Wednesday, 17 September 2014

தென்னைக்கு இடையில் விரால்...

தென்னைக்கு இடையில் விரால்...
50 சென்ட் குளத்தில் 6 லட்சம் லாபம்!
என். சுவாமிநாதன் படங்கள் எல். ராஜேந்திரன்
ஆறாம் ஆண்டு சிறப்பிதழ்
மீன்வளம்
 பளிச்... பளிச்...
10 மாதங்களில் அறுவடை.
ஒரு மீன் முக்கால் கிலோ.
ஒரு கிலோ 250 ரூபாய்.
விவசாயத்தோடு... ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால், விவசாயிகளுக்கு என்றைக்குமே தோல்வி இல்லை. இதை நிரூபிக்கும் வகையில், தென்னந்தோப்புக்கு நடுவே விரால் மீன்களை வளர்த்து வருகிறார்கள், நண்பர்களான மாரிமுத்து, செல்லப்பாண்டியன்!
திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்றாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சென்றால், ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வீரகளப்பெருஞ்செல்வி கிராமம். திரும்பியப் பக்கமெல்லாம் நிமிர்ந்து நிற்கும் வாழை மரங்கள், அந்த ஊரின் வளமையைச் சொல்லாமல் சொல்கின்றன. இக்கிராமத்தில்தான் இந்த நண்பர்களின் மீன் பண்ணை இருக்கிறது.  
பசுமை விகடன்தான் வாத்தியார்!
''முதல் புத்தகம் வெளியான நாளிலிருந்தே நான், தீவிரமான 'பசுமை விகடன்’ வாசகர். அத்தனைப் புத்தகங்களையும் பத்திரமா சேத்து வெச்சுருக்கேன். அப்பப்போ விவசாயத்துல வர்ற சந்தேகங்களைத் தீர்த்து வெக்கிற வாத்தியார், பசுமை விகடன்தான். இப்போ என்னோட நண்பர் செல்லப்பாண்டியன், வெளியூர் போயிருக்காரு. வரும் போது, மறக்காம பசுமை விகடன் வாங்கிட்டு வந்துடுவாரு'' என்று உற்சாகமாக ஆரம்பித்த மாரிமுத்து,
சிறிய இடமே போதும் !
''ஒரு ஏக்கர்ல அம்பை பதினாறு ரக நெல்லும், ஒரு ஏக்கர்ல ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கோம். இது போக... அரை ஏக்கர்ல 21 தென்னை இருக்கு. எல்லாம் ஏழு வயசான மரங்கள். நடவு செய்யும்போதே 25 அடி இடைவெளி கொடுத்திருந்தோம்.
'6 சென்ட் குளம்... 10 மாதம்... 30 ஆயிரம்! விறு விறு லாபம் தரும் விரால் மீன்!’னு சமீபத்துல பசுமை விகடன்ல (10.11.10 தேதியிட்ட இதழ்) ஒரு கட்டுரை வந்திருந்துச்சு. அதைப் படிச்சதும்தான், 'சின்ன இடத்துலேயே இவ்வளவு லாபம் கிடைக்கும்போது... அரை ஏக்கர்ல இருக்கற தென்னைக்கு இடையில ஏன் விரால் மீன்கள வளர்க்கக் கூடாது?’னு தோணுச்சு. நண்பர் செல்லப்பாண்டியன்கிட்ட  சொன்னேன். அவரும் இதுல ஆர்வமானதும்... ரெண்டு பேரும் சேர்ந்து விரால் வளர்க்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.
சேவியர் கல்லூரியோட நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்துக்குப் போய், விரால் மீன் வளர்ப்புப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, உடனடியா வளர்க்க ஆரம்பிச்சுட்டோம். இதோ... பத்து மாசம் ஓடிப் போயிடுச்சு. மீனெல்லாம் விற்பனைக்குத் தயாரா இருக்கு'' என்றபடியே ஒரு மீனைப் பிடித்துக் காட்டிவிட்டு, விரால் மீன் வளர்ப்பு முறைகளை அடுக்க ஆரம்பித்தார், மாரிமுத்து.
நான்கடி உயரத்துக்குத் தண்ணீர் !
''தென்னைக்கு இடையில, 150 அடி நீளம், 18 அடி அகலம், 5 அடி ஆழத்துல தனித்தனியா ரெண்டு குளங்கள் வெட்டியிருக்கோம். எங்க தோட்டம் முழுக்கவே களிமண் பூமிங்கிறதால வண்டல் கொண்டு வந்து போட வேண்டிய அவசியமில்லாமப் போயிடுச்சு.
நாலடி உயரத்துக்குத் தண்ணீர் நிறுத்தி... ஸ்ரீவைகுண்டம் அணையில இருந்து ஒரு மாச வயசுள்ள விரால் குஞ்சுகளை வாங்கி விட்டோம். ஒரு குளத்துக்கு ஐயாயிரம் குஞ்சுகள்னு ரெண்டு குளத்துலயும் பத்தாயிரம் குஞ்சுகள்.  
நிழல் கொடுக்க தாமரை !
மீன் குஞ்சுகள, பறவைகள்கிட்ட இருந்து காப்பாத்தறதுக்காக குளத்துக்கு மேல வலையைக் கட்டியிருக்கோம். தென்னை மரங்களோட நிழல் கிடைக்கறதால, மீன்களுக்கு வெயிலோட பாதிப்பு அதிகளவுல இருக்காது. கூடுதல் பாதுகாப்புக்கு, தாமரையையும் படர விட்டிருக்கோம்.
கொழுக்க வைக்கும் கொழிஞ்சி !
ரெண்டு மாச வயசு வரைக்கும், ரெண்டு குளத்துல இருக்கற மீனுகளுக்கும் சேர்த்து, ஒரு நாளைக்கு மூணு கிலோ கடலைப்புண்ணாக்கு போட்டோம். இதை ரெண்டா பிரிச்சு... காலையிலயும் சாயங்காலமும் போடலாம். மூணாவது மாசத்துக்கு மேல கொழிஞ்சி இலையை வெட்டி, சின்னச்சின்னக் கட்டுகளா கட்டி குளத்துக்குள்ள போட்டோம். அது தண்ணியில அழுகினதும், அதிலிருந்து நிறைய புழுக்கள் உருவாகும். அதை மீன்கள் நல்லா சாப்பிட்டு கொழுத்துடுச்சு. ரெண்டு குளத்துக்கும் சேர்த்து, ஒரு மாசத்துக்கு ஒரு டன் கொழிஞ்சி இலை தேவைப்பட்டுச்சு.
ஆறு மாதத்துக்கு மேல் கோழிக்கழிவு !
ஆறாவது மாசத்துக்கு மேல மீன்களுக்குக் கோழிக்கழிவுதான் தீவனம். கோழிக்குடல், கறினு கறிக்கடையில் வீணாகுற கழிவுகளை வாங்கிட்டு வந்து, வேக வெச்சு குளத்துக்குள்ள அங்கங்க போட்டுடுவோம். ரெண்டு குளத்துக்கும் சேத்து ஒரு நாளைக்கு நாப்பது கிலோ கோழிக்கழிவு போடுறோம். அதனால மீனுங்க நல்ல எடைக்கு வந்திருக்கு.
பற்றாக்குறைக்கு ஜிலேபி மீன்கள் !
1,000 விராலுக்கு 25 ஜிலேபி மீன் அப்படிங்கற கணக்குலயும் மீன்கள குளத்துல விட்டுருக்கோம். இந்த ஜிலேபி மீன்கள் அடிக்கடி குஞ்சு பொரிச்சுட்டே இருக்கும். நாம கொடுக்குற உணவு பத்தாதப்போ... இந்தக் குஞ்சுகள விரால் மீன்கள் பிடிச்சு சாப்பிட்டுக்கும்.
நோய்கள் தாக்காது !
விரால் மீனைப் பெரும்பாலும் எந்த நோயும் தாக்குறதில்லை. எப்பயாவது அம்மை மாதிரியான கொப்பளம் வரும். அந்த சமயத்துல மஞ்சளையும், வேப்பிலையையும் அரைச்சு தேங்காய் எண்ணெயில குழைச்சுத் தடவினா சரியாகிடும். வயலுக்கான பாசன நீர், பம்ப் செட்ல இருந்து முதல்ல மீன் குளத்துலதான் விழும். அதுக்குப் பிறகுதான்... வயலுக்குப் பாயும். அதனால இந்தத் தண்ணியே வயலுக்கு நல்ல உரமாயிடுது'' என்ற மாரியப்பன், நிறைவாக விற்பனை வாய்ப்புகள் பற்றிச் சொன்னார்.
தேடி வரும் சந்தை வாய்ப்பு !
''மீனைப் பிடிச்சு, சோதனைக்காக எடை போட்டுப் பார்த்தப்போ... குறைஞ்சபட்சமா முக்கால் கிலோவும் அதிகபட்சமா ஒண்ணே கால் கிலோ வரைக்கும் இருந்துச்சு.
10 ஆயிரம் குஞ்சுகள் விட்டதுல... இப்போ, '8 ஆயிரம் மீன் வரைக்கும் குளத்துக்குள்ள இருக்கும்’னு நினைக்கிறோம். பாதிக்குப் பாதி போனாலும், எப்படியும் 5 ஆயிரம் மீனுக்குக் குறையாது. தமிழ்நாட்டுல, தேவையான அளவுக்கு விரால் மீன் உற்பத்தி இல்லாததால, வியாபாரிகளே பண்ணைக்குத் தேடி வந்து கேட்டுக்கிட்டிருக்காங்க.
ஒரு மீன், முக்கால் கிலோனு வெச்சுக்கிட்டாலே, பிடிக்கிறப்போ மொத்தமா, 3 ஆயிரத்து 750 கிலோ மீன் கிடைக்கும். மொத்த விலையில ஒரு கிலோ 250 ரூபாய்னு போகுது. அதன்படி பார்த்தா, ரெண்டு குளத்துலயும் இருக்கற மீன்கள் மூலமா, 9 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
செலவெல்லாம் போக, எப்படி பாத்தாலும் ஆறு லட்ச ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைக்கும். இந்த லாபம் பசுமை விகடன் எங்களுக்குக் கொடுத்த பரிசு' என்றபடி நன்றிப் பெருக்கோடு விடை கொடுத்தார், மாரிமுத்து.
தொடர்புக்கு,
மாரிமுத்து,
செல்போன்: 98437-22112.
 

Monday, 15 September 2014

மொட்டை மாடியில் ஆர்கானிக் காய்கறி தோட்டம்

மொட்டை மாடியில் ஆர்கானிக் காய்கறி தோட்டம்

இன்றைக்கு இருக்கும் விலைவாசியில் சுமார் குழந்தைகள் உட்பட நான்கு நபர்கள் இருக்கும் குடும்பத்துக்கு சராசரியாக ரூ.40-50 க்கு காய்கறி வாங்க வேண்டும். எப்படி பார்த்தாலும் மாதத்துக்கு ரூ.1500/- செலவாகிறது. இவ்விதம் வாங்கும் காய்கள், பூச்சி கொல்லி மருந்து தெளித்து வளர்க்கப்பட்ட செடிகளிலிருந்து கிடைப்பவை. அதன் நச்சு தன்மை காய்களிலும் இருக்கும். எவ்வித ரசாயனப்பொருளும் உபயோகிக்காமல் இயற்கை முறையிலேயே நமக்கு தேவையான காய்களை ஏன் நாம் உற்பத்தி செய்யக்கூடாது? அதற்கு வீட்டில் தோட்டம் போட இடம் வேண்டும் என கவலைப்படவேண்டாம். இருக்கவே இருக்கிறது மொட்டை மாடி!

பிளாஸ்டிக் கோணிகள் அல்லது பிளாஸ்டிக் கேன் இவற்றை செடி வளர்க்க பயன்படுத்தலாம். மினரல் வாட்டர் பாட்டிலிலின் கீழ் பக்கம் ஊசியால் சிறிய துளை போட்டு அதில் நீர் நிரப்பி, செடியின் மூட்டில் வைப்பதன் மூலம் சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் ஊற்றலாம். தண்ணீர் செலவு குறைவு.

மிளாகாய், தக்காளி, கத்தரி, வெண்டை, முட்டைகோஸ், காலிஃப்ளவர், அவரை, பாகற்காய், காராமணி(தட்டப்பயறு) பீக்கங்காய், புடலங்காய், சுரைக்காய், வெங்காயம் போன்ற எல்லா காய்களையும் உற்பத்தி செய்யலாம்.

சில செடிகளின் விதைகளை நேரடியாக விதைக்க(ஊன்றுதல்) வேண்டும். உதாரணம் வெண்டை, அவரை, முட்டைகோஸ். சிலவற்றை விதைத்து பின் நாற்றாக வளர்ந்த பின் தனித்தனியாக நடவு செய்ய வேண்டும். உதாரணம் கத்தரி, மிளகாய், தக்காளி.

தேவையான பொருட்கள்

1நாற்றுக்கள் தயார் செய்ய: குழித்தட்டு (Multi Cell Tray) & பிளாஸ்டிக் டிரே(Plastic Tray)
   

பிளாஸ்டிக் டிரே

குழித்தட்டுகள் செடி மற்றும் விதைகள் விற்கும் நர்சரியில் கிடைக்கும். இது நம் ரெஃப்பிரிஜியேட்டரில் ஐஸ் கியூப்புக்கு உள்ள தட்டை போலவே இருக்கும். இதற்கு பதில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையில் கிடைக்கும் டிரேயை உபயோகப்படுத்தலாம். ஆனால் இவை 5அங்குல ஆழம்(Depth)) உள்ளதாக இருக்க வேண்டும். சாதாரணமாக 1 /12 அடிக்கு 1 1/4 போன்ற சைஸ்களில் கிடைக்கும். தேவையான சைஸ் பார்த்து வாங்கலாம்.
2செடி வளர்க்க:  பிளாஸ்டிக் கோணிகள் / பெரிய பிளாஸ்டிக் கேன்
செடியை வளர்க்க பிளாஸ்டிக் கோணியை பயன்படுத்தலாம். இப்பொழுதெல்லாம் அரிசியிலிருந்து ரசாயன பொருட்கள் வரை எல்லாவற்றையும்  சணல் கோணிகளுக்கு பதிலாக பேக் செய்ய கம்பெனிகள் இந்த பிளாஸ்டிக் கோணிகளைத்தான் உபயோகிக்கிறது. எனவே இவற்றை பழைய புட்டி கடையில் தேவையான அளவிற்கு மலிவாக வாங்கலாம்.

உதாரணத்திற்கு 2 அடி அகலமும் 3 அடி உயரமும் உள்ள கோணியை எடுத்துக்கொள்வோம். கோணியின் வாய் பகுதியை உட்புறமாக அடிப்புறத்தை தொடுமாறு  மடக்க வேண்டும். இப்பொழுது கோணியின் உயரம் 1 1/2 அடியாக ஆகிவிடும். அதன் சுற்றுப்பகுதி இரண்டு லேயர் உள்ளதாக ஆகிவிடும்.  இதனுள் செடிவளர்க்க தேவையான மண்ணை நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்பதை தவிற்க  கோணியின் பக்க வாட்டில், கீழ் பக்கமாக கனமான ஊசியால் ஒரு சில துவாரங்களை போடவேண்டும்.


பிளாஸ்டிக் கோணி

அல்லது பெரிய பிளாஸ்டிக் கேன்களை பயன்படுத்தலாம்.இவை பல வருடங்கள் உழைக்கும். படத்தில் காட்டியபடி பெரிய கேன்களை எடுத்து இரண்டாக ஹாக்சா பிளேடினால் அறுத்தால் இரண்டு தொட்டிகள் கிடைக்கும். அவற்றின் கீழ் பக்கம் தண்ணீர் வடிய துளையை போடவேண்டும். அதன் பின் இதில் மண்ணை நிரப்பி செடி வளர்க்கலாம்.




3. செடி வளக்க தேவையான மண்:  
 தோட்ட மண், சாண தூள், மக்கிய கம்போஸ்ட் உரம், மணல். இவை நான்கையும் சம அளவில்(1:1:1:1) கலந்து மண் கலவையை தேவையான அளவிற்கு  தயார் செய்து கொள்ள வேண்டும். இதில் கல், செங்கல் கட்டி, சிமிண்ட் கலவைகள், செடி, களைகள் இவை இல்லாதவாறு சுத்தம் செய்து உதிரியாக ஆக்க வேண்டும்.


காய்ந்த சாணத்தூள், மக்கிய கம்போஸ்ட் உரம் இல்லை என்றால் மண்புழு உரத்தை அதற்கு பதிலாக உபயோகிக்கலாம்.

4.  நீர் பாசனம்:  காலி ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில்கள்

நாம் வளர்க்கும் செடிகளுக்கு சொட்டு நீர் பாசன முறையில் தாண்ணீர் விட்டால் தண்ணீர் வீனாகாது. காலியான மினரல் வாட்டர் பாட்டில்களின் அடிப்புறம் படத்தில் காட்டியபடி ஊசியால் ஒரு சிறய துளையை போட்டு அதில் தண்ணீரை நிரப்பி செடியின் மூட்டில் வைத்து விட்டால் தண்ணீர் சொட்டு சொட்டாக செல்லும்.  

நமக்கு தேவையான காய்கறி செடியின் தரமான் விதைகளை தமிழ் நாடு அரசு தோட்டக்கலை துறையிடமிருந்தும், விவசாய பல்கலைகழகத்திடமிருந்தும் பெறலாம். வீட்டு காய்கறி தோட்டத்திற்கான விதை பாக்கெட்டுகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. பாக்கெட்டின் விலை ரூ.15 அல்லது 20 இருக்கும். இவர்களிடம் வாங்கும் விதைகள் தரமானதாக இருக்கும். அல்லது தனியார் நர்சரியிலிருந்தும் வாங்கலாம்.

வீட்டு தோட்டம் பின்பற்ற வேண்டியவை

வீட்டுக்கழிவு நீர் சுத்திகரிப்பு:

ஒரு பிளாஸ்டிக் கேன் அல்லது ஏதேனும் டிரம் போன்ற ஒன்று எடுத்துக்கொண்டு, அதன் அடியில் நீர் வெளியேற ஒட்டை இட்டுக்கொள்ளவும் ,பின் அதில் முறையே சம அளவில் மணல், கருங்கல் ஜல்லி, செங்கல் ஜல்லி என நிரப்பி நிரப்பிக்கொள்ளவும் பின் அதனனுடன் விறகு எரித்த மரக்கரி துண்டுகளையும் சுமார் ஒரு கிலோ அளவுக்கு சேர்த்துக்கொள்ளவும்.

இந்த கலவை அனைத்தும் முக்கால் அல்லது பாதியளவே நிரப்ப வேண்டும்,அப்போது தான் நீரீனை பிடித்து வடிக்கட்ட டிரம்முக்கு நேரம் கிடைக்கும் :-))

இதில் ஏன் மரக்கரி சேர்க்கப்படுகிறது என்றால் அது ஆக்டிவேட்டட் கார்பன் (activated carbon)போன்று இயல்பாகவே செயல்படும். நாம் குடிக்க பயன்ப்படுத்தும் நீர் சுத்திகரிப்பு எந்திரங்களிலும் ஒரு ஆக்டிவேட்டட் கார்பன் பில்டர் இருக்கும்.

இது நீரில் உள்ள வேதிப்பொருள்களை கிரகித்துக்கொள்ளும் தன்மை உடையது.நாம் ஆக்டிவேட்டட் கார்பன் என்றெல்லாம் செலவழிக்காமல் நேரடியாக இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருளான மரக்கரியைப்பயன்ப்படுத்திக்கொள்கிறோம் அவ்வளவு தான்.

வீட்டு உபயோக கழிவு நீரில் வழக்கமாக இருக்கும் சோப், ஷாம்பு, பாத்திரம் துலக்கும் சோப்பு, எண்ணை ,உணவு துணுக்கு என அனைத்தும் இந்த சுத்திகரிப்பு முறையில் 90% நீக்கப்பட்டு ஓரளவு இயல்பான நீர்க்கிடைக்கும்.

வீட்டில் தொழு உரம் தயாரிக்கும் முறை:

வீட்டை சுற்றி கொஞ்சம் இடம் இருந்தால் அதில் குறைந்தது ஒன்றுக்கு ஒன்று என்ற அளவிலாவது குழி வெட்டி ,தாவர, உணவு கழிவுகளை சேமித்து உரமாக்கலாம்.

மண் தரை தான் தொழு உரம் தயாரிக்க ஏற்றது ஏன் எனில் மண்ணில் உள்ள நுண்ணியிரிகள் மட்க வைக்க உதவும், மேலும் துர்நாற்றம் , உணவுகள் ,தாவரக்கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினையும் உரிஞ்சிவிடும்.

அப்படி இல்லாத நிலையில் ஏதேனும் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து தொழு உரமாக்கலாம். முன் சொன்னது போல கழிவுகள் அழுகுவதால் வரும் நீரினால் துர்நாற்றம் வரும் இதனைக்குறைக்க அவ்வப்போது கொஞ்சம் மணல் அல்லது மண் கொண்டு மேலே மூடிக்கொண்டே வரவேண்டும், நீரினையும் கிரகித்துவிடும், துர்நாற்றமும் குறையும்.மேலும் எளிதில் மட்கவும் செய்யும்.முழுதும் மட்கி மண் போல ஆக குறைந்தது ஆறு மாதம் ஆகலாம். பின்னர் எடுத்து தோட்டத்துக்கு உரமாக இடலாம்.

ஏன் இப்படி மட்க செய்யவேண்டும் நேரடியாக தோட்டத்தில் தாவரத்திற்கு போட்டு விடலாமே என நினைக்கலாம். அதனால் பயனேதும் இல்லை.

தாவரங்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பொட்டாசியம் ,பாஸ்பரஸ் ஆகியவற்றை நீரில் கரைந்துள்ள(water solluble nutrients) நிலையிலேயே கிரகிக்க முடியும்.மட்காத கழிவில் ஊட்டச்சத்துகள் இருந்தாலும் நீரில் கரையாத தன்மை கொண்டவை எனவே தாவரங்களால் பயன்ப்படுத்திக்கொள்ள முடியாது.

மட்கிய நிலையில் நீரில் கரையும் தன்மை வந்துவிடும். மாட்டு சாணத்துக்கும் இது பொருந்தும் ,ஈரமாகாவோ, காய்ந்தோ அப்படியே இட்டால் பலன் இருக்காது.மட்க வைத்தே இட வேண்டும்.மட்கிய நிலையில் கரிமப்பொருட்களில் இருப்பவை அனைத்தும் எளிய மூலகங்களாக உடைப்பட்டு எளிதில் கறையும் தன்மை அடையும்.

தொழு உரம் என்பது மெதுவாக ஊட்டச்சத்தினை வெளியிடும் (slow releasing fertilizr)தன்மை கொண்டது , இந்த பருவத்தில் இட்ட உரத்தின் பலன் அடுத்த பருவத்திலேயே தெரியும்.எனவே தொழு உரம் எல்லாம் இட்டும் வீட்டு தோட்டம் பச்சை பசேல் என செழிப்பாக வளரவில்லை என முதன் முதலில் தோட்டம் போட்டதும் எதிர்ப்பார்க்காதீர்கள். சுமாரான வளர்ச்சி தான் முதல் பருவத்தில் இருக்கும். அடுத்த பருவத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

உரம் போட்டதும் பயிரில் பசுமையை காட்டுவது இரசாயன உரங்களே அதனால் விவசாயிகள் அதனைப்பார்த்து நல்ல பலன் என செயற்கை உரங்களுக்கு போய்விட்டார்கள். நீண்ட கால நோக்கில் பின் விளைவுகள் எதிர்மறையாகப்போகும். எனவே வீட்டு தோட்டத்தில் உடனடி பலன் எதிர்ப்பார்த்து இரசாயன உரம் போட வேண்டாம்.இரசாயன உரங்கள் ,பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் நமக்கு குறைந்த செலவிலும், உழைப்பிலும் வீட்டுத்தோட்டங்கள் மூலம் கிடைக்கும்.

வீட்டுத்தோட்டத்தில் கவனிக்க வேண்டியவை:

# மொட்டை மாடியில் அமைக்கும் போது நீர் போகும் வழிகளை அடைக்காமல் அமைக்கவும்.

#கைப்பிடி சுவரோடு ஒட்டி அமைத்து விடாமல் நான்கு புறமும் சென்று வர வழியோடு அமைக்கவும்.

#குறைந்த இடத்தில் அமைக்கிறோம் ,நிறைய பயிரிட வேண்டும் என அதிகம் செடிகளை நடாமல் போதுமான இடைவெளி விடவும்.அடர்த்தி அதிகம் ஆனால் செடிகளிடையே ஊட்டச்சத்துக்கு போட்டி ஏற்பட்டு எதுவுமே சரியாக வளராது.

#நீர் தேங்காமலும், பானைகள் நீருடன் திறந்து கிடக்காமலும் பார்த்துக்கொள்ளவும் ,இல்லை எனில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி டெங்கு முதல் அனைத்தும் வரும்.

#மேலும் சில பூச்சிகள்,வண்டுகள் உங்கள் வீட்டுக்கு அழையா விருந்தாளியாகவும் வரலாம் :-))

கட்டுப்படுத்த வேப்பம் எண்ணையை நீரில் கலந்து(10%) கை தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

#வீட்டு தோட்டத்தில் எறும்புகள் அதிகம் படை எடுக்கும் அதுவும் விதைப்பின் போது ,அதைப்பார்த்துவிட்டு துகளாக கிடைக்கும் எறும்பு மருந்தினை வாங்கி தூவக்கூடாது .ஏன் எனில்lindane 2-4-D என்ற ரசாயனமே எறும்பு மருந்து என விற்கப்படுகிறது. இது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

எறும்பினை கட்டுப்படுத்த கொஞ்சம் மேசை உப்பினை சுற்றிலும் கோடுபோல தூவிட்டாலே போதும்.லச்சுமணன் ரேகை போல எறும்பு கோடு தாண்டாது :-))

# தோட்டத்தில் பல்லி, சிலந்தி இருந்தால் அப்புற படுத்த வேண்டாம் அவை பயிர்களின் நண்பனே இயற்கையாக பூச்சிகளை கட்டுப்படுத்துபவை.