Thursday, 29 November 2012

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்


சோகக் கதை

சுகவாழ்வும் ஒருநாளில்
பாதாளம் போகுமெனில்
பாரறிந்த உண்மையன்றோ?

சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகி
கள்ள வேலைகள் செய்த கதை - சிலர்
கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை (சொல்ல)

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன்
அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே (சொல்ல)


ஒளி வேண்டுமா? இருள் வேண்டுமா?


உருண்டோடும் நாளில்
கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா?
இருள் வேண்டுமா? (உருண்டோடும்)
திருந்தாத தேகம்
இருந்தென்ன லாபம்
இது போதுமா?
இன்னும் வேண்டுமா?
ஓய்... ஓய்... ஓய்.... (உருண்டோடும்)
விரும்பாத போதும்
விருந்தாக மேவும்
குணம் வேண்டுமா?
விஷம் வேண்டுமா? (உருண்டோடும்)

அமர காவியம் பாடுதேஅழகு நிலாவின் பவனியிலே

அமைதி கொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
ஆடும் காரணம் ஏதோ?
களங்க மில்லா என் மனதிலே
கலையழகே உம தன்பாலே
இன்பம்உதயம் ஆவது போலே
இதய உறவி னாலே...
அல்லி மலர்ந்து ஆடுதே
அமர காவியம் பாடுதே

காதல்


உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில்
இன்பக் கனல் மூட்டுதடி!

வான நிலாப்பெண்ணை
வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே
முத்தமிட்டுப் போகுதடி!

துள்ளிவிழும் நீரலையில்
வெள்ளிமலர் பூத்ததடி
வள்ளியுனை எதிர்பார்த்த
மெல்லுடலும் வேர்த்ததடி!

இல்லத்தில் நீயிருந்தால் 
இருள்வர அஞ்சுதடி
மெல்லத் தமிழ்உனது 
சொல்லில் வந்து கொஞ்சுதடி (மின்னும்)

தத்துவம்


காண்பதெல்லாம் இன்பமப்பா!

விதியென்னும் குழந்தை கையில்
உலகந்தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள்
இயற்கையன்னை - அது
விட்டெறியும் உருட்டிவிடும்
மனிதர் வாழ்வை
மேல் கீழாய்ப் புரட்டிவிடும்
வியந்திடாதே

மதியுண்டு கற்புடைய
மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றி தரும்
வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை
மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம்
இன்பமப்பா

அஞ்சி நிற்க மாட்டோம்


நன்றிகெட்ட மனிதருக்கு
அஞ்சிநிற்க மாட்டோம்
நாவினிக்கப் பொய்யுரைக்கும்
பேரைநம்ப மாட்டோம் - என்று
கூறுவோமாட - ஒன்று
சேருவோமாட
வீறுகொண்டு சிங்கம்போல் 
முன்ஏறு வோமடா!

எளிய மக்கள் தலையில்காசு
ஏறி மிதிக்குது - அதை
எண்ணி எண்ணித் தொழிலாளர்
நெஞ்சு கொதிக்குது
வஞ்சனைக்கும் அஞ்சிடோம்
வஞ்சனைக்கும் அஞ்சிடோம்
பஞ்சம் நோய்க்கும் அஞ்சிடோம்
பட்டினிக்கும் அஞ்சிடோம்
நெஞ்சினைப் பிளந்தபோதும்
நீதி கேட்க அஞ்சிடோம்
நேர்மையற்ற பேர்களின் 
கால்களை வணங்கிடோம் 
காலி என்றும் கூலி என்றும்
கேலி செய்யுங் கூட்டமே
காத்துமாறி அடிக்குது - நீர்
எடுக்கவேணும் ஓட்டமே
தாலி கட்டிக்கொண்ட மனைவி
போலுழைத்த எங்களைத்
தவிக்கவிட்ட பேரை - எந்த
நாளும் மறக்கமாட்டோமே

சின்ன வீட்டு ராணி


சின்ன வீட்டு ராணி எங்க ராணி

ஆண்: சிங்காரத் தங்கநிறம் அவள் மேனி
கொள்ளைக்காரன் போலே
எல்லை தாண்டிவந்த
கொடியவரை அழிக்கும் கோபராணி

பெண்: எங்கள்-
அடிமைதனை அகற்றும் அன்புராணி

ஆண்: மெய்யாரப் பொய்கூறும்
வீணர்களின் மத்தியிலே
நையாத கொய்யாக்கனி

பெண்: எங்க ராணி - ஒய்யாரக்
கண்ணின் மணி

ஆண்: மங்கையரின் பக்கத்திலே
மயல்போலே - கெட்ட
வம்புக்கார கும்பலுக்குப்
புயல்போலே

பெண்: செங்கமலச் செவ்விதழை
முகத்தாலே - வென்று
மங்காத அன்புதனை
வளர்ப்பாளே

ஆண்: வாளெடுத்து வீசுவா

பெண்: மானங் காக்க

ஆண்: ஏழை மக்கள் பக்கம் பேசுவா

பெண்: துன்பம் தீர்க்க

ஆண்: தேவைக்கு மேல் சேர்த்து வச்சா
தேடி எடுப்பா
தின்ன உணவில்லாதவர்
கையில் கொடுப்பா

பெண்: செல்வியவள் கண்ணாலே
பொல்லார் தனைக் கண்டால்
சீறிவரும் வேங்கையாம் வீராங்கனை
மானங்கெட்டு ரோஷம் விட்டு
வலிய வந்து குந்திக்கிட்டு
மாருதட்டும் சூரப்புலி மண்டை உருள.........

ஆண்: அங்கு - மற்றுமுள்ள ஒற்றர்களும் கண்டு மருள
வான்முட்டவே முழக்கம் மாபெரிய கூட்டத்திலே
மங்கையவள் செங்குருதி நீராடினாள் - வீரப்
பெண்கள் புகழ் ஓங்கிடவே போராடினாள்.

புது ஞாயிறு


செக்கச் சிவந்த செழுங் கதிரோனும்
கிழக்கினில் வந்துவிட்டான் - புவி
மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட
வானில் உதித்து விட்டான்

கொக்கரக்கோவெனக் கோழியுங்கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
சக்கரம் போலே ஜகம் சுழன்றாடுது
தொக்கி நின்ற யிருள் சொல்லாமல் ஓடுது

பத்துத் திசையிலும் - ஜன
சக்தி முழங்கிடுதே! (செக்கச்)

தெற்கில் ஒருகுரல் தென்பாங்கு பாடுது
தீய செயல்களைச் செங்கைகள் சாடுது
பக்குவங்கொண்ட படைபல கூடுது
சிக்கலறுத்துப் பொது நடை போடுது

சொத்தை மனந்திருந்தப் - புதுச்
சத்தம் பிறந்திடுதே! (செக்கச்)

கத்தும் பறவை கனிமரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே - தலைப்
பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி
பேதம் வளர்த்திடுதே!

ரத்த வியர்வைகள் சொட்ட உழைத்தவன்
நெற்றி சுருங்கிடுதே - ஏழை
உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்
கொட்டம் அடங்கிடுதே - மக்கள்
வெற்றி நெருங்கிடுதே! (செக்கச்)

"ஜனசக்தி"

No comments:

Post a Comment