
சாதனை
| கு.ராமகிருஷ்ணன் |
|
|
|
|
இயற்கைச் சூழலோடு, அழகான தோற்றத்துடன் அமைந்திருக்கின்றன அந்தப் பொதுக்கழிவறைகள். துளியும் துர்நாற்றம் இல்லாமல் சுகாதாரத்தோடு இருக்கும் அந்தக்
கழிவறைகளை நீங்கள் பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை.... மாறாக, பேரூராட்சி நிர்வாகமே உங்களுக்குக் காசு கொடுக்கிறது.
கேட்டதுமே மயக்கம் வருவது போலிருக் கிறதா...?
''ஆமாம், மயக்கம் வராம என்ன பண்ணும்...? பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் ஸ்டாண்ட் 'இலவச கழிப்பறை'னு போர்டை மாட்டிவெச்சிட்டு, உள்ள போனா கழுத்துல கத்தி வைக்காத குறையா காசை புடுங்கற இந்தக் காலத்துல... நமக்கு காசு கொடுக்கறாங்களா... யாருகிட்ட காது குத்தறீங்க..?'' என்று நீங்கள் கேட்பதும் நியாயம்தான்!

ஆனால், நாம் சொல்வது அத்தனையும் அக்மார்க் உண்மை என்பதையும் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். திருச்சி மாவட்டம், முசிறி பேரூராட்சி, சாலியார் தெருவுக்குப் போய்ப் பார்த்தால் உண்மை உங்களுக்கே விளங்கும்.
பெண்களுக்கு 7, ஆண்களுக்கு 7, வயதானவர் களுக்கு என தனியாக ஒன்று என்று மொத்தம் 15 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை பயன்படுத்தினால் ஒரு நபருக்கு 10 பைசா கட்டணம் தரப்படுகிறது. 10 பைசா சில்லரை புழக்கத்தில் இல்லாததால், ஒரு அட்டையில் குறித்துக் கொண்டு, குறிப்பிட்ட நாட்களுக்குச் சேர்த்து, மொத்தமாக கணக்கிட்டு கட்டணத்தைத் தருகிறார்கள். முசிறி பேரூராட்சி, 'வேஸ்ட்' மற்றும் 'ஸ்கோப்' ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்தக் கழிவறையை முசிறி பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
ஆனால், நீங்கள் வழக்கமாக பயன்படுத்தி வரும் கழிவறைகள் அல்ல இவை... உழவுக்குத் தேவையான உரத்தை உற்பத்தி செய்யும் கம்போஸ்ட் கழிவறைகள்! ஆம், இங்கே உற்பத்தியாகும் மனித சிறுநீர் மற்றும் மல உரம் பயிர்களுக்குத் தேவையான மிகச் சிறந்த உரம் என்பதுதான் விஷ யமே... இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இதை இலவச மாக வாங்கிச் சென்று பயன் படுத்துகின்றனர். சோதனை அடிப்படையில் உருவாக்கப் பட்டிருக்கும் இத்தகைய கழிப்பறைகளுக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மவுசு கிடைக்க ஆரம்பித்துள்ளது.
உண்டவன் உரம் பண்ணுவான்!
ஒரு விதத்தில் பார்த்தால் காலகாலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு விஷயம்தான் இது. ஆம், மனிதக் கழிவுகளும் மதிப்பு மிக்க உரம் என்பதை பலகாலமாக நம்மவர்கள் உணர்ந்துதான் வந்திருக்கிறார்கள். அதனால்தான், 'உண்டவன் உரம் பண்ணுவான்...' என்றொரு பழமொழியையே வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இன்றைய நவீன கழிப்பறைகள் உருவாகாத காலத்தில் மனிதர்களின் கழிப்பறை... வயல்வெளிகள்தான். கால ஓட்டத்தில் நாகரீகம் என்ற பெயரில் எல்லா விஷயங்களையும் நான்கு சுவர்களுக்குள் மனிதன் சுருக்கிக் கொள்ள ஆரம்பித்த பிறகு, எத்தனையோ நல்லது நடந்திருக்கிறது. ஆனால், அதைவிட அதிக அளவிலான நல்லவற்றை நாம் இழந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. இயற்கையான விஷயங்கள் பலவற்றுக்கும் நாகரீக சாயம் பூசி, இளக்காரப் பேச்சுக்களால் ஓரம் கட்டிவிட்டோம். இனியாவது அவற்றையெல்லாம் நாம் உணரவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில்தான் வந்துசேர்ந்திருக்கிறது இந்தக் கம்போஸ்ட் கழிவறை!
இந்தப் பூமியில் கழிவுகள் என்று ஏதுமில்லை... ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு என்பதுதான் உயிர்ச்சூழல் பன்மயத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதைத்தான் நிரூபிக்கிறது இந்தக் கம்போஸ்ட் கழிவறை.
முசிறி சாலியர் தெருவில் இருக்கும் கம்போஸ்ட் கழிவறை அருகே பெரிய பெரிய கேன்களில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சிறுநீரில் சிறு வாடைக் கூட இல்லை. இந்த சிறுநீர் உரத்தைப் பாய்ச்சி வளர்த்த மரம் செடி, கொடிகள் செழிப்பாகச் சிரிக்கின்றன. அருகில் உள்ள நெற்பயிர்களில் பசுமை பளீச்சிடுகிறது.
இத்தகையக் கழிவறைகளை கையில் எடுத்து, மக்களிடையே விழிப்பு உணர்வு ஊட்டும் வேலையைச் செய்துவருவது... 'ஸ்கோப்' என்ற தன்னார்வ நிறுவனம்தான். அதன் இயக்குநர் சுப்புராமன் (அலைபேசி 94431-67190), இந்தக் கம்போஸ்ட் கழிவறைகளைப் பற்றிக் கேட்டால்... பக்கம் பக்கமாக பேசுகிறார்.
அற்புத மந்திர பாத்திரம்!
''நம் நாட்டில் 70% கிராம மக்கள், நகர்ப்புறத்தைச் சேர்ந்த 50% குடிசை மக்கள், சிறுநீர் மற்றும் மலம் கழிக்க திறந்த வெளியையே பயன்படுத்துகிறார்கள். செப்டிக் டேங்க் கழிவறை வைத்திருக்கும் அனைவருமே காவிரி, தாமிரபரணி, வைகை என்று பெரிய நதிகளில் ஆரம்பித்து சின்னஞ்சிறு கால்வாய்கள் வரையிலான நீர் நிலைகளை அசுத்தப்படுத்துகின்றனர். பல இடங்களில் மனிதக் கழிவுகளை பூமிக்குள் செலுத்துவதால் நிலத்தடி நீராதாரமும் கெட்டுப்போகிறது. சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கொடிய நோய்களுக்கு மக்கள் பலியாகின்றனர். இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்த கம்போஸ்ட் கழிவறைகள்தான்.
அதுமட்டுமல்ல... ஒரே கல்லில் பல மாங்காய் கணக்காக பல பிரச்னைகளுக்கு தீர்வாக வந்திருக்கும் இந்தக் கழிவறைகள், நாட்டின் உரத் தேவையை குறைந்த செலவில் பெருமளவுக்கு தீர்த்து வைக்கும் ஓர் அற்புத மந்திர பாத்திரமாகவும் கிடைத்திருக்கிறது. சிறுநீரையும், மலத்தையும் தனித்தனியாகப் பிரித்து, முறையாகப் பயன்படுத்தினால் அது மிகச்சிறந்த உரம்'' என்று சொல்லும் சுப்புராமன்,
குறைந்த தண்ணீர், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், மனிதக் கழிவுகளை தரம் பிரித்து, உரமாக பயன்படுத்தும் வகையில் கம்போஸ்ட் கழிவறை களை உருவாக்கி சாதனை படைத்து வருவதற்காக 2006-ம் ஆண்டு, 'நிர்மல் கிராம் புரஸ்கார்' விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றிருக்கிறார்.
இவர் உருவாக்கியுள்ள இந்தக் கழிவறைகளைப் பார்க்க, லண்டன், ஜெர்மனி, நார்வே, நெதர்லாந்து, சுவீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் வந்துசென்றபடி உள்ளனர் என்பதே இது எத்தகைய சாதனை என்பதற்கு சாட்சி!
சிறுநீர் உரத்தில் சீரிய மகசூல்!
இந்த நவீன கழிவறையை, 'கம்போஸ்ட் கழிவறை' எனவும் 'சூ.மே.சு.' (சூழல் மேம்பாட்டு சுகாதார கழிவறை) எனவும் அழைக் கிறார் சுப்புராமன் தொடர்ந்து பேசுகிறார். ''சிறுநீர், மலம் மற்றும் கழுவும் நீர் இவைகள் ஒன்றாக கலப்பதால்தான் கொடிய கிருமிகள் உருவாகி, நோய்கள் ஏற்படுகின்றன. பொதுவாகச் சிறுநீரில் எந்த துர் நாற்றமுமே இருக்காது. அதோடு காற்றும் தண்ணீரும் கலப்பதால்தான் நாற்றம் வருகிறது. சிறுநீரில் உள்ள அமோனியாவை, காற்று வெளிக் கிளப்பி நாற்றத்தை உண்டாக்குகிறது. மனிதர்களின் சிறுநீரை சேகரித்து இருபது நாட்கள் வரை தண்ணீரும், காற்றும் கலக்காமல் பாதுகாத்து, அதன் பிறகு ஒரு லிட்டர் சிறுநீரோடு, பத்து லிட்டர்

தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். சிறுநீரின் கடினத்தன்மையை போக்கவே, தண்ணீர் கலக்கப்படுகிறது. சிறுநீர் உரத்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. பொதுவாக, ஒரு ஹெக்டேர் நெல் சாகுபடி செய்ய 326 கிலோ யூரியா, 312.5 கிலோ சூப்பர் பாஸ்பேட், 83.3 கிலோ பொட்டாஷ் பயன்படுத்துவது என்னுடைய வழக்கம். 4,500 கிலோ மகசூல் கிடைக்கும். ஆனால், சென்ற ஆண்டு ரசாயன உரங்களைப் பாதியாக குறைத்துவிட்டு, சிறுநீர் உரத்தை பயன்படுத்தினேன். ஒரு ஹெக்டேருக்கு 4,650 கிலோ மகசூல் கிடைத்தது. ரசாயன உரச்செலவு பாதியாக குறைந்ததோடு, 150 கிலோ மகசூலும் கூடுதலாகக் கிடைத்தது'' அனுபவப் பூர்வமாக வெற்றி கண்ட விஷயத்தைச் சொன்ன சுப்புராமன்,
''ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு உரம் கொடுக்க எவ்வளவு சிறுநீர் தேவை; அதில் எவ்வளவு தண்ணீர் கலக்க வேண்டும்; எப்பொழுது தெளிக்க வேண்டும்; ரசாயன உரங்களை முழுமையாக தவிர்த்து விட்டு, வெறும் சிறுநீர் உரம் மட்டுமே பயன்படுத்தினால் போதுமா... போன்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அதன் முடிவுகள் கிடைத்த பிறகு, இந்த உரங்களுக்கு பெரிய மரியாதை கிடைக்க ஆரம்பித்துவிடும்.
அந்த முடிவுகள் வருவது ஒருபுறமிருக்க... சிறுநீர் உரத்தை பயன்படுத்துவதால் எந்த தீங்கும் வந்துவிடாது. இதைப் பயன்படுத்தினால் பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதல் மட்டுப்படும் என்பதை என் அனுபவத்தின் மூலமே உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டேன்.
மட்கிவிட்டால் மண்புழு உரம் போலத்தான்!
சிறுநீர் மட்டுமல்ல மட்கிய மலமும் உரமாகப் பயன்படுகிறது. மனிதர்கள் தினமும் வெளியேற்றும் மலத்தில் இருக்கும் கொடிய நோய் பரப்பும் கிருமிகள் ஆறு மாதங்கள்

வரைதான் உயிருடன் இருக்கும். நாம் வெளியேற்றும் மலத்தில் 80% நீர் இருக்கிறது. நீரை உலர்த்திவிட்டு, நன்கு மக்கச் செய்தால் மனித மலத்திலிருந்து தரமான உரம் தயார். இந்த உரம், நம்முடைய நிலத்தின் மண்ணை வளமாக மாற்றும் தன்மையுடையது. மலமானது உரமாக மாறியதும், மண்புழு உரம்போல 'பொலபொல'ப்பான மண்ணாகத்தான் இருக்கும். இதை எந்தவித அருவருப்பும் இல்லாமல் பயன்படுத்தலாம். சொல்லப்போனால், மாடுகளின் மலமான சாணியைப் பயன்படுத்தி உரங்களைத் தயாரிக்கிறோம். அதேபோலத்தான் இதுவும். இதில் அருவருப்படைய எதுவுமே இல்லை.
மனித மலத்தில் இகோலி (Ecoli) என்ற கிருமியும், சல்மோனிலா (Salmonella) என்ற கிருமியும் இருக்கும். ஆனால், மட்கிய மல உரத்தை ஆய்வகங்களில் சோதனை செய்தபோது இந்தக் கிருமிகள் எதுவுமே இல்லை. இந்த உரத்தைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட வாழைப் பழத்தை சோதித்துப் பார்த்து எந்த கிருமிகளும் இல்லை என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல... இந்த உரத்தில் விளைந்த பழங்கள் சுவையான தாகவும், திரட்சியாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
என் வீட்டில் பத்து மாத வயதுடைய வாழை இருக்கிறது. இதற்கு சொட்டுநீர்ப் பாசனம் செய்துள்ளேன். 40 லிட்டர் சிறுநீர் உரத்தை, 400 லிட்டர் தண்ணீர் கலந்து இதற்கு பயன்படுத் தியிருக்கிறேன். நல்ல வளர்ச்சியுடன் காய்ப்பும் சிறப்பாக இருக்கிறது. இதேபோல் தென்னை, கொய்யா, அலங்காரச் செடிகளுக்கும் சிறுநீர் உரத்தை மட்டுமே பயன்படுத்துகிறேன்... விளைச்சல் நன்றாகவே இருக்கிறது.
இனி, கம்போஸ்ட் கழிப்பறைகள்தான்!
உதாரணத்துக்கு முப்பது கோடி மக்களின் சிறுநீரை முறையாகச் சேகரித்தால், ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள சிறுநீர் உரத்தைப் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் டன் உரம் கிடைக்கும். இனி வரும் காலங்களில் ஒவ்வொருவர் வீட்டிலும், பொது இடங்களிலும் இத்தகைய கம்போஸ்ட் கழிவறைகள் கட்ட வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தினாலே சுகாதாரம் மேம்படுவதோடு நாட்டின் உரத்தேவையில் பெரும்பங்கும் பூர்த்தியாகும். கழிவுகளை அகற்றுவதற்காக நாம் செலவிடும் பல கோடி ரூபாய் மிச்சமாகும். செப்டிக் முறை கழிப்பறை காரணமாக கெட்டுப்போய்க் கொண்டிருக்கும் நிலத்தடி நீரும் காப்பாற்றப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள செப்டிக்டேங்க் குடன் கூடிய கழிவறை ஒன்றை அமைப்பதற்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதைப் பயன்படுத்த அதிகளவு தண்ணீர் விரயமாவதுடன், மூன்று ஆண்டுகளிலேயே டேங்க் நிரம்பிவிடுகிறது. இதனைச் சுத்தப்படுத்த, 1500 ரூபாய் வரை செலவாவதுடன் இந்தக் கழிவுகளை கண்ட இடங்களிலும் கொட்டுவதால், நிலம், நீர் காற்று அனைத்துமே மாசுபட்டு கொடிய நோய்கள் பரவுகின்றன. இதிலிருந்து விடுபடவும்... இந்தியாவில் சுற்றுச்சூழல் கேடுகளை உருவாக்கி வரும் 17 ரசாயன உரத் தொழிற்சாலைகளை மூடவும்... நஞ்சில்லா உணவை பெறவும்... உடன டியாக, நாடு முழுவதும் கம்போஸ்ட் கழிவறைகள் உருவாக்கப்பட வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லி முடித்தார் சுப்புராமன்.
விருது வழங்கி கௌரவித்திருப்பதன் மூலம் இவருடைய சாதனையை அங்கீகரித்திருக்கும் மத்திய அரசு, நாட்டின் நலனுக்காக மேற்கொண்டு இவர் சொல்லும் விஷயங்களுக்கும் செவி மடுத்தால்தான் அந்த விருதுக்கே மரியாதை... அதைச் செய்யுமா?
 |
ஓர் இடத்தில் 5.6 அடி நீளம், 4.4 அடி அகலம், 2 அடி உயரம் கொண்ட ஓர் அறையை தரைப்பகுதியின் மேற்புறம் அமைக்க வேண்டும். இது உரம் தயாராகும் அறை. இந்த அறையின் மேற்புறம் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். அறையின் நடுவில் 2 அடி உயரம் கொண்ட ஒரு தடுப்புச் சுவர் வைத்து, இரண்டு அறைகளுக்கும் காற்று, சூரிய ஒளி செல்லுமாறு பொதுவானதொரு குழாயை அமைக்க வேண்டும். இந்த குழாய் கருப்பு நிறத்தில் இருந்தால் மிகவும் நல்லது. கருப்பு நிறம் வெப்பத்தை இழுத்து அறைக்குள் செலுத்துவதால், கழிவுகளில் உள்ள நீர் விரைவாக உலர்ந்து, மக்குவதற்கு வசதியாக இருக்கும். இரண்டு அறைகளின் பின்புறத்தில் உள்ள சுவர்களிலும் சிறிய அளவில் வெற்றிடம் அமைத்து, அதில் சிமென்ட் பலகையைப் பொருத்தவேண்டும். இந்தப் பலகையை ஆறுமாதத்துக்கு ஒரு தரம் பிரித்து எடுக்கும்படி வைக்கவேண்டும். இதற்கு பதிலாக கருப்பு நிற ஃபைபர் பலகையையும் பொருத்தலாம். சூரிய ஒளியும், வெப்பமும் இதன் வழியாக உள்ளே செல்வதால், மலம் மிக எளிதில் உலர்ந்து மக்கிவிடும். இந்த வழியாகத்தான் அறையில் உள்ள உரத்தை வெளியில் எடுக்கவேண்டும்.
உரம் தயாராகும் அறைக்கும் மேற்புறத்தில்தான் கழிவறை. வழக்கம் போல அல்லாமல், அருகருகே இரண்டு கோப்பைகள் அமைக்கப்பட வேண்டும். இதில் ஒன்றை ஒரு வருடம் பயன்படுத்திவிட்டு, அடுத்த ஒரு வருடம் அதை பயன்படுத்தாமல் மற்றொன்றைப் பயன்படுத்தவேண்டும். சுழற்சி முறையில் இப்படி பயன்படுத்தினால், இடைப்பட்ட காலத்தில் மலம் மக்கி உரமாக மாறும். ஆனால், ஆறு மாதத்திலேயே உரத்தை எடுத்துப் பயன்படுத்தலாம்.
இங்கே அமைக்கப்படும் கோப்பைகள் தற்போது நடைமுறையில் இருப்பதைப் போல் அல்லாமல், மலம் கழிப்பதற்கு ஒரு குழி, சிறுநீர் செல்வதற்கு ஏதுவாக முன்புறம் ஒரு துவாரம், கழுவும் நீர் தனியாக செல்வதற்கு பின்புறம் ஒரு துவாரம் என்று புதுவிதமாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு துவாரங்களிலும் தனித்தனியாக குழாய் அமைத்து மண்ணில் புதைக்கப்பட்ட பானைகளில் நீரைச் சேகரிக்க வேண்டும். இரண்டு பானைகளிலுமே சிறுசிறு துவாரங்கள் இருக்க வேண்டும். இதில் சேகரமாகும் சிறுநீர் மற்றும் கழிவுநீர் ஆகியவை அத்துவாரங்களின் வழியாக வெளியேறி தோட்டத்துக்குப் போய்ச்சேரும். இத்தகைய கழிவறை அமைக்கும்போது கண்டிப்பாக தோட்டம் இருக்கவேண்டும். பொதுஇடங்கள் என்றால், பானைகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் கேன்கள் அமைத்துச் சேகரித்து, எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். பானைகளாக இருந்தாலும், பிளாஸ்டிக் கேன்களாக இருந்தாலும் கண்டிப்பாக எப்பொழுதும் மூடியே இருக்கவேண்டும்.
|
|
 |
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வேஸ்ட் (Waste) என்ற நிறுவனம், ஆரோ அன்னம்  நிதி நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடனும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் உதவியுடனும் பல இடங்களில் இத்தகைய கழிப்பறைகளை கட்டித் தந்து வருகிறது 'ஸ்கோப்'. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் நாகப்பட்டினம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் இத்தகைய கழிப்பறைகளை அமைத்திருக்கிறது இந்த அமைப்பு.
முசிறி, காளியாப்பாளையத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு கம்போஸ்ட் கழிவறை கட்ட முயற்சித்தபோது மக்கள் யாரும் முன்வரவில்லையாம். அரசு உதவியுடன் இலவசமாகக் கட்டித் தருகிறோம் என்றபோதும் மறுத்திருக்கிறார்கள். மங்கலத்தம்மாள் என்பவர் மட்டும் தைரியமாக ஒப்புக்கொள்ள, தமிழ்நாட்டின் முதல் கம்போஸ்ட் கழிவறை அவருடைய வீட்டில் உருவாகியிருக்கிறது. இப்போது அவரின் வீட்டுத் தோட்டத்தில் எலுமிச்சை, சீதா, நாரத்தை, வாழை, முருங்கை என வளமாக வளர்ந்து நிற்கின்றன மனிதக் கழிவு உரங்களின் புண்ணியத்தில்!
இந்தத் திட்டத்தை தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக இருந்த சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ். தொடங்கி வைத்திருக்கிறார். இந்த கழிவறையின் உர அறை முழுவதுமாக நிரம்பி, மூடப்பட்டு 9 மாதங்களுக்குப் பிறகு, திறக்கப்பட்ட போது, பொதுமக்கள்... அரசு ஊழியர்கள் உட்பட அனைவரும் அருவருப்புடன் தூரத்தில் ஒதுங்கி நின்றுகொண்டார்களாம். ஆனால், சாந்த ஷீலா நாயரோ... உர அறையை தானே திறந்து, உள்ளே இருந்து மக்கிய உரத்தை கையில் எடுத்து அனைவரிடமும் காட்டியிருக்கிறார். சிறு துர்நாற்றமோ... ஈரத் தன்மையோ அதில் இல்லை. அதன் பிறகுதான் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு, தற்பொழுது அந்தக் கிராமத்தில் 18 கம்போஸ்ட் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, திருச்சி, காவிரிக் கரையில் உள்ள செவந்திலிங்கபுரம் கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலான கழிப்பறைகள் கட்டப்பட்டு, நாட்டிலேயே 100 விழுக்காடு சூழல் மேம்பாட்டு சுகாதார கிராமமாக அது மாறிவருகிறது.
இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டிவரும் தற்போதைய திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சவுண்டையா, தன் ஆளுகைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இத்தகைய கழிவறைகளை உருவாக்க முயற்சி எடுத்து வருகிறாராம்.
|
|
 |
கழிவறைக்குள்ளே மழைநீர் விழாத கூரை அவசியம். மலம் கழித்த உடனே, அது சேகரிக்கப்படும் குழியில் மரத்தூள் அல்லது சாம்பல் அல்லது மண் அல்லது சுண்ணாம்புத் தூள் சுமார் இரண்டு கரண்டி அளவு போட வேண்டும். இதற்குள் சிறுநீரோ... தண்ணீரோ சிறிதளவும் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். மலம் கழிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பிளாஸ்டிக் மூடியால் மூடி வைத்திருக்க வேண்டும்.
அங்கேயே கழுவக் கூடாது.. அதற்கென உள்ள பகுதியில்தான் கழுவ வேண்டும். கம்போஸ்ட் கழிவறையின் உள்ள கண்டிப்பாக தண்ணீர் வாளியோ அல்லது தண்ணீர் குழாயோ இருக்கக் கூடாது. வெளியில் இருந்துதான் ஒவ்வொரு தடவையும் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
|
|
No comments:
Post a Comment