Tuesday, 26 August 2014

இயற்கை விவசாயம்... அழைக்கிறது அரசு!

இயற்கை விவசாயம்... அழைக்கிறது அரசு!
முத்திரை
ஆத்தூர் செந்தில்குமார்
 
‘இயற்கை விவசாயம்... அழைக்கிறது அரசு!
மகிழ்ச்சி தரும் மரிக்கொழுந்து விவசாயம்

பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஆண்டுதோறும் 7 லட்சத்தி 72 ஆயிரம் நபர்கள் புதிதுபுதிதான நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். 2 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள்'

-இது ஏதோ ஒரு மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு 'வாய்ப் புளித்ததோ... மாங்காய் புளித்ததோ..' என்று யாரும் சொன்ன புள்ளிவிவரமல்ல... உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் 'உலக சுகாதார நிறுவனம்' (கீபிளி) கொடுத்திருக்கும் எச்சரிக்கைப் புள்ளிவிவரம்!
இதோ, இந்தியாவில் கூட, '25 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை' என்று ஜூன் 4-ம் தேதி ஊடகங்கள் பலவும் டமாரமடித்துள்ளன. பூச்சிக் கொல்லிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு இன்னுமொரு 'அக்மார்க்' சாட்சிதான் இந்த தடை உத்தரவு.
உலகம் முழுக்கவே பல நாடுகளில் இயற்கை வேளாண்மை என்பது முன்னெடுத்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், ஒரு சில நாடுகளில் குறிப்பாக இந்தியாவில், இயற்கை வேளாண்மை மீதான ஆர்வம் அவ்வளவாக விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்படாமலே இருக்கிறது. அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல் லிகளும் ரசாயன உரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
'இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கடனில் தள்ளப்படுவ தற்குரிய காரணங்களில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன' என்பது ஆய்வாளர்களின் கருத்து.
இந்நிலையில், இயற்கை வேளாண்மை பக்கம் நம் அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை திருப்ப ஆரம்பித்திருக்கின்றன. தமிழகத்தில் தற்போது ஆரம்பிக்கப் பட்டிருக்கும் 'அங்கக சான்றளிப்புத் துறை' ( Organic Certification ) என்பதுதான் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!
இயற்கை விவசாயம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல... 1960-க்கு முன்பாக முழுக்க முழுக்க இங்கே நடந்து வந்தது பாரம்பரியமான இயற்கை விவசாயம்தான். அதை வைத்து இந்தியாவைப் பார்க்கும் உலக அளவிலான இயற்கை விவசாய அமைப்புகள்... 'இயற்கை விவசாயத்தில் தலைமை இடமாக எதிர்காலத்தில் இந்தியா உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை' என்று சான்றிதழ் கொடுக்கின்றன.
இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அங்கக சான்றளிப்புத்துறையும் கூட சான்றிதழ்தான் கொடுக்கப்போகிறது இயற்கை வேளாண்மைக்கு! அதாவது, உலக அளவில் இயற்கை வேளாண்மை மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. ஆனால், உண்மையிலேயே இயற்கையாக விளைவிக்கப்பட்டதுதானா என்பதை யார் கண்காணிப்பது? அதைச்செய்ய உலகம் முழுக்கவே பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. தனியார்... அரசுத்துறை என்று பலவும் இதில் இறங்கியுள்ளன. 
ஆஸ்திரேலியாவில் வீரபாண்டி ஆறுமுகம்
உலக அளவில் இண்டோ சார்ட், எகோ சார்ட், ஸ்கால் போன்ற நிறுவனங்கள் இயற்கை விவசாயத்தை கண்காணித்து சான்றிதழ்கள் வழங்கி வருகின்றன. இவற்றுக்கு உலக நாடுகள் பலவற்றிலும் நல்ல மரியாதை உண்டு. இந்தியாவில் அரசுத்துறையான 'அபீடா' (APEDA-Agricultural and Processed Food Products Export Development Authority) வழங்கும் 'இண்டியா ஆர்கானிக்' சான்றிதழுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். அபீடா, 2000-ம் ஆண்டு முதல் இந்தப் பணிகளைச் செய்துவருகிறது. இதனிடம் அங்கீகாரம் பெற்று 11 நிறுவனங்கள் இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களை வழங்கிவருகின்றன. இதில், 10 நிறுவனங்கள் தனியார் துறையைச் சேர்ந்தவை. 11-வதாக உத்தராகண்ட் மாநில அரசு நிறுவனம் சேர்ந்துள்ளது. அந்த வரிசையில் 12-வது நிறுவனமாக தமிழக அரசின் 'அங்கக சான்றளிப்புத் துறை' சீக்கிரமே இடம் பிடிக்கப்போகிறது. 'அபீடா'வுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்திருக்கும் தமிழக அதிகாரிகள், ''கூடியவிரைவில் நாங்களும் இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்துவிடுவோம்'' என்கிறார்கள்.
கோவையை தலைமையிடமாக கொண்டுதான் இயங்கிவருகிறது அங்கக சான்றளிப்புத்துறை. இதைப் பற்றி உதவி இயக்குநர் பழனிச்சாமியிடம் பேசிய போது, மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டினார்.
''இயற்கை வேளாண்மை மூலம் விளைவித்த பொருட்கள், நஞ்சில்லாதது, சத்தானது, சுவை மிகுந்தது, நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது. இந்தக் காரணங்களால் இயற்கை வேளாண்மை விளைபொருட்களை உபயோகப்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாட்டுச் சந்தையில் கூடுதல் விலை கிடைக்கிறது. உள்நாட்டு சந்தையிலும் தேவை அதிகரித்து வருகின்றது.
நாம் உண்ணும் உணவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையாக அமைகிறது. தற்போது நடைமுறையில் உள்ள விவசாய முறைப்படி விளைவிக்கப்படும் உணவு பொருட்களில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளால் எஞ்சிய நஞ்சும் (Residual Toxicity ) ரசாயன உரங்களால் கடின உலோகங்களும் நாம் உண்ணும் உணவில் சேர்ந்துள்ளன என்பதை உலக அளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதைப் போல நமது தினசரி உணவில் உள்ள எஞ்சிய நஞ்சு, உடலில் தங்கி புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் தற்போது அதிகம் காணப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்பதை அந்த ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக் கின்றன. கடின உலோகங்களான ஈயம், காட்மியம், ஆர்சனிக், பாதரசம் ஆகியன மனித ஆரோக் கியத்துக்கு கேடுவிளைவிக்கும் தன்மை கொண்டவை. உதாரணமாக காட்மியம் நஞ்சு சேர்ந்துள்ள அரிசியை தொடர்ந்து உட்கொள்வதால் சிறுநீரகம், கல்லீரல், ரத்த உற்பத்தி செய்யும் பாகங்கள் மற்றும் நுரையீரலில் பாதிப்புகள் ஏற்படும். மேலும், எலும்பைப் பாதிக்கக்கூடிய இட்டாய்-இட்டாய் ( Itai -Itai ) என்ற நோய் இதனால் வருகிறது என்று ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளது. 
சான்றிதழ் பெறுவது எப்படி?
இயற்கை சான்றிதழ் பெறுவது என்பது சர்வ சாதாரணமல்ல... ஏற்கெனவே இயற்கை வேளாண்மை செய்து வருபவர்கள் அதுகுறித்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் ஓராண்டுக்குள் 'அங்கக சான்று' கிடைத்துவிடும். புதிதாக இயற்கை விவசாயத்தில் நுழைபவர்கள், மூன்றாண்டுகாலம் அதை கடைப்பிடித்துக் காட்டவேண்டும். தொடர்ந்து அங்கக சான்றளிப்புத்துறையினர் கண்காணிப்பார்கள். அதன்பிறகே 'அங்கக சான்று' கிடைக்கும்.
இயற்கை வேளாண்மை செய்பவர்களின் அனைத்து செயல்பாடுகளும் பதிவேடுகளில் தவறாமல் பதிவாகியிருப்பது அவசியம். உழவு செய்த நாள்.. மாடுகளுக்கு போடப்பட்ட தீவனம்.. விதை வாங்கிய ரசீது என்று எல்லாவற்றையும் பத்திரப்படுத்த வேண்டும்.
பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களால் ஏற்படும் கடின உலோக நஞ்சு காரணமாக சுற்றுச் சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கப்பட்டு வருகிறது. மண்ணில் வாழும் லட்சோப லட்சம் உயிரினங்கள்தான் மண் வளத்துக்கு அடிப்படை. ஆனால், அவையும் கொல்லப்பட்டு, மண்ணும் மலடாக்கப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து விளைச்சல் திறன் குறைந்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மண் வளத்தை பேணவும் இயற்கை விவசாய முறையை பின்பற்றுவது அவசியமான ஒன்றாகி வருகிறது.
இந்தச் சூழலில் தரமான இயற்கை வேளாண்மைப் பொருட்கள் நுகர்வோருக்கு கிடைத்திடவேண்டும் என்ற நோக்கோடு 'அங்கக சான்றளிப்பு முறை’யை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது'' என்று சொன்னார் பழனிச்சாமி.

பெருகிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையினை நமது தமிழக விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 2007- 08-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ‘அங்ககச் சான்றளிப்புத் துறை’ பற்றி அறிவிக்கப்பட்டது. தற்போது செயல்பட்டு வரும் விதைச்சான்றளிப்புத் துறையை ‘அங்ககச் சான்றளிப்புத் துறை மற்றும் விதைச்சான்றளிப்புத் துறை’ என்று மாற்றியிருக்கிறார்கள்.
இப்படியரு துறை உருவாவதற்கு முக்கிய காரணமே வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்தான். சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று, அங்கு இயற்கை விவசாய முறைகளைப் பார்வையிட்டு வந்த பிறகே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு, நிதி-நிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் ஆஸ்திரேலிய பயணம் பற்றி 'அடடே ஆர்கானிக்' என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 10-ம்தேதியிட்ட பசுமை விகடனில் கட்டுரை வெளியாகியிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவும்.
அங்கக சான்றளிப்பில் பங்கு பெற விரும்புவோர் தனிநபராகவோ, குழுவாகவோ அல்லது பெருவணிக நிறுவனமாகவோ(Corporate sector) பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக, 2 ஏக்கர் 3 ஏக்கர் உள்ள விவசாயிகள் பத்து பேரோ அதற்கு மேற்பட்டவர்களோ சேர்ந்து ஒரு குழுவாக அணுகலாம். விண்ணப்பப் படிவத்தினை துறையின் கோவை அலுவலகத்திலிருந்து கடிதம் மூலமாகவோ அல்லது நேரிலோ பெற்றுக்கொள்ளலாம். மூன்று நகல்களைப் பூர்த்தி செய்து, உரிய தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
அங்கக சான்றளிப்பு என்பது விவசாயிகளைத் தவிர, அங்கக விளைபொருள் பதனிடுவோருக்கும் (Organic Prosser) மற்றும் அங்கக சான்று பெற்ற விளைபொருட்கள் விற்பனை செய்வோருக்கும் (Organic Trader) சான்றளிப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு... இயக்குநர், அங்கக சான்றளிப்புத் துறை, 142-ஏ, தடாகம் சாலை, ஜி.சி.டி.போஸ்ட், கோவை 641013. தொலைபேசி எண்: 0422-2432984.
விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்!
பட்டிக்
காட்டார்
‘மக்கள் தொலைக்காட்சி'யில் இடம்பெறும் 'மலரும் பூமி' என்ற விவசாய நிகழ்ச்சியை வழங்குபவர் களில் ஒருவரான பட்டிக்காட்டார் சொல்லும்போது, ''அபீடா என்பது இந்திய அரசின் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வாயிலாக சான்றிதழ் பெறுவது விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்புதான். ஆனால், நம்முடைய அங்கக சான்றளிப்புத் துறை அபீடாவிடம் முறையாக அனுமதி பெற்றுசெயல்படுகிறதா என்பதுதான் முக்கியம். ஏனெனில், உலகம் முழுக்க இயற்கை விவசாயப் பொருட்களுக்கு சான்று கொடுப்பதில் ஏககட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனவே, நம்முடைய அங்கக துறை விவசாயிகளை ஏமாற்றிவிடக்கூடாது. சர்வதேச தரத்துக்கு செயல்பட வேண்டிய கட்டாயம் இருப்பதால் கவனமுடன் செயல்பட்டு, தன்னையும் சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பழையபடி விவசாயிகள் சோகத்தில் மூழ்க நேரிடும்'' என்று எச்சரிக்கையாகச் சொன்னார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி நகரைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆலோசகர் 'பாமர தீபம்' பார்த்திபன் இதைப்பற்றி பேசும்போது, ''இவ்வளவு நாட்களாக தனியார் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர் களும்தான் இயற்கை விவசாயம் பற்றி பேசி வந்தனர். தற்போது, அரசே இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. சான்றிதழோடு நிறுத்திக் கொள்ளாமல், முழுக்க இயற்கை விவசாயத் தையே கையில் எடுத்து விவசாயிகளிடம் ஆர்வத்தை உண்டு பண்ண அரசு முன் வரவேண்டும். அப்போது தான், விவசாயிகள் கடனிலிருந்து தப்பிப்பார்கள்... சூழலும் கெடாமல் தப்பிக்கும்.
தற்போது சான்றிதழ் வழங்கிவரும் சர்வதேச நிறுவனங்கள் அதிக அளவில் பணம் வசூலிக்கின்றன. ஆனால், நம் அங்கக துறை குறைந்த அளவு தொகையையே அறிவித்துள்ளது. அது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான விஷயமாகும்'' என்றார்.

கடன் இல்லை... கண்ணீர் இல்லை.. அதிசய சாகுபடி!


சுபாஷ் பாலேக்கர்... மராட்டிய மண்ணில் பிறந்த இந்த மனிதரை, இயற்கை அன்னையே தங்களை நோக்கி அனுப்பி வைத்த தூதராகக் கருதுகிறார்கள் பல விவசாயிகள்.
அதற்குக் காரணம் 'ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங்' என்கிற இவரது விவசாய முறை! இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து, பெரும் திரளான விவசாயிகளுக்கு மத்தியில் இவர் நிகழ்த்தும் உரையின் போது, மந்திரத்துக்குக் கட்டுப் பட்டது போல் சிலையாக அமர்ந்திருக்கிறார்கள் விவசாயிகள்.
சுபாஷ் பாலேக்கரின் விவசாயத் தத்துவத்தைக் கேட்டு, 'பைசா செலவு இல்லாமல் வளமான விவசாயம் செய்வதா... அதெப்படி சாத்தியம்?' என்றுதான் கர்நாடக மாநிலம், பீஜாப்பூர் மாவட்ட விவசாயிகளும் முதலில் கேட்டார்கள். இப்போது அவர்களே... 'தாராளமாக முடியும்!' என்று உற்சாகத் தோடு அடித்துச் சொல்கிறார்கள். நடைமுறையில் அதை சாதித்தும் காட்டிய பெருமிதம் பொங்குகிறது அவர்களிடம்.
கர்நாடகாவின் வட மேற்குப் பகுதியிலிருக்கும் குல்பர்காவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் இருக்கிறது சிந்துகி என்ற சிறிய நகரம். பொட்டல்காடுகள். வானம் பார்த்த வறண்ட பூமி. முட்செடிகள் கூட முழுமையான செழுமையில் இல்லை. தண்ணீர் தட்டுப்பாடு. இப்போதுதான் பூமிக்கு வகிடு எடுத்தது போல ஆங்காங்கே புதிய வாய்க்கால்கள் முளைத்துள்ளன. இன்னும் தண்ணீர் வரவில்லை என்கிறார்கள்.
இப்படிப்பட்ட வறண்ட பூமியிலும், சில விவசாயிகள் சிறு சிறு சோலைகளை உருவாக் காமல் இல்லை. விஞ்ஞான விவசாயமும் இயற்கை விவசாயமும் இங்கே கைகோத்து சாதனை நிகழ்த்தியிருக்கின்றன.
மதியம் 1 மணி... சிந்துகி கிராமத்தில் கங்காதர் என்ற விவசாயியின் தோட்டம்.... கிணத்துமேடு... மூன்று பெரிய புளிய மரங்கள். தமிழ் சினிமா பஞ்சாயத்துக் காட்சியைப் போல, நமது கதாநாயகன் கங்காதர் சம்மணம் போட்டு அமர்ந்திருக்க... அவருக்கு முன்பு ஐந்தாறு இளந் தளிர்கள் பப்பாளிப் பழத்தை சுவைத்தபடி உரையாடலில் மூழ்கி இருந்தனர். நமது வரவு, அவர்களின் சம்பாஷ ணைக்குத் தடை போட்டது. ''தமிழ்நாட்டிலிருந்து என்னைச் சந்திப்பதற்காகவே வந்திருக்கிறார்கள். இன்னும் 10 நிமிடங்களில் இவர்கள் கிளம்பி விடுவார்கள். பிறகு நாம் விரிவாகப் பேசலாமே'' என்றார் கங்காதர்.
நம்முடன் வந்திருந்த கர்நாடக ராஜ்ய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் பஸ்வரெட்டி ‘‘இவங்கள்லாம் யாரு?’’ என்றார்.
''நான் செய்கிற ஜீரோ பட்ஜெட் விவசாய முறை குறித்துத் தெரிந்துகொள் வதற்காக பீஜாப்பூர் விவசாயக் கல்லூரியிலிருந்து வந்திருக்கும் மாணவர்கள் இவர்கள். இறுதி யாண்டு பி.எஸ்சி. விவசாயம் படிக்கிறார்கள்'' என்று கங்காதர் சொல்ல... அவர் மீதும், அந்த சூத்தி ரத்தை அவருக்குக் கற்றுக்கொடுத்த பாலேக்கர் மீதும் நம் பிரமிப்பு விரிகிறது.
இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, 'விஞ்ஞான விவசாயம்தான் சிறந்தது. வளரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஈடு கொடுத்து உணவு உற்பத்தியைப் பெருக்குவது விஞ்ஞான ரீதியான விவசாயத்தால் மட்டுமே முடியும்' என்று வாதிட்டுக் கொண்டிருந்த விவசாய பல்கலைக் கழக துணைவேந்தர்தான் தம்மிடம் படிக்கும் பட்டதாரிகளை இப்போது இங்கே அனுப்பி யிருக்கிறார் என்பதை அந்த மாணவர் களிடமே பேசித்தெரிந்து கொண்டோம்.
பல்கலைக் கழக மாணவர்கள் மட்டுமல்ல.... பேராசிரியர்கள், பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் தினமும் தொடர்ந்து வந்து கங்காதரின் நிலங்களை பார்த்தவண்ணம் உள்ளதால், அவரின் விவசாய வேலைகளே ஸ்தம்பிக்கும் அளவுக்கு கால நெருக்கடி. அதனால், வாரத்தில் ஒரு நாள் மட்டும் (ஞாயிறு) பார்வையாளர்களை சந்திப்பது என்று இப்போது முடிவு செய்திருப்பதாகச் சொன்னார் கங்காதர். சில ஞாயிறுகளில் 400-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்து போக... அவர்களை உபசரித்து, 'ஜீரோ பட்ஜெட்' விவசாய முறையைச் சொல்லிக் கொடுக்க கொஞ்சம் திணறித்தான் போகிறாராம்.
''மூன்று வருடங்களாகி விட்டது, நான் பாலேக்கர் ஐயாவின் ‘ஜீரோ பட்ஜெட்' விவசாயத்துக்கு மாறி!'' என்று சந்தோஷம் பொங்க ஆரம்பித்த கங்காதர்,
''ரசாயன உரங்களையும் பூச்சி மருந்து களையும் பயன்படுத்தி பயிர் செய்து வந்தவன்தான் நானும். எங்கள் குடும்பத் துக்கு 200 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கிறது. வருடா வருடம் மிக அதிகமான அளவு ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் தேவைப்பட்டதால், நாங்களே உபதொழிலாக ஒரு உரக்கடை கூட வைத்திருந்தோம். ஒரு நாள் நானும், கும்பார் என்ற என் நண்பரும் தற்செயலாகக் கேள்விப்பட்டுத்தான் சுபாஷ் பாலேக்கரின் கூட்டத்துக்குப் போனோம். அவர் பேச்சைக் கேட்கக் கேட்க மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்வதை என்னால் உணர முடிந்தது. ஆணித்தரமாகவும், விவசாயிகள் மீது உள்ளார்ந்த அன்புடனும் அவர் நிகழ்த்திய உரையைக் கேட்டதுமே... நான் முதலில் எடுத்த முடிவு - உரக்கடையை இழுத்து மூடியதுதான்.
என் அப்பாவிடம் பேசினேன். 40 ஏக்கர் நிலத்தை மட்டும் முதலில் எனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டேன். சுபாஷ் பாலேக்கர் வழியில் இயற்கை விவசாயத்தைத் துவக்கினேன். 3 பசு மாடுகள், 3காளை மாடுகள். இவற்றின் சாணத்திலும், கோமியத்திலும் பாலேக்கர் ஐயா சொன்னபடி பீஜாமிர்தம், ஜீவாமிர்தம் தயார் செய்து, அதையே நீரில் கலந்து பாய்ச்சினேன். நம்பிக்கை இழக்காமல் நான் தொடர்ந்தபோது அற்புதம் நிகழ்ந்தது.
உதாரணத்துக்குக் கரும்பை எடுத்துக் கொள்வோம். 8 அடி இடைவெளியில் பார்கள் அமைத்து, கரணைகளை முளைக்க வைத்தேன். அதுவும் ஒரு ஏக்கருக்கு வெறும் 3000 முளைப்புகள் மட்டுமே. பிறகு அந்த 8 அடி இடைவெளியில், உளுந்து, கொண்டக் கடலை, தட்டை, அவரை போன்ற ஊடு பயிர்களை வைத்தேன். கரும்பு முளைத்து வளருவதற்கு முன்பு ஊடு பயிர்கள் பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டன. பிறகு, அந்தச் செடி மற்றும் அதன் இலைகளை அந்த மண்ணிலேயே மக்க விட்டேன். சிறு தாவரங்கள் காற்றிலிருந்தும் நீரிலிருந்தும் சூரிய ஒளியிலிருந்தும் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை எடுத்து நைட்ரஜன் உருவாக்கும் சக்தி கொண்டவை. அவை தமது தேவைக்கு எடுத்துக் கொண்டது போக மிச்சத்தை வேரில் சேமித்து வைத்திருக்கும். அந்த வேர் போன்றவை அங்கேயே மக்கியதால், கரும்புக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் எல்லாமே கிடைப்பதை அனுபவத்தில் உணர்ந்தேன்.
மேலும் ஜீவாமிர்தம் கலந்த நீரைப் பாய்ச்சும்போது, பூமிக்குள் இருக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்கள் கிளம்பி மேலே வந்து, பயிருக்கு தேவையான மற்ற தாதுப் பொருட்களை தயார் செய்கின்றன. அவற்றை மிகப் பிரமாதமாக பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கின்றன. இந்த வகை விவசாயத்தில், ஏக்கருக்கு 45 டன் கரும்பு எடுக்கிறேன். மண் கெடுவதில்லை. அதனால், மகசூல் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது'' என்கிறார் கங்காதர் நெஞ்சை நிமிர்த்தியபடி.
அதேபோன்று 4 ஏக்கரில் பப்பாளி பயிர் செய்து உள்ளார். அங்கும் ஊடு பயிராக கொண்டைக் கடலை பயிர் செய்துள்ளார். எந்த வகை ரசாயன உரமும் இல்லாமல், ஏக்கருக்கு 50 டன் முதல் 120 டன் வரை பப்பாளி கிடைக்கிறது. ஒவ்வொரு பழமும் 2 முதல் 5 கிலோ வரை தேறுகிறது. ருசியோ கொள்ளை ருசி! கிலோ பப்பாளி ஒரூ ரூபாய் என்று மிகக் குறைத்து கணக்கு வைத்தாலே குறைந்தபட்சம் 50,000 ரூபாய் வரை கிடைக்கும் என்று ஒரு விவசாயியாக நம் மனசு கணக்கு போட்டது. நம் மனக் கணக்கை அப்படியே படித்தவராக, ''சமயங்களில் ஒரு கிலோ இரண்டு - மூன்று ரூபாய் வரைகூட போகுதுங்க'' என்கிறார் கங்காதர்.
இந்த விவசாயத்தில் பயிர் வைப்பது, மனித உழைப்பு, தண்ணீர் தவிர.... நாட்டுப் பசுக்களையும் காளைகளையும் வளர்ப்பதுதான் செலவு. நஷ்டம் என்பதே இல்லை!
''விவசாயி வாழ்க்கை சோகத்தில் கழிவதற்குக் காரணமே - அவன் பயிர் விளைந்து தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் உரத்துக்கும் பூச்சிக் கொல்லிகளுக்கும் செய்கிற செலவுதான். பயிர் பொய்த்துப் போகிறபோதும், பூச்சிக் கொல்லிகளையும் மீறி பயிர் அழிந்து போகிறபோதும் விவசாயி மொத்தமாக உடைந்து போகிறான். வங்கிக் கடனும் விஷ வட்டிக் கடனுமாக அவன் வாங்கியதெல்லாம் மொத்தமாக போட்டு அழுத்தும்போது... மானத்துக்குப் பயந்து தற் கொலை செய்துகொள்கிற அவலம் ஆங்காங்கே நடக்கிறது. பாலேக்கர் ஐயா சொல்லிக் கொடுத்த விவசாயத்தில் கடன் தொல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. கண்ணீருக்கும் இடமில்லை'' என்று கங்காதர் சொன்னபோது, பச்சைப் பசேல் என்று விளைந்திருந்த கரும்பும் பப்பாளியும் 'ஆம்' என்று ஆமோதிப்பதுபோல் காற்றில் சந்தோஷமாகத் தலையாட்டின.
கங்காதரின் நண்பர் கும்பார் - இவரைவிடவும் ஒருபடி மேலே எறும்பாக சுறு சுறுப்பு காட்டுகிறார். இவர் 4 ஏக்கர் நிலத்தில் திராட்சை போட்டு உள்ளார். இவரும் மாட்டுச் சாணம், மாட்டு கோமியம் இவற்றைக் கொண்டு ஜீவாமிர்தம் தயாரித்து, தண்ணீருடன் கலந்து, திராட்சை தோட்டத்தில் பாய்ச்சுகிறார். திராட்சை தோட்டத்தைப் பார்த்தோம். பச்சை பந்தல் போல் படர்ந்து கிடக்கும் திராட்சை கொடியிலிருந்து கொத்துக் கொத்தாக காய்கள், பழங்கள். ஒரு பூச்சி இல்லை. புழு இல்லை. பழங்கள் அமுதம் போல் ருசிக்கிறது.
''ஏக்கருக்கு 12 முதல் 17 டன் திராட்சை கிடைக்கும். ரசாயன உரம் வைத்து விளைந்த திராட்சை கிலோ 10 ரூபாய் என்றால், எமது திராட்சைக்கு விலை ரூபாய் 20 வரை கிடைக்கும். பராமரிப்பு செலவு ஏக்கருக்கு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே. ஏக்கருக்கு 2 லட்ச ரூபாய்க்கும் குறையாமல் வருவாய் கிடைக்கிறது. கடன் தொல்லை இல்லை'' என்று இவரும் மன நிறைவோடு கூறுகிறார்.
இப்படி இவர்கள் இயற்கையின் தூதராக போற்றும் சுபாஷ் பாலேக்கரை நேரில் சந்திக்க வேண்டாமா? அவரின் விவசாய முறையையும் பீஜாமிர்தம், ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறையையும் அவர் வாயாலேயே சொல்லக் கேட்டு பிரமிப்போம்

சவுக்கு மரங்களுக்கு சிவப்பு கம்பளம்!

சவுக்கு மரங்களுக்கு சிவப்பு கம்பளம்!
மகசூல்
கு.ராமகிருஷ்ணன்
 
‘சவுக்கு மரங்களுக்கு சிவப்பு கம்பளம்!’’

பொங்கல் விழா என்றால்... பெரும்பாலான ஊர்களின் வீதிகளில் ‘சவுக்கு மிளார்’ ஆங்காங்கே சிதறிக் கிடக்கும். கிராமங்களில் மட்டுமல்லாமல் நகர்ப்புற வீடுகளிலும் சவுக்கு மிளார் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சூரியனுக்கு காட்டும் தீபத்தைக் கொண்டே, சவுக்கு மிளாரைப் பற்ற வைத்து, பொங்கல் பானைக்கு எரியூட்டுவார்கள். மண்ணெண்ணை இல்லாமலே நின்று நிலைத்து எரியும் மிளாரிலிருந்து கிளம்பும் வாசனை... நெய்யின் வாசனையோடு சேர்ந்து பொங்கல் மீதான ஆவலை நமக்குத் தூண்டும்.
பொங்கலுக்கு மட்டுமல்ல... பொதுவாகவே சவுக்கு விறகுதான் ஒரு காலத்தில் தமிழகத்தின் பெருவாரியான எரிபொருள்! விலையும் உரிய அளவில் கிடைத்து வந்தது. ஆனால், காலப்போக்கில் எரிவாயு வருகையால், சவுக்கு விறகுக்கு மரியாதை குறைய... பெரும்பாலான விவசாயிகள் அந்தச் சாகுபடியையே மறந்தனர்.
இந்நிலையில், தற்போது சவுக்கு மரத்துக்கு மிகப் பெரிய அளவில் தேவை உருவாகி இருக்கிறது. ''மற்றப் பயிர்களைப் போல் காலை வாராமல், விவசாயிகளின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பதில் சவுக்கு மரங்களுக்கு நிகர் சவுக்குதான்'' என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது.
எப்படி உருவானது இந்த திடீர் மறுவாழ்வு?
நாற்றங்கால்...
சவுக்கு மரங்களை காகித ஆலைகள் சிவப்புக் கம்பளம் விரித்து, வரவேற்கக் காத்திருப்பதுதான் காரணம். விவசாயிகளிடம் நிலம் மட்டும் இருந்தால்போதும். காகித ஆலைகளே தேடி வந்து முறையான பராமரிப்புப் பயிற்சி அளித்து, நடவு முதல் எல்லாவற்றுக்கும் உதவி செய் கின்றன. அத்தோடு, உரிய விலை கொடுத்து, தாமே அறுவடையும் செய்து கொள்கின்றன. இந்தச் சாகுபடிக்கு வங்கிக் கடன் வாங்கிக் கொடுக்கவும் காகித ஆலைகள் தயாராக இருக்கின்றன. தமிழக அரசின் புகளூர் காகித ஆலை உள்ளிட்ட பல ஆலைகளும் இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் ஆலைகளின் சார்பில் இதற்கென முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘‘ஒரு விவசாயி, தன்னுடைய இரண்டு புகைப்படங்களையும் நிலத்துக்கான சிட்டா அடங்கல் மற்றும் வரைபடத்தையும் கொடுத்தால்போதும்... நடவின் போது ஏக்கருக்கு 11 ஆயிரமும், இரண்டாவது வருடம் மற்றும் மூன்றாவது வருடம் தலா நாலாயிரத்து ஐந்நூறு ரூபாயும் வங்கிக் கடனாக பெறமுடியும்'' என்கிறார் தனியார் நிறுவனமான சேஷசாயி காகித ஆலையின் முகவரான சண்முகம் (அலை பேசி: 94433-34171). இவர், தஞ்சை மருத்துவ கல்லூரிச் சாலையில் சவுக்கு மர நாற்றுக்கென தனியாக நாற்றங்கால் பண்ணையும் நடத்தி வருகிறார்.
‘‘காகித ஆலைகளுக்கு மரக்கூழ்தான் முக்கியமான மூலப் பொருள். ஆனால், மரத் தட்டுப்பாடு தற்போது பெரும் சவாலான விஷயமாக உருவெடுத்திருக்கிறது. பல லட்சம் ஏக்கரில் சவுக்கு சாகுபடி செய்தால்தான் தேவையை பூர்த்தி செய்யமுடியும். இதன் மூலம் விவசாயிகளுக்கும் பாதுகாப்பான ஒரு எதிர்காலம் உருவாகும். திட்டமிட்டபடி கணிசமான லாபமும் கிடைக்கும். ஆனால், விவசாயிகளுக்கு இதைப் பற்றிய முழுமையான விழிப்பு உணர்வு இன்னமும் ஊட்டப் படவில்லை'’ என கவலைப்படுகிறார் சண்முகம்.
சேஷசாயி காகித ஆலை, மேட்டுப்பாளையத்திலிருக்கும் வனச்சரக கல்லூரியுடன் இணைந்து தரமான விதைகளை உற்பத்தி செய்கிறதாம். இங்கிருந்து விதைகளைப் பெற்றுதான், தஞ்சாவூரில் தன்னுடைய நாற்றங்காலை தயார் செய்கிறார் சண்முகம். இங்கு சுமார் மூன்று லட்சம் சவுக்கு மர நாற்றுகள் விவசாயிகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
விதைகள் மூலம் வளரும் சாதாரண ரகம், குளோனிங் மூலம் வளர்க்கப்படும் 'ஜுங்குனியானா' ரகம் என இரண்டு விதமான ரக சவுக்குகள் உள்ளன. ஜுங்குனியானா ரகம் தாய்லாந்தைத் தாயகமாகக் கொண்டவை. சாதாரண ரக நாற்று 1 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஜுங்குனியானா ரக நாற்றின் விலை 3 ரூபாய்.
நாற்றுகள் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வளர்த்து விற்கப்படுகின்றன. பாக்கெட்டை பக்குவமாகக் கிழித்து, மண் உடையாமல் நாற்றுகளை ஒரு அடி ஆழம் கொண்ட குழிகளில் நடவேண்டும். சாதாரண நாற்றுகள் என்றால் குழிகளுக்கு இடையே மூன்று அடி இடை வெளி அவசியம் (ஏக்கருக்கு 4 ஆயிரம் நாற்றுகள் நடமுடியும்). குளோனிங் ரக நாற்றுகளை ஆறு அடி இடைவெளி விட்டு நடவேண்டும் (ஏக்கருக்கு இரண்டாயிரம் நாற்றுகள்).
எந்த ரக நாற்றாக இருந்தாலும் ஒவ்வொரு குழியிலும் முப்பது கிராம் இயற்கை உரம் இட வேண்டும். குழிகளை மூடி, தண்ணீர் விடவேண்டும். நடவு செய்த 2, 3 மற்றும் 4-வது வருடங்களில் தலா ஒரு மூட்டை டி.ஏ.பி. உரம் போடவேண்டும். (இயற்கை உரமும் போடலாம்). தரை காயாமல் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். களிமண் பாங்கான நிலமென்றால் மாதம் ஒரு முறையும், மணற்பாங்கான நிலமாக இருந்தால் 15 நாட் களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்யலாம்.
இரண்டாவது வருடமும், மூன்றாவது வருடமும் மரத்திலிருக்கும் தேவையற்ற பாகங்களைக் கழித்து விற்பதின் மூலம் மொத்தம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். நான்காவது வருடம் மகசூல் பார்க்கலாம். சாதாரண ரகமென்றால் ஒரு மரம் 30 கிலோ வரை எடை இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 80 டன் வரை மகசூல் கிடைக்கும். ஜுங்குனியானா ரக மரம் ஒன்று 100 கிலோ வரை எடை இருக்கும். ஏக்கருக்கு குறைந்த பட்சம் 100 டன் வரை மகசூல் கிடைக்கும். வளர்ப்பைப் பொறுத்து கூடுதலாகக் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
காகித ஆலைகளுடன் ஏற்கெனவே உள்ள ஒப்பந்தபடி டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூபாய் ஆயிரத்து இருநூற்று ஐம்பது கிடைக்கும். அறுவடையின்போது, சந்தை விலை குறைந்தாலும் விவசாயி கவலைப்படத் தேவை யில்லை. ஒப்பந்தத்தில் சொன்ன தொகைக் கண்டிப்பாகக் கிடைக்கும். அதேசமயம், சந்தை விலை உயர்ந்தாலும் அதற்கேற்றபடி விவசாயி களுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். அறுவடைக்கு ஆட்கள், வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு போன்றவற்றை ஆலைகளே பார்த்துக் கொள்வது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான விஷயமாகும்.
''கரும்புகளைப் போல... உரிய காலத்துக்குள் சவுக்கு மரங்களை வெட்டியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதற்கென முதிர்வு பருவம் எதுவும் குறிப்பாக இல்லை. ஆண்டுகள் அதிகமானால் மரத்தின் அடர்த்தி அதிகமாகி, எடை கூடி, லாபம் பெருகும். எப்படிப் பார்த்தாலும் ஏக்கருக்கு, ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் விவசாயிக்கு லாபம் கிடைக்கும்'' என அடித்துச் சொல்கிறார் சண்முகம்.
சவுக்கு விவசாயத்தை விவசாயிகளிடம் முன் னெடுத்துக்கொண்டி ருக்கும் வேறு சிலரிடம் பேசியபோது, ''ஒப்பந்த முறை மரம் வளர்ப்புத் திட்டத்தில் சட்ட வரை யறைகள் மிகத் தெளிவாக இருப்பதால், விவசாயி களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும் கிடைக் கிறது. என்றாலும் நீதி மன்றம் செல்லும் அளவுக் கெல்லாம் பிரச்னைகள் எழாது. காரணம், காகித ஆலைகள் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு விவசாயி களைத்தான் மலைபோல் நம்பி உள்ளன. நல்லுறவு நீடிக்க வேண்டும் என் பதில் மிகக்கவனமாக உள்ளன'' என்று அடித்துச் சொல்கிறார்கள்.
அவர்களே, ''காகித ஆலைகளை நம்பித்தான் விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் இறங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. வேறு வழியில் இன்னும் அதிக லாபம் பார்க்கவும் வாய்ப்பு உள்ளது.
''கான்கிரீட் கட்டடங்களுக்கான சென்ட்ரிங் அமைக்க, சவுக்கு மரங்களை கொண்டுதான் முட்டுக் கொடுப்பார்கள். அதற்குத் தேவையான அடிமரம், ஒரு டன் மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை விற்கப்படுகிறது.. நுனி கிளைகளை தனியாக வெட்டி எரிபொருள் தேவைக்கு விற்கலாம். இதுபோன்ற நுனி கிளைகள் ஒரு டன், இரண்டாயிரம் ரூபாய் வரை விலை போகும்'' என்கிறார்கள்.
சுற்றுச்சூழல்... அரசியல்... தொழில் போட்டி என்று பலவித காரணங்களால் விவசாயம் செய்வது என்பது சமீப வருடங்களாக சவால் விடும் விஷயமாகவே இருக்கிறது. இந்தச் சவால்களை எல்லாம் சவுக்கு கொண்டு விளாசுவது போல உருவெடுத்து நிற்கிறது சவுக்கு சாகுபடி... நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்!
வளர்த்துவிடும் வனத்துறை
சவுக்கு மர வளர்ப்புக்கு வனத்துறை அதிக அளவில் உதவி வருகிறது. இதைப்பற்றி தமிழக வனத்துறையின் தஞ்சாவூர் மாவட்ட விளம்பர வனச்சரகர் தங்கராஜ் (அலைபேசி: 94423-79976) பேசும்போது, ''மரங்களை வளர்க்கவேண்டும் என்கிற விழிப்பு உணர்வை ஊட்டுவதற்காக பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம். சவுக்கு மரங்களைப் பொறுத் தவரை 100% மானியம், 90% மானியம் என்று இரண்டு திட்டங்கள் உள்ளன.
விவசாயியின் நிலம் சாலையோரத்தில் இருக்கிறதென்றால், அந்த நிலத்தில் குழி எடுத்து, உரம்போட்டு, சவுக்கு கன்றுகளை நட்டுக்கொடுப்பது வரை எல்லாவற்றையும் வனத்துறையே இலவசமாக செய்து கொடுத்துவிடும். அதன் பிறகு, வருடத்துக்கு ஒரு முறை மேலுரம் மற்றும் பராமரிப்பை விவசாயி பார்த்துக் கொள்ளவேண்டும். அந்த மரங்கள் வளர்ந்த பிறகு வனத்துறைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுதியும் கொடுத்துவிடுகிறோம். இது 100% மானிய திட்டம். குறிப்பிட்ட நிலம் சாலை யோரத்தில் இருந்தால், அதைப் பார்க்கின்ற மற்ற விவசாயிகளையும் கவரும்... நாங்களும் மற்ற விவசாயிகளை எளிதில் அழைத்துச் சென்று காண்பிக்க முடியும் என்பதற்காக இந்த ஏற்பாடு.
அடுத்து, 90% மானிய திட்டம். உள்புறங்களில் அமைந்துள்ள நிலங்களுக்கான திட்டம் இது. 10% தொகையை மட்டும் விவசாயி செலவழிக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், நடப்பட்ட அனைத்து நாற்றுகளுமே நன்றாக வளர்ந்திருந் தால், அந்த 10% தொகையையும் விவசாயிக்கு நாங்கள் கொடுத்து விடுவோம்'' என்று சொன்னார்.
இப்படி வளர்க்கப்படும் மரங் களை நேரடியாகவே விவசாயிகள் விற்றுக்கொள்ளவேண்டும். காகித ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் முயற்சிக்கலாம்.

எல்லா இடங்களிலும் வெற்றி
பலதரப்பட்ட மண்வாகு... நஞ்சை, புஞ்சை பாகுபாடு இது எதைப்பற்றியும் கவலை இல்லாமல் சவுக்கு மரங்கள் செழித்து வளர்கின்றன என்பதுதான் நம்பிக்கையூட்டும் செய்தி. நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலிருக்கும் கோட்டூர்காந்தாவனம் என்ற சின்னஞ்சிறு கிராமம், சவுக்கு சாகுபடியில் தன்னை நோக்கி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இது வண்டல் மண் பூமி. 'வண்டல் மண்ணில் சவுக்கு மரங்கள் விளையாது' என்ற கருத்து விவசாயிகளிடம் பரவலாக நிலவி வருகிறது. ஆனால், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை, மணிவாசகம், ராமமூர்த்தி, ராமலிங்கம், கோவிந்தராஜ், சச்சிதானந்தம் மற்றும் சில விவசாயிகள் துணிச்சலோடு சவுக்கு சாகுபடியில் இறங்கினார்கள். இரண்டே ஆண்டுகளில் பதினான்கு அடி உயரத்துக்குச் சவுக்கு மரங்கள் விளைந்திருக்கின்றன. குறுகிய காலத்தில், சவுக்கு சாகுபடி அறுபத்தைந்து ஏக்கர் அளவுக்கு இங்கே பரவி, பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
இவர்களில் சின்னத்துரையின் சாகுபடிதான் பலரையும் வியக்க வைத்துள்ளது. இவரின் நிலத்தை, 'ஊரின் தொட்டி' என செல்லமாக ஊர்க்காரர்கள் சொல்வதுண்டு. அந்தளவுக்கு ஊரிலேயே படு பள்ளமான பகுதி. 2005-ம் ஆண்டு பிடித்துக் கொண்ட பேய் மழைக் காலத்தின்போது, சின்னத்துரையின் சவுக்கு மர நாற்றுகள் மூன்றுமாத குழந்தைகள். வானமே பிய்த்துக்கொண்டு ஊற்ற... சின்னஞ்சிறு நாற்றுகள் தண்ணீரில் தத்தளித்தன. ‘‘இனி இவை தேறாது’’ என ஊரே கணித்துச் சொல்ல... சின்னத்துரைக்கு ஏக சோகம். மூன்று மாதம் வரை தண்ணீர் வடியவே இல்லை. அதன் பிறகு தண்ணீர் வடிய... சவுக்கு கன்றுகள் எந்தவித பாதிப்பும் இன்றி ஜம்மென்று நிற்க, அதை ஊரே அதிசயித்துப் பார்த்திருக்கிறது.
இந்த மாவட்டத்தில் உள்ள விளத்தூர், பொன்மங்கலம், பனத்திடல், அனியமங்கலம், நீடாமங்கலம், அஸ்கான்ஓடை, பைங்கான்நாடு, பேரையூர், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, துரையண்டார்கோட்டை, திருவையாறு, தேவனாஞ்சேரி என்று பல ஊர்களில் சவுக்கு செழித்து வளர்ந்துள்ளது.

நாற்றங்கால்- சாதாரண ரகம்
நீங்களே நாற்றங்கால் அமைக்கவும் முடியும். விதைகள் ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆங்காங்கே விவசாயிகளே இதனை விற்பனை செய்கிறார்கள். ஒரு கிலோ விதையில் 2 லட்சம் நாற்றுகள் கிடைக்கும். தேவையான அளவுக்கு விதைகளை வாங்கித் தெளிக்கலாம். தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை உரிய ஏற்பாட்டோடு விற்கலாம்.
மணல் பாத்திகள் அமைத்து விதைகளைத் தூவவேண்டும். அதன் மீது தொழு உரத்தைப் போட்டு, அதன் மீது செத்தை, குப்பைகளைப் போட்டு மூட்டமிடவேண்டும். தினமும் அதன் மீது தண்ணீர் தெளிக்கவேண்டும். ஏழாம் நாள் முளைப்பு வந்ததும், பந்தல் அமைக்கவேண்டும். காலை மாலை தண்ணீர் பாய்ச்சவேண்டும். 1 மாதம் ஆன பின்பு, நாற்றுகளைப் பறித்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வைத்து, செம்மண், தொழு உரம் போடவேண்டும். மூன்று மாதம் கழித்து, நடவுக்கு தயாராகிவிடும்.
நாற்றங்கால்-ஜுங்குனியானா
தாய் மரத்தில் இருந்து கொழுந்து எடுத்து, அதனை கெமிக்கலில் நனைத்து பசுமை கூடாரத்தில் ஒரு மாதமும், நிழலில் ஒரு மாதமும் சூரிய ஒளியில் ஒரு மாதமும் வைத்து நாற்றுகள் தயாரிக்கப் படுகின்றன.
 

பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் !

பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் !
விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்!
மரம் வளர்ப்பு மற்றும் மேலாண்மைச் சிறப்பிதழ்
பிரச்னைவறட்சி, விலைவீழ்ச்சி, ஆள்பற்றாக்குறை போன்ற பல பிரச்னைகள் விவசாயத்தை வாட்டி எடுக்கும் சூழலில்... வெனிலா பீன்ஸ், பேரீச்சை, கோகோ, அகர் மரம் என மாற்றுப் பாதைகளில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள், விவசாயிகள். ஆனால், ஒரு கட்டத்தில் இவையெல்லாம் கையைக் கடிக்கவே... பலவித சிக்கல்களில் மாட்டிக் கொள்வதோடு, பொருளாதார இழப்புக்கும் உள்ளாகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், ஈரோடு மாவட்டம், பொலவக்காளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம்.பேரீச்சை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்து, கன்றுகள் வாங்கி நட்டு ஏமாந்த விஷயத்தை, நமது அலுவலகக் குரல் வழிச் சேவையில் பதிவு செய்திருந்தார், சுப்பிரமணியம். அதைத் தொடர்ந்து அவரது தோட்டம் தேடிப்போய் அவரைச் சந்தித்தோம்.
ஒன்பது வருஷமாகியும்...?
''2006-ம் வருஷத்துல, 'பேரீச்சை வளர்த்தா பெரும் லாபம்’னு சில பத்திரிகைகள்ல விளம்பரங்கள் வந்துச்சு. அதைப் பாத்து ஆசை வந்து, அந்த கம்பெனியைத் தேடி தர்மபுரிக்குப் போனேன். அங்க, பேரீச்சை பத்தி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க. 'வறட்சியைத் தாங்கி வளரும். எல்லா வகையான மண்ணுலயும் வரும். நட்ட அஞ்சாம் வருஷத்துல மகசூலுக்கு வந்துடும். ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 100 கிலோ பேரீச்சை கிடைக்கும். தொடர்ந்து 100 வருஷம் வரை, வருமானம் கொடுக்கிற அமுதசுரபி’னெல்லாம் சொல்லிட்டு 'பேரீச்சையை விக்கிறதுக்கும் நாங்களே ஏற்பாடு செஞ்சு தர்றோம்’னும் சொன்னாங்க.அதை நம்பி ஒரு கன்னு 65 ரூபாய்னு,175 கன்னுகளை வாங்கி, வேன் வெச்சு தோட்டத்துக்குக் கொண்டு வந்தேன். அந்த கம்பெனிக்காரங்க சொன்ன மாதிரியே,20 அடி இடைவெளியில நட்டு, களை, உரம், பூச்சிக்கொல்லி, பாசனம்னு முறையாதான் பராமரிச்சுட்டு இருந்தேன். அஞ்சு வருஷத்துக்குள்ள மரமெல்லாம் தளதளனு வளர்ந்துச்சு. 'இன்னிக்கு பூ எடுத்துடும், நாளைக்கு பூ எடுத்துடும்’னு தினமும் குட்டிப்போட்ட பூனை மாதிரி மரங்களையே சுத்திச்சுத்தி வந்தேன். ஆனா, ஒன்பது வருஷம் ஆகியும் பூவும் பூக்கல. பிஞ்சும் பிடிக்கல. அப்படியே அத்தனை மரமும் மலடா நிக்குது. அவங்க 'பில்டப்’ கொடுத்த மாதிரி ஒண்ணுமே நடக்கல. பொறுத்துப் பார்த்துட்டு ஒரு கட்டத்துல கம்பெனிக்கு போன் போட்டேன். 'சில ஊர்கள்ல சீதோஷ்ண நிலை சரியில்லைனா காய்க்கிறதுக்கு 10 வருஷம்கூட ஆகும். அப்ப நல்ல லாபம் பார்க்கலாம். அவசரப்பட்டு மரங்களை அழிச்சுடாதீங்க’னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு'' என்ற சுப்பிரமணியம், தொடர்ந்தார்.
குறி வைத்த கூன்வண்டு!
''அவங்க சொன்னதை இன்னமும் நம்பிக்கிட்டு மரங்களைப் பாதுகாத்து பராமரிச்சுட்டு இருக்கேன். இதுவரைக்கும் பூக்குற அறிகுறி தெரியல. ஆனா, இன்னொரு பிரச்னை ஆரம்பிச்சிருக்கு. சிவப்பு கூன்வண்டுகள் படையெடுத்து வந்து, மரங்கள்ல ஓட்டை போட்டு சேதப்படுத்த ஆரம்பிச்சதுல, தளதளனு இருந்த மரங்களெல்லாம் வாடி வதங்க ஆரம்பிச்சுடுச்சு. பக்கத்துல இருக்குற விவசாய ஆபீஸ்ல போய் சொன்னதுக்கு, 'விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி வெச்சுக் கட்டுபடுத்தலாம்’னு சொன்னாங்க. பொறிகளை வெச்சுட்டு கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லியையும் தெளிச்சேன். ஆனாலும், பிரயோஜனமில்லை. வண்டுகள், பாதி மரங்களை அழிச்சுடுச்சு.
மஞ்சள், கரும்பு, குச்சிக்கிழங்குனு ஒழுங்கா வெள்ளாமை வெச்சு, பத்துக்கு ரெண்டு பழுதில்லாம வருமானம் பாத்துட்டு இருந்தேன். அந்த நிலத்துல பேரீச்சையைப் போட்டு ஒண்ணுமில்லாம நிக்கிறேன். மத்த விவசாயிகளுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டுமேனுதான் இதை உங்கக்கிட்ட சொல்றேன்'' என்ற சுப்பிரமணியத்தின் பேச்சில் அக்கறை ததும்பியது!
எல்லா மரங்களையும் எரிச்சிட்டேன்!
இதே அனுபவம்தான் அப்பகுதியைச் சேர்ந்த வீரப்ப கவுண்டருக்கும். ''ஒரு ஏக்கர்ல எழுபது பேரீச்சைச் செடியை நட்டு எட்டு வருஷமாச்சு. காய்ப்பும் இல்லை... ஒரு மண்ணும் இல்லை. சிவப்பு கூன்வண்டுகளை ஒண்ணுமே செய்ய முடியல. இந்த மரங்களை அழிச்சது மட்டுமில்லாம பக்கத்துல இருந்த என்னோட தென்னந்தோப்புலயும் வண்டுகள் சேதப்படுத்த ஆரம்பிச்சிடுச்சு. விட்டா மொதலுக்கே மோசமாகிடும்னு மொத்த பேரீச்சை மரங்களையும் மெஷின் வெச்சு பிடுங்கி... பக்கத்துல இருக்குற வறட்டுக் குட்டையில போட்டு தீ வெச்சுட்டேன். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களையும் பிடுங்கி வெச்சிருக்கேன். அதையும் எரிச்சிடுவேன்'' என்று சோகமாகச் சொன்னார், வீரப்ப கவுண்டர்.
வறட்சியைத் தாங்கி வளராது!
பொலவக்காளிப்பாளையத்தில் மட்டுமில்லை. மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற பாதிப்புகளே என்பதற்கு சாட்சி சொல்கிறார்... இந்தியன் ரயில்வே பாதுகாப்புப் படையின் முன்னாள் உதவி ஆணையரும் முன்னோடி விவசாயியுமான கே. தெய்வசிகாமணி.
''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பக்கத்துல என்னோட தோட்டம் இருக்கு. 200 பேரீச்சைக் கன்னுகளை வாங்கி நட்டேன். பராமரிப்பும் சரியாத்தான் செஞ்சேன். ஆனா, ஒரு பலனும் இல்லை. 'வறட்சியைத் தாங்கி வளரும்’னு சொன்னதே தப்பு. தென்னைக்கு பாய்ச்சுறதைவிட இதுக்கு அதிக தண்ணீர் கொடுக்க வேண்டியிருக்கு. இல்லாட்டி மரம் வாடிடுது. இதுல பெரிய சிக்கலே மகரந்தச் சேர்க்கைதான். 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் இருக்கணுங்கிறாங்க. இதை வித்தியாசம் கண்டுபிடிக்கிறது பெரிய சிரமம். அதில்லாம கம்பெனிக்காரங்க கொடுக்குற கன்னுல பாதிக்குப்பாதி ஆண் மரமாத்தான் இருக்கு. இதுல இயற்கையா மகரந்தச் சேர்க்கை நடக்காது. நாமதான் ஒவ்வொரு மரத்துலயும் மகரந்தச் சேர்க்கையைச் செய்யணும். இது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு.
அறுவடை செஞ்ச பிறகு பழங்களை அப்படியே விற்பனை செய்ய முடியாது. அதைத் தனியா பக்குபவப்படுத்தித்தான் விற்பனைக்கு அனுப்ப முடியும். இதையெல்லாம்கூட சமாளிச்சுடலாம். ஆனா, பூச்சிகளை ஒண்ணுமே செய்ய முடியல. முக்கியமான விஷயம் என்னான்னா... இந்த விவசாயத் துக்கு அரசாங்க உதவிகள் எதுவுமே கிடையாது. சொட்டு நீர், பயிர்க்கடன், உரம், தொழில்நுட்ப உதவினு எதுவும் அரசு தரப்புல கிடைக்கிறதில்லை.
திசு வளர்ப்பும் துன்பமே!
இப்போ, திசு வளர்ப்பு மூலம் கன்னுங்க விற்பனைக்கு வந்திருக்கு. இந்த மரங்கள்ல கிடைக்கிற பழங்களைப் பதப்படுத்த வேண்டியதில்லை. பறிச்சு அப்படியே விற்பனைக்கு அனுப்பலாம். ஆனா, விற்பனையில நிறைய சிக்கல்கள் இருக்கு. ஒரு கன்னு 60 ரூபாய்னு விதை நாத்து வாங்கி வளர்த்தாலும் சரி... 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு திசுவளர்ப்பு நாத்து வாங்கி வளர்த்தாலும் சரி... பேரீச்சை நட்டா பெருந்துன்பம்தான் வந்து சேரும். இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஏத்த பயிர் கிடையாது. நட்ட அஞ்சு வருஷத்துலேயே அத்தனை கன்னுகளையும் நான் பிடுங்கிப் போட்டுட்டேன்'' என்று வேதனை பொங்கச் சொன்னார் தெய்வசிகாமணி.
பராமரிச்சா... லாபம்தான்!
பேரீச்சைக் கன்றுகளை விற்பனை செய்துவரும் தர்மபுரி 'சாலியா நர்சரி' உரிமையாளர் நிஜாமுதீனிடம் பேசியபோது, ''விதைகளை முளைக்க வெச்சு உருவாகுற நாத்துகள்ல மகசூல் கிடைக்க ஏழு வருஷத்துல இருந்து பத்து வருஷம் வரைகூட ஆகும். அதுவரைக்கும் பொறுமையா இருந்தா கண்டிப்பா நல்ல மகசூல் எடுத்து லாபம் பாக்கலாம். இதுல சந்தேகமே தேவையில்லை. அதேமாதிரி விற்பனை வாய்ப்பு பத்தியும் கவலைப்படவே தேவை யில்லை. இப்பகூட நல்ல டிமாண்ட்லதான் போயிட்டிருக்கு. கூன்வண்டு, ஊசிவண்டு, நோய்த் தாக்குதல் எல்லாம் எல்லா பயிர்கள்லயும் வரக்கூடியதுதான். அதுக்கு தடுப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் செஞ்சுக்கணும். சரியான முறையில வாரம் ஒரு தண்ணி கொடுத்து, பராமரிச்சா, பேரீச்சை விவ சாயம் லாபகரமானதுதான்'' என்றவரிடம்,
''நீங்கள் சொல்கிற அத்தனை பராமரிப்பை செய்தும் எந்தப் பலனும் இல்லை என்பதுதானே பொலவக்காளிப்பாளையம் சுப்பிரமணியம் உள்ளிட்ட விவசாயிகளின் குற்றச்சாட்டு' என்று கேட்டோம். இதற்கு, ''சுப்பிரமணியம் தோட்டத் துக்கு எங்க கம்பெனியில இருந்து ஒரு விவசாய ஆலோசகரை அனுப்பி ஆலோசனை சொல்லியிருக்கோம். அதை சரியா கடைபிடிச்சா... அவரும் நல்ல மகசூல் எடுக்கலாம்'' என்று விடாமல் பேசியவர்,
''இப்போ நாங்க இறக்குமதி செய்து விற்பனை செய்ற திசு கல்ச்சர் கன்னுகள்ல அமோக விளைச்சல் கிடைக்கும்'' என்று அடுத்தக் கட்டத்துக்கும் அழைப்பு வைத்தார்.
இதுமட்டுமல்லாது, ''எங்கக்கிட்ட கன்னு வாங்கி நட்ட நிறைய பேர் நல்ல மகசூல் எடுத்துட்டு இருக்காங்க. அவங்க நம்பர் தர்றேன். அவங்ககிட்டயே கேளுங்க'' என்று சொல்லி சிலரின் செல்போன் எண்களையும் கொடுத்தார் நிஜாமுதீன்.
''கியாரண்டியும் இல்ல... வாரண்டியும் இல்ல''
அவர்களில் ஒருவரான, சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரிடம் பேசியபோதுதான் தெரிந்தது... 'தம்பி... போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு' என்கிற கதை.
''நான் ஒரு ஏக்கர்ல விதைமூலம் வளர்த்த 100 கன்னுகளை நடவு செஞ்சேன். அதுல 20 மரங்கள் ஆண் மரமாகிடுச்சு. 20 மரங்களை கூன்வண்டுகள் அழிச்சுடுச்சு. மிச்சம் 60 மரங்களைக் காப்பாத்தி வெச்சிருக்கேன். இதுல மகரந்தச் சேர்க்கையை நாமதான் செய்ய வேண்டியிருக்கு. இப்போதான் முதல் மகசூலை எடுத்திருக்கேன். மரத்துக்கு சராசரியா 30 கிலோ கிடைச்சுது. போகப்போக ஒரு மரத்துல 100 கிலோவுக்கு மேல கிடைக்கும்னு சொல்றாங்க. விற்பனை செய்றதும் கஷ்டம்தான். ஒவ்வொரு கடையா ஏறி இறங்கித்தான் விக்க வேண்டியிருக்கு. மொத்தத்துல எந்த கியாரண்டியும், வாரண்டியும் இல்லாத விவசாயம் இது'' என்று வேதனைதான் பொங்கியது குணசேகரனின் வார்த்தைகளில்!
விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் வேளாண் துறை அதிகாரியுமான 'அக்ரி’ வேலாயுதத்திடம் இதைப் பற்றிக் கேட்டபோது, ''கன்றுகளை விற்கும் நர்சரிகளுக்கான விற்பனை உரிமம் மட்டும்தான் வேளாண்துறையினரால் வழங்கப்படுகிறது. உற்பத்திக்கான சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. விதை உற்பத்திக்கு சான்றிதழ் வழங்கும் முன்பு குறிப்பிட்ட அளவு விதைகளை வேளாண்மை அலுவலக பரிசோதனைக் கூடத்தில் முளைக்கவைத்து... முளைப்புத்திறன் குறைபாடு இன்றி இருந்தால் மட்டுமே, சான்றிதழ் வழங்கும் முறை உள்ளது. ஆனால், 'நாற்றுப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் காய்ப்புத்திறன் கொண்டதா?’ என்கிற பரிசோதனைகள் எல்லாம் நடத்தப்படுவதில்லை. அதற்கான வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே, விற்பனை உரிமத்தை மட்டும் வைத்துக்கொண்டு இதுபோன்ற புதுப்புது ரகங்களை கொள்ளை விலைக்கு விற்று, விவசாயிகள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் சிலர். இப்படி, 'வெளிநாட்டு நாற்றுகளை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது, முதலில் வேளாண் துறைக்கு தெரியுமா?’ என்பதே சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. இது அரசால் தெளிவுபடுத்தப் படவேண்டிய விஷயம். நாற்றுப் பண்ணைகளையும் ஆய்வு செய்வதற்கு தனித்துறை அமைத்தால்தான் இதுபோன்ற கவர்ச்சி வியாபாரிகளிடம் இருந்து விவசாயிகளை ஓரளவாவது காப்பாற்ற முடியும்'' என்று சொன்னார்.
இப்படியெல்லாம் விவசாயிகள் ஏமாற்றப்படும் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, தமிழக வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தலையாய கடமை என்பதே விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது
தொடர்புக்கு,
டாக்டர் ஆர்.எம். விஜயகுமார்,
தொலைபேசி: 0422-6611269
'அக்ரி’ வேலாயுதம்,
செல்போன்: 94437-48966
தெய்வசிகாமணி, செல்போன்: 89036-04727
கூன்வண்டுகளுக்குத் தீர்வு?
பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்தாலும்... நம்பி வளர்த்துக் கொண்டிருக்கும் பேரீச்சை மரங்களில் இருக்கும் பூச்சித் தாக்குதல்களுக்குத் தீர்வு என்ன என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் பிலிப் ஸ்ரீதரிடம் கேட்டபோது, 'பேரீச்சையை தென்னைப்போல பராமரிக்க வேண்டும். காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு தாக்குதல் இதில் அதிகளவில் இருக்கும். இவ்வகை வண்டுகளைத் தோட்டத்துக்குள் நுழையும் முன்பே தடுத்து அழிக்க வேண்டும். அதனால், இவ்வகை வண்டுகளுக்கான பொறிகளை பேரீச்சை மரங்களில் கட்டாமல்... தோட்டத்தின் எல்லைப் பகுதிகளில் தகுந்த இடைவெளியில் கட்டித் தொங்கவிட வேண்டும். இதையும் மீறி மரங்களைத் தாக்கி சேதப்படுத்தும் வண்டுகளை, ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொல்லியை வேர்களின் வழியே கொடுத்தும் அழிக்கலாம். ஆனால், அடிக்கடி இதைச் செய்தால் பழங்கள் கசப்புத் தன்மை அடைந்துவிடும் என்பதையும் கவனத் தில் கொள்ளவேண்டும்'' என்று எச்சரித்தார்.

சேதி கேட்டீங்களா!
தெலங்கானாவில் 101 விவசாயிகள் தற்கொலை!
புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கடன் சுமையால், 101 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, ஊரின் தலைவருக்கு போன் போட்டு, 'என்னுடைய குழந்தைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை, இனி உயிருடன் பார்க்க முடியாது' என்று சொல்லிவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

''நம்நாட்டுக்கு ஏற்ற பயிரல்ல...'' பல்கலைக்கழகத்தின் பகீர் தகவல்!
பேரீச்சை மர சாகுபடி பற்றி தமிழகத்தில் சர்ச்சை கிளம்புவது புதிதல்ல. ஏற்கெனவே 2007-ம் ஆண்டில், 'பேரீச்சை சாகுபடியில் பெருத்த லாபமா?' என்ற தலைப்பில், நவம்பர் 25, 2007 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் விரிவானதொரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதில் பேட்டியளித்திருந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர்
சி. ராமசாமி, ''பேரீச்சைக் கன்றுகளை விற்பனை செய்யும் நிஜாமுதீன் தோட்டத்தை நானும் நேரில் போய் பார்த்தேன். இதையடுத்து, பேரீச்சை சாகுபடி பற்றி முறையான ஆய்வுகள் நடத்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடம் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். தற்போது நீங்களும் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளீர்கள். அந்த ஆய்வைத் துரிதப்படுத்தி விரைவில் முடிவைத் தெரிவிக்கிறோம். பேரீச்சை சாகுபடியில் இறங்கச் சொல்லி, வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு எந்தப் பரிந்துரையையும் நாங்கள் இதுவரை செய்யவில்லை'' என்று சொல்லியிருந்தார்.
'தற்போது இந்த ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது?’ என்று தெரிந்துகொள்ள, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பழப்பயிர்கள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர்.எம். விஜயகுமாரைத் தொடர்பு கொண்டபோது, ''பேரீச்சை பழ சாகுபடி குறித்த ஆராய்ச்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் முழுதிருப்தி அளிப்பதாக அமையவில்லை. குறிப்பாக, நமது தட்பவெட்ப நிலைக்கு உகந்த பயிராக அது இல்லை என்பது நிரூபணம் ஆகியதால், அதுகுறித்த ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடரவில்லை. பல்கலைக்கழகம் பேரீச்சை விவசாயம் குறித்த எந்தப் பரிந்துரையையும் இதுவரை செய்யவில்லை'' என்று சொன்னார்.
பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர். எம்.மகேஷ்வரனைத் தொடர்பு கொண்டு பேரீச்சை ஆய்வு குறித்து பேசியபோது, ''2003-2004-ம் ஆண்டு கோயம்புத்தூர், திருச்சி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 7 பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களில் தலா 10 பேரீச்சைக் கன்றுகளை நடவு செய்து ஆராய்ச்சி செய்தோம். முதல் கட்ட ஆராய்ச்சியிலேயே, பேரீச்சை மரங்கள் நம் நாட்டு தட்பவெட்பச் சூழலுக்கு ஏற்றதல்ல என்கிற முடிவுகள் வந்தன. இதனால், மேற்கொண்டு ஆராய்ச்சியைத் தொடரவில்லை. பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டு கேட்கும் விவசாயிகளுக்கு பேரீச்சையை சாகுபடி செய்ய வேண்டாம் என்றுதான் ஆலோசனை வழங்கி வருகிறோம்'' என்று சொன்னார்.
ஆக, ஆராய்ச்சி முடிவுகள் தெளிவாகிவிட்ட பிறகு, கேட்கும் விவசாயிகளுக்கு மட்டும் தகவலைச் சொல்லிக் கொண்டிருப்பதாக கூறுவது சரியல்ல, அரசாங்கமும் பல்கலைக்கழகமும் உடனடியாக பேரீச்சை விவசாயம் பற்றி விரிவானதொரு அறிக்கையை வெளியிட வேண்டும்

Tuesday, 12 August 2014

இயற்கை உணவில் எல்லாம் இருக்கு! --உணவே மருந்து.


உணவே மருந்து, மருந்தே உணவு. ஆனால், இந்த 50 ஆண்டுகால இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக்கொண்டிருக்கிறோம். இன்றைய அவசர வாழ்க்கைமுறை, நம் வயிற்றை இறுக்கத் தொடங்கிவிட்டது. சாப்பிட நேரமின்றி கண்டதையும் அள்ளிப்போட்டுக் வயிற்றை குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று மளிகைக்கடை, காய்கறி கடை, பழக்கடைகளில் கிடைக்கும் அனைத்து இயற்கையான பொருட்களும்கூட பேக்டு முறையில் விற்கப்படுவதுதான் வேதனை. 
முறையற்ற உணவுப் பழக்கத்தால், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நோய்களின் பிடியில் அவதிப்படுகின்றோம்.  
இயற்கைப் பிரியன் ரத்தின சக்திவேல் தரும் சமைக்காத இயற்கை உணவு வகைகளும், சித்த மருத்துவர் சிவராமன் சொல்லும் உடல் உபாதைகளைப் போக்கும் உன்னத உணவு முறைகளும் இணைந்து தரப்பட்டுள்ள இந்த சத்தான கையேடு, உங்களை ஈடில்லா ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுவதுடன், நிச்சயம் உடலுக்கு வலுவூட்டுபவையாகவும் இருக்கும்.
சமைக்காத இயற்கை உணவுகள்
 ''சூரிய சக்தி இயற்கையாக சமைத்து தரும் இனிய கனிகள், காய்கறிகள், கீரைகள் மனிதன் மறுபடியும் வேகவைக்காமல் சாப்பிட்டு உயரிய ஆற்றல் மற்றும் மருத்துவ குணங்களைப் பெற்று ஆரோக்கியம் காக்க உயிர் உள்ள இயற்கை உணவுகள் வழிகாட்டுகின்றன.
இந்த இயற்கை உணவுகள் மிகுந்த காரத்தன்மை உடையன. இவை நோய்களை விரட்டும் சஞ்சீவன உணவுகள்.  வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் எளிதில் ஜீரணமாகும் எளிய உணவுகள்.
நமது உடலின் தேவையான உணவின் மூலக்கூறுகள் 80% காரத்தன்மையாகவும், 20% அமிலத்தன்மையாகவும் இருக்க வேண்டும். சமைத்த உணவுகள் முழுவதும் அமில உணவுகளாகவே உள்ளன. சுவைக்காக உண்ணும் சமையல் உணவு மட்டும் நமது உடலின் சத்துக்கள் மற்றும் தேவையைப் பூர்த்தி செய்வது இல்லை. எனவே, இனியும் இயற்கை உணவுக்கு மாற தயங்க வேண்டாம்.'' என்கிற இயற்கைப் பிரியன் இரத்தின சக்திவேல், இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை வைத்து சமைக்காமல் சாப்பிடும் முறைகளையும், பலன்களையும் பட்டியலிடுகிறார்.
கீர் வகைகள்
முளை கோதுமை தேங்காய்பால்
விதைக் கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியால் கட்டி முளைக்கவிடவும்.  இதைக் காயவைத்து வறுத்து அரைக்கவும். அரைத்த மாவை சலிக்காமல் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.  தேவையானபோது ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் மாவு கலந்து, அதனுடன் இனிப்புக்கு வெல்லம், தேன், ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.  இதனுடன் தேங்காய் பால் சேர்த்தும் பருகலாம்.  அற்புதமான சுவையுடன் இருக்கும்.  
பலன்கள்: புற்றுநோய்க்கு நல்ல மருந்து. உடனடியாக ஜீரணமாகும். எலும்பு உறுதியாகும்.  உடல் பலம் பெருகும்.  உயர் ரத்த அழுத்தம் குறையும்.  உடல் பருமன், தொப்பை, ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் அருந்தலாம்.  
பேரீட்சை கீர்
200 கிராம் பேரீட்சைப் பழங்களை ஊறவைத்து கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து, தேவையான நீர் கலந்து ஏலக்காய்த்தூள், பேரீட்சைச் சாறை சேர்க்கவும்.
பலன்கள்: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.  சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இதை காலை டிஃபனாக சாப்பிடலாம்.  ரத்தம் விருத்தியாகும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும், தெம்பும் கூடும்.  
காரட் கீர்
500 கிராம் காரட்டை கழுவிச் சுத்தம் செய்து துருவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும்.  2 மூடி தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து தேங்காய்ப்பால் எடுக்கவும். இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து, 200 கிராம் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் கலந்து பருகலாம்.
பலன்கள்: கண்ணுக்கு மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் கொடுக்கலாம்.  தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் விலகும். குடல் புண் சரியாகும்.  
முளை தானிய பயிறு வகைகள்!
எட்டு மணி நேரம் ஊறவைத்து, முளைகட்டி ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால், பலரும் சோம்பலின் காரணமாக இதைச் சாப்பிடுவதில்லை. ஆனால், சத்தான முளை தானியப் பயறுகளை சாப்பிடுவதால், குறைந்த தானியத்தில் அதிக இயற்கை உணவைப் பெற முடியும்.  சமைக்காமல் அப்படியே சாப்பிடும் போது ஒரு வேளைக்கு 50 கிராம் அளவே போதுமானது.  முளைப்புத் திறனும் சிலசமயம் மாறுபடும்.  கூடிய வரையில் ஃப்ரிட்ஜில் வைக்காத முளை தானியங்களைப் பயன்படுத்துவது நல்லது.
பச்சைப்பயறு
நல்ல குடிநீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, ஈரமான பருத்தித் துணியில் கட்டி முளைக்கவிடவும்.  காலையில் ஊறவைத்து மாலையில் நீரை வடித்துக் கட்டினால், மறுநாள் அதிகாலை வெள்ளை முளை எட்டிப் பார்க்கும். தினமும் ஒரு நபருக்கு 50 முதல் 100 கிராம் வரை தேவைப்படும்.பல்லால் கடிக்க முடியாதவர்கள், இந்த முளைப் பயறை நீர் சேர்த்து அரைத்து அதில் வெல்லம், தேன், தேங்காய் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை டிஃபனுக்கு பதிலாக சாப்பிடலாம்.    
பலன்கள்: அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும்.  அல்சரைக் கட்டுப்படுத்தும்.  சருமத்தைப் பளிச்சென வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முளைக்கட்டிய வெந்தயம்
சிறிது நேரம் ஊறவைத்து, ஈரப் பருத்தித் துணியில் முளைக்கட்டி சாப்பிடலாம்.
பலன்கள்: கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.  
கொள்ளு முளைப்பயறு
நன்றாக அலசி, நீர் சேர்த்து முளைக்கவிட்டுப் பயன்படுத்தவேண்டும்.  
பலன்கள்: அதிக உடல்சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரழிவு நோய், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு முளைப்பயறு மிகவும் நல்லது.  
முளைவிட்ட எள், வேர்க்கடலை
பலன்கள்: மிகவும் மெலிந்த உடல் இருப்பவர்கள் முளைக்கட்டிய எள், வேர்க்கடலையைத் தினமும் 100 கிராம் அளவுக்கு சாப்பிடலாம்.  அகோரப் பசியை போக்கி, ஊட்டச்சத்தையும் தரும். கடின உழைப்பாளிகளுக்கும், துள்ளித் திரியும் வளரும் பிள்ளைகளுக்கும் மிக நல்லது.  
கம்பு முளைப்பயறு
கம்பை 8 மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைக்கவிடவும்.  அடிக்கடி ஒரு கைப்பிடி சாப்பிட்டு வரலாம்.  அரைத்துப் பாலாகவும் அருந்தலாம்.  கூழாக்கி, கஞ்சியாகவும் சாப்பிடலாம்.
பலன்கள்: பலம் கூடும்.  ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள், தினமும் சாப்பிட உடல் உறுதிப்படும்.        
லட்டு வகைகள்
எள்ளு லட்டு
400 கிராம் வறுத்த எள், 300 கிராம் கொட்டை நீக்கிய பேரீட்சை அல்லது வெல்லம், உலர் திராட்சை 100 கிராம், முந்திரி 50 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.  
எள்ளை மிக்சியில் அரைத்து அதனுடன் உலர் திராட்சையும் பேரீட்சையையும் கழுவி வெல்லம் சேர்த்து அரைக்கவும். விருப்பப்பட்டால், பனங்கற்கண்டு சேர்க்கலாம். ஏலத்தூள், முந்திரி கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பலன்கள்: நல்ல சத்தான உணவு. உடல் இளைத்தவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் தேறும். நல்ல தெம்பு கிடைக்கும். பசி தாங்கும் உணவு இது. மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் தாய்ப்பால் அதிகம் சுரக்க எள்ளு லட்டை சாப்பிடலாம்.
இயற்கை இனிப்பு லட்டு
முந்திரி, பாதாம், பேரீட்சை தலா 100 கிராம், உலர் திராட்சை, வெள்ளரி விதை தலா 50 கிராம், பிஸ்தா 20 கிராம், ஏலக்காய்த்தூள்.
பேரீட்சைப் பழங்களின் கொட்டைகளை நீக்கி சுத்தப்படுத்தி எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கலாம்.  லட்டு போல் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும். விருப்பப்பட்டால், தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்: ஊட்டச்சத்தான லட்டு. நோஞ்சான் குழந்தைகளுக்கு காலை டிஃபனுக்கு பதிலாகத் தரலாம்.  ரத்த சோகையைப் போக்கும். அதிகத் தூரப் பயணம், வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள் தினமும் இரண்டு லட்டுகள் சாப்பிடலாம். பசியைப் போக்கும் உன்னத உணவு.
வேர்க்கடலை - பொட்டுக்கடலை லட்டு
300 கிராம் வறுத்த வேர்க்கடலை, 150 கிராம் பொட்டுக்கடலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, பேரீட்சை, உலர் திராட்சை சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பைக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம்.  தேவைப்பட்டால், தேன் அல்லது நெய் சேர்க்கலாம்.      
பலன்கள்:  பசியைப் போக்கும்.  உடலுக்கு தெம்பைக்கூட்டும்.  உரமாய் வைத்திடும். உடல் உழைப்பாளர்கள் அடிக்கடி சாப்பிடலாம்.  போஷாக்கு நிறைந்த உணவு.
 துவையல் வகைகள்
பீட்ரூட் துவையல்
250 கிராம் பீட்ரூடைக் கழுவி தோல் சீவி, நைஸாகத் துருவிக்கொள்ளவும்.  100 கிராம் இஞ்சியை தோல் சீவி நறுக்கிச் சாறு எடுக்கவும்.  சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.  சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பத்து நிமிடங்கள் ஊறவிடவும்.  தேவைப்பட்டால் பிளாக்சால்ட் சேர்க்கலாம்.
பலன்கள்:  அனைவரும் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அமிலத்தன்மை, மலச்சிக்கல், பசியின்மையைப் போக்கும். தொப்பையைக் குறைக்கும். ஜீரணக் கோளாறு, வயிற்றுவலி, வாயுப் பொருமல் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். கேன்சரைக் குணப்படுத்தும் உணவுகளில் பீட்ரூட் முக்கியப் பங்கு வகிக்கிறது. தயிரில் கலந்தும், சாதத்துடன் பிசைந்துச் சாப்பிடலாம்.
கொத்தமல்லித் துவையல்
500 கிராம் கொத்தமல்லித்தழை, 100 கிராம் கருவேப்பிலை இரண்டையும் கழுவி, பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 மூடி தேங்காய் துருவல், கழுவிய 2 குடமிளகாய் சேர்த்து அரைத்து சிறிது பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்க்கவும்.  
பலன்கள்:  மூட்டுவலி, வாயுப் பொருமல் சரியாகும்.  அதிக உடல் எடை இருப்பவர்கள், நீரழிவு நோயாளிகள் தினமும் சாப்பிடலாம்.  தொப்பை குறையும். தேமல் மறையும். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம், பித்த நோய்கள் குறையும்.  ரத்தம் விருத்தியடையும்.  
 நெல்லிக்காய் துவையல்
250 முழு நெல்லிக்காய்களை நறுக்கி கொட்டைகளை நீக்கவும். சிறிது நேரம் நறுக்கிய நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறவைத்து, 5 பல் பூண்டின் தோலை நீக்கவும். 20 கிராம் இஞ்சித் தோலை நீக்கி நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். இதனுடன் மிளகுத்தூள், பிளாக்சால்ட் சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.
பலன்கள்:  ஊறுகாய்க்கு பதில் பயன்படுத்தலாம். சகல நோய்களையும் தீர்க்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  நன்றாகப் பசியெடுக்கும். அஜீரணக் கோளாறு விலகும்.  இளமையைத் தக்கவைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.    
 சாலட் வகைகள்
காய்கறி சாலட்
காரட், தக்காளி, வெள்ளரி, வெங்காயம், கோஸ், வெண்பூசணி, புடலை, பீர்க்கை, சௌசௌ, முள்ளங்கி, சுரை இவற்றை தீக்குச்சி வடிவில் சிறியதாக நீட்டமாக நறுக்கவும். இந்தக் கலவை 200 கிராம் இருக்கட்டும்.  கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து நறுக்கிய காய்கறிகளுடன் கலக்கவும்.  இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைசாறு, பிளாக் சால்ட், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் கலந்தால், அருமையான சாலட் தயார். பல் இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்தும் சாப்பிடலாம். இதனுடன் முளை தானியங்களும் சிறிது சேர்க்கலாம். இனிப்புக் காய்கறி கலவைத் தேவைப்படுபவர்கள், வெல்லம் சிறிது கலந்து கொள்ளலாம்.
பலன்கள்: சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தொப்பை உள்ளவர்கள் தினமும் அவசியம் 50 கிராம் முதல் 100 கிராம் வரை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். உடல் சூடு, மூல நோய் மறையும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்பப்பை கோளாறுகள் குறையும். அஜீரணக் கோளாறு இரண்டே நாட்களில் சரியாகும். மூட்டுவலி குறையும். நரம்புகள் வலுப்பெறும்.
ஃப்ரூட் சாலட்
ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரீட்சை, மாம்பழம், பாப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, கொய்யா இவை கலந்த கலவை தலா 500 கிராம் எடுத்து நன்றாகக் கழுவவும்.  தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொட்டைகளை நீக்கவும். மாதுளை முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும்.  எல்லாப் பழங்களையும் கலந்து அத்துடன் தேன் அல்லது வெல்லம் தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் கலந்து சாப்பிடலாம்.  இதை உணவுக்கு முன் சாப்பிடலாம்.
பலன்கள்: மலச்சிக்கல், குடல்புண், பசியின்மை விலகும்.  உடலுக்கு உடனடி சக்தி தரும்.  சிறுநீர் எரிச்சல், நீர் பிரியாமை உடலின் மூலச்சூடு குறையும்.
வெள்ளரிப் பச்சடி
   வெள்ளரி, காரட்டை நீளவாக்கில் நறுக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் சேர்க்கவும்.  இதனுடன் தயிர், பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதேபோல், வெங்காயம், வெண்பூசணி, சுரைக்காய், சௌசௌ போன்ற பல வகைப் பச்சடிகளை தினம் ஒன்றாகச் செய்து சாப்பிடலாம்.
பலன்கள்: அதிக அமிலங்களால் அவதிப்படும் உடலுக்கு வெள்ளரியே மாமருந்து. குடல் புண் சரியாகும்.  ஒபிசிட்டி பிரச்னை இருப்பவர்கள், சிறுநீரகக் கல்அடைப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்துசாப்பிடலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், மூல நோய் இருப்பவர்கள் சாப்பிடலாம்.  தோல் நோய் பிரச்னையும் தீரும்.
கருந்துளசி சாறு
கருந்துளசியை 150 கிராம் எடுத்து இலைகளைக் கிள்ளி நீரில் கழுவி நீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.  இதனுடன் நாட்டு வெல்லம் அல்லது தேன் சேர்த்து, கலந்து, தினமும் ஒரு நபர் 5 கிராம் முதல் 10 கிராம் வரை அருந்தலாம்.  
பலன்கள்:  அமிலத்தன்மை நீக்கும்.  சளி, இருமல், தோல் பிரச்னை, பிரைமரி காம்ளெக்ஸ், மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்றவை சரியாகும்.  குரல் வளம் பெருகும்.  காய்ச்சலைப் போக்கும் அரிய சாறு இது.
வெஜிடபிள் அவல் மிக்ஸ்
அவலை சுத்தம் செய்து நீரில் கழுவி வடித்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.  வெங்காயம், காரட், தக்காளி, கோஸ், குடமிளகாய், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். எலுமிச்சம்பழத்தை சாறு எடுக்கவும்.  
ஊறிய அவலுடன் எல்லாவற்றையும் சேர்த்து தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.  
பலன்கள்:  சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம், மலக்கட்டு, ஒபிசிட்டி, குடல் புண், வயிற்றுவலி, மூட்டுவலி, அதிக உடல் எடை இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.
நோய்களைப் போக்கும் உணவுகள்
''நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் காக்கவும், வந்த நோயை விரைவில் போக்கவும் இயலும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் ஓடிவிடும்'' என்கிற சித்தமருத்துவர் சிவராமன், நோய்களுக்கேற்ற உணவுமுறைகளையும் விளக்குகிறார்.  
   வாதம்/பித்தம்/கபம்
வாதம்: ஒருவருக்கு மூட்டு வலி, கழுத்துவலி இருந்தால், வாதம் சீர் கெட்டுள்ளது என்று பொருள்.  இவர்கள் வாதத்தைக் குறைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கள் வாயுவைத் தரும்.
சேர்க்கவேண்டியவை: வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.
தவிர்க்கவேண்டியவை: புளி, உருளைக்கிழங்கு, கொத்தவரை, கொண்டக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், காராமணி, குளிர்பானங்கள்.
பித்தம்:
பல நோய்க்கு பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும்.  அல்சர், உயர் ரத்த அழுத்தம், ஆரம்பநிலை மதுமேகம் என நோய் பட்டியல் பெரிசு.  
சேர்க்கவேண்டியவை: கைக்குத்தல் அரிசி நல்லது.  கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள் இஞ்சி என இவையெல்லாம் பித்தத்தைத் தணிக்கும்.  இதையெல்லாம் தாண்டி மனதையும் குதூகலமாய் வைத்திருக்கவேண்டியது அவசியம்.  
தவிர்க்கவேண்டியவை: உணவில் காரம், எண்ணெயைக் குறைக்கவேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது.  கோதுமைகூட அதிகம் சேர்க்கக் கூடாது.  
கபம்:
சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் அதிகம்.  
சேர்க்கவேண்டியவை: மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவை எல்லாம் கபத்தைப் போக்க உதவும்.  கற்பூரவல்லி பஜ்ஜியும், சுக்குக்காபியும்... விடாமல் தும்முபவர்களுக்கு மிகவும் நல்லது.
தவிர்க்கவேண்டியவை: பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லேட்
சளி / இருமல்:
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும்.  இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம்.  
சேர்க்கவேண்டியவை:  இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம்.  இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும்.  மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.  
தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.
பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால்,  தவிர்க்கவும்.  எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது.  இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.
காய்ச்சல்
 
காய்ச்சல் - எந்த ஒர் இரும்பு மனிதரையும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் பதம் பார்க்கும்.  எனக்குக் காய்ச்சலே வந்ததில்லை என எவரும் சொல்ல முடியாது.  ஆனால், இந்தக் காய்ச்சல் ஒரு தனிநோய் இல்லை.  வேறு ஏதேனும் நோய்க்கான ஒரு வெளிப்பாடு அல்லது அறிகுறிதான்.  'லங்கணம் பரம ஒவுஷதம்’ என்று ஒரு மருத்துவ மொழி உண்டு.  அதன் பொருள், 'காய்ச்சலுக்கு மருந்து பட்டினி’ என்பதுதான்.  
சேர்க்கவேண்டியவை: எளிய உணவுகளான இட்லி, இடியாப்பம், புழுங்கல் அரிசி கஞ்சி மட்டும் குறைவாக எடுப்பது நல்லது.  வெதுவெதுப்பான நீர் அருந்துவதும், புளிப்பில்லாத பழச்சாறு குடிப்பதும் மிக அவசியம்.
நிலவேம்புக் கஷாயம் மட்டும் மூன்று நாட்கள் தவறாமல் எடுத்துக்கொண்டாலே போதும்.  
குழந்தைகளுக்கு துளசி, மிளகு, கற்பூரவல்லி, வெற்றிலை, மாசிக்காய்த்தூள் இவற்றை கஷாயமாக்கி 30 - 60 மில்லி இரண்டு வேளை நான்கு நாட்கள் கொடுக்கலாம்.  அஜீரணத்தைத் தொடர்ந்து வரும் காய்ச்சல் எனில், சீரகக் கஷாயம் இரு வேளை கொடுங்கள்.  
வீட்டில் வாரம் மூன்று நாள் நெல்லிக்காய்ப் பச்சடி, மிளகு ரசம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.  வேப்பம்பூ ரசம் நல்ல பலன் தரும். நிலவேம்புக் குடிநீரை வாங்கி வீட்டில் அனைவரும் தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் 60- 90 மிலி கஷாயம் வைத்து ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடலாம்.
தவிர்க்கவேண்டியவை: உணவில் கூடியவரை இனிப்பைத் தவிர்த்துவிடுங்கள்.  
 சிறுநீரக பாதிப்பு
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும்போது, அது சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம். மற்ற எந்த நோய்க்கும் இல்லாதபடி, சிறுநீரக நோய்க்கு உணவில் தனிக் கவனம் தேவை.  
சேர்க்கவேண்டியவை: தினசரி மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம்.  பலரும் பணி அவசரத்தில் தவறவிடுவது இதனைத்தான். சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவிடும் உணவுகளான வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம். பாசிப்பயறின் புரதம் சிறுநீரக நோயினருக்கு ஏற்றது.  காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிடுவது அதிக அளவு உப்புகள் உணவில் தங்காமல் பார்த்துக்கொள்ளும்.
தவிர்க்கவேண்டியவை: அதிக உப்பு, சிறுநீரகத்தின் பணிக்கு சிரமம் கொடுக்கும். வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனியைத் தவிர்ப்பது நல்லது.  கேரட், காலிஃப்ளவர், பீட்ரூட், நூல்கோல், பருப்புக் கீரை இவற்றில் சோடியம் அதிகம் உள்ளதால் தவிர்க்கவும்.
ஆஸ்துமா அலர்ஜி
நுரையீரல் அலர்ஜி, தொற்று மற்றும் சுற்றுச்சூழலால் ஆஸ்துமா அலர்ஜி ஏற்படுகிறது.  
சேர்க்கவேண்டியவை: காலையில் பல் துலக்கியதும் 2 முதல் 3 டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும். பால் கலக்காத தேநீர். இரவில் நல்ல வீசிங் இருந்து சிரமப்படும்போது, கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இந்த இலைகளை கொஞ்சம் எடுத்து கஷாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்து குடிக்கலாம்.  நெஞ்சில் சளி இலகுவாக வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். மாலையில் தேநீரோ / சுக்குக் கஷாயமோ எடுப்பது, இரவு சிரமத்தைக் குறைக்கும். மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.  
எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகுரச சாதம், இட்லி என ஏதாவது ஒன்றை சாப்பிடுவது நல்லது. மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலை போடுவது நல்லது.  
தவிர்க்கவேண்டியவை: மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரை, புடலை, சௌசௌ, தயிர் இவற்றைத் தவிர்க்கவேண்டும்.  படுக்கைக்குப் போகும்போது காலி வயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும். இனிப்புப் பண்டங்கள், எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சைப் பழங்களை மருந்து எடுத்து வரும் காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  
மலச்சிக்கல்
மலச்சிக்கல் பல நோய்களுக்கான நுழைவாயில். காலையில், எவ்வித மருந்துகளின் உதவியில்லாமல் எவ்வித சிரமுமின்றி மலம் கழித்தல், நல்ல ஆரோக்கியமான உடலின் அடையாளம்.
சேர்க்கவேண்டியவை: நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவேண்டும். மாலை வேளையில் 12 காய்ந்த திராட்சை கொடுப்பது நல்லது.  இரவு உணவில் ஒரு வாழைப்பழம் அல்லது சில துண்டுகள் பப்பாளி சாப்பிடலாம். வாழைத்தண்டு பச்சடி, பாசிப்பயறு சேர்த்து சமைத்த கீரை தினசரி உணவில் இடம்பெற வேண்டும். வெந்தயம், கைக்குத்தல் அரிசி, பட்டை தீட்டாத முழுக் கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.  
தவிர்க்கவேண்டியவை: பீட்சா, பர்கர் மற்றும் பரோட்டா போன்ற கடின உணவுகளை சாப்பிடக் கூடாது.
சர்க்கரை நோய்
இனிப்பு மற்றும் பாலிஷ் தானியங்களின் அதிகப்படியான உபயோகம், உணவுப் பண்பாட்டில் நடக்கும் ஒழுங்கின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவு போன்றவையே சர்க்கரை நோய் வருவதற்கான முக்கியக் காரணங்கள்.
சேர்க்கவேண்டியவை: கத்தரிக்காய், கோவைக்காய், அவரைப்பிஞ்சு, வெண்டை, கொத்தவரை, டபுள் பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சுண்டை வற்றல், முருங்கைக் கீரை, கொத்துமல்லி, புதினா நல்லன் பலன் அளிக்கக்கூடியவை. சர்க்கரை அளவைக் குறைப்பதில் பலன் தரும் பாகற்காய்.  இனிப்பு குறைந்த நாருள்ள, துவர்ப்பு அதிகம் உள்ள பழங்கள் தினமும் சாப்பிடுவது அவசியம்.  கிரீன் டீ நல்லது.  தினசரி பாலுக்குப் பதில் மோர் சேர்க்கலாம். காலையில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்துமல்லி, வெந்தயம் சேர்த்த குடிநீர் சாப்பிடலாம்.  சீரகத் தண்ணீர் ரொம்பவே நல்லது.  
வாரம் இரண்டு நாள் அரிசிச் சோறு, இரண்டு நாள் தினை அரிசிச் சோறு, இரண்டு நாள் வரகரிசிச் சோறு, ஒருநாள் மாப்பிள்ளைச்சம்பா அவல் என மதிய உணவும், இரவில் தினை ரவா உப்புமா/கேழ்வரகு அடை பாசிப்பயறுக் கூட்டுடன் சாப்பிடலாம்.  காலை உணவிற்கு கம்பு அடை, கைக்குத்தலரிசிப் பொங்கல், சிவப்பரிசி அவல் என அளவாக சாப்பிடுவது நல்லது. நவதானியக் கஞ்சி காலை உணவாகச் சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.  
தவிர்க்கவேண்டியவை: பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், குறிப்பாக உருளை மற்றும் பீட்ரூட், கேரட் தவிர்க்கவேண்டும். மாம்பழம், சப்போட்டா, ஹைபிரிட் வாழைப்பழம் தவிர்ப்பது நல்லது.
உயர் ரத்த அழுத்தம்
பொதுவாக ஒருவருக்கு 120/80 என இருக்கவேண்டிய ரத்த அழுத்தம், வயதாகும்போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90.  140 என்பது இதயம் சுருங்கும்போது உள்ள ரத்த அழுத்தம்.  90 என்பது இதயம் விரிவடையும்போது வரும் ரத்த அழுத்தம்.  இதயம் விரியும்போது ரத்த அழுத்தம் உயர்ந்தால் அதாவது 90-ஐ தாண்டி 100-110 என அறிவித்தால் ஆபத்து என்பதை உணரலாம்.  மேல் கணக்கு 140-ஐ தாண்டும் போது அதற்கான உணவும் மருந்தும் மிக அவசியம்.  
தாய் தந்தைக்கு உயர் ரத்த அழுத்தம்,  சர்க்கரை நோய் இருந்தால், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, சரியாகத் தூக்கமின்மை மற்றும் சிறுநீரக இயக்கம் சரியில்லாமல் இருந்தால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.        
சேர்க்கவேண்டியவை: தினமும் காலையில் முருங்கைக்கீரையும், சிறிய வெங்காயமும் சேர்த்து சூப் சாப்பிடலாம்.  மதிய உணவில் 5 - 10 பூண்டுப்பற்கள், 50 கிராமுக்குக் குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.  வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம்.  எண்ணெய் உணவில் குறைவாக சேர்க்கலாம்.  
சீரகத்தை லேசாக வறுத்து அதை மூன்று நாட்கள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாட்கள் எலுமிச்சைச் சாறிலும் இன்னும் மூன்று நாட்கள் கரும்புச்சாறிலும் ஊறவைத்து உலர்த்திப் பொடித்துக்கொள்ளுங்கள்.  இந்த பொடியை காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம்.  கடைகளில் சீரக சூரணமாகவும் கிடைக்கும்.  வெந்தயத்தை தினமும் பொடித்து சப்பிடலாம்.  
தவிர்க்கவேண்டியவை: பல காய்கறிகளில் நமக்கு தேவையான உப்புச் சத்து அதிகம் உள்ளது.  அதனால், மிகச் சிறிதளவே உப்பு சேர்த்தால் போதுமானது.  ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் உப்பை மறந்தே தீரவேண்டும். புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. ஊறுகாய், இட்லி மிளகாய்ப் பொடி, அப்பளம்,
மூட்டுவலி
வயதானால் வரும் வலி மூட்டுவலி என்ற நிலை மாறிப்போய், துள்ளிக் குதிக்க வேண்டிய பருவத்தில் இடுப்பு வலி, கால் மூட்டில் வலி, தோள் மூட்டில் வலி, கழுத்து வலி என இளமையில் விரட்டும் மூட்டு வலிகள் இன்று ஏராளம். இளம் வயதிலேயே சரியான அளவில் கால்சியம், இரும்பு, துணைக் கனிமங்கள் சேர்ந்த ஆரோக்கிய உணவுகளை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூட்டு வலி மற்றும் எந்த வலிகளும் வராமல் பாதுகாக்கலாம்.
சேர்க்கவேண்டியவை: தினசரி 40 நிமிட நடை.  15 நிமிட ஓய்வு.  30 நிமிடம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரிய நமஸ்காரம், 4-5 யோகாசனங்கள் செய்யவேண்டும். கால்சியம் - கீரை நிறைந்த உணவுகள். ஒரு கப் பழத்துண்டுகள், ஒரு கப் மோர் சாப்பிடுவது நல்லது.  
தவிர்க்கவேண்டியவை: அதிகப் புளிப்பு, மூட்டுகளுக்கு நல்லதல்ல.  புளிக்குழம்பு, காரக்குழம்பு, புளியோதரை இவற்றை மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் விலக்குவது நல்லது.  வாயுவைத் தரும் வாழைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு பொடிமாஸ், ஃப்ரென்ச் ஃப்ரை போன்ற மெனுக்களை விலக்கவேண்டும்.  
ரத்த சோகை.  
வெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து இருத்தல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு, எதிலும் பிடிப்பில்லாமை இவையே ரத்த சோகையின் குணங்கள்.  இவை எல்லாமே ரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் தெரியவரும்.  
சேர்க்கவேண்டியவை: சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.  
எள்ளும் பனைவெல்லமும் கலந்த உருண்டை.  கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச் சத்து அதிகம்.  கம்பஞ்சோறு, வரகரிசியில் கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்து சாப்பிடலாம்.  கஞ்சியாகவும் குடிக்கலாம்.  பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பைச் சீரணிக்க உதவிடும்.    
தவிர்க்கவேண்டியவை: சாதாரணமாக இரும்புச் சத்து மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.  ரத்த சோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பு, அவை மலத்தையும் எளிதாகக் கழிக்கவைத்து, குடல் புண்ணையும் ஆற்றக்கூடியது.