சிறிய பரப்பு...அதிக மரங்கள்...பிரமிக்க வைக்கும் மர மகசூல் !
''சின்ன பரப்புல அதிகமான மரங்கள் வளர்த்தா, அதுங்களோட வளர்ச்சி சிறப்பா இருக்காதுனு சொல்லுவாங்க. ஆனா, என் நிலத்துல இந்த கருத்து பொய்யாகிடுச்சு. குறுகிய காலத்துலயே, எல்லா மரங்களுமே நல்ல செழிப்பா வளர்ந்திருக்கு'' என சிலாகிக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்!
தஞ்சாவூரில் புத்தக நிலையம் மற்றும் மருந்துக் கடை நடத்தி வரும் பட்டதாரியான சக்திவேல்... கூடவே விவசாயத்தையும் விடாது தொடர்கிறார். பகல் பொழுதொன்றில் தோட்டம் தேடிச் சென்றோம். இரண்டு வயதே உள்ள மகோகனி, குமிழ்தேக்கு, வேங்கை, செஞ்சந்தனம், ரோஸ்வுட், முள்ளில்லா மூங்கில் உள்ளிட்ட மரங்கள் வளமாக வளர்ந்து நிற்க... தோட்டத்தைச் சுற்றிலும் தென்னை, பனை, பூவரசு, வேம்பு, சிசு மரங்களும் அலங்கரித்து நின்ற காட்சியைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தோம்.
வேலியில் காய்க்குது வாழை !
''ரெண்டு வருஷத்துக்கு முன்ன வரை நெல் சாகுபடி செய்த நிலம்தான் இது. இப்ப செழிப்பான தோட்டமா காட்சி அளிக்கறதுக்கு காரணமே... முறையான திட்டமிடல்தான்'' என்று நம் வியப்பைக் களைத்த சக்திவேல், மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.
''மொத்தம் 6 ஏக்கர் நிலம் இருக்கு. இது வண்டல் மண் பூமி. முழுக்க ரசாயன முறையில நெல் விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். மரம் வளர்ப்புலயும், இயற்கை விவசாயத்துலயும் ஆர்வம் ஏற்பட்டதால, ரெண்டு ஏக்கர்ல மட்டும் மரங்கள் வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். ஏற்கெனவே இந்த ரெண்டு ஏக்கரை சுத்தி, வேலி ஓரத்துல 40 வயசுள்ள 50 பனை; 10-15 வயசுள்ள 100 பூவரசு, 25 வேம்பு;
3 வயசுள்ள 80 தென்னைனு இருக்குது. இப்போ 300 பூவன் வாழை மரங்களும் வேலியில இருக்கு.
பொதுவா வேலியோர மரங்களுக்கு மாட்டு எரு கூட, கொடுக்கறது இல்ல. வாழைக்கும் கூட அப்படித்தான். ஆனாலும்கூட, இந்த வாழை மரங்கள் பூச்சி, நோய்த் தாக்குதல் இல்லாம, திடகாத்திரமா வளருது. மடல்கள் நல்லா பரந்து விரிஞ்சு, எப்பவும் பசுமையாவே இருக்கு. இப்பத்தான் தார் போட்டு, முதல் தாம்பு அறுவடைக்கு வந்துச்சு. ஒரு தாருக்கு
225 காய்கள் வரை இருக்கு. பழங்கள் நல்ல சுவையா இருக்கு. இந்தப் பழங்கள் 15 நாட்கள் வரை கெட்டுப் போறதில்லை'' என்று ஆச்சரியம் பொங்கச் சொன்னவர், புதிதாக மரம் வளர்ப்பில் இறங்கியது பற்றி தொடர்ந்தார்.
2 ஏக்கரில் 2,620 மரங்கள் !
''ரெண்டு ஏக்கர்ல தேவையான அளவு குழி எடுத்து, 750 மகோகனி, 100 குமிழ்தேக்கு, 500 வேங்கை, 20 செஞ்சந்தனம், 500 ரோஸ்வுட், 750 முள்ளில்லா மூங்கில் மரங்கள்னு மொத்தமா சேர்த்து, 2 ஆயிரத்து 620 மரங்களை நடவு செஞ்சுருக்கேன். ஒவ்வொரு மரத்துக்கும் 6 அடி இடைவெளி விட்டு ஒரே வகையான மரங்கள் அடுத்தடுத்து இல்லாத மாதிரி நடவு செஞ்சுருக்கோம். அதிக எண்ணிக்கையில மரங்கள் இருக்கறதுனால, நிறைய இலை தழைகள் உதிர்ந்து, மண் வளமாகிக்கிட்டே இருக்கு. குறிப்பா, முள்ளில்லா மூங்கில்ல இருந்து அதிக அளவுல இலைகள் கிடைக்குது. இந்த மரங்களுக்கு இடையில வேற மரங்கள் வச்சோம்னா... சரியா வளராதுனும் சிலர் சொன்னாங்க. ஆனாலும் எல்லா மரங்களும் நல்லாதான் வளர்ந்துருக்கு.
12 அடி உயரம் !
முள்ளில்லா மூங்கில்ல பக்கவேர்கள் மட்டுமே இருக்கறதுனால, அது மண்ணுக்கு மேல் பகுதியில உள்ள சத்துகளை, உணவா எடுத்துக்குது. மற்ற வகை மரங்களுக்கு ஆணிவேர்கள் மட்டுமே அதிகமா இருக்கறதுனால, அந்த மரங்கள் மண்ணுக்கு கீழ உள்ள சத்துகளை உணவா எடுத்துக்குது. இங்க உள்ள எல்லா மரங்களுமே சுமார் 10 முதல் 12 அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கு. கடுமையான கோடையிலும் கூட, மரங்கள்ல கொஞ்சம் கூட வாட்டம் தெரியல. நடவு செஞ்சதுல இருந்து முதல் ஒரு வருடம் வரைக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தோம். பிறகு மாசத்துக்கு ஒரு தடவை கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். களைகளை நல்லா மண்டவிட்டு, மூணு மாசத்துக்கு ஒரு தடவை, குபேட்டா ஓட்டி, மண்ணுக்குள்ளயே புதைக்குறோம். இதனால, களைகள் நல்ல பசுந்தாள் உரமா மாறிடுது.
ஆறுமாத இடைவெளியில் உரம் !
ஆறு மாசத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்தையும் சுத்தி, தலா 5 கிலோ மாட்டு எரு போட்டுக்கிட்டு இருக்கோம். மூணு மாசத்துக்கு ஒரு தடவை பக்கக் கிளைகளை மட்டும் ஓடிச்சிவிட்டு கவாத்து பண்ணுவோம். அதனால, மரங்கள் நேரா வளருது. எதிர்காலத்துல மரங்கள் பெருத்துடுச்சுனா, இடைவெளி அதிகமா தேவைப்படும். மரங்களோட முதிர்வுக்கு ஏற்ப, வெவ்வேறு கால கட்டங்கள்ல... வெவ்வேறு வகையான மரங்களை வெட்டி விற்பனை பண்ணினோம்னா மிச்சம் இருக்குற மரங்களுக்குத் தேவையான இடைவெளி கிடைச்சுடும்'' என்ற தொழில்நுட்பங்களை விவரித்த சக்திவேல்... நிறைவாக,
''7-ம் வருஷம் முள்ளில்லா மூங்கில் குத்துகளில் சில மரங்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை அறுவடை செய்யலாம். 8-ம் ஆண்டு குமிழ்தேக்கையும், 15-ம் ஆண்டு மகோகனியையும், 23-ம் ஆண்டு வேங்கையையும், 30-ம் ஆண்டு செஞ்சந்தனம், ரோஸ்வுட் மரங்களையும் அறுவடை செய்யலாம்'' என்று அறுவடை பற்றிய தகவலோடு முடித்தார் மகிழ்ச்சியாக!
தொடர்புக்கு, சக்திவேல்,
செல்போன்: 99441-44888.
செல்போன்: 99441-44888.
No comments:
Post a Comment