பொருளாதாரத்தோட சம்பந்தப்பட்டது. ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட்டுக் கிடைக்குற சர்க்கரை இனிப்பைக் காட்டிலும் பத்து மடங்கு இனிப்பைத் தரும் ஒரு ஏக்கர் பனை. சர்க்கரை உடம்புக்குக் கெடுதின்னு சொல்லாத வைத்தியமே இல்லை. பனையோ சத்து. ஆனா, நம்மளோட அறியாமையால், தண்ணீரே தேவைப்படாத பனையை வெட்டிட்டு, தண்ணீரைக் குடிக்கிற கரும்பைச் சாகுபடி பண்ணிக்கிட்டு இருக்கோம். மண்ணுக்குஏத்த உணவுப் பழக்கம் மனுஷ உடம்புக்கு மட்டும் இல்லை; விவசாயத்துக்கும் வளர்ச்சியைத் தரும். இதை ரொம்ப சீக்கிரம் நம்ம மக்கள் புரிஞ்சுக்கிடுவாங்க. விதவிதமா சமைச்சுக் கொடுத்தா குழந்தைங்களும் மாறிடுவாங்க'' என்றார். தினை மாவு இனிப்பை நக்கி நக்கி, சப்புக்கொட்டித் தின்ற ஓசூர் சிறுவர்களைப் பார்த்தபோது பாமயனின் நம்பிக்கை பொய்க்காது என்றே தோன்றியது!


முக்கனிக் கூழ் @ ஒசூர்!

சமஸ்
படங்கள் : எம்.விஜயகுமார்



ரியோ டி ஜெனிரோவில் பருவநிலை மாநாட்டில் சர்வதேசத் தலைகள் உரையாடிவிட்டுக் கிளம்பிய நேரத்தில், ஓசூர் பழங்குடிகள் உணவுத் திருவிழாவில் முக்கனிக்கூழ் பரிமாறிக்கொண்டு இருந்தார்கள். மா, பலா, வாழை மூன்றையும் சேர்த்துப் பிசைந்து செய்திருந்தார்கள். நல்ல இனிப்பு. அபாரமான சுவை. அடுத்து, தினை மாவில் கருப்பட்டிப் பாகு, சுக்கு சேர்த்துச் செய்திருந்த தினை இனிப்பு. அப்புறம் வரகரிசி சாதத்தில் அரைச்சுவிட்ட ரசம் ஊற்றிச் சாப்பாடு. தொட்டுக்க கொள்ளுத் துவையல். பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த நண்பர் சாமை சாதத்தில் குறவை மீன் குழம்பு ஊற்றி, ஒவ்வோர் உருண்டைக்கும் வாத்துக் கறித் துண்டு ஒன்று சேர்த்து உள்ளே அனுப்பிக்கொண்டு இருந்தார். இதுவும் பருவநிலை தொடர்பான சமாசாரம்தான். ஓசூரில் உள்ள தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. உணவுத் தட்டுப்பாடும் சுற்றுச்சூழல் கேடும் உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் வேளையில், இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வை நம்முடைய தொல்குடிகளிடம் இருந்து பெற முடியும் என்று யோசிக்கவைப்பதே இந்த உணவுத் திருவிழாவின் இலக்கு.
 பொதுவாகவே, பழங்குடிகள் தொடர்பான நம்முடைய புரிதல்கள் மட்டமானவை; அறியாமை சூழ்ந்தவை. பழங்குடிகள் என்றாலே, கச்சை கட்டி, கையில் வேல் ஏந்தி, தலையில் இறகு செருகி, புரியாமொழி பேசி... தமிழ் சினிமாவில் மட்டுமே இப்படிப்பட்ட பழங்குடிகள் சாத்தியம்.
தமிழ்நாட்டில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான பழங்குடிகள் வாழ்கிறார்கள். அடர்ந்த காடுகளின் குகைகளில் வசிப்பவர்களில் தொடங்கி, மலையடிவாரக் கிராமங்களில் கான்கிரீட் கட்டடங்களில் வசிப்பவர்கள் வரை பல தளங்களில் இவர்கள் வாழ்கிறார்கள். ஆனால், வாழ்வியல் அடித்தளத்தைப் பொறுத்த அளவில் இவர்களிடையே நிறைய ஒற்றுமை களைப் பார்க்க முடியும். குறிப்பாக, உணவுப் பழக்கம்.
தான் வாழும் பகுதியில் எது விளைகிறதோ, அதுவே அவர்கள் உணவு. எல்லாக் காலகட்டத்துக்கும் ஒரே உணவு காட்டில் சாத்தியம் இல்லை. ஆகையால், பருவத் துக்கு ஏற்ப, விளைச்சலுக்கு ஏற்ப உணவும் மாறும். அடர் காடுகளில் வாழ்வோருக்கு, விவசாயத்தையே இன்னும் அறியாதவர் களுக்கு, கிழங்குகள்தான் பெரும்பாலும் உணவாக அமையும். நாள் முழுவதும் கிழங்கைத் தேடி அலைவார்கள். கிழங்கு இருக்கும் தடயம் அறிந்து மண்ணை வேக வேகமாகத் தோண்டுவார்கள். மேல் கிழங்கு தென்பட்டால், சாப்பிடுவார்கள்; அடிக் கிழங்கு தென்பட்டால் மண்ணை மூடிவிடுவார்கள். அடிக்கிழங்கு உயிர்க் கிழங்கு. அது பூமியின் சொத்து. மேல்கிழங்குக்கான உரிமை மட்டும்தான் நமக்கானது என்ற எண்ணம். இருட்டும் வரை தேடி அலைந்து பசியோடு திரும்பினாலும் அடிக்கிழங்கைத் தொட மாட்டார்கள். அதேபோல, கிடைப்பது ஒரே கிழங்கானாலும் அத்தனை பேருக்கும் அதில் பங்கு உண்டு. இயற்கையின் மடியில் அடிவரை சுரண்டித் தின்பது என்பதும் இன்னும் பத்து தலைமுறைக்குப் பதுக்கிவைப்பது என்பதும் அவர்கள் அறியாத நாகரிகம்.
இப்படி அவர்களிடம் இருந்து எதை எல்லாம் இன்றைய நவீன சமூகம் எடுத்துக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் இன்னமும் மறந்துவிடாத நம்முடையபாரம் பரிய உணவுகள் வாயிலாகச் சொன்னது விழா. தமிழ் அமைப்புகளைச் சேர்ந்ததோழர்கள் காலை முதலே குடும்ப சகிதமாக  உழைத்துக்கொண்டு இருந்தார்கள். தோழர் கள் சந்தை சந்தையாக மீன், நாட்டுக் கோழி, ஆடு, வாத்து வாங்க அலைய... அவர் களுடைய மனைவியர் சமையலைக் கவனித்துக்கொண்டு இருந்தார்கள். இயக்குநர் 'பாலை’ செந்தமிழன் முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். கணவனுக்கு ஏற்ப காலையில் இருந்து இரவு வரை தம் வீட்டு விசேஷம்போல் அவர் மனைவி காந்திமதியும் சமையல் வேலையே கதியாகக் கிடந்தது ஆச்சர்யம். மாலையில் விழா களைகட்டியது. ஓசூர்க்காரர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்.
இயக்குநர் செந்தமிழனிடம் பேசினேன்.
''சின்ன வயசில் இருந்தே பழங்குடிகள் வாழ்க்கை மேல பெரிய ஆர்வம் உண்டு. 'பாலை’ படத்துக்காக காடுகாடாக அலைஞ்சு திரிஞ்சப்போ பழங்குடிகளோட நெருங்கிப் பழகினேன். அது எனக்கு ஒரு புது உலகத்தைத் திறந்துவெச்சுச்சு. நாள் முழுக்கச் சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்குற கிழங்கு, அருவித் தண்ணியைத் தனக்குள்ள வெச்சிருக்கிற கொடி, எந்த விஷ ஜந்து தீண்டினாலும் சுகமாக்கிடுற பச்சிலை... இயற்கை அறிவைவிடப் பெரிசு ஒண்ணும் இல்லை. நூறு வயசுப் பெரியவர் ஒருத்தரைச் சந்திச்சேன். என்னைவிட அதிக வலுவோட அவரால் இயங்க முடியுது. கொஞ்சூண்டு தினை மாவு... அதுல தேனைக் கலந்து சாப்பாடாக்கிடுறாங்க. அவ்வளவு ருசியா இருக்கு. சமையலுக்காக அவங்க மெனக்கெடுறது இல்லை. ஆனா, அவங்க சாப்பிடுறது அவ்வளவு சக்தியை உடம்புக்குத் தருது. ஆனா, நம்ம நிலைமை என்ன? கேழ்வரகும் சாமையும் நமக்குக் கிடைக்காத பொக்கிஷமா என்ன? போன நூற்றாண்டு வரைக்கும்கூட விசேஷ நாட்கள்ல மட்டும்தானே அரிசிச் சோறு சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம்? பர்கராலும் பீட்ஸாவாலும் இட்லி, தோசையை மறக்கடிக்க முடியும்னா, நம்ம பாரம்பரிய உணவால முடியாதா என்ன?'' என்றார்.
விழாவுக்கு வந்திருந்த இயற்கை வேளாண் வல்லுநர் பாமயனிடம் பேசினேன்.
''கோதுமையைவிட ஆறு மடங்கு நார்ச் சத்து உள்ளது குதிரைவாலி. இட்லி, தோசை, பொங்கல்னு எல்லாம் செய்யலாம். ஆனா, இன்னைக்கு எத்தனை பேருக்குக் குதிரைவாலி பேர் தெரியும்? தினை மாதிரி புரதச்சத்து உள்ள தானியமே கிடையாது. இன்னைய குழந் தைங்க அதைக் கண்ணாலயாவது பார்த்திருப்பாங்களா? உணவுப் பழக்கம்கிறது வெறும் சாப்பாட்டோட முடியுறது இல்லை. அது பொருளாதாரத்தோட சம்பந்தப்பட்டது. ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட்டுக் கிடைக்குற சர்க்கரை இனிப்பைக் காட்டிலும் பத்து மடங்கு இனிப்பைத் தரும் ஒரு ஏக்கர் பனை. சர்க்கரை உடம்புக்குக் கெடுதின்னு சொல்லாத வைத்தியமே இல்லை. பனையோ சத்து. ஆனா, நம்மளோட அறியாமையால், தண்ணீரே தேவைப்படாத பனையை வெட்டிட்டு, தண்ணீரைக் குடிக்கிற கரும்பைச் சாகுபடி பண்ணிக்கிட்டு இருக்கோம். மண்ணுக்குஏத்த உணவுப் பழக்கம் மனுஷ உடம்புக்கு மட்டும் இல்லை; விவசாயத்துக்கும் வளர்ச்சியைத் தரும். இதை ரொம்ப சீக்கிரம் நம்ம மக்கள் புரிஞ்சுக்கிடுவாங்க. விதவிதமா சமைச்சுக் கொடுத்தா குழந்தைங்களும் மாறிடுவாங்க'' என்றார்.
தினை மாவு இனிப்பை நக்கி நக்கி, சப்புக்கொட்டித் தின்ற ஓசூர் சிறுவர்களைப் பார்த்தபோது பாமயனின் நம்பிக்கை பொய்க்காது என்றே தோன்றியது!

  தெம்பா சாப்பிடுங்க!
தினைத் தேன் உருண்டை: தினையைப் பொன்னிறத்தில் வறுத்து, மாவாக்கி அதில் கருப்பட்டி அல்லது வெல்லப்பாகு, கொஞ்சம் தேன், வாசனைக்கு ஏலக்காய் சேர்த்துப் பிசைந்து சிறுஉருண்டையாக்கினால் அற்புதமான இனிப்பு. உடலுக்கு நல்ல வலு. குழந்தைகளுக்கு உகந்தது.
கேழ்வரகுக் கூழ்: கேழ்வரகை முந்தைய நாளே முளைகட்டிவைத்து, வெயிலில் உலர்த்தி, அரைத்து மாவாக்கி, அந்த மாவைத் தண்ணீரில் கொதிக்கவைத்து இறக்கி, மோர் சேர்த்து சின்ன வெங்காயம், மல்லித் தழை தூவினால் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு தயார்.
கொள்ளு ரசம்: கொள்ளைக் குழைய வேகவைத்து வடிகட்டினால் கிடைக்கும் நீரில், தக்காளி, மிளகு, சீரகம் சேர்த்து வைக்கப்படும் ரசம். கொழுப்பைக் கரைக்கும்.
கறிவேப்பிலைப் பழரசம்: கறிவேப்பிலையுடன் தேங்காய் சேர்த்து, இரண்டையும் அரைத்து எடுத்த பாலில் கருப்பட்டி, ஏலக்காய் சேர்த்தால், சத்து மிக்க உடனடி பானம் தயார்

வெகுமதி கொடுக்கும் வேம்பு !

வெகுமதி கொடுக்கும் வேம்பு !


வெகுமதி கொடுக்கும் வேம்பு !

ஜி. பழனிச்சாமி,படங்கள்: க. ரமேஷ்
 மழைவளம், நிலவளம், மனிதவளம் இவை அனைத்தும் செழிக்கத் தேவையானது மரவளம். இதை உணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டார்கள். ஆனால், நாகரிகம் வளர வளர... தன் தேவைக்காக மரங்களை, மரணிக்கச் செய்து வருகிறோம், நாம். அதனால்தான் மாதாமாதம் கிடைத்து வந்த மும்மாரி... இப்போது ஓர் ஆண்டுக்கு மூன்று முறை கிடைத்தாலே பெரிது என்கிற நிலை ஏற்பட்டு வருகிறது! அதன் விளைவு... பூமிப் பந்து சூடாகி, வறட்சி வாட்டி எடுக்கிறது.
இதை மனதில் வைத்துதான், அரசு இயந்திரங்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து மரங்களின் மகிமையை மக்களுக்கு எடுத்துக்கூறி, மரம் நடுதல் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, தனி நபர்களின் தோட்டங்களில் மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் ஒருவராக 40 ஏக்கரில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து வேப்ப மரங்களை வளர்த்து வருகிறார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி.
நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மேற்குநாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கிறது, சத்தியமூர்த்தியின் வேப்பந்தோப்பு. சாலையின் இருபுறங்களிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மானாவாரி மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து கிடக்க, அதற்கு இடையில் பசுஞ்சோலையாக இருக்கிறது இவரது வேப்பந்தோப்பு. காலைவேளையன்றில் அந்த குளுகுளு வேப்பந்தோப்புக்குச் சென்ற நம்மிடம், இனிமையாகப் பேசத் தொடங்கினார், சத்தியமூர்த்தி.
குளுகுளு வேம்பவனம்!
''என்னோட பூர்வீகம் ஈரோடு பக்கத்தில இருக்கிற பஞ்சலிங்கபுரம் கிராமம். அடிப்படையில விவசாயக் குடும்பம்தான். கூடவே, கட்டுமானப் பணிகளும் செய்துட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல தொழில் நிமித்தமா நாமக்கல்லுக்கு வந்துட்டேன். இருந்தாலும், விவசாய ஆர்வம் குறையல.
இயற்கை முறையில நாட்டுமரங்களை வளக்கணும்கிற எண்ணம் இருந்தது. அதனால ஓய்வு நேரங்கள்ல சேவை அமைப்புகளோட சேர்ந்து... பொது இடங்கள்ல மரம் நடுற வேலையைச் செஞ்சுட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான் நம்மாழ்வார் அய்யாவோட தொடர்பு கிடைச்சது. அவரை வெச்சு இயற்கை விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தினோம். அங்கதான் வேப்பமரத்தினால மனுஷனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள், அதனோட மருத்துவக் குணம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன்.
நாமக்கல்ல இருக்கற 'ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம்', தனியார் நிலங்கள்ல காடு வளர்க்கறத பத்தி விழிப்பு உணர்வை ஏற்படுத்திக்கிட்டே இருந்தாங்க. அதைத் தொடர்ந்து, விவசாயம் செய்ய நான் வாங்கிப் போட்டிருந்த 40 ஏக்கர் பாசன நிலத்தில முழுக்க வேப்பங்கன்றுகளை நடவு செஞ்சு வளர்த்துட்டு வர்றேன். மொத்தம் 3 ஆயிரத்து 500 மரங்க இருக்கு. நட்டு 6 வருஷமாச்சு. சொட்டுநீர்ப் பாசனம் செய்றதால மரங்கள் 'தளதள’னு இருக்கு பாருங்க'' என்று மரங்களைக் காட்டியவர், தொழில்நுட்ப விஷயங்களுக்குள் புகுந்தார்.
15 அடி இடைவெளி!
''மண்கண்டம் மிகவும் மோசமாக உள்ள இடங்களைத் தவிர பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் வேப்பமரம் வளரும். கோடை உழவு செய்து நிலத்தைக் காய விட்டு, பருவமழை கிடைத்ததும் மீண்டும் இரண்டு உழவு செய்தால், சிறப்பாக இருக்கும்.
கோடை உழவு செய்யாதவர்கள் பருவமழைக் காலத்தில் நன்றாக உழுது, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து 15 அடிக்கு 15 அடி இடைவெளிவிட்டு, 2 கன அடி அளவுக்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டமேற்றிய தொழுவுரம் மற்றும் செம்மண் இரண்டையும் குழியில் பாதி அளவு நிரப்பி, குழியின் மையத்தில் நாற்றுகளை நடவு செய்து, மண்ணைப் போட்டு குழியை மூட வேண்டும்.
அதிக பராமரிப்புத் தேவையில்லை!
வேர்கள் நோயுறாமல் இருக்கவும், செடிகள் ஊக்கமுடன் வளர்வதற்காகவும் நடவு செய்தவுடன் ஒவ்வொரு செடியைச் சுற்றியும்  ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை ஊற்ற வேண்டும். பின்பு, சொட்டுநீர் மூலம் வாரம் ஒரு பாசனம் செய்தால் போதும். ஆண்டுக்கொரு முறை செடிகளின் பக்கக்கிளைகளை ஒடித்து கவாத்து செய்ய வேண்டும். இல்லையெனில், பக்கக்கிளைகள் பெருகி, சீரான வளர்ச்சி பாதிக்கப்படும். இதைத் தவிர வேறு பராமரிப்புகள் தேவையில்லை.''
தொழில்நுட்ப விஷயங்களைச் சொல்லிய சத்தியமூர்த்தி, தொடர்ந்து எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பேசினார்.
ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் வருமானம்!
''மரங்களை வளர்த்தா... வருமானத்துக்கு வருமானம் ஆச்சு, சமூகத்துக்கும் நல்லது செஞ்ச திருப்தியும் கிடைக்குது. இன்னும் 15 வருஷம் கழிச்சு இந்த மரங்களை வெட்டி விக்கலாம். இன்னிய நிலவரப்படி, ஒரு மரம் 5 ஆயிரம் ரூபாய் விலைனு வெச்சுக்கிட்டாகூட, ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் வருமானமா கிடைக்கும்.
ஆனாலும் மரத்தை வெட்டுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அதேநேரத்துல வருமானமும் வேணுமே..? என்ன செய்யலாம்னு யோசிச்சு, பல நிபுணருங்ககிட்ட ஆலோசனை செஞ்சேன். அதனடிப்படையில... வனத்தை அழிக்காம, பணத்துக்கு வழி பண்ற ஒரு திட்டத்தைத் தயார் செஞ்சுருக்கேன்'' என் சொல்லி ஆச்சரியமூட்டியவர், தொடர்ந்தார்.
மதிப்புக் கூட்டினால் போதும்!
''அதாவது, வேப்ப மரத்திலிருந்து மதிப்புக்கூட்டியப் பொருட்களைத் தயாரிக்க முடிவு செஞ்சுருக்கேன். வருஷத்துக்கு ஒரு தடவை ஒரு மரத்துல இருந்து, குறைஞ்சது 3 கிலோ வேப்பமுத்து கிடைக்குது. அதை சேகரிச்சுக்கிட்டு இருக்கேன். இதை வெச்சு, மருத்துவ குணம் கொண்ட வேப்பெண்ணெய், அதை மூலப்பொருளா வெச்சு, இயற்கை விவசாயத்துக்கான பூச்சிவிரட்டி தயாரிக்கலாம்னு இருக்கேன். மரத்திலிருந்து கிடைக்கற கோந்தையும் சேகரிச்சு விக்க முடியும். இப்படி மரங்களை வெட்டாமயும் மரங்கள் மூலமா சம்பாதிக்க முடியும். இதை, குடிசைத்தொழில் மாதிரி செஞ்சு இந்தப்பகுதி மக்களுக்கும் நிரந்தர வேலைவாய்ப்பைக் கொடுக்கற எண்ணமும் இருக்கு'' என்று தன்னுடைய புதுமையானத் திட்டத்தைச் சொன்ன சத்தியமூர்த்தி,
இயற்கை சரணாலயம்!
''40 ஏக்கர்ல விரிஞ்சு கிடக்குற இந்த வேப்பஞ்சோலைக்குள்ள ஒரு முறை போயிட்டு வந்தாலே... புத்துணர்வு கிடைக்கும். தினந்தோறும் வேப்பமரக் காற்றை சுவாசிச்சா நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும், மூச்சுக்குழாய், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படும். சர்க்கரையின் அளவு குறையும்னு சொல்றாங்க. அதை மனசுல வெச்சு, இந்த வேப்பஞ்சோலைக்குள்ள இயற்கை மருத்துவமனையையும், ஒரு முதியோர் இல்லத்தையும் ஆரம்பிக்கப் போறேன். அதோட இங்க, கிளி, மைனா, குயில், மயில், தேன்சிட்டு, புறா, உள்ளிட்ட நூத்துக்கணக்கான பறவைகளும், முயல், கீரி, உடும்பு, காட்டுப்பூனை மாதிரியான விலங்குகளும் வந்து போயிட்டு இருக்கு. அதுகளுக்காக குடிநீர்த் தொட்டிகளை அங்கங்க வெச்சிருக்கேன். அதனால இது ஒரு சரணாலயமாவும் மாறிடுச்சு'' என்றவர், நிறைவாகச் சொன்னது-
''வனம் இருந்தாதான்... இனம் இருக்கும். மரவளம் குறைஞ்ச நாமக்கல் மாவட்டத்தை மழை வளமுள்ள மாவட்டமா மாத்தணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. அதை மனசுல வெச்சுதான், நாமக்கல் மாவட்ட மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் சங்கத்தை உருவாக்குறதுல முனைப்பா இருக்கேன்.'’
வெல்லட்டும் இந்த முயற்சி!
 தொடர்புக்கு,சத்தியமூர்த்தி,
செல்போன்: 98943-99944.
தில்லைசிவக்குமார்,
செல்போன்: 94432-24921.
கணேஷமூர்த்தி,
செல்போன்: 90951-20888.

மன நிம்மதிக்கு நாட்டு வேம்பு... வருமானத்துக்கு மலைவேம்பு!
தற்போது மலைவேம்பு சாகுபடி விவசாயிகளிடம் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் நாட்டு வேம்புக்கும், மலைவேம்புக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி மலைவேம்பு சாகுபடியில் நீண்ட அனுபவம் உடையவரும், நாற்றுப்பண்ணை நடத்தி வருபவருமான ஈரோடு மாவட்டம் கணேஷமூர்த்தியிடம் கேட்டோம்.
''நாட்டு வேம்பு நம் மண்ணின் மரம். காடு, மேடு, குளம், குட்டை போன்ற இடங்களில் சுயம்புவாக வளர்ந்து... நிழல் தந்து, ஆரோக்கியக் காற்று தந்து, வீடு கட்ட உபகரணங்கள் தந்து, இன்று வரை உதவிக் கொண்டிருக்கிற பாரம்பரிய மரம் இந்த வேம்பு என்பது பெருமையான விஷயம். நாட்டு வேம்பைப் பொறுத்தவரை நடவு செய்த
20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சேகு ஏறி, முழுமையான மரமாக மாறும். அப்பொழுதுதான் வருமானமும் கிடைக்கும். 'இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. நிழல் கிடைக்கிறது. ஆண்டுக்கு 3 கிலோ விதை கிடைக்கிறது. அதுவே போதும்’ என நினைப்பவர்களும், 'வருமானத்தைப் பற்றியும் கவலையில்லை. எப்போது வேண்டுமானாலும் வருமானம் கிடைக்கலாம்’ என்று நினைப்பவர்களும் நாட்டு வேம்பை சாகுபடி செய்யலாம்.
ஆனால், 'விரைவில் வருமானம் கிடைக்க வேண்டும்’ என நினைப்பவர்கள் மலைவேம்பை சாகுபடி செய்வதுதான் நல்லது. மரப்பயிர்களிலேயே குறுகிய காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய பயிர்களில் மலைவேம்பும் ஒன்று. நடவு செய்த ஆறாவது வருடத்தில் இருந்தே வெட்டி விற்பனை செய்யலாம். அதிக பட்சம் 12 ஆண்டுகள் வரை வளர்த்து விற்பனை செய்தால் மரம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது. 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 430 மரங்கள் வரை நடவு செய்யலாம். 3 வருடத்தில் தீக்குச்சிக்கும் 5 வருடத்தில் பிளைவுட் பயன்பாட்டுக்கும் வெட்டியது போக... தகுந்த இடைவெளியில் வளர்ந்து நிற்கும் சேகு ஏறிய மரங்களை அனைத்து மரப்பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தலாம். குறைந்தபட்சம் 12 வருட முடிவில் ஏக்கருக்கு, 30 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
நாட்டுவேம்பைப் பொருத்தவரை அதிக தண்ணீர் தேவை இல்லை. குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் மழை நீரே போதுமானது. பராமரிப்பும் பெரிதாக தேவைப்படாது. ஆனால், மலைவேம்புக்குப் பராமரிப்பு மிகவும் அவசியம். தண்ணீர் மிகவும் முக்கியம். மழைக்காலம் தவிர்த்து மற்ற நாட்களில் மரம் ஒன்றுக்கு வாரம் 40 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மரங்கள் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியைக் கொடுக்கும். தகுந்த இடைவெளியில் இடுபொருள் மேலாண்மையும் அவசியம். மொத்ததில் நாட்டு வேம்பு மனதுக்கு உகந்தது. மலைவேம்பு வருமானத்துக்குச் சிறந்தது'' என்றார், கணேஷமூர்த்தி.

நம்பிக்கை தரும் நாமக்கல்!
நாமக்கல் மாவட்டத்தில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வரும், ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனத்தின் செயலாளர் தில்லை சிவக்குமார் பேசும்போது, ''நாட்டில் 33% வனப்பரப்பு இருக்க வேண்டும் எனச் சொல்கிறது வனச்சட்டம். ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் 16.4% காடுகள்தான் உள்ளன. இதை மனதில் கொண்டுதான் மாவட்ட நிர்வாகம் இதுவரை 16 லட்சம் மரக்கன்றுகளை பல்வேறு பொதுஇடங்களில் நட்டு, பராமரித்து வருகிறது. இன்னும் இந்த மரப்பயிர்களின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் தனியார் நிலங்களில் வனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அதன் அடிப்படையில் சத்தியமூர்த்தி போன்றோர் தங்களது பட்டா நிலங்களிலும் மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டம் 33% இலக்கை அடைந்து விடும்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

லட்சக்கணக்கில் பெருகிய அலையாத்தி..!

லட்சக்கணக்கில் பெருகிய அலையாத்தி..!

ஒரு ஆராய்ச்சியும்... ஆச்சரியமும்...
கரு. முத்து
சுற்றுச்சூழல்

தமிழகத்தில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற சுனாமி தாக்குதலை அடுத்து... 'அலையாத்திக் காடுகளைப் பெருக்க வேண்டும்’ என்கிற கோரிக்கை வலுவாக எழுந்தது. இன்றுவரையிலும் அதை அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால், இந்த சுனாமி தாக்குதலுக்கு முன்பாகவே, இம்மரங்களின் அருமையை உணர்ந்த ஒரு தனிமனுஷி, சீர்காழி பகுதி கடற்கரையோர கிராமத்தில் ஆயிரக்கணக்கில் அலையாத்தி மரங்களை நட்டு வைக்க... அதன் அருமையை உணர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் அலி உசேன், அந்த மரங்களை தொடர்ந்து நடவு செய்ய... இன்று லட்சக்கணக்கில் பெருகி நின்று... அப்பகுதியையே அலையாத்தி வனமாக மாற்றி வைத்திருக்கின்றன அந்த மரங்கள்!
ஆங்கிலத்தில் 'மேங்ரோவ்' என்றழைக்கப்படும் அலையாத்தி மரங்கள், பல நூறு ஆண்டுகளாக நம் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தன. குறிப்பாக, தமிழக கடற்கரையோர கிராமங்கள் பலவற்றிலும் இவை தழைத்திருந்தன. ஆனால், காலப்போக்கில் அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட.... பிச்சாவரம், முத்துப்பேட்டை போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய பகுதிகளில்தான் தற்போது எஞ்சியிருக்கின்றன. இந்தப் பகுதிகள் மட்டும்தான் 'சுனாமி' தாக்குதலின்போது தப்பிப் பிழைத்தன என்பது குறிப்பிடத்தக்கது!
இந்த உண்மையை முன்கூட்டியே அறிந்திருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி, தெய்வ. ஆஸ்டின் ஸ்டான்லி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மேங்ரோவ் காடுகள் பற்றிய ஆய்வுப் படிப்புக்காக சீர்காழிப் பகுதிக்கு வந்தபோதுதான் அந்த மரங்களை நட்டுவைத்தார்.
கடற்கரை கிராமங்களில் ஒன்றான பெருந்தோட்டம் கிராமத்தில்,  அலி உசேனுக்கு சொந்தமான இறால் பண்ணையில், அவருடைய அனுமதியைப் பெற்று, இறால் குட்டைகளின் கரைகளில் மரங்களை நடவு செய்தார். பின்னர், தன்னுடைய வெவ்வேறு பணிகளில் கவனம் செலுத்தியவர், தற்போது இவர், ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த மேங்ரோவ் காடுகள் மேலாண்மை ஆலோசகராக பர்மாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்த ஸ்டான்லி, தான் நடவு செய்த அலையாத்தி மரங்கள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பெருந்தோட்டத்துக்கு வந்திருந்தார். அங்கே தற்போது லட்சக்கணக்கில் மரங்கள் பெருகியிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவர், சந்தோஷ சங்கதியைப் பகிர்ந்து கொள்ள நமக்கு அழைப்பு வைத்தார். உடனடியாக புறப்பட்டு பெருந்தோட்டம் சென்ற நாமும், ஆச்சரியத்தில் மூழ்கினோம்!
''1995-ம் ஆண்டு சதுப்பு நிலக்காடுகளைப் பற்றி, குறிப்பாக... மேங்ரோவ் காடுகளைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டேன். அப்போது பிச்சாவரத்தில் இருந்து சில கன்றுகளை எடுத்து வந்து இங்கே நடவு செய்தேன். அதில் சில கன்றுகள் உயிர் பிழைத்தன. அந்த மண்ணில் அவை வளரும் என்பது தெரிந்ததும், தொடர்ந்து அந்தக் கன்றுகளை நடவு செய்ய ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட மூன்றாண்டுகளில் நூற்றுக்கணக்கான கன்றுகளை நடவு செய்தேன். அவற்றின் பலனைப் பார்த்துவிட்டு, அலி உசேனும் தொடர்ந்து நடவு செய்ய... தற்போது லட்சக்கணக்கில் மரங்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன. மொத்தம் ஆறுவகை மரங்கள் இங்குள்ளன.
பொதுவாக, இறால் பண்ணை அமைத்தால், சுற்றுச்சூழல் சீர் கெடும். நிலங்கள் வீணாகி விடும் என்பார்கள். 'அக்கருத்தை மாற்ற முடியுமா?’ என்று யோசித்துதான், இறால் பண்ணையில் ஆய்வைமேற்கொண்டேன். ஓராண்டிலேயே பலன்கள் தெரிய ஆரம்பித்தன. பொதுவாக, மழைக்காலங்களில் குட்டைகளின் கரைகள் கரைந்து, நீர் கசியத் தொடங்கும். ஆனால், மேங்ரோவ் மரக்கன்றுகள் வேர் பிடித்து வளர ஆரம்பித்த பிறகு கரைகள் உடையவில்லை. கசிவும் ஏற்படவில்லை.
குட்டைகளில் இருந்த அசுத்தங்களை மரங்கள் இழுத்துக் கொள்ள ஆரம்பித்தன. மரங்களின் நிழலில் இறால்களும் நன்கு வளர்ந்தன. பண்ணையில் உள்ள தண்ணீரை இக்குட்டைகளில் தேக்கி வைத்து, சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தோம்.
கடற்கரைகளில் இம்மரங்கள் இருந்தால்... கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கும் உதவுவதோடு... கடல் மாசுபடாமல், மீன்வளமும் பெருகுகிறது. இது என்னுடைய ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு'' என்று பெருமை பொங்கச் சொன்னார் ஆஸ்டின் ஸ்டான்லி.
தொடர்ந்த அலி உசேன், ''நாங்கள் கன்றுகளை நடவு செய்ய ஆரம்பித்தபோது பலரும், 'இது வீண் வேலை’ என்று சொன்னார்கள். ஆனால், எங்களது முறையான பராமரிப்பினால் இந்த 250 ஏக்கர் பண்ணையில் தற்போது ஒரு லட்சம் மேங்ரோவ் மரங்கள் உள்ளன. இதனால் கடலில் மீன்வளமும் பெருகியிருக்கிறது. இந்த மரங்களுடன் இறால் வளர்ப்பும் சேர்ந்து நடைபெறுவது இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான். இதற்காக இந்திய விவசாய கவுன்சில் எங்களுக்கு விருது கொடுத்திருக்கிறது. கொஞ்சம் அக்கறையோடு இம்மரங்களை வளர்த்து வருவதால்தான், இருபது வருடங்களாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் பண்ணையை நடத்தி வருகிறோம்.
ஆண்டுதோறும் பண்ணையின் கரைகளைப் பலப்படுத்த வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. மரங்கள் பெருகியிருப்பதால் பல வகையான பறவைகள் இங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்கின்றன. சுத்தமான காற்று கிடைக்கவும், இந்த மரங்கள் உதவுகின்றன'' என்று பெருமையோடு சொன்னார்.

புதையல் கொடுக்கும் பூவரசு

புதையல் கொடுக்கும் பூவரசு


புதையல் கொடுக்கும் பூவரசு !

ஏக்கருக்கு 1,200 மரங்கள்.
ஐந்தாம் ஆண்டு முதல் வருமானம்.
பராமரிப்புச் செலவு இல்லை.

இதய வடிவிலான இலைகள்... மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல்... குளிர்ந்தக் காற்று... இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் போத்துகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள்.
அதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால்... கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.
இப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு... 'நாட்டுத் தேக்கு' என்று புகழப்படும் அளவுக்கு, வலிமையான மரமும்கூட. அதனாலேயே... இந்த மரங்களை வெட்டி, தூண்கள், ஜன்னல்கள், கதவுகள் என பயன்படுத்துவது தொடர்கிறது.
தேக்கு, குமிழ் போன்ற மரங்களுக்கான தேவை இருப்பதால், அவற்றை புதிது புதிதாக அதிக அளவில் வளர்த்தெடுக்கிறார்கள். ஆனால், அதேபோல, பெரிய அளவில், பூவரசு மரத்தை புதிதாக உருவாக்கத் தவறிவிட்டதால், அவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம். இதன் மகத்துவத்தை அறிந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலானவர்கள் மட்டுமே பூவரசு வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்! அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், புலவன்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன்.
ஓர் அதிகாலை நேரத்தில், தோட்டம் தேடிச் சென்றபோது, அன்போடு வரவேற்ற மாரியப்பன், ''இப்போ என் தோட்டத்துல 25 பூவரசு மரங்கள் இருக்கு. எல்லாமே, இருபதுல இருந்து இருபத்தஞ்சு வயசுகுள்ளாற உள்ள மரங்கள். ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நல்லா வளந்த ஒரு மரத்தை வெட்டுவேன். ஆசாரிகளை வெச்சு, கட்டில், பீரோனு செய்து சுத்துவட்டாரத்துல வித்துடுவேன். தேக்கைவிட நல்ல நிறமா இருக்கும்கிறதால பூவரசுக்கு மரியாதை ஜாஸ்தி. இருபது, முப்பது வயசுருக்குற மரத்துல... ரெண்டு பீரோ (ஆறரையடி உயரம், நாலரையடி நீளம் இரண்டடி அகலம்) ஒரு கட்டில் (7 அடி நீளம் 5 அடி அகலம்) செய்யலாம். இந்த மரத்தை வளர்க்கறதும் ரொம்ப சுலபம்தான்'' என்றவர், பூவரசு மரத்தை சாகுபடி செய்யும் முறைகளை விளக்கினார். அவற்றை பாடமாக இங்கே தொகுத்திருக்கிறோம்.
போத்து நடவு !
'பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது. போத்துகளை, செங்குத்தாக நடவு செய்தால், மரம் வளர்ந்த பிறகு, நிறைய பொந்துகள் உருவாகும். அதனால் படுக்கை முறையில் பதியன் போட்டால், இந்த பிரச்னையைத் தவிர்க்கலாம்.
6 அடி நீளம், அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இதில் முக்கால் பங்கு மணலையும், காய்ந்த சாணத்தையும் போட்டு, 6 அடி நீளம் கொண்ட பூவரசம் போத்துகளை பதித்து, மண்ணால் மூடி, காற்றுப் போகாமல் மிதித்து, தண்ணீர் தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அடுத்த சில வாரங்களில், ஒரு போத்தில் இருந்து பல துளிர்கள் வெடித்து வந்திருக்கும். போத்தின் இரண்டு ஓரங்களிலும் உள்ள செழிப்பானத் துளிர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை கையால் ஒடித்து விட வேண்டும். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. இப்போது மரத்துக்கு மரம், வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி இருக்கும். இதுபோல் பதியன் போட்டால்... ஒரு ஏக்கர் நிலத்தில் 600 போத்துகளைப் பதியன் செய்யலாம். மொத்தம் 1,200 மரங்கள் உருவாகும்.
பராமரிப்பு தேவையில்லை !
நடவு செய்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மரங்களை கவாத்து செய்ய வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மரத்தை விட்டு, ஒரு மரத்தை வெட்டி விற்பனை செய்யலாம். இப்படி 600 மரங்களை வெட்டலாம். அடுத்து ஐந்து ஆண்டுகள் (நடவு செய்த 10-ம் ஆண்டில்) கழித்து ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்ற கணக்கில் 300 மரங்களை வெட்டலாம். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து (நடவு செய்த 15-ம் ஆண்டில்) மீதி மரங்கள் நன்கு பெருத்திருக்கும் அப்போது அவற்றை வெட்டலாம்.'
நிறைவாக வருமானம் பற்றி விவரித்த மாரியப்பன், ''அஞ்சாம் வருஷம் வெட்டுறப்போ ஒரு மரத்துக்கு ஆயிரம் ரூபாய் விலை கிடைக்கும். 600 மரங்கள் மூலமா 6 லட்ச ரூபாயும்; பத்தாம் வருஷம் வெட்டுறப்போ, மரத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம், 300 மரங்களுக்கு 9 லட்ச ரூபாயும்; 15-ம் வருஷத்துல மிச்சமிருக்குற 300 மரங்கள் மூலமா மரம்
5 ஆயிரம் ரூபாய் வீதம்  15 லட்ச ரூபாயும் வருமானமா கிடைக்கும். மொத்தத்துல
15 வருஷத்துல 30 லட்சம் ரூபாய் வருமானம் பார்த்துட முடியும்.
மதிப்புக்கூட்டினால் அதிக லாபம் !
மரமா விக்காம... நாமளே கட்டில், பீரோனு செஞ்சு விக்கிறப்போ கூடுதல் லாபம் கிடைக்கும். சாதாரணமா ஒரு பீரோ 30 ஆயிரம் ரூபாய்க்கும், கட்டில் 12 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகும். 20, 25 வருஷ மரத்துல ரெண்டு பீரோ, ஒரு கட்டில் செய்யலாம். இதன்படி பாக்கும்போது ஒரு மரத்துல இருந்தே,
72 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல, வெட்டுக் கூலி, அறுப்புக் கூலி, இழைப்புக் கூலி, ஆசாரிக் கூலி, தாழ்ப்பாள் மாதிரியான உதிரி சாமான்கள் எல்லாம் சேர்த்து 28 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவானாலும், ஒரு மரத்துல இருந்து 44 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்.
மரத்தை அறுத்து துண்டு போட்டு, இழைச்சும் விக்கலாம். இருபதுல இருந்து முப்பது வயசுள்ள மரத்துல சராசரியாக 25 கன அடிக்கு மரத்துண்டுகள் கிடைக்கும். ஒரு கன அடிக்கு சராசரியா 1,200 ரூபாய் விலை கிடைக்குது. ஒரு மரத்துல இருந்து செலவெல்லாம் போக,
22 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்'' என்ற மாரியப்பன் நிறைவாக,
வீழ்ந்தாலும் வளரும் !
''இந்த மரம் புயல் அடிச்சாகூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாஞ்சாலும் நிமித்திவிட்டா... திரும்பவும் வேகமா தழைச்சுடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமா இருந்தா, புயல்ல கீழ சாஞ்சுட்டா மறுபடியும் பிழைக்காது. ஒவ்வொரு வருஷமும் கவாத்து பண்ற கிளைகளை போத்தாவும் வித்துடலாம். அதுவும் நல்லா விற்பனையாகுது. பதியன் போடுறதுக்கும் வாங்கிக்கறாங்க.
விவசாயிங்க மனசு வெச்சாங்கனா... அதிகளவு பிராண வாயுவை உற்பத்தி பண்ற பூவரசு மரங்களை நடவு செஞ்சு சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, தங்களையும் வளமாக்கிக்க முடியும்'' என்றார், சந்தோஷமாக!
தொடர்புக்கு
மாரியப்பன், செல்போன்: 97881-88463.

தென்னைக்கு அருகில் நடும்போது கவனம் !  
தஞ்சாவூர் மாவட்டம், ஒதியடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வேதையனும் அதிக எண்ணிக்கையில் பூவரசு மரங்களை வளர்த்து வருகிறார்.
தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்த வேதையன், ''எனக்கு 10 ஏக்கர்ல தென்னந்தோப்பு இருக்கு. 15 வருசத் துக்கு முன்ன தோப்புல வேலி ஓரத்துலயெல்லாம் நாலடி இடைவெளியில ஐநூறு பூவரசு போத்துகளை செங்குத்தா நடவு செஞ்சேன். அதுல நானூறு மரங்கள் நல்லா வளந்துருந்துச்சு. பத்து வருஷம் கழிச்சு நூறு மரங்களை மட்டும் வெட்டி ஒரு மரம் 3 ஆயிரம் ரூபாய்னு வித்தேன்.
ஒரு சில இடங்கள்ல தென்னை மரத்துல இருந்து நாலடி தூரத்துலயே பூவரசு மரம் இருந்தது. அந்த இடத்துல எல்லாம், தென்னையில சரியா காய் காய்க்கல. அதனால, தென்னைக்குப் பக்கத்துல நடும்போது கவனமா இருக்கணும். குறைஞ்சது பத்தடிக்கு மேல இடைவெளி விடணும்'' என்கிறார், வேதையன்.
 யூரியாவுக்கு மாற்று பூவரசு இலைகள் !
பூவரசின் இலைகளையே அடியுரமாகப் பயன்படுத்தி வருகிறார் மாரியப்பன். அதைப் பற்றிப் பேசியவர்,
''ஒரு மரத்துல இருந்து வருசத்துக்கு குறைஞ்சபட்சம் 500 கிலோ இலை கிடைக்கும். இந்த இலைகள் ரொம்ப அருமையான உரம். இதுல தழைச்சத்து நிறைய இருக்கு. யூரியாவுக்கு பதிலா பூவரசு இலைகளத்தான் மூணு ஏக்கருக்கு அடியுரமா பயன்படுத்தி நெல் சாகுபடி பண்றேன்.
பசுமையான இலைகளை வயல்ல பரப்பி தண்ணீர் கட்டிட்டா, ரெண்டு மூணு நாள்ல மட்கி உரமாகிடும். பொதுவாவே, பூவரசு மரத்தடியில எப்பவுமே ஈரம் இருக்கும். அதுல சருகெல்லாம் விழுறதால தானாவே மண்புழுக்கள் வர ஆரம்பிச்சுடும். அதனால அந்த இடத்துலேயே பூவரசு சருகுகளை வெச்சு மண்புழு உரமும் தயாரிச்சுக்குறேன்'' என்று புதிய தொழில்நுட்பம் சொன்னார்.